வட இந்தியச் சமூகத்தில் இனக்குழு நிலையில் இருந்து அரசு தோன்றியபொழுது அரசுக்கு ஆதரவாக பௌத்த சைன சமயங்கள் எழுச்சி பெற்றன. பிராமணர்களின் எழுச்சி வேள்விகளையும் சமயச் சடங்குகளையும் அதிகரிக்கச் செய்தன. வேள்விகளில் பசு முதலான விலங்குகள் அழிக்கப்பட்டன. இவ் விலங்குகளின் அழிவு வேளாண்மை நடவடிக்கை களுக்குச் சிக்கல்களை விளைவித்தன. எனவே கொல்லாமையை வலியுறுத்திய சைனம், பௌத்தம் முதலான சமயங்கள் வடஇந்தியாவில் எழுச்சியுற்றன. கி.மு. ஆறு, ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் நிலவிய இந்நிலை தமிழகத்தில் காணப்படவில்லை. பழந்தமிழ்ச் சமூகத்தில் வேந்தர்கள் எழுச்சிபெற்ற காலத்தில் வேந்தர்களுக்குத் துணையாகப் புலவர் மரபும் புலவர் மரபோடு இணைந்து பூதநெறியும் எழுச்சி பெற்றது. இவ்வளர்ச்சி நிலையைப் பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது.

வேந்தர்களும் புலவர் மரபின் எழுச்சியும்

பழந்தமிழ்ச் சமூகத்தின் சமயம், மெய்யியல் பற்றிய சான்றுகள் மிகக் குறைவாகக் கிடைக்கின்றன. ஆனால் அரசு தோன்றும்பொழுது அரசுக்கு ஆதரவாகத் தோன்றும் கருத்துநிலை உருவாக்கத்தை விளக்க வேண்டியுள்ளது. இச்சிக்கலை உணர்ந்து தமிழக வரலாற்றின் தொடக்கத்தை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1973:110-131), கே.என். சிவராஜப் பிள்ளை (1998:196), சண்பகலட்சுமி (2010:120) முதலான அறிஞர்கள் வைதீகத்தின் எழுச்சியோடும் க.கைலாசபதி (1991: 89-91) பௌத்த, சைனத்தின் எழுச்சியோடும் இணைத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால் தொல்லியல் ஆய்வுகள் இச்சிந்தனைகளை மறுக்கின்றன. ‘சமயத் தலைவர்களின் ஆதிக்கமின்மையே தமிழில் எழுத்து மொழி பரவலாக்கத்திற்குக் காரணம்’ என்று ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகின்றார். எனவே தமிழில் எழுத்துமொழி பரவலாக்கத்தோடு தோன்றும் புலவர் மரபு பற்றிய சிந்தனைகள் முன்னுக்கு வருகின்றன. தமிழகத்தில் சமயத் தலைவர்களின் வேலையைப் புலவர்கள் பூதநெறிப் பின்புலத்தில் செய்துள்ளனர்.river 459வேந்தர்கள் புலவர்களை ஆதரிப்பது என்பது வேந்தர்களுக்கு ஆதரவான இலக்கிய உருவாக்கத்தை வெளிப்படுத்துகின்றது. “வர்க்க உருவாக்கத்திற்கும் அரசு உருவாக்கத்திற்கும் இலக்கிய உருவாக்கத் திற்கும் பேணுகைக்கும் தொடர்புண்டு. அதிகார பலமுடைய வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இலக்கியத்தைப் பயன்படுத்துவது வழக்கம்” (கா. சிவத்தம்பி 2010:63). இது புலவர்களின் இலக்கியப் புலமையை வேந்தர்கள் தம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள பயன்படுத்துவதைக் காட்டுகின்றது. புலவர் மரபின் வளர்ச்சியால் வேந்தர்களுக்கு இணையாகப் புலவர்களும் போற்றப்படுகின்றனர். வேந்தர்கள் புலவர்களின் நண்பர்களாகின்றனர். புலவர்களின் சொல்லைக்கேட்டு நடப்பது வேந்தர்களின் கடமையாகின்றது. இப்பின்னணியில் புலவர் மரபிற்கும் பூதநெறிக்கும் இடையே உள்ள தொடர்புகள் ஆராயப்படுகின்றன.

