கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

farmer tamilதமிழக அரசு தேர்தல் காலப் பரிசாக 5 ஏக்கருக்கு குறைவாக விவசாயம் செய்கிற விவசாயிகளுக்கு கடந்த 5.2.2021 ல் ரூ.12,110 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. வரவேற்கிறேன், இருந்தாலும் விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்தால் போதாது; தேசிய மற்றும் வணிக வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இக்கோரிக்கையை வரவேற்று வலுசேர்ப்போம்.

விவசாயி என்பவர் யார்? விவசாய முதலாளியா? விவசாயக் கூலியா?

விவசாயி என்ற சொல் மிக மிக தவறாகப் பொருள் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல். உதாரணமாக நெல் சாகுபடியை எடுத்துக் கொள்வோம். விதை நெல்லை விதைக்கும் நாற்றாங்கலை உழுது பக்குபவப்படுத்துவது, நெல் மணியை விதைப்பது, பக்குவப்படுத்தப்பட்ட வயலைத் தயார் செய்வது ஆண் பெண் விவசாயக் கூலிகள். பக்குவப்படுத்தப்பட வயலில் நாற்றாங்கலில் நெற்பயிரை பிடுங்கி நடுபவர்கள் ஆண் - பெண் விவசாயக் கூலிகள்.

நெற்பயிர் செழிக்க தண்ணீர் கட்டுவது ஆண் - பெண் விவசாயக் கூலிகள். வயலுக்கு பூச்சி மருந்து அடிப்பது, ஆண் - பெண் விவசாயக் கூலிகள். நெற்கதிர்களை காகம், குருவி, எலி, மயில் பறவைகளிடமிருந்து காப்பது ஆண் - பெண் விவசாயிகள். முற்றிய நெற்கதிரை அறுவடை செய்து களத்து மேட்டில் சுமந்து போடுவது ஆண் - பெண் விவசாயக் கூலிகள்.

கதிர் அடிக்கும் மிஷினில் நெல் மணியைத் தனியாகப் பிரிப்பது ஆண் பெண் விவசாயக் கூலிகள். நெல்லை மூட்டை கட்டி சந்தைக்கு லாரியில் ஏற்றி விடுவது, ஆண் பெண் விவசாயக் கூலிகள். 'இடைத்தரகரிடம்' பணம் பெற்று வீட்டில் பீர்வாவில் பூட்டி வைக்கும் வேலையை மட்டும் செய்பவர் 'விவசாயி்'. இப்படிதான் அரசும் பொதுமக்களும் ஏன் ஆயுதப் புரட்சி - ஆயுதமற்ற சாதா புரட்சிக்காரர்கள் கூட நினைக்கிறார்கள் – செயல்படுகிறார்கள். விளைவிப்பவனே விலை நிர்ணயம் செய்வது என விவசாய முதலாளிகள் முழங்குகிறார்கள்? விளைவிப்பவன் யார்?

நாற்றாங்கலில் விதைப்பது முதல் லாரியில் ஏற்றுவது வரையான வேலை செய்பவன் விவசாயி கிடையாதா?. முதலீடு செய்து இடைத்தரகனிடம் பணம் வாங்குபவன் மட்டும் விவசாயியா? கடவுள் எனும் முதலாளி கண்டு எடுத்த தொழிலாளி விவசாயி - “அரசி முதல் புரட்சிக்காரர்” அறிவைக் காட்டிலும் அ.மருதகாசியின் அறிவு வியக்க வைக்கிறது,

‘விவசாயக் கூலிகள்’ வார்த்தையைக் கூட தவிர்த்த விவசாயிகள் விடுதலை மாநாடு

கடந்த 2017ம் ஆண்டில் தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அதன் தோழமை அமைப்பின் "விவசாயியை வாழ விடு - விவசாயிகள் விடுதலை மாநாடு்” நடத்தியது பலரும் அறிந்ததே. மார்க்சியக் கருத்து தளத்தில் 40 அண்டு அனுபவமும் - முதிர்ச்சியும் கொண்ட ஆழமான சிந்தனை செயல்பாட்டைக் கொண்ட அமைப்பு நடத்திய மாநாட்டு விளக்க வெளியீட்டில் ஒரு வார்த்தை கூட விவசாய்க் கூலிகள் பற்றி இல்லை. இதை சுட்டிக்காட்டி வினவில் எழுதியதற்குப் பதில் இல்லை.

மாநாட்டில் ஒரு தலைப்பாகக் கூட “விவசாயக் கூலிகள் பிரச்சனை” பேசப்படவில்லை என்பது விவசாயக் கூலிகளை எந்தளவுக்கு புரட்சிகர கட்சிகள் கூட புறக்கணிக்கின்றன என்பதற்கு மிக எடுப்பான எடுத்துக்காட்டு.

