நாட்டில் ஏராளமான வேலை வாய்ப்புகளைத் தரக் கூடிய சிறு - குறு - நடுத்தரத் தொழிற்சாலைகள், பா.ஜ.க. - அ.இ.அ.தி.மு.க. அலட்சியத்தால் மூடப்பட்டுவிட்டன.

• இந்தத் தொழிற்சாலைகளே நாட்டில் 90 சதவீத உற்பத்தியை செய்கின்றன.

• இந்தத் தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ‘ஜாப் ஆர்டர்’களை எடுத்து வேலை செய்த பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து முடங்கிக் கிடக்கிறார்கள்.

• 2016இல் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை; 2017இல் வந்த ஜி.எஸ்.டி. - இரண்டுமே சிறு, குறு தொழில்களை சீரழித்துவிட்டன.

• கொரானா பாதிப்பிலிருந்து மீட்க உலகம் முழுதும் சிறு, குறு தொழில்களை மீட்கும் உதவிகளை நாடுகள் செய்தன. 2021-2022 நிதி அறிக்கை, இதை கண்டு கொள்ளவே இல்லை.

• குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்; ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்தத் தொழிலில் ஈடுபட்டோர் வைத்த கோரிக்கையை மோடி ஆட்சி காதில் போட்டுக் கொள்ளவில்லை.

• தொழில் முனைவோருக்கு 3 இலட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வந்தது. ஆனால் யாருக்கும் கடன் வழங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

• ஏற்கனவே கடன் வாங்கியோருக்கு வாங்கிய கடனில் 20 சதவீதம் புதிய கடன் வாங்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் ஏற்கனவே கடன் வாங்கி கடன் தொகையை முழுமையாக செலுத்தியோருக்கு கடன் இல்லை என்று கை விரித்து விட்டார்கள். இது மத்திய அரசு இழைத்த அநீதி என்றால், மாநில அரசும் அதைத் தான் செய்தது.

• கொரானா காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சாரக் கட்டணத்தை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். அ.தி.மு.க. ஆட்சி ஏற்கவில்லை. ஆனால் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்காகவே அரசு மின் உற்பத்தியை திட்டமிட்டு குறைத்தார்கள் என்றும், 2028 ஆம் ஆண்டு வரை தனியாரிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளதையும், இதனால் ஏற்கனவே 30,000 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் தணிக்கை ஆணையம் அம்பலப்படுத்தியிருந்தது. அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாது மூடி மறைத்து விட்டது அ.தி.மு.க. ஆட்சி.

• கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வர தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையையும் அ.தி.மு.க. ஆட்சி ஏற்கவில்லை.

• கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலப் பொருள்கள் விலையை 30 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக உயர்த்தி விட்டன. இதைக் கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையையும் மாநில அரசு கேட்கவில்லை.

• 12 இலட்சம் சிறு - குறு தொழிற்சாலைகளில் கொரானா பாதிப்பால் ஒரு இலட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால் பல இலட்சக்கணக்கானோர் வேலை இழந்துவிட்டனர்.

(தகவல்களுக்கு ஆதாரம்: தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ஜே. ஜேம்ஸ் அறிக்கை)

- விடுதலை இராசேந்திரன்

Pin It