மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது.

agitation against modi in maduraiநுழைவுத் தேர்வு கிராமப்புற மக்களைப் பாதிக்கும் என்று தமிழகம் நுழைவுத் தேர்வையே இரத்து செய்திருந்தது. ஆனால் ‘நீட்’ என்ற மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மோடி ஆட்சி திணித்தது. தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல் மோடி ஆட்சி கிடப்பில் போட்டது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்டார்.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற ஆணைகளைக்கூட மதிக்காமல் கருநாடக தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம் செய்து தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாடியது மோடி ஆட்சி. வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தின் ஆணைகளுக்காக பணிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.

பெரியார் - அம்பேத்கர் பெயரில் அய்.அய்.டி. களில் வாசகர் வட்டம் நடத்தத் தடை போட்டதோடு தமிழ்நாட்டின் கனிம வளங்களைப் பாதிக்கும் ஆபத்தான திட்டங்களுக்கு வழி திறந்து விட்டது. தூத்துக்குடி மக்களுக்கு பேராபத்தை உருவாக்கித் தரும் ‘ஸ்டெர்லைட்’ ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்ற பார்ப்பன நீதிபதி கோயல் என்பவர் ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக்கி ஸ்டெர்லைட்டின் வேதாந்தா பார்ப்பன குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றுத் தந்தது.

‘ஜி.எஸ்.டி.’ என்ற வரி விதிப்புக் கொள்கையைப் புகுத்தி மாநிலங்களின் வரி விதிப்புக் கொள்கை அதிகாரங்களைப் பறித்தது. பல சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் இந்தக் கொள்கையால் தமிழகத்தில் மூடப்பட்டன.

எச். ராஜா போன்ற பார்ப்பனர்களும் ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் சில ‘சூத்திர’த் தமிழர்களும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பெரியாரை - திராவிட இயக்கங்களை தரம் தாழ்ந்து பேச அனுமதித்ததோடு பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று ‘திமிரோடு’ அறிக்கை விடுத்தனர். மாநில அரசை ஆட்டிப் படைத்து டில்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு ‘பினாமி’ ஆட்சியை நடத்தியதோடு தமிழகக் காவல்துறையையும் தனது விருப்புவெறுப்புக்கேற்ப ஆட்டிப் படைத்து வருகிறது, மோடி ஆட்சி!

இப்போது உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமைச்சரவையில் முடிவெடுத்த அடுத்த மூன்று நாட்களில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டது. பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ‘சமூகக் கல்வி ரீதியாக’வும் வரலாற்று ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்துக்கு சமூக நீதி வழங்கு வதற்காகவே கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்து புதைக்குழிக்கு அனுப்பி விட்டது.

இந்த ‘பொருளாதார அடிப்படை’ என்ற ஆபத்தான இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே அழிக்கும் முயற்சிக்கு எதிராக ஜனவரி 27ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதில் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்று கைதானார்கள்.

மதுரையில் கூடிய கூட்டமைப்பின் நூற்றுக் கணக்கான தோழர்கள் கருஞ்சட்டையுடன், கருப்பு கொடி ஏந்தி, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தமிழர் விரோத செயல்களை கண்டித்து ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கமிட்டனர். தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருஷ்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முகிலன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஏராளமான தோழர்களோடு கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

Pin It