மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு சார்பில் சென்னையில் சேப்பாக்கத்தில் செப்.29 அன்று பகல் 11 மணியளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார். கழகச் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங் கேற்றுப் பேசினார். அவரது உரையிலிருந்து:

“குலக் கல்வித் திட்டமாக சமஸ்கிருத திணிப்பாக புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது என்று இங்கே உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டினர். குலக் கல்வி, சமஸ்கிருத அடிப்படையில் வரும் எந்தத் திட்டத்தையும் தமிழகம் ஏற்காது என்பதே தமிழகத்தின் பொதுச் சிந்தனை. இந்த சிந்தனையை மக்கள் கருத்தாக கட்டமைத்தது தான் பெரியார் இயக்கத்தின் வெற்றி. இரண்டு சிந்தனைக்கும் பின்னால் இருப்பது பார்ப்பனிய எதிர்ப்பு. மக்கள் விடுதலைக்கான இந்த சிந்தனைப் போக்கை தமிழகத்தின் கருத்தோட்டமாக உருவாக்குவதற்கு இந்த மண்ணில் மகத்தான போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டத்தின் தாக்கத்தைத்தான் இப்போது புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் நாம் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் காலங்காலமாக பார்ப்பனர்களால் வஞ்சிக்கப்பட்ட பெரும்பான்மை பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிர வைத்தது கல்விதான். கல்வியை மய்யமாகக் கொண்டே சமூக நீதிப் போராட்டங்களை பெரியார் நடத்தினார். தமிழ்நாட்டிலேயே கல்விக்கான உரிமைகள் பறிக்கப்பட்டபோது திராவிடர் இயக்கம் அதை தொடர்ச்சியாக எதிர்த்து போராடி வந்திருக்கிறது.

1952இல் இராஜகோபாலாச் சாரி 6000 பள்ளிகளை, முதல்வராக வந்தவுடன் மூடியதோடு, தொடக்கப் பள்ளியில் அரை நேரம் குழந்தைகளுக்கு பாரம்பரிய குலத் தொழிலை கற்பிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தபோது பெரியார் எதிர்த்து ஒழித்தார். அதுதான் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு. கல்வி உரிமையை அனைத்துப் பிரிவினருக்கும் பகிர்ந்து சம வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படைக் கோட்பாடாக பெரியார் வரையறுத்தார். சமமாக பகிர்ந் தளிப்பதற்கு தடையாக அவ்வப்போது ‘வடிகட்டுதல்’ என்ற முறையை பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கமும் ஆட்சியாளர் களும் திணித்தபோது பெரியார் சமரசமின்றி எதிர்த்துப் போராடினார்.

இப்போது மோடி ஆட்சி அறிமுகப்படுத்தி யிருக்கும் புதிய கல்விக் கொள்கையும், தொடக்கக் கல்வியிலும், பிறகு எட்டாம் வகுப்பிலும், அதற்குப் பிறகு 12ஆம் வகுப்பி லும் மாணவர்களை வடிகட்டுகிற முறைகளை அறிமுகப்படுத்துகிறது. உயர்கல்விக்கு தகுதியற்றவர்கள் என்று மாணவர்களை வடிகட்டி, அவர்களை கல்வியாளர்களாக மாற்றாமல் தொழில் பயிற்சியாளர்களாக திருப்பிவிடுகிறது. 

இந்த ‘வடிகட்டுதல்கள்’ சமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கக்கூடிய பார்ப்பன சிந்தனையாகும். ஒரு காலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கே மாணவர்களை ‘வடிகட்டும்’ முறை இருந்தது. பள்ளி நிர்வாகமே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வை நடத்தி, அதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தான் அரசு நடத்தும் பொதுத் தேர்வை நடத்த அனுமதிப்பார்கள். இதை ‘பன்னாடை’ முறை என்று பெயர் சூட்டி, பெரியாரும் அவர் நடத்திய ‘விடுதலை’ ஏடும் கடுமையாக எதிர்த்தது. பிறகு அம்முறை ஒழிந்தது.