மாநாடு நடந்த நேரத்தில் சமத்துவ விவசாயக் கூலிகள் சங்கம் சார்பாக 1. விவசாயக் கூலிகள் பெற்ற சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்க 2. விவசாயக் கூலிகளுக்கு வங்கியில் 30 பைசாவிற்கு கடன் வழங்குக. 3. வறட்சி நிவாரணமாக விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50,000/- வழங்கு என்ற 20.08.2017 ஆர்ப்பாட்ட துண்டறிக்கை மாநாட்டு திடலில் விநியோகிக்கப்பட்டது.

இரவு இயற்றிய தீர்மானத்தில் மக்கள் அதிகாரம் மிகத் தாராளமான மனதுடன் "விவசாயக் கூலிகள் பெற்ற சுய உதவிக் குழு கடன்களைத் தள்ளுபடி செய்" என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் தீர்மானமாக நிறைவேற்றியது.

அண்மையில் டில்லி சிங்கூர் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தோழர் மருதையன் (ZPSC) ஜமீன் பிராப்தி சங்கர் கமிட்டி என்ற தலித் விவசாயக் கூலிகள் சங்கம் குறித்து முழுமையான பேட்டியை எடுத்துப் போட்டிருந்தார்.

மக்கள் அதிகாரமும், மருதையன் போன்றவர்களுக்கு விவசாயக் கூலிகள் குறித்தான புரிதல் இன்மைக்கு தலித் கட்சி, அமைப்புகளின் 'வெற்று பொதுக் கோரிக்கை' போராட்டங்களே காரணம்.

தலித் இயக்க ஜீன்களில் - வெட்டி அகற்றப்பட்ட விவசாயக் கூலிகள்

விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, புதிய தமிழகம் போன்ற அமைப்புகள் தோன்றி சுமார் 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நான் அறிந்தவரை “விவசாயக் கூலிகள் பிரச்சனை” குறித்து ஒரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமே நடந்ததே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் தாமாக முன்வந்து நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் என்ற கலைஞர் அறிவித்ததை, எந்த இயக்கமும் "ஏன் கொடுக்கவில்லை கொடுங்கள்" என்ற கோரிக்கையைக் கூட முன் வைக்கவில்லை.

CAAக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் இலட்சக்கணக்கான மக்களை திருச்சியில் திரட்டிக் காட்டியதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். விவசாயக் கூலிகள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக சுமார் 42 சதவீதமாக தலித் மக்கள்தான். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என முழங்குகிறார்கள் சிறுத்தைகள். ஆனால், சாதியின் அடிவேர் விவசாய முதலாளிகளிடமே உள்ளது. அந்த சாதிய அடிவேரை வெட்ட விவசாயக் கூலிகள் பிரச்சனையை அரசியலாக மாற்றாமல் சாதி ஒழிப்பு எப்படி சாத்தியமோ? Event - CONSPOT பேசும் அறிவர் திருமா விவசாயக் கூலிகள் பற்றி அறியாதவர் என்று நம்ப மறுக்கிறது எமது பகுத்தறிவு.

நிலவுடமை விவசாயிகளுக்கு நிவாரணம், விவசாயக் கூலிக்கு பட்டை நாமம்

நிலவுடமை விவசாயிகளின் துயரங்கள் முற்றிலும் உண்மை. அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதும் மிகச் சரியே. இவர்களை விட பன்மடங்கு வறுமையாலும் சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட விவசாயக் கூலிகளுக்கு எவ்வித வறட்சி, புயல், வெள்ள நிவாரணமும் வழங்கப்படுவதில்லை.

நிலவுடமை விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக 1 ஹெக்டேர் நிலத்திற்கு மானவாரிப் பயிர்களுக்கு ரூ.7410.00. நீர் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு - ரூ.13500; நீண்டகாலப் பயிர்களுக்கு ரூ.18000; மல்பெரி (பட்டுபூச்சி) - ரூ.7410; நெல்லுக்கு - ரூ.13500.

இந்த நிவாரணம் நிலவுடமை விவசாயிகளுக்கு நிச்சயம் போதாதுதான். ஆனால் கிராமங்களில் நிலத்தை நம்பி வாழும் விவசாயக் கூலிகளுக்கு “உழவர் பாதுகாப்பு அட்டை” வைத்திருப்பவர்களுக்கு நிவாரணமாக 10 பைசா கூட வறட்சி நிவாரணமாக வழங்குவதே இல்லை, ஏன் என்ற கேள்வி கேட்க ஆளில்லை.