வேந்தர்களும் இனக்குழுக்களும்

வேந்தர்கள் கிளைக் குடிகளாக எழுச்சி பெற்றனர். சேரர்கள் பொறையர், குட்டுவர் முதலான கிளைக் குடிகளாகவும் சோழர்கள் ஒன்பது கிளைக் குடிகளாகவும் (அகம். 125:119, பதிற்.பதி.18,19, சிலப். 27:119, 28:116) பாண்டியர்கள் ஐந்து கிளைக் குடிகளாகவும் (புறம். 58:8, பரி. 24:46, சிலப். 29:184) பிரிந்து ஆட்சி செலுத்தினர். வேந்தர்களுக்கு அடுத்த நிலையில் வேளிர்கள் உடைமைச் சமூகத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். அவர்களுக்குக் கீழ் இருந்த எண்ணற்ற இனக்குழுக்களை அழித்து வலிமையான அரசை நிறுவக் கூடியநிலையில் கிளைக் குடிகளான வேந்தர்கள் இல்லை. எனவே தமிழகத்தில் தோன்றிய மூவேந்தர்களுக்கு வேளிர் களையும் எண்ணற்ற குடிகளையும் (இனக்குழுக் களையும்) இணைப்பதற்கான தேவை ஏற்பட்டது.

அயல்நாட்டு வாணிகம் செய்வதற்குப் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் பண்டங்களை ஓரிடத்தில் தொகுக்க வேண்டியதாக இருந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுக்களின் உதவி வேந்தர்களுக்குத் தேவைப்பட்டது. மேலும் வெளியிலிருந்து வரும் படையெடுப்பை எதிர் கொள்ளவும் தம் தலைமையை நிறுவிக்கொள்ளவும் வேந்தர்களுக்கு இனக்குழுக்களின் உதவி தேவைப் பட்டது. அதனால் இனக்குழுக்களோடு தொடர்புடைய பூதநெறி உடைமைச் சமூகத்தின் கருத்தியலாகப் புலவர் மரபோடு இணைந்து வளர்ச்சிபெற்றது. இந்நெறி தமிழ்ச் சமூகத்தின் உற்பத்திச் சக்தி, உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியாலும் சைன, பௌத்த, வைதீக நெறிகளின் தாக்கத்தாலும் பின்னடைவைச் சந்தித்தது. எனவே வேந்தர் எழுச்சிபெற்ற தொடக்க கட்டத்தில் இந்நெறி தமிழ்ச் சமூகத்தின் புகழ்பெற்ற நெறியாக விளங்கியது.

புலவர் மரபின் தோற்றமும் பூதநெறியும்

பூதநெறி இனக்குழுச் சமூகத்தோடு தொடர் புடைய நெறி. இந்நெறி இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி மட்டும் பேசுகின்றது; இயற்கையைவிட மேலான ஒன்றை மறுக்கின்றது. எனவே மறு உலகம், மறு பிறப்பு முதலான சிக்கலான கருத்துகளையும் இச்சிக்கலான கருத்துகளை நிறுவப் பயன்படுத்தப்படும் வினை, ஊழ், கடவுள், வேள்வி முதலான இயற்கை மீறிய சக்திகளையும் மறுத்துரைக்கின்றது. பூதநெறி உலகை அடிப்படையாகக் கொள்கின்றது. உலகின் இயல்பையும் பூதங்களின் சேர்க்கையால் தோன்றும் உலகத் தோற்றத்தையும் விளக்குகின்றது. பழந்தமிழ்ச் சமூகத்தில் புலவர்கள் எழுச்சிபெறும் பொழுது புலவர் மரபோடு இணைந்து பூதநெறியும் வளர்ச்சி பெறுகின்றது. இதனைப் புலவன் என்ற சொல் காட்டிநிற்கின்றது.

