இந்தப் பகுதியை வாசிக்கும் சில நண்பர்கள் அவ்வப்போது அபிப்ராயம் தெரிவிக்கிறார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் சொல்லும் ஒரு கருத்து “உங்க கட்டுரை படிச்சோம்... கதை படிக்கிற மாதிரி இருக்கு” என்பது. இதையே சிலர் இன்னும் வேறுவிதமாகச் சொல்வதுண்டு. “உங்க கதை படிச்சேன்” என்று சொல்லிவிட்டு.. சந்தேகமாக “அது கதை மாதிரிதான் இருக்கு இல்லையா?” என வினவுகிறார்கள். அவர்கள் கூற்று மிகச்சரியானதே. அவர்களுக்கு ஏற்படும் அதே எண்ணங்கள்தான் எனக்கும். இந்தப் பகுதியில் இதுவரை வெளிவந்திருக்கிற சங்கதிகள் அத்தனையும் சிறுகதையாக எழுதி விடும் சாத்தியப்பாடுகள் கொண்டவைதான். இவற்றை கட்டுரை என்று நான் நம்புவதற்கான இரண்டே நியாயம் எல்லாவற்றையும் நான் நேரடியாக சொல்வதும், சொல்கின்ற விஷயங்களில் கற்பனை எதுவும் இல்லை என்பதும்தான்.

Police gunவாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை தோன்றுகிறது. சில சமயங்களில் நிகழும் விஷயங்கள் கிட்டத்தட்ட கச்சிதமான சிறுகதை போலிருப்பது எனக்கு வியப்பளிக்கிற விஷயம். தற்போது சொல்லப் போகிற விஷயம் அப்படியான ஒன்றுதான். இதனை சற்றே மெருகூட்டி எழுதினால் இது ஒரு சிறுகதையாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று தோன்றுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை வருவதற்காக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். பிளாட்பாரத்தில் கூட்டமேயில்லை. அத்தனை நீள ரயிலுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பயணிகள்தான். எனது பெட்டியில் யாருமே இல்லை. ரயில் கிளம்ப இன்னும் நேரமிருந்ததால் பிளாட்பாரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நெரிசலற்ற ரயில் பிரயாணம் வசதியானதுதான். ஆனால் ஆளற்ற பெட்டியில் பிரயாணம் செய்வது ரொம்பவும் வெறுமையாயிருக்கும் எனத் தோன்றியது. ஆறுதலாக சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள். புதுக்கல்யாணம் என்று சொல்லாமலேயே தெரிந்தது. அவ்வளவு சிரிப்பு. எதற்கெடுத்தாலும் கணவனின் காதோரமாக அந்தப் பெண் சந்தேகம் கேட்டபடியிருந்தார். சந்தேகம் கேட்பது இரண்டாம் பட்சமென்றும் அந்தச் செய்கை விளைவிக்கிற அந்நியோன்யமே பிரதானம் என்றும் எனக்குப் பட்டது.

இருவரும் எனது பெட்டியில் ஒட்டியிருந்த ‘சார்ட்’டைப் பார்த்து தம் இடங்களை உறுதி செய்து கொண்டனர். அவர்களும் எனது பெட்டியில்தான் வரப்போகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

அந்தப் பெண் பெட்டியில் கூட்டமே இல்லாதது பற்றிய தனது சங்கடத்தை தெரிவித்தார். “நாம மட்டுந்தான் போலிருக்கு பயமா இருக்கே” என்று அவர் சொல்ல கணவர்... சற்று நேரத்தில் ஆட்கள் வருவார்கள். பயப்பட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் பெட்டியில் பாதிக்கு மேற்பட்ட ‘பெர்த்’கள் காலியாக இருப்பதை ‘சார்ட்’ உணர்த்தியது. தங்களது பொருட்களை உள்ளே வைத்துவிட்டு அவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து பிளாட்பாரத்தின் ஒரு கடைக்குச் சென்றனர். இதுவே கல்யாணமாகி சில ஆண்டுகளாகியிருக்கும் பட்சத்தில் மனைவிகள் லக்கேஜ்களுக்கு காவலாக வண்டியில் அமர்ந்திருக்க, கணவன்கள் மட்டும் போய் பிஸ்கட்டும், தண்ணீரும் வாங்கி வரக்கூடும்.

