கீற்றில் தேட...

தோழர் திருமுருகன் காந்தி மீது எடப்பாடி அரசு ஊபா சட்டத்தின் 13(1)(b) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 6 மாதத்திற்கு விசாரணை இல்லாமலேயே சிறையில் வைத்திருக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் கைதானால் ஜாமீனும் பெற முடியாது. 30 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனையையும் வழங்க முடியும். இப்படிப்பட்ட ஒரு கொடிய சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவிற்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்? ஆற்று மணலைக் கொள்ளையடித்தவர்கள், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியவர்கள், கிரானைட், கார்பைட் மணல், ஆறுகள், குளங்கள், மலைகள் என அனைத்து வளங்களையும் சுரண்டிக் கொழுத்தவர்கள் என எல்லா காலிப்பயல்களும் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாமல், வெள்ளையும் சொள்ளையுமாக உலா வந்து கொண்டிருக்கும் போது இந்த மண்ணின் மக்களுக்காக அவர்களின் ஆன்மாவாக நின்று குரல்கொடுத்த திருமுருகன் காந்தியை கைது செய்திருப்பது இந்த அரசு ஓவ்வொரு நிமிடமும் அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டுதான் தன்னை தக்க வைத்திருகின்றது என்பதைக் காட்டுகின்றது.

thirumurugan gandhi 640

வெளிக்கி இருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்தது போல எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கின்றது. 2016 தேர்தலில் ஜெயலலிதாவுக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்திருந்தால் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கட்டுத்தொகையை இழந்து காணாமல் போயிருக்கும். ஆனால் நெம்பர் 1 குற்றவாளி இறந்து போனதாலும், நெம்பர் 2 குற்றவாளி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருப்பதாலும் மத்தியில் உள்ள பிஜேபி அரசின் துணையுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார் எடப்பாடி அவர்கள். நிச்சயமாக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு எந்தத் தொகுதியிலும் கட்டுத்தொகை கூட கிடைக்காமல், அதிமுக என்ற கட்சியே காணாமல் போகப்போவது உறுதி என்பதை இப்போதிருந்தே எடப்பாடி நம்பத் தொடங்கி விட்டார். அந்த அச்சம்தான் அவருக்கு யாரைப் பார்த்தாலும் பீதியை ஏற்படுத்துகின்றது.

திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றவர்கள் இந்த அரசு பயங்கரவாதத்தின் முன் மிகச் சாதாரணமானவர்கள். அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை, குண்டாந்தடிகள் இல்லை, சிறைச்சாலை இல்லை. அவர்கள் நிராயுதபாணிகள். அவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் மூளை மட்டுமே. அதுதான் அவர்களை மக்களுக்காக சிந்திக்கவும், செயல்படவும் இடைவிடாமல் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. தன்னுடைய கண்முன்னாலேயே தன்னுடைய சக மனிதனின் உரிமைகள் பறிக்கப்படுவதை பார்த்து அவர்கள் கிளர்ந்தெழுகின்றார்கள். இந்த மண்ணையும், நீரையும், காற்றையும், வளங்களையும் பயங்கரவாதிகளின் சுரண்டலில் இருந்து விடுவித்து, மனிதகுலம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இந்தப் பூமி மீது பிழைத்துக் கிடக்க தங்களின் நிகழ்கால வாழ்க்கையை அவர்கள் பணயம் வைத்திருக்கின்றார்கள்.

அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் போது அரசு தங்களை என்ன செய்யும் என்பதை நன்றாக உணர்ந்த பின்னர்தான், அவர்கள் போராட்டக் களத்திற்கு வந்திருக்கின்றார்கள், துணிவுடன் கேள்வியும் கேட்கின்றார்கள். அதனால் அவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் ஒடுக்கிவிடலாம், அச்சுறுத்திவிடலாம் என எடப்பாடி அரசு நினைத்தால் அது வெட்கக்கேடானது. காவல்துறைக்கும், அதன் துப்பாக்கிகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பயந்தவர்கள் ஒருநாளும் போராட வருவதில்லை. அரசு என்பது வர்க்கச் சுரண்டலை பாதுகாக்கும் கருவி என்பதையும், ஆளும் வர்க்கத்தின் ஏவல் படை என்பதையும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளைவிட இயக்கம் சார்ந்து போராடும் போராளிகள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் நீங்கள் எத்தனை முறை சிறையில் போட்டாலும், அதைப் பொருட்டாகக் கூட அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.