புலம் என்ற சொல்லிற்கு ‘வயல், இடம், திக்கு, மேட்டுநிலம், இந்திரியம், இந்திரியவுணர்வு, அறிவு, கூர்மதி, துப்பு, நூல், வேதம்’ ஆகிய பதினோரு பொருள் இருப்பதைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன் (ப. 2784) எடுத்துக்காட்டுகின்றது. இப்பதினோரு பொருளும் நிலம், அறிவு என்ற இரு வகைமைக்குள் அடங்குவதாக இருப்பது சுட்டத் தக்கது. திராவிட சொற்பிறப்பியல் அகராதி (A Dravidian Etymological Dictionary) புலம் என்ற சொல்லில் இருந்து ‘புலமை, புலவன் ஆகிய சொற்கள் தோன்றுவதைச்’ சுட்டிக்காட்டுகின்றது (4344(தீ), ஜீ. 384). இச்சொல் உருவாக்கம் புலம் என்ற நிலத்திற்கும் புலமையையுடைய புலவனுக்கும் இடையேயுள்ள தொடர்புகளைக் காட்டுகின்றது. பூதநெறி கண்ணுக்குப் புலனாகும் உலகை (நிலத்தை) முதலாகக் கொள்வதைப் போன்று புலவர் மரபும் கொள்கின்றது.

புலவர் மரபு தொடக்க காலத்தில் பூதநெறியின் அறிதல் கொள்கையை ஏற்றிருந்தது. புலம்என்பதிலிருந்து தோன்றும் புலன் என்ற சொல் கண்ணால் வண்ணங் களைப்பார்ப்பதையும்காதால் ஓசையைக்கேட்பதையும் மூக்கால் மணத்தை நுகர்வதையும் நாக்கால் உணவைச் சுவைப்பதையும் மெய்யால் உறுவதை உணர்தலையும் குறிக்கின்றது. இவ்வாறு ஐந்து பொறிகளுக்குப் புலனாவதை அறிவின் அடிப்படைகளாகப் (வாயிலாகப்) பூதநெறி கொள்கின்றது (மணி. 27:14-18). இப்புலனறிவு மிக்கவர்களாக உலக இயல்புக்கு மாறானவற்றை மறுப்பவர்களாகத் தொடக்ககாலப் புலவர்கள் விளங்கினர்.

சமூக மாற்றமும் பூதநெறியும்

பூதநெறி இனக்குழுச் சமூகத்தையும் உடைமைச் சமூகத்தையும் இணைக்கும் கருவியாகப் பயன் பட்டது. எனவே பூதநெறியைத் தமிழக உடைமைச் சமூகம் முதலில் ஏற்றுக் கொண்டது. வணிகப் பெருக்கத்தின் காரணமாக, சைன, பௌத்த, வைதீக சமயங்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பூதநெறி பின்னடைவைச் சந்தித்தது. இம்மாற்றம் சைன, பௌத்த, வைதீக சமயப் புலவர்களை உருவாக்கியது; கிளைக் குடிகளாக இருந்த பழந்தமிழ் வேந்தரை ஒற்றை வேந்தன் என்ற நிலைக்கு நகர்த்தியது; பழந்தமிழ் சமூகத்தின் புகழ், கொடை முதலான விழுமியங்கள் பற்றிய பார்வையையும் மாற்றியது. இச்சமூக மாற்றம் பழந்தமிழ் இலக்கியங்கள் வழி பதிவு செய்யப் படுகின்றன.

இளமையும் மகிழ்ச்சியான வாழ்வும்

மகிழ்ச்சியான வாழ்வு இளமையை நீட்டிக் கின்றது. முதுமையை நீக்குகின்றது. பிசிராந்தையார் என்ற பழந்தமிழ்ப் புலவர் முதிய வயதிலும் இளமையான தோற்றத்தைக் கொண்டிருந்தார். இவ் இளமைக்கான காரணத்தைப் பிசிராந்தையார், “குணம் நிரம்பிய என் மனைவியும் குழந்தைகளும் அறிவு நிரம்பியவர்கள். என் ஏவலாளர்கள் நான் கருதியதையே செய்கின்றனர். என் அரசன் முறையானவற்றைச் செய்பவனாகத் திகழ்கிறான். என் ஊரில் நற்குணங்களும் பணிவும் நிரம்பிய கொள்கையுடைய சான்றோர்கள் பலர் வாழ்கின்றனர்” (புறம். 191) என்று குறிப்பிடுகின்றனர். இவ் இன்ப வாழ்வு பிசிராந்தையாரை இளமையாக வைத்திருக் கின்றது. இவ்வாழ்வையே பூதநெறி வலியுறுத்துகின்றது. பூதநெறி உடலை வளப்படுத்தும் தேகவாதத்தோடு பூதநெறி தொடர்புடையதாக இருப்பது இணைத்து எண்ணித்தக்கது (சோ.ந.க. 2016:37).

