திராவிட இயக்கங்களால் தமிழ்நாடு தரம் தாழ்ந்து விட்டது. ஐம்பது ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் நாடு இருண்டுபோய் விட்டது. தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்குத் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்னும் கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது. இதற்குச் சில ஊடகங்கள் விழுந்து விழுந்து முக்கியத்துவம் தருகின்றன. நேற்று
(25-.03-.2016) தந்தி டிவியில் இளைஞர்களின் எண்ண ஓட்டம் என்ன? புதிய வாக்காளர்கள் வாக்கு யாருக்கு ? என்பதற்கான கலந்துரையாடல் விவாதம் நடைபெற்றது. அதில் சில இளைஞர்கள் திமுக அதிமுக இரண்டும் ஒரே ஐடியாலஜியை கொண்டுள்ளன. இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. இரண்டுக்கும் மாற்றாக ஒரு ஆட்சியை எதிர்பார்க்கிறோம். என்றார்கள்.
பொதுவாக எல்லாவற்றையும் பொதுமைப் படுத்திப் பார்ப்பது நியாயம் ஆகாது. நோயையும் நோய்க்கான மருந்தையும் சமமாகப் பார்க்க முடியாது. பசியையும், பசிதீர்க்கும் உணவையும் ஒன்றாகப் பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அதுபோல் திமுக ஆட்சியையும் , அதிமுக ஆட்சியையும் ஒன்றாகப் பார்ப்பது நியாயம் அன்று. திமுக ஆட்சியில் தமிழகம் கண்ட நன்மைகளை இளைஞர்கள், மாணவர்களின் கனிவான பார்வைக்கும், பரிசீலனைக்கும் வைக்கிறோம்.
திமுகவும் அதிமுகவும் ஒரே ஐடியாலஜி கொண்டவை என்பது அடிப்படையில் மிகவும் தவறானது. திமுகவின் மொழிக் கொள்கை தெளிவானது. அது இருமொழிக் கொள்கை.அதற்காகத் திமுக காலம் காலமாகப் போராடி வருகிறது. அரசியல் சட்ட எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற வரலாறு அதற்கு உண்டு. அதிமுகவுக்கு அப்படி எதுவும் கிடையாது.
பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை போன்றவற்றிற்காகத் திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
மாணவர்களுக்குச் சத்துணவில் வாரம் 5 முட்டைகள் அல்லது வாழைப்பழம். இலவச பஸ் பாஸ், இலவச மிதிவண்டி, ஆகியவற்றோடு, கிராமப் புற மற்றும் பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகை, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு ஒழிப்பு , சமச்சீர்க் கல்வி ஆகியவற்றிற்காகப் பாடுபட்டது திமுக. இதில் எந்தத் தொடர்பும் இல்லாதது அதிமுக.
படித்துப் பட்டம் பெற்று வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடச் சரியான திட்டங்களை செயல் படுத்தியது திமுக. திருபெரும்புதூர் அருகே ஹ§ண்டாய் கார் தொழிற்சாலை, நோக்கியா செல் போன் தொழிற்சாலை, பாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலை, மோட்ரோலா செல்போன் தொழிற்சாலை, டெல் கம்பியூட்டர் தொழிற்சாலை, சாம்சங் டிவி, வாசிங் மிசின் தொழிற்சாலை, பிளக்ஸ் ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, நிசான் கார் தொழிற்சாலை, கொமாட்ஷ§ ஜேசிபி தொழிற்சாலை, தேசிய வாகனப் பரிசோதனை நிலையம் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது திமுக ஆட்சி. ஆனால் திமுக ஆட்சியில் வந்த நோக்கியா, பாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலைகளை அடுத்த மாநிலத்துக்குத் தாரை வார்த்தது அதிமுக ஆட்சி.
வளர்ந்துவரும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப வடசென்னை அனல் மின் நிலைய திட்டம்- 2, எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் -2, மேட்டூர் அனல் மின் நிலைய திட்டம் -2, உடன்குடி அனல் மின் நிலைய திட்டம் போன்ற புதிய மின் திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சி. ஆனால் திமுக தொடங்கிய மின் திட்டங்களைஎல்லாம் கிடப்பில் போட்டுப் பெரும் அவதிக்குத் தமிழகத்தைத் தள்ளியது அதிமுக ஆட்சி. தமிழகத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்யத் தனியாரிடம் மின்சாரம் வாங்குகிறேன் என்று சொல்லிப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புக்குக் காரணமாக இருந்தது அதிமுக ஆட்சி.
பெருகிவரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைத் தீர்க்கத் தொலை நோக்கோடு பத்து மேம்பாலங்களைச் சென்னை மாநகராட்சியும், கத்திப்பாரா, கோயம்பேடு, பாடி, உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களை நெடுஞ்சாலைத் துறை மூலமும் உருவாக்கிய ஆட்சி திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் 70%வேலைகள் முடிந்திருந்த மதுரவாயல், துறைமுகம் இணைப்புப் பாலத்தைக் கட்டி முடிக்காமல் கிடப்பில் போட்டது அதிமுக ஆட்சி. அது மட்டுமன்றி மேம்பாலங்களைக் கட்டியதற்காகத் தலைவர் கலைஞர் அவர்களையும், தளபதி மு.க.ஸ்டாலினையும் நள்ளிரவில் கைது செய்து கொடுமைக்கு ஆளாக்கியது அதிமுக ஆட்சி.
தென்தமிழகம் வளம் பெருக, தமிழர்களின் நூற்றாண்டுகாலக் கனவு திட்டமான சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்திடப் பெருமுயற்சி எடுத்து வென்றது திமுக ஆட்சி. ஆனால் அது ராமர் பாலம் என்றுகூறி மதவாத காரணங்களைக் கூறி, அத்திட்டம் செயல்படாமல் தடுத்து தமிழர்களின் வாழ்வில் மண்ணைப்போட்டு சு.சாமிகளுக்குத் துணை போனது அதிமுக ஆட்சி.
தமிழ் மக்களின் வாழ்வைச் சீரழிக்கும் மதுவை ஒழித்து மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சசிபெருமாள் போன்ற சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றும், ஆட்சிக்கு வந்ததும் முதலில் மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று அறிவித்த கட்சி திமுக. ஆனால் அந்த கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காததுடன், நையாண்டி செய்வது அதிமுக.
நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் நலனுக்காக உழவர் சந்தைத் திட்டம், இலவச மின்சாரம் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், விவசாயிகளின் துயர் துடைக்க 7000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்து அகில இந்தியாவுக்கும் வழி காட்டியது திமுக அரசு.
பரிதிமாற்கலைஞர் காலம் முதல், தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனப் பல்வேறு தமிழ் அறிஞர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். அவர்கள் கண்ட கனவை நனவாக்கி நம் செந்தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அத்துடன் மைசூரில் இருந்த செம்மொழி உயர் ஆய்வு மையத்தைச் சென்னைக்குக் கொண்டு வந்தவர் கலைஞர். செம்மொழி உலகத்தமிழ் மாநாட்டையும் நடத்தியவர் கலைஞர். ஆனால், செம்மொழி என்னும் பெயரைக் கேட்டாலே எட்டிக்காய் தின்றதுபோல் முகம் சுளிப்பவர் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகளாகச் செம்மொழி உயர் ஆய்வு மையத்தைச் செயல்பட விடாமல் முடக்கி வைத்திருப்பவர் ஜெயலலிதா.
திமுக ஆட்சியில்தான் அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டது. அத்துடன் சென்னையில் வள்ளுவருக்கு எழில் மிகுந்த வள்ளுவர் கோட்டமும், முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் வானுயர வள்ளுவருக்குச் சிலையும் அமைத்துச் சிறப்பித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
எனவே, மொழி நலம், மகளிர் நலம், மாணவர் நலம், தொழிலாளர் நலம், விவசாயிகள் நலம், புதிய தொழிற்சாலைகள், புதிய மின் திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள், அகன்ற சாலைகள், பெரிய மேம்பாலங்கள், சேதுகால்வாய்த்திட்டம், தமிழைச் செம்மொழியாக்கியது உள்ளிட்ட தமிழ் நாட்டின் நலனுக்காக உழைத்தது, உழைத்து வருவது திமுகவும், அதன் தலைவர் கலைஞரும் தான். வாய்கூசாமல் பொய் பேசித் திரியும் வஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு தமிழக இளைஞர்களே! இளம் வாக்காளர்களே பலிஆகிவிடாதீர்கள்.
நாடுநலம் பெற , நல்லாட்சி மலர்ந்திட ஆதரிப்பீர் உதய சூரியன்.