ஒரு முறை ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் அண்ணா விடம் இது குறித்து ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அதற்கு அண்ணா இவ்வாறு பதில் அளித்தார் . “Filteration in the Matriculation Examination is botheration to the students population whose parents occupation is cultivation for many generation in our nation”- என்று அடுக்குமொழியாக ஆங்கிலத்தில் பதிலளித்தார். காலம் காலமாக விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் தலைமுறையினருக்கு இந்த வடிகட்டுதல் முறை பெரும் தீங்கானது என்றார்.

தி.மு.க.வை பெரியார் தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்த காலத்தில் கல்வி அமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் இருந்தபோது சமூக நீதிக்கு எதிரான சில கல்வித்துறை அதிகாரிகள் ‘வடிகட்டும் முறை’ ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டனர். 10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுத்து, தொழில் பயிற்சிகளுக்கு திருப்பி விடுவதே அந்த திட்டம். இப்போது, மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் அதே கல்வித் திட்டம் என்றே கூறலாம். அப்போது இத் திட்டத்தை முன் வைத்த கல்வித் துறை அதிகாரிகளையும் அதை எதிர்க்காத கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனையும் பெரியார், ‘விடுதலை’யில் அழுத்தமாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். தி.மு.க.வை ஆதரிக்கிறோம் என்பதற்காக கல்விக் கொள்கையில் பெரியார் சமரசம் செய்ய தயாராக இல்லை.

அய்ந்தாம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது. அத் திட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியி லிருந்தே எதிர்ப்பு வந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோரை வருமான வரம்பு நிர்ணயித்து வடிகட்டிய போதும் சரி; உயர்கல்வியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு என்ற முறை வந்த போதும் சரி; பெரியார் போட்டுத் தந்த கொள்கையின் முழக்கமே எதிரொலித்தது. இந்த ‘வடிகட்டும்’ கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதுவே தமிழகத்தின் தனித்துவம். இந்த ‘வடிகட்டும்’ முறைகள் தொடர்ச்சியாக தமிழகத்தில் உருவான எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

‘குலக் கல்வித் திட்டம்’, ‘சமஸ்கிருத எதிர்ப்பு’ என்ற கருத்தாக்கங்களின் அடிப்படை என்ன என்பது ‘பசு மாட்டை’ தெய்வமாக வணங்கும் வடமாநிலங்களுக்குப் புரியாது. இன்னும் பார்ப்பனிய அடிமை களாக வாழ்வதிலேயே பெருமைப்படும் வட நாட்டுக்காரர்களோடு தமிழகம் கை கோர்த்துப் பயணிக்கவே முடியாது. அதனால்தான் கூறுகிறோம்; கல்விக் கொள்கைகளை மாநிலங்களே உருவாக்க வேண்டும் என்று. எனவே, கல்வி மீண்டும் மாநிலங்களில் முழுமையான உரிமையாக்கப் படவேண்டும்; பொதுப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டத் தோடு இணைக்க வேண்டும்.

இப்போது வந்திருக்கும் இந்த கல்விக் கொள்கையை ‘குலக் கல்வி - சமஸ்கிருதத் திணிப்பு’ என்ற காரணங்களைக் காட்டி,  இதைப் பின்பற்ற  மாட்டோம் என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். அதே வழியில் தமிழ்நாடு அரசும் இந்தப் புதிய கல்விக் கொள்கையை ஏற்காது என்று தமிழநாடு அரசே அறிவிக்க வேண்டும். இதற்காக டெல்லிக்குப் போய் நாம் மன்றாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

(குறிப்பு: சுருக்கமாக நிகழ்த்திய உரை விரிவாக்கப்பட்டுள்ளது)

இந்தக் கூட்டத்தில் பீட்டர் அல்போன்சு (காங்கிரஸ்), பேராயர் சற்குணம், வீர பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), வந்தியத் தேவன் (ம.தி.மு.க.), ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), திருமுருகன் காந்தி (மே 17), தீபக் (மாற்றுத் திறனாளி அமைப்பு), இரவிக்குமார் (வி.சி.) உள்ளிட்டோ உரையாற்றினர். வி.சி. தலைவர் திருமாவளவன் நிறைவுரையாற்றினார்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘வான்முகில்’. பிரிட்டோ ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

Pin It