காட்சி அளவை

பூதநெறியின் உரைவகையாகிய உலகாயதம் 4 காட்சி அளவையை மட்டும் ஏற்கின்றது. காட்சி அளவை பொருட்களிள் இயல்பைக் குற்றமற்ற முறையில் ஐம்பொறிகளின் வாயிலாக அறிவதைக் குறிக்கின்றது. பழந்தமிழ்க் காலத்தில் நிலவிய பூதநெறியின் காட்சித் திறத்தை,

ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே (புறம். 214:2-3)

என்ற அடிகள் காட்டுகின்றன. இப்பாடலடிகள் பூதநெறிக்கு மாறாவர்களை ஐயம் நீங்காது குற்றமுடைய காட்சியைக் காணும் மனத் தெளிவில்லாதவர்களே என்று விளித்துப் பேசுகின்றது. எனவே பூதநெறியினர் ஐயம் நீங்கி குற்றமற்ற காட்சி காணும் மனத் தெளிவு உடையவர்களாக விளங்குகின்றனர். இது 1. ஐயம்,

2. குற்றமற்ற காட்சி, 3. மனத் தெளிவு ஆகிய மூன்றையும் வெளிப்படுத்துகின்றது. மணிமேகலைக் காலத்திலும் காட்சி அளவை இம்மூன்று பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐயம்

ஒரு பொருளைக் காணும்பொழுது அப்பொருள் பற்றி வரும் ஐயங்களை உடனே தீர்த்துக் கொள்ள வேண்டும். இது மனத்தினில் அப்பொருள் பற்றிய தவறான கருத்துகள் வளர்வதைத் தடுக்கின்றது. இது காட்சிக் குற்றமாக (மணி. 27:65-66) அமைகின்றது. சான்றாக, கீழே கிடக்கும் பொருள் பாம்பா அல்லது கயிறா என்று ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்தைத் தீர்க்க வேண்டும். கீழே இருக்கும் பொருள் பாம்பாக இருக்கின்றது. இக்காட்சியைத் தேர்ந்து தெளியாமல் (மணி. 27:67-68) கண்டு உணராமல் (மணி. 27:69-70) கயிறு எனத் தவறாகக் கொண்டால் (மணி. 27:6364) பாம்பு தீண்டிவிடும். எனவே காட்சி ஐயம் நீங்கியதாக இருக்க வேண்டும்.

காட்சியில் ஐயம் நீங்குவதற்குப் பொருள் இருக்கின்ற இடமும் (நிலம்) பொருளைப் பார்ப்பதற்குரிய ஒளியும் (பொழுது) தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது (மணி. 27:21). எனவே காட்சிக்குரிய அடிப்படையாக நிலமும் பொழுதும் அமைகின்றது. இதனைத் தொல்காப்பியம் முதற்பொருளாக விளக்குவது சுட்டத்தக்கது.

குற்றமற்ற காட்சி

பொருளை ஐம்பொறிகளால் உணர்ந்து பார்க்க வேண்டும். கண்ணால் பொருளின் வண்ணங் களையும் காதால் பொருளிலிருந்து வரும் ஓசையையும் மூக்கால் பொருளிலிருந்து வரும் மணத்தையும் நாக்கால் சுவைக்க முடிந்த பொருளின் சுவையையும் மெய்யால் உறுவதை உணர்ந்தும் பார்க்க வேண்டியது காட்சியின் அடிப்படையாக அமைகின்றது. ஐம்பொறிகளுக்குப் புலனாவதை வலியுறுத்தும் நெறியாகப் பூதநெறி இருப்பதால் காட்சி அளவையின் முதல் அடிப்படையாக இது விளக்குகின்றது. இதனைக் காட்சியின் வகைகளாக மணிமேகலை (27:14-18) எடுத்துரைக்கின்றது.