ஊழல் வழக்கிலே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட வெட்கம்கெட்ட ஜென்மங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து கூச்சமே இல்லாமல் புனிதவான்கள் வேடம் போட்டு ஓட்டுக் கேட்கும் போது, மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடி சிறை செல்வதை போராளிகள் பெருமையாகவே நினைக்கின்றார்கள். இந்த அரசு முழுக்க முழுக்க காவி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், எட்டுவழிச்சாலை என அனைத்து நாசகாரத் திட்டங்களும் இந்த மக்கள் மீது அவர்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்காமல் மத்தியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் அழுத்தம் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றது.

தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பனக் கும்பல் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் ஓட்டுமொத்த பார்ப்பனக் கும்பலும் தமிழ்நாட்டை அழித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேளை செய்துகொண்டு இருக்கின்றன. அந்தக் கும்பல்தான் தமிழை அழிக்க இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பது, அந்தக் கும்பல்தான் நீட் தேர்வைத் திணிப்பது, அந்தக் கும்பல்தான் தமிழ்நாட்டில் உள்ள சிலைகளை எல்லாம் இங்கிருக்கும் தனது அடிமைகள் மூலம் குஜராத் உட்பட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்துவது, அதே கும்பல்தான் மாதொருபாகன் நாவலில் பெருமாள் முருகன் பெண்களைக் கொச்சைப்படுத்தி விட்டார் என்று கூப்பாடு போட்டது, அதே கும்பல்தான் நிர்மலா தேவியை வைத்து தமிழ்நாட்டுப் பெண்களுக்கு விபச்சார வலையையும் வீசியது. இப்போது அதே கும்பலின் உத்தரவுக்குப் பணிந்தே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த தேர்தலில் தனித்து நின்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணமுடையவராக நிச்சயம் தெரியவில்லை. அப்படி இருந்தால் இப்படி மிகத் தீவிரமாக மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்க மாட்டார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி கும்பல் காலூன்றுவதற்குத் தேவையான உதவிகளை எடப்பாடி செய்து தருவார் அதற்குப் பதிலாக எடப்பாடி தலைமையிலான கொள்ளைக் கூட்டம் தமிழ்நாட்டை முடிந்தவரை கொள்ளையடிப்பதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடந்து வருகின்றது. இவர்களுக்கு இம்மி அளவு கூட தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கிடையாது. இந்த ஆட்சி நீடிப்பதற்கான அனைத்து தார்மீகத் தகுதியையும் இழந்து ஒரு வெத்துவேட்டு அரசாக இது நடந்துகொண்டு இருக்கின்றது.

காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை என விவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். வாய்க்கால், ஏரி, குளங்கள், ஆற்றுவழித் தடங்கள் என அனைத்துமே தூர்வாரப்படாததால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பொட்டல்காடுகளாக மாறியிருக்கின்றன. இந்த அரசு திட்டமிட்டே மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றவே இதுபோன்ற சதிவேலைகளில் ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். போதாத குறைக்கு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் பாலத்துடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இந்த ஆட்சி எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இதுவே சாட்சி.

ஆனால் இதை எல்லாம் சரி செய்யத் துப்பில்லாத அரசு மக்கள் நலனை எல்லாம் மறந்து, தன்னுடைய தவறுகளை பொதுமேடைகளில் அம்பலப்படுத்துபவர்களை வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைகள் தங்களது ஏவல் படையைக் கொண்டு எதிர்க்கருத்துகளை ஒழித்துக் கட்ட முயல்கின்றார்கள். ஐநா சபையில் போய் சேலம்-சென்னை 8 வழிச் சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற மனித உரிமை மீறல்களைப் பேசினார், பெரியார் சிலைக்கு அனுமதியில்லாமல் மாலை போட்டார், தமிழ்நாட்டிலும் பாலஸ்தீனம் போல போராட்டம் நடைபெறும் என்று பேசினார் என பல நொண்டிச்சாக்குகளை வைத்து தொடர்ச்சியாக திருமுருகன் காந்தியை சிறையிலேயே வைத்திருக்கலாம் என இந்த பாசிச பிஜேபி பினாமி அரசு நினைக்கின்றது. போராளிகள் சிறைக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர்கள் தங்களது போராட்ட உணர்வை .விட்டுவிடுவதில்லை. அதனால்தான் அவர்கள் போராளிகளாக இருகின்றார்கள். சம்மந்திக்கு ரோடு போடுவதற்கான ஒப்பந்தத்தைக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு சமாதி கட்டத் துடிக்கும் இழிகுணம் எல்லாம் அவர்களிடம் இருப்பதில்லை. பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படும் அனைவரையும் அதே மக்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ஒருநாள் வீசி எறிவார்கள் என்பதுதான் வரலாறு. நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடக்கத்தான் போகின்றது.

- செ.கார்கி