modi latestஅனைவரும் திருவிளையாடல் படம் பார்த்திருப்போம். அதில் தருமியாக வரும் நாகேஸ், சிவபெருமானின் அறிவை சோதிக்க எண்ணுவார்... அப்போது சிவபெருமான், கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா? என்பார்.

உடனே பதறிய தருமி, இல்லை இல்லை... நானே கேட்கிறேன்... எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்" என்று பல கேள்விகளை கேட்பார்.

நிற்க...

சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தீவிரம் குறித்து கலந்துரையாடினார். அது கலந்துரையாடல் என்பது, ஒருவர் சொல்ல ஒருவர் கேட்பதும், பின்பு அவரது கருத்துக்களுக்கு இவர் பதில் சொல்வதும், அதன்பின் ஒரு பொதுக் கருத்துக்கு வருவதையுமே கலந்துரையாடல் என்ற பதத்தினால் குறிக்கிறோம்.

கலந்துரையாடல் என்ற பதத்திற்கு இவ்விதம் அர்த்தம் கற்பிக்கப்படும் போது, மோடியானவர் எந்த முதல்வர்களின் பேச்சையோ, கருத்தையோ கேட்கவில்லை. அவர் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு, அவ்வளவுதான் கூட்டம் முடிந்துவிட்டது கிளம்புங்கள் என்று போய்விட்டார்.

இதற்குப்பெயர் கலந்துரையாடலா? மேற்சொன்ன கலந்துரையாடல் என்ற பதத்திற்கும் மோடி பேசியதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

அப்படி என்றால் அவர் பேசியது என்ற பதத்திற்குள் வருகிறது..? சொற்பொழிவு.

ஆமாம் அவர் சொற்பொழிவு நிகழ்த்தி விட்டுப் போயிருக்கிறார். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது மாதிரி. இந்திய பிரதமர்களிலேயே இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர் என்ற பெருமை மோடிக்கு உண்டு.

அப்படியே செய்தியாளர்கள் சந்தித்தாலும் அவரது வாழ்க்கை குறித்தும், ரயில் நிலையமே இல்லாத இடத்தில் டீ விற்றது குறித்தும், அவர் சாப்பிடும் காளாளின் சுவை குறித்துமே கேட்பார்கள். அல்லது கேட்க வைக்கப் படுவார்கள்.

அவ்வளவுதான்.

சில வருடங்களுக்கு முன்பு அமித்ஷாவும் மோடியும் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவித்தார்கள்.

பத்திரிகையாளர்கள் பல கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள் ஆனால் மோடி பல கோணங்களில் கன்னத்தில் கை வைத்தும், மோட்டு வளையை பார்த்துக் கொண்டுமே அமர்ந்திருந்தார்.

அவருக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் சொல்லத் தெரியாது. அவருக்கு பேச மட்டும்தான் தெரியும் உரையாட தெரியாது என்பதை நிரூபித்தார்.

இப்போது பெருந்தொற்று பரவி வரும்போது, பத்திரிகையாளர்களையும், உயரதிகாரிகளையும், மாநில முதல்வர்களையும் அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை முடுக்கி விடாமல், எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நிறைய பேரை நாம் கொரோனா தொற்றினால் இழந்து விட்டோம் என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படித்தான் சிறுபான்மையோரையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் சங் பரிவாரங்களும், பாஜக பசு குண்டர்களும் அடித்துக் கொல்லும் போது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் என்னை வேண்டுமானால் தாக்குங்கள் ஆனால் அவர்களை அடிக்காதீர்கள் என்று அழுதார்.

50 நாளில் புதிய இந்தியாவை உருவாக்காவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று வீராவேசம் பேசிய பிரதமர், இரண்டாவது முறையாக அரியணையில் அமர்த்திய போதும், வீராவேசமாக பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்.

கோவிட் தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் உரையாடும் போது முதல்வர்கள் சொல்வதை பிரதமர் நரேந்திர மோடி கேட்பதில்லை. இது ஒருவழி உரையாடல் அல்ல, ஒருவழி அவமதிப்பு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல.

உத்தரவு போட்டுக் கொண்டிருக்காமல் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

உங்களோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்று பொட்டில் அடித்தாற்போல கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.

ஆகவே பேசிக் கொண்டும், அழுது கொண்டும் இருக்காதீர்கள் பிரதமரே... அதுவரை கொரோனா காத்திருக்காது.

- சஞ்சய் சங்கையா

Pin It