பொருள் தோன்றிய இடம் (தேசம்), பொருளின் பெயர் (நாமம்), பொருள் பிறந்தகாலம் (சாதி), பொருளின் பண்பு (குணம்), பொருளின் செயல்கள் (கிரியை) ஆகியன காட்சியின் குற்றத்தை நீக்க உதவுகின்றது. பொருள் பற்றிய அடிப்படைகளை விளக்குவதால் இது காட்சியின் இரண்டாவது அடிப்படையாக பூதநெறி விளக்குகின்றது. இதனைச் சுட்டுணர்வு என மணிமேகலை (27:23-24) எடுத்துரைக்கின்றது.

மனத்தெளிவு

மனம் காட்சியைக் காணும்பொழுது துக்கம், சுகம் என்ற உணர்வு நீங்கி இருக்க வேண்டும் (மணி. 27:19). உணர்விற்கு ஆட்படாமல் பார்க்கும் காட்சியின் வாயிலாகவே பொருளைப் பற்றிய தெளிவு தோன்றுகின்றது. இம்மனத் தெளிவு அறிவு வளர்ச்சிக்குரிய அடிப்படையாக அமைகின்றது.

நிறுவன சமயங்களின் வளர்ச்சியும் பூதநெறியும்

சைன, பௌத்த, வைதீக சமயங்களின் எழுச்சி பூதநெறிக்கு எதிரான சிந்தனைகளை உருவாக்கியது. இச்சிந்தனைகளும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இம்மறுப்புகளின்வழி பழந்தமிழ்க் காலத்தில் பூதநெறியினர் வினை, மறுபிறப்பு, வேதம் ஆகியவற்றை மறுத்துள்ளது புலப்படுகின்றது.

வினை மறுப்பு

சைன, பௌத்த சமயங்கள் வினையைத் தங்கள் சமயக் கோட்பாடாகக் கொள்கின்றது. இவ்வினைக் கோட்பாடு நல்வினை செய்தால் நன்மையும் தீவினை செய்தால் தீமையும் கிடைக்கும் என்று வலியுறுத்து கின்றது. இதனைப் பூதநெறியினர் மறுத்தனர். எனவே பூதநெறியினர் பக்கம் சேரக்கூடாது என்று சோழன் நலங்கிள்ளிக்கு முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் அறிவுரை கூறுகின்றார். இதனை,

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லை என்போர்க்(கு) இனனா கிலியர் (புறம். 29: 11-12)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இப்பாடலடியில் வரும் இல்லை என்போர் என்ற சொல்லுக்கு, “நாஸ்திகர்” என்று உ.வே. சாமிநாதையர் (2014:93) விளக்கம் தருகிறார். பூதநெறியினர் கடவுளையும் மறுப்பதால் நாத்திகர் (நாஸ்திகர்) என்றும் அழைக்கப் பட்டனர். இப்பகுதிக்கு, “உலக வாழ்க்கையில் தீமை புரிபவர் மகிழ்ச்சியாக இருத்தலும் நன்மை புரிபவர் துன்பப்படுதலும் காட்சிப் பிரமாணமாக அறியப் படுதலே இவர்கள் (பூதநெறியினர்) வினைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாமைக்குக் காரணம்” என்று சோ.ந. கந்தசாமி (2016:51) விளக்கம் அளிப்பது ஏற்கத்தக்கதாகும்.

