பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடந்த   சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புத்தான், பெட்ரோல் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

2017 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உரூ. 9.48 ஆக இருந்த கலால் வரியை உரூ. 21.48 ஆக உயர்த்தியது நடுவணரசு. அதே போல் டீசலுக்கு உரூ. 3.56 ஆக இருந்த கலால் வரியை நான்கு மடங்கு அதாவது உரூ. 17.33 ஆக உயர்த்தியது. மக்களுடைய கடும் எதிர்ப்பால் அக்டோபர் 2017 இல் ஒரு 2 உரூ. குறைக்கப்பட்டது.

இப்படி அநியாயமாக வரி விதிக்கும் பா.ச.க அரசு பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) யின் கீழ் கொண்டுவந்தால் விலையைக் குறைக்க முடியும் என்கிறது. மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றன என அபாண்டமாகக் குற்றம் சாட்டுகிறது.  ஆனால் உண்மை நிலையோ வேறு. ஏற்கனவே ஜி.எஸ்.டி-யால் மாநில அரசின் வரி வருவாயில்   சரி பாதிக்கு மேல் பிடுங்கிக் கொள்கிறது நடுவணரசு. இதனால் மாநில அரசுகள் வேட் எனப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியை உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறன. குறைந்த அளவாக 25% முதல் மிகையளவாக 39.54% வரை மாநில அரசுகள் வேட் வரியை விதிக்கின்றன. (தமிழ்நாட்டரசு பெட்ரோலுக்கு 27% இருந்து 34% ஆகவும், டீசலுக்கு 21.5% இருந்து 25% ஆகவும் மார்ச் 2017 இல் உயர்த்தியது.)

தன் வருமானத்திற்கு பெரும் ஆதாரமாக  பெட்ரோல், டீசல் வேட் வருவாயை நம்பியிருக்கும் மாநில அரசுகள் ஜி.எஸ்.டியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வர எப்படி ஒத்துக் கொள்ளும். இப்படி மாநில அரசுகளின் வருவாயை பிடுங்கிக் கொண்டு அவர்கள் மீதே குற்றம் சாட்டும் அய்யோக்கியத்தனத்தை பா.ச.க அரசால் மட்டுமே செய்ய முடியும்.

03 SEP 2018

82.34

02 SEP 2018

81.63

01 SEP 2018

81.58

31 AUG 2018

81.63

30 AUG 2018

81.40

29 AUG 2018

81.28

28 AUG 2018

81.14

27 AUG 2018

80.99

26 AUG 2018

80.74

25 AUG 2018

80.74

வரிவிதிப்பு மட்டுமல்லாமல் எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளையும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.  இந்தியாவில் நாள்தோறும்  எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படுகிறது. உலக வணிகம் பெரும்பாலும் அமெரிக்க டாலர் மதிப்புகளில் நடைபெறுவதால், அதன் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தவாறு உள்நாட்டு நாணய பரிவர்த்தனை (Exchange Rate) மதிப்பும் மாறுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையும் மாறுகிறது. அதைத் தொடர்ந்து சில்லறை விற்பனை விலையும் மாற்றப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போது பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கின்றனர். இக்கொள்ளை நிறுவனங்களுக்கு ஆதரவாகவே மோடி அரசும் செயல்படுகிறது.

மேலும், தன் நாட்டின் நாணயம் மதிப்பை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நடுவணரசின் கடமை. நடுவணரசின் பன்னாட்டு கார்பரேட் பொருளாதாரக் கொள்கையினாலும், உலக வணிக அமைப்பின் (WTO) கைப்பாவையாகச் செயல்படுவதாலும், ஊதாரித்தனமான செலவுகளினாலும் இந்திய உருவாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. உருவாயின் மதிப்பைக் காப்பாற்றக் கையாலாகாத நடுவணரசு மக்களின் மேல் தன்னுடைய நெருக்கடியைத் திணிக்கிறது.

தன்  நாட்டு மக்களுக்கு பெட்ரோலியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் இந்த நடுவணரசு வெளிநாடுகளுக்குக் குறைந்த விலைக்கு விற்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது. அதுவும் இவர்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறித்த விவரங்களைக் கேட்டு மத்திய அரசின் மங்களூரு பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினார். 3 மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்துக்கு தற்போது அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில்:

2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் முதல் ஜூன் 30 ஆம் நாள் முடிய அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, மலேசியா, மொரீசியஸ், சிங்கப்பூர், ஆங்காங், ஜக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுத்திரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் உரு. 32 முதல் உரு. 34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் உரூ.34 முதல் உரூபாய் 36 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததாகவும் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கேட்கும்போது பெற்றவள் பிச்சையெடுத்து அலையும்போது, பிள்ளை கும்பகோணத்தில் கோ தாணம் செய்தானாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இந்த நாடுகள் அவர்களே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் செய்வதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் நாட்டில் மாசுபடுத்தும் ஆலைகளை அனுமதிப்பதில்லை. அதற்குத்தான் இந்தியா என்ற பெரிய குப்பைத் தொட்டி இருக்கவே இருக்கிறது. தமிழகத்தின் நீரையும், நிலத்தையும் நாசமாக்கி அமெரிக்க, ஐரோப்பியர்கள் வண்ண வண்ண ஆடைகள் உடுத்த திருப்பூர் நகரமே நாசமாக்கப் பட்டு விட்டது. வரலாற்று சிறப்பு மிக்க நொய்யல் ஆறு அழிக்கப்பட்டு இன்று ஒரு சாக்கடையாக மாற்றப்பட்டுவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் மக்களை ஒரேயடியாகச் சாகச் சொல்லி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது இந்த அரசு.

கேட்டால் அந்நியச் செலாவணி ஆயிரங்கோடி கிடைக்கிறது என்பார்கள். நமது வளங்களைக் கொள்ளையடித்து, நீரையும் நிலத்தையும் நாசமாக்கி இவர்கள் ஈட்டும் அந்நியச் செலவாணி யாருக்குப் பயன்படுகிறது? அமைச்சர்களும், அதிகாரிகளும் உலகம் சுற்றவும், ஊர் மேயவும்தான் பயன்படுகிறது. தரகு முதலாளிகள் இங்கே கொள்ளையடித்த பணத்தில் வெளிநாட்டில் சொத்து வாங்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும்தான் பயன்படுகிறது. நமது ஏழை விவசாயிகளுக்கோ, மீனவ மக்களுக்கோ, இன்னபிற உழைக்கும் மக்களுக்கோ பயன்படுவதில்லை.

தமிழக மக்களும் உலகில் தலை நிமிர்ந்து, பெருமிதத்தோடு வாழ வேண்டும் என்று சொன்னால் இந்தத் தரகு-பார்ப்பனிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்றால் மட்டுமே அது சாத்தியம். அதாவது தமிழக மக்கள் தங்களுக்கென்று ஒரு சனநாயகக் குடியரசை அமைத்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம். நோய்நாடி நோய்முதல்நாடி அதுதீர்க்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.  எனும் வள்ளுவம், மருத்துவத்திற்கு மட்டுமல்ல; தாய்மண் விடுதலைக்கும் அதுதான்.

Pin It