அரசு நிலவுடமை விவசாயிகளுக்கு வறட்சி, புயல், வெள்ள நிவாரணம் வழங்கும் பொழுது, நிலத்தில் வேலை செய்யும் விவசாய கூலிகளுக்கு தனியாக நிவாரணம் அளித்திட வேண்டும். நிலவுடமை விவசாயிகளைக் காட்டிலும். விவசாயக் கூலிகள் கொடிய வறுமையில் வாடுகிறார்கள்.

மக்கள் நல அரசு என்றால் நிலவுடமை விவசாயிகளுக்கு முன்பு விவசாயக் கூலிகளுக்கு அல்லவா நிவாரணம் வழங்க வேண்டும். இத்தகைய அநீதிக்கு எதிராக எவரும் அணி திரட்டிப் போராடததன் விளைவே நிலவுடமை விவசாயிகளுக்கு நிவாரணமும், விவசாயக் கூலிக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள்.

நகைக்கடனும் நகை முரணும்

நிலவுடமை விவசாயிகளுக்கு வங்கிகளில் தங்க நகைக்கு ரூ100க்கு வட்டி 30 பைசா, அதே நிலவுடமையாளரின் நிலத்தில் விவசாய கூலியாக வேலை செய்யுபவருக்கு வங்கியில் ரூ.100க்கு 90 பைசா வட்டி.

இது எந்த வகையில் நேர்மை, நியாயம், அறம்? நிலவுடமை விவசாயியைக் காட்டிலும் 60 பைசா அதிக வட்டி அவரிடம் வேலை செய்யும் விவசாயக் கூலியிடம் வாங்குவது அநியாயத்திலும் அநியாயம்? ஏனிந்த அநியாயம்? ஓங்கிக் குரல் கொடுக்க ஆளில்லை.

அதனால் விவசாயக் கூலியின் அவலக்குரல் எவர் காதுக்கும் எட்டவில்லை. அரசே நிலவுடமையாளருக்கு உள்ளது போலவே விவசாயக் கூலிக்கு 30 பைசா வட்டியில் கடன் வழங்க 12,110 கோடி கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியின் போது விவசாயக் கூலியின் நகைக் கடனையும் தள்ளுபடி செய்.

பட்டா, சிட்டாவுக்கு வங்கிக்கடன் - பாட்டாளி விவசாயிக் கூலிக்கு எங்கே கடன்?

பட்டா, சிட்டா அடிப்படையில் நிலவுடமை விவசாயிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் 100 ரூபாய்க்கு 33 பைசா என ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறார்கள். அதை விட மிகவும் வறுமையில் வாடும் விவசாயக் கூலிகள் வங்கி வாயிற்படியை மிதிக்கக் கூட அனுமதிப்பதில்லை.

நிலவுடமை விவசாய முதலாளிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது சரியானது தான்.

விவசாய கூலிகளுக்கு எந்த வங்கியும் கடன் தராததால், தாலி அறுக்கும் நுண் கடன் நிறுவனங்களான சுய உதவி குழுக்களிடம் ரூ,15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ரூ.100க்கு வட்டி 2 ரூபாயும் அதற்கு மேலும் வட்டி கொடுத்து கடன் வாங்குகிறார்கள்.

நிலவுடமை விவசாயிகளுக்கு 33 பைசா, விவசாய கூலிக்கு 2 ரூபாய் அதாவது ஒரு ரூபாய் 67 பைசா அதிகம். நிலவுடமை விவசாயிக்கு கடன் தள்ளுபடி, ஆனால் விவசாயக் கூலிகள் பெறும் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி இல்லை.

விவசாயிகளுக்கு குரல் கொடுக்க நல்லவர்களே! எங்களுக்கும் குரல் கொடுங்கள்... தமிழக அரசே! விவசாயக் கூலிகள் பெற்ற சுய உதவிக் குழு கடன்களைத் தள்ளுபடி செய். வங்கிகளில் நிலவுடமை விவசாயக் கூலிகளுக்கு வழங்குவது.

விவசாயக் கூலிகள் குடிபெயர்வும் விவசாய அழிவும்

நிலவுடமை விவசாயி முதலாளிகளின் பெரும் கோரிக்கைகளில் முதன்மையானது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது ஆகும். கோலப்பன் கமிட்டியின் பரிந்துரைப்படி விவசாயக் கூலிக்கு 5 முதல் 6 மணி வரை மட்டுமே வேலை. ஆனால் கால நிர்ணயமில்லாமல் விவசாயக் கூலிகள் வேலை செய்ய வேண்டும்.