நான் பத்திரிகைகள் விற்று வந்த நபரிடம் ஒன்றிரண்டை வாங்கிக் கொண்டு இருக்கையில், முதுகில் துப்பாக்கியுடன் ஒரு காவலர் பிளாட்பாரத்தில் விரைந்து வந்தார். எனது பார்வையை கவனித்த பேப்பர் விற்பவர் “கொஞ்ச நாளா நிறைய திருட்டுங்க நடக்குதுன்னு போலிஸ் செக்யூரிட்டி பண்ணி இருக்காங்க சார்” என்றார்.

அந்தக் காவலர் எங்கள் பெட்டியைப் பார்த்து விட்டு கையை ஆட்ட ஒரு ஆள் சிறிய போர்டு ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடிவந்து எங்கள் பெட்டியின் கடைசி ஜன்னலோரம் தொங்கவிட்டார். (‘காவல்துறை உதவிக்கு’ என்பது போல் அதில் ஏதோ எழுதி இருந்தது)

பேப்பர்காரர் மேற்கொண்டும் தகவல் சொன்னார். சென்னை வரை பயணிகள் எவ்விதமான கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கலாமென்றும், பெட்டியில் ஜனக்கூட்டம் இல்லாவிட்டாலும் காவலர்கள் வருவதால் பாதுகாப்பு உத்தரவாதமென்றும் நெல்லைத் தமிழில் சொல்லி விட்டுப் போய் விட்டார். நான் உள்ளே சென்று அமர்ந்தேன். பிரச்னையின்றி நான் எனக்கான ‘அப்பர் பெர்த்’தில் ஏறிக்கொண்டு விட, எனக்கு நேர் எதிர் கீழே லோயர் பெர்த்தில் புதிதாய் வந்த ஒரு பள்ளி மாணவன் அமர்ந்து இருந்தான். பக்கவாட்டில் இருந்த மேல், கீழ் பர்த்துகள் அந்த தம்பதிகளுக்கு. சற்று நேரத்தில் பெட்டியில் சுமாராக இருபது முப்பது பேர் தேறிவிட்டனர். என்றாலும் அந்தப் பெட்டிக்கு அந்தக் கூட்டம் குறைவானதே. ரெயில் நகர்வதற்கான ஆயத்தங்கள் தென்படத்துவங்கின.

தம்பதிகள் பக்கவாட்டு கீழ் ‘பர்த்’தில் அமர்ந்து தமக்குள் ஏதோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தபோது ஒரு காவலர் ஓடிவந்தார். கீழ்’பர்த்தி’ல் இருந்த மாணவனைப் பார்த்தார். "எந்திரி.... எந்திரி’ என்று அதட்டலாகச் சொன்னார்.

பையன் அச்சத்துடன் எழுந்து எதிர் பர்த்தில் அமர்ந்தான். தம்பதிகளின் இயல்பான பேச்சு நின்றது. அவர்கள் தமக்குள் பார்த்துக் கொண்டனர். அடுத்து பெரிய துப்பாக்கியுடன் ஒரு காவலர் வர, சற்று வயதான மற்றொருவர் வந்து அந்த "பர்த்’தில் அமர்ந்தார். வயதானவர், துப்பாக்கி காவலருக்கு அடுத்த மேல் நிலையில் உள்ள காவலர் போலும். அவரது சாதாரணப் பேச்சு கூட மிக உரத்த குரலில் இருந்தது.