திருக்குறளுக்கு உரை வரைந்த பரிமேலழகர் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்திற்கு விளக்கம் அளிக்கிறார். அப்பகுதியில், “சிற்றினம் சேராமை அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை சிறிய இனமாவது, ‘நல்லதன் நலமும் தீயதன் தீமையும் இல் என்போரும்’ (புறம். 29) விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு” (1998:218) என்று குறிப்பிடுகிறார். இதன் வழி பரிமேலழகர் பூதநெறியினரைச் சிற்றினத்தார் என்று இழிவுபடுத்துவது தெளிவாகின்றது. நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் பொருளதிகாரம் பொருளியல் 53ஆம் நூற்பாவின் உரையில், “அறிவாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்” (சி.வை. தாமோதரம் பிள்ளை 1885:471472) என்று குறிப்பிடுகின்றார். நச்சினார்க்கினியர் வினையை ஏற்று உரை வரைந்திருக்கின்றார். இது வைதீக உரைகாரர்களால் பூதநெறி கடுமையாகக் கடிந்துரைக்கப்பட்டதைக் காட்டுகின்றது.

பரிபாடலின் ஐந்தாம் பாடல் முருகனைப் பாடுகின்றது. இப்பாடல் முருகனின் அடியைச் சேராதவர்களைப் பட்டியலிடுகின்றது. இப்பட்டியலில் வினையின் காரணமாகத் தோன்றும் மறுபிறப்பை மறுக்கும் பூதநெறியினர் மடவோர் என்று சுட்டப் படுகின்றனர். இதனை,

மறுபிறப்பு இல்லெனும் மடவோருஞ் சேரார் (பரி. 5:76)

என்ற அடி வெளிப்படுத்துகின்றது. இப்பாடலின்,

சேரா அறத்துச் சீரி லோரும் (பரி. 5:74)

என்ற அடி சுட்டும் சேராத அறத்துச் சீர் இல்லாதவர் பூதநெறியினர் என்று குறிப்பிடும் சோ.ந. கந்தசாமி (2016:52), “அறக்கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவர் அவரே” (2016:52) என்று விளக்குகின்றார். இப்பரிபாடல் அடிகள் முருகன் குணத்தை ஏற்றுக் கொண்ட அறத்திற்கு மாறானவர்களைச் சுட்டுகின்றது. இதனைப் பற்றிய குறிப்பு இப்பரிபாடலின் 71ஆம் பாடலடியில் காணப்படுகின்றது. எனவே இவ்வடி பூதநெறியினரை மட்டும் குறிக்கவில்லை. முருகனை ஏற்காத அனைத்து நெறியினரையும் குறிக்கின்றது.

வேத மறுப்பும் பொருள் மரபும்

பூதநெறியின் அளவைநெறியான உலகாயத நெறிக்குப் பொருள்நெறி என்ற பெயரும் காணப் படுகின்றது. இதனைப் பற்றிய சான்றுகள் சமற்கிருத நூல்களில் காணப்படுகின்றன. கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திற்கு முற்பட்டதாக உலகாயதத்தின் பிருகற்பதி அர்த்தசாத்திரம் கருதப்படுகின்றது. இப்பிருகற்பதி அர்த்தசாத்திரம் வேதத்தைக் கடுமையாக மறுத்துரைக்கின்றது. இதனைப் பற்றிய குறிப்புகள் கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திலும் (ராமகிருஷ்ண பட்டாச்சார்யா (இனி ரா.ப.) 2011:25) அரிவம்சத்திலுள்ள ராஜேயர் கதையிலும் (ரா.ப. 2018:153) காணப் படுகின்றன. பொருள் நெறியாகிய உலகாயதத்திற்கும் வேதத்திற்கும் உள்ள முரண்பாட்டைத் துச்சி என்ற அறிஞர் அர்த்தத்திற்கும் (அரசியலுக்கும்) தர்மத்திற்கும் (கடவுள் மற்றும் கர்மா) இடையிலான போராட்டமாக விரிவுசெய்கின்றார் (தேவிபிரசாத் சட்டோபாத்யாயா & மிருணாள்காந்தி கங்கோபாத்யாயா 2006:391). இப்பொருளுக்கும் அறத்திற்கும் உள்ள முரண்பாட்டை,

தாக்குரல் கேண்மின் அந்த ணாளிர்

நான்மறைக் குறித்தன்று அருளா காமையின்

அறங்குறித் தன்று பொருள்ஆ குதலின் (புறம். 362:8-10)