குறைந்த பட்ச கூலி நிர்ணயமும் செய்யப்படுவதில்லை. வங்கிகளில் கடனில்லை, நகைக் கடனில்லை, தள்ளுபடிகளும் இல்லை, குடிமனை இல்லை, இப்படி பொருளாதாரத் தாக்குதல்கள் ஒரு புறம், நெட்டி சாய்க்கும் விவசாயக் கூலிகளில் ஆகப் பெரும்பான்மையினர் தலித்துகள். இவர்களின் மீது பெரும் வன்கொடுமைகள், தீண்டாமை ஏவப்படுகிறது. தன்மானமில்லாத வாழ்க்கையை யார் வாழ விரும்புவார்கள்? விவசாயக் கூலிகளின் சொல்லொண்ணா துயரத்திற்கு குரல் கொடுக்க யாருமே இல்லை.

CPM கூட விவசாயத் தொழிலாளர் சங்கம் அதாவது விவசாய முதலாளியும் அவரால் சுரண்டப்படும் விவசாயக் கூலிக்கும் ஒரே சங்கம். உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி ஆணையாளருக்கும், துப்புரவுத் தொழிலாளிக்கும் ஒரே ஊரக உள்ளாட்சி தொழிலாளர் சங்கம். CPM-ன் வர்க்கப் பார்வை என்னை வியக்கச் செய்கிறது.

இப்படி இருந்தால் ஏவப்படும் வன்கொடுமைகளுக்கு எப்போதும் தீர்வே இல்லை. இப்படி வதைபடும் வாழ்வை கிராமங்களில் எப்படி வாழ முடியும்?

எனவே நிலவுடமை விவசாய முதலாளிகளே விவசாயக் கூலிகளின் நலனுக்காக உரிமைகளை நீங்கள் குரல் கொடுக்கத் தவறினால் விவசாய அழிவும் அதனுடன் பிணைந்த அனைவரின் அழிவும் துரிதப்படும். தமிழ்நாட்டில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தாதன் விளைவு விவசாயக் கூலிகளிடம் கையளவு நிலம் கூட இல்லை.

ஓட்டுக்காக விவசாயக் கூலிகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக கலைஞர் வாக்குறதி அளித்தார். அவர் வெற்றி பெற்ற பின், ஏன் கொடுக்கவில்லை எனக் கேட்க விவசாயக் கூலிகளுக்கு நாதியில்லை. கிராமங்களில் குடியிருக்க வீடும் இல்லை. இந்தக் கொடுமைக்கு முடிவுமில்லை. கிராமங்கள் காலியாகும் பொழுது விவசாயத்திற்கு கூலி ஆட்கள் எப்படி கிடைப்பார்கள்?

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் விவசாயக் கூலிகளைக் கண்டு எரிச்சலுறும் நிலவுடமை விவசாய முதலாளிகளே... கிராமங்களில் விவசாயக் கூலிகள் எஞ்சி இருப்பதும் இத்தகைய அரசின் சிறு நிவாரணங்களால் தான். அதுவும் உழைத்து விட்டு தான் கூலி பெறுகிறார்கள். அவை தள்ளுபடிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களின் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், வங்கிக் கடன், டிரக்டர் கடன், இடு பொருட்கள் கடன் என அனைத்துக் கோரிக்கைகளிலும் விவசாயக் கூலிகளை இணைத்து குரல் கொடுங்கள்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி - தம்படி கூட விவசாயக் கூலிக்கு பலனில்லை

கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கேட்காமலேயே கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 6,60,000 கோடியை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலவுடமை விவசாயிகள் போராடியதால் உத்திரப்பிரதேசத்தில் 36 ஆயிரம் கோடி கடனும், கர்நாடகத்தில் 8165 கோடி கடனும் தள்ளுபடி செய்தார்கள்.

2017ல் தமிழ்நாடு அரசு 20 லட்சம் நிலவுடமை விவசாயிகளுக்கு ரூ,7,760 கோடி வறட்சி நிவாரணமாக கடன் தள்ளுபடி செய்துள்ளது. 2006ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ரூ,5500 கோடி கடன் தள்ளுபடி செய்தது. இவையனைத்தும் நிலவுடமை விவசாயிகளுக்கு மட்டுமே.

விவசாயக் கூலிகளுக்கு தம்படி பைசா கூட பயனில்லை. இதேபோல் நிலவுடமை விவசாயிகளுக்கு டிராக்டர் கடன், யூரியா கடன், இடுபொருட்கள் கடன், பயிர் இன்யூரன்ஸ் என பல கடன்களும், தள்ளுபடிகளும் உண்டு. 

ஆனால் விவசாயக் கூலிகளுக்கு கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடுமை என்னவென்றால் விவசாயக் கூலிகள் வயிற்றில் பிறந்த படித்த பாவிகள் கூட விவசாயக் கூலிகளின் கொடுமைகளைப் பேசுவதேயில்லை.

ஆனாலும் கூட நான் டெல்லியில் போராடும் விவசாய முதலாளிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன், ஆதரிப்பேன்.

- மு.கார்க்கி