வந்து அமர்ந்ததும் அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். பார்வையின் கடுமை மிகவும் தீவிரமானதாக இருந்தது. அந்தப் பார்வையே ஒருவனை குற்றவாளியாக உணரச் செய்யும் ஒருவிதமான வெருட்டும் பார்வை. அந்த தம்பதியையும், மாணவனையும், அந்தப் பார்வையால் பார்த்து விட்டு சாவதானமாக அமர்ந்து உடன் வந்த துப்பாக்கி காவலருடன் பேசத்துவங்கிவிட்டார். அது இது என்றில்லாமல் பல விஷயங்களையும் தொட்டு ஏதோதோ பேசியவாறிருந்தார். பேச்சு முக்கியமில்லை. அதில் இருந்த தொனி மிகவும் அச்சுறுத்துவது. அவர் கையாண்ட நபர்கள், அவரிடம் மிதிவாங்கிய குற்றவாளிகள் என்று பலரையும் பற்றி விவரித்தார். சற்றும் தோழமையற்ற பேச்சு, அதட்டலான குரல் என்று அவர் பேசப் பேச அந்த இளம்பெண்ணின் முகம் மாறிக்கொண்டிருந்தது.

அவர் பேசியபடியே இருக்க அந்தப் பெண்ணின் கண்கள் அவ்வப்போது அந்த துப்பாக்கியையே பார்த்தபடி இருந்தன. என்னதான் அடிக்கடி சினிமா பார்த்தாலும் நிஜத் துப்பாக்கி பார்ப்பவரை தொந்தரவு செய்கிற விஷயம்தான்.

சற்றுநேரம் கழித்து துப்பாக்கிக் காவலர், “ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பிப் போனார். பெரிய காவலர் கண்ணை மூடி அமைதியானார். சிறிது நேரம் கழிந்தது. துப்பாக்கிக் காவலர் திரும்பி வந்தார். அவர் கையில் ஓரிரு சீட்டுக்கட்டுகள்.

துப்பாக்கிக் காவலர் பெரிய காவலரிடம் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்ததாக சீட்டுக்கட்டுகளைக் கொடுக்க அதனை அவர் வாங்கி வைத்துக் கொண்டார். சற்றுப் பொறுத்து இரண்டு இளைஞர்கள் வந்தனர். காவலர்களிடம் சீட்டுக் கட்டைத் தருமாறு கேட்டனர். பெரிய காவலர் அவர்களைத் திட்டினார். இனிமேல் சீட்டு விளையாட மாட்டோமென்று உத்தரவாதம் தந்து அவர்கள் வற்புறுத்தி சீட்டுக்கட்டைக் கேட்க பெரிய காவலர் குரலை உயர்த்தி அவர்களை அதட்டினார் "மரியாதையாப் போயிடு’ என்று அவர் போட்ட அதட்டலில் அவர்கள் வாயை மூடிக் கொண்டு போய் விட்டனர்.

நான் பக்கவாட்டு ‘பர்த்’தைப் பார்த்தேன். அந்த இளம்பெண் முகத்தில் ரயிலேறும்போது இருந்த புன்னகையைக் காணோம். மிகவும் சிரமப்பட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்க, அருகே கணவன். அவர்கள் இருவருமே அமைதியாக இருந்தனர், ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளத் தோன்றாமல். பன்னிரண்டு மணியைத் தாண்டும் வரை இரு காவலர்களும் பேசிக் கொண்டு இருந்தனர். பிறகு பெரிய காவலர் துப்பாக்கிக் காவலரிடம் ‘லைட்டை அமத்தய்யா’ என்று சொல்ல அவர் விளக்கை அணைத்தார். நான் அதன் பின்பும் வெகுநேரம் கழித்தே தூங்கினேன்.

சென்னை வந்ததும் காவலர்கள் முதலிலேயே இறங்கிப் போய்விட நாங்கள் எங்கள் லக்கேஜ்களை சேகரித்துக் கொண்டு இறங்கினோம். தம்பதிகளை வரவேற்க உறவினர்கள் வந்திருந்தனர். “என்ன சௌகரியமா வந்து சேந்திங்களா!” என்றார் ஒரு உறவினர்.

அந்த இளம்பெண், “இல்லண்ணா... சரியாவே தூங்கலை... பயம்மா இருந்துச்சு” என்றாள்.

“ஏன்?”

“காவலுக்கு ரெண்டு போலிஸ்காரங்க வந்தாங்க அதான்” என்றாள் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் கூற்றில் உள்ளே முரண்பாடு என்னைக் கவர்ந்தது. சிறுகதைக்கு உண்டான குணங்களில் முக்கியமானது அது. 

- பாஸ்கர் சக்தி

Pin It