என்ற புறப்பாடல் விளக்குகின்றது. இப்பாடல் வேந்தன் பொருள்நெறிப்படி ஈட்டிய பொருளை அந்தணர்களுக்கு வழங்குவதைக் காட்டுகின்றது. அருளுக்கும் அறத்திற்கும் மீறியதாகப் பொருள் (செல்வம்) இருக்கின்றது. எனவே வேதத்திற்கும் தர்ம சாத்திரத்திற்கும் அடங்காததாகப் பொருள் (செல்வம்) விளங்குகின்றது. இந்தப் பொருள் தமிழ் இலக்கியங்கள் சுட்டும் புறப்பொருள் என்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (2010:546) குறிப்பிடுகின்றார். இவ்விளக்கத்தைப் பூதநெறிக்கு விரிவு செய்தால் புறப்பொருளாகிய பொருள் நெறியும் அகப் பொருளாகிய இன்பநெறியும் பூதநெறியின் இரு பிரிவுகளாக இருப்பது தெளிவாகும். தீகநிகாயம் என்ற பௌத்த நூல் உலகாயதம் பொருளையும் இன்பத்தையும் உறுதிப் பொருள்களாகக் கொள் கின்றது (தே.ச.&மி.கா. 2006:390) எனக் குறிப்பிடுவது இணைத்து எண்ணத்தக்கது.

தொகுப்புரை

பழந்தமிழகத்தில் இனக்குழுக்களில் இருந்து வேந்தர் தோன்றியபொழுது புலவர் மரபும் தோற்றம் கொண்டது. இப்புலவர் மரபு பூதநெறியை அடிப் படையாகக் கொண்டிருந்தது. சைன, பௌத்த, வைதீக சமயங்கள் எழுச்சி பெற்ற காலத்தில் தமிழகத்தின் தொன்மை நெறியாகிய பூதநெறி பின்னுக்குச் சென்றது. எனினும் பிறநெறிகளை மறுத்துத் தம் பூதநெறிக் கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அவற்றுள் பூதநெறியின் இன்ப வாழ்வுக் கோட்பாடு, இயல்புக் கோட்பாடு, காட்சி அளவைக் கோட்பாடு ஆகியன வெளிப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் பூதநெறியைச் சார்ந்த பாடல்களும் பூதநெறியை மறுத்தவர்களின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பூத நெறியைச் சார்ந்தவர்களின் பாடல்களில் பழமையைப் பற்றிய ஏக்கம் காணப்படுகின்றது. இவ் ஏக்கம் கலைந்து போன இனக்குழு வாழ்வு பற்றியதாக இருக்கின்றது.

பழந்தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று இரண்டாகப் பகுக்கப்படுகின்றது. அவற்றுள் அக இலக்கியங்கள் பூதநெறியின் இன்பக் கோட்பாட்டைச் சார்ந்ததாக விளங்குகின்றது. சைன, பௌத்த, வைதீக சமயங்கள்இவ்இன்பக்கோட்பாட்டிற்குஎதிரானவையாக உள்ளன. புற இலக்கியங்களில் காணப்படும் பொருள்நெறி அல்லது பொருள் கோட்பாடு பற்றிய சான்றுகள் சமற்கிருதத்தில் விரிவாகக் காணப்படு கின்றன. இச்சான்றுகளை விரிவாக ஆராய்ந்து தமிழுக்கும் பூதநெறிக் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகள் விளக்கப்பட வேண்டும். இக்கட்டுரை அதற்கான தொடக்கத்தை வழங்கி யுள்ளது.

துணைநூற்பட்டியல்

 1. அருணன். 2010. தமிழரின் தத்துவ மரபு (முதல் பகுதி), மதுரை: வசந்தம் வெளியீட்டகம்.
 2. அறவாணன் க.ப. 2002. அற்றைநாட் காதலும் வீரமும், சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.
 3. கந்தசாமி சோ.ந. 2016. இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி -1, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
 4. கைலாசபதி க. 1991. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
 5. சாமிநாதையர் உ.வே. 2014. புறநானூறு மூலமும் உரையும், சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
 6. சிவகுமார் லி. (க.ஆ.). 2022. வேந்தர் எழுச்சியும் பூதநெறியும், இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், மலர் 8, இதழ் 32, நவம்பர் 2022, கோவை: இனம் பதிப்பகம்.
 7. சிவத்தம்பி கா. 2010. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் (இலக்கிய வரலாற்றாய்வு), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
 8. தத்துவப் பிரகாச சுவாமிகள். (ஆ.இ). தத்துவப் பிரகாசம்
 9. மூலமும் உரையும், யாழ்ப்பாணம்: சோதிடப் பிரகாசயந்திர சாலை. தத்துவப் பிரகாசர் திருவொற்றியூர். 1955. ஸ்ரீ அருணந்தி
 10. தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானசித்தியார் பரபக்கம் மூலமும் உரையும், திருச்சிராப்பள்ளி: திருவாவடுதுறை ஆதீனம்.
 11. தாமோதரம் பிள்ளை சி.வை. 1885. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையுடன், சென்னை: ஸ்காட்டிஷ் பிரஸ்.
 12. துரைசாமிப் பிள்ளை ஔவை (உ.ஆ.). 2010. புறநானூறு, இரண்டாம் பாகம் (201 – 400 பாட்டுகள்) , மூலமும் உரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
 13. நீலகண்ட சாஸ்திரி கே.ஏ. 1973. தென்னிந்திய வரலாறு, முரா. பெருமாள் முதலியார் (மொ.ஆ.), சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்.
 14. பரிமேலழகர் (உ.ஆ.). 1998. திருக்குறள் பரிமேலழகர்
 15. உரை, சென்னை: திருமகள் நிலையம். மறைமலையடிகள். 2015. மறைமலையம் 30 பழந்
 16. தமிழ்க் கொள்கையே சைவ சமயம், கோ. இளவழகன் (ப.ஆ.), சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
 17. மாணிக்கனார் வ.சுப. 2012. தமிழ்க்காதல், சென்னை:
 18. சாரதா பதிப்பகம். ராஜ் கௌதமன். 2009. ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், சென்னை: தமிழினி.
 19. --------தமிழ் லெக்சிகன், (த. லெ.) (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி), சென்னை : சென்னைப் பல்கலைக்கழகம்,  <https://dsal.uchicago.edu/dictionaries/tamil_lex/>
 20. Burrow T. and Emeneau M.B. 1984. A Dravidian Etymological Dictionary, Oxford: Clarendon Press, <https://dsal.uchicago.edu/dictionaries/burrow/>
  Champakalakshmi R. 2003. A Magnum opus on Tamil – Brahmi inscription, Frontline, Vol. 20, Issue 7, March 29 – April 11, 2003 (பார்த்த நாள் 12.02.2023 <https://www.google.com/amp/s/frontline.thehindu.com/other/article30217581.ece/amp/>).
 21. Champakalakshmi R. 2010. The Chronology of the Sangam Texts: A Historical Approach, International Classical Tamil Conference Special Issue, Kovai.
  Deviprasad Chattopadhyaya & Mrinal kanti Gangopadhyaya. 2006. Carvaka / Lokayata – An anthology of source materials and some recent studies, New Delhi: Indian council of Philosophical research.
 22. Macdonell Arthur Anthony. 1929. The Practical Sanskrit dictionary with transliteration, accentuation, and etymologicalanalusis throughout, London: Oxford University Press (<https://.dsal.uchicago.edu/dictionaries/macdonell/>).
 23. Ramakrishna Bhattacharya. 2011. Studies on the Carvaka / Lokayata, Newyork: Anthem Press.
 24. Ramakrishna Bhattacharya. 2018. Bhaspati and the Barhaspatyas, Annali di ca’s Foscari. Serie Orientale, June 2018, Vol. 54.
 25. Srinivasa Iyengar P.T. 1989. History of Tamils – From earliest times to 600 A.D., New Delhi: Asian Educational Service.
 26. Sivaraja Pillai. 1998. The Chronology of the early Tamils, New Delhi: Asian Educational Service.

- முனைவர் லி.சிவகுமார், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி

Pin It