கல்லூரியில் படிக்கும் காலங்களில் தினம் பஸ் ஏறி முப்பது கி.மீ. பயணம் செய்ய வேண்டும். அது ஒரு பெரும் பேறு. கல்லூரி அளிப்பதற்கு இணையான சந்தோஷத்தை அதை நோக்கிய பயணம் அளித்து வந்தது. எங்கள் ‘செட்’ பையன்கள் சிலர், பாட்டு போடும் தனியார் பேருந்தில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாண்டில் பஸ் வந்து நின்றதுமே அதில் ஏறி பாட்டுக் கேட்பது பெரும்பாலும் வழக்கமாக இருந்தது. அந்த நாட்களில் அடிக்கடி ஒரு பெண்ணை சந்திக்க வாய்த்தது. முப்பத்தைந்திலிருந்து, நாற்பதுக்குள்ளிருக்கும் ஒல்லியான பெண். பஸ் வந்து நின்று ஓரளவு பயணிகள் பஸ்ஸில் ஏறியதுமே அந்தப் பெண் எங்கிருந்தோ உதிப்பாள். கையில் ஒரு குழந்தை. எதுவும் பேசாமல் தனது கையிலிருக்கும் அச்சிட்ட பழசான கார்டு ஒன்றை பயணிகள் மடியில் போடுவாள். பயணிகளற்ற வெற்று இருக்கைகளிலும் கார்டைப் போட்டு விட்டுச் செல்வாள்.

Mercyஒரு பஸ்ஸின் பயணிகள் கொள்ளளவான கிட்டத்தட்ட அறுபது கார்டுகளை மட்டுமே எப்போதும் அவள் கையில் வைத்திருந்ததாக உணர்ந்திருக்கிறேன். இவ்விதமாக கார்டுகளைப் போட்டு விட்டு பஸ்ஸின் ஓரிடத்தில் சிறிது நேரம் வெறித்த பார்வையுடன் நிற்பாள். அவ்விதம் அப்பெண் இலக்கற்று நிற்கின்ற கால அவகாசம் பயணிகளுக்கானது. கார்டுகளைப் படிப்பதற்காக அவள் தருகிற அவகாசம். "அவள் வாய் பேச இயலாதவள். கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்து விட்டான். கையிலிருக்கும் குழந்தையையும் வீட்டில் வறுமையில் வாடும் ஒரு கிழவியையும் காப்பாற்ற வேண்டிய நிலைமையில் அவள் இருக்கிறாள்' என்று அந்தக் கார்டு விளக்கியது. முதல் முறை அந்தக் கார்டைப் பார்த்த தருணம்... காசு போட்ட நினைவும் சரியாக கவனத்தில் இல்லை... ஆனால் ஒரு சமயம் நான் காசு போடப் போனதை சக மாணவர்கள் தடுத்து விட்டனர். “தினம் தினம் வருது... வேற வேலை இல்லியா!'' என்றனர். அவர்கள் சொன்னது சரியே. வீட்டில் தரும் சிக்கனமான ‘பாக்கெட் மணி'யில் தர்ம சிந்தனையெல்லாம் ஆடம்பரமே.

ஆனால்... தடுத்த சகாக்கள் சொன்ன ஒரு தகவல்தான் உறுத்தியது... அதாவது அந்தப் பெண் வட்டிக்குப் பணம் கொடுத்து வருவதாகவும் ஃபிராடு என்றும் ஊர்ஜிதமாகாத தகவல்களைச் சொன்னார்கள். ரெகுலராக சில கண்டக்டர், டிரைவர்கள் அந்தப் பெண்ணிடம் பணம் வாங்கி பிறகு வட்டியுடன் திருப்பித் தருவதாக சத்தியம் செய்தார்கள்... அதற்கு ஏற்றாற் போல பல சமயங்களில் கண்டக்டர்கள் நூறு ரூபாய் நோட்டுக்கு அந்தப் பெண்ணிடம் சில்லறை மாற்றுவதை நானே பார்த்தேன். மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அந்தப் பெண்ணின் பரிதாபமான தோற்றத்தை ஒரு ஏமாற்றுப் பேர்வழியின் பிம்பத்தோடு பொருத்திப் பார்க்க இயலவில்லை.

ஆனால் அதன்பின் அந்தப் பெண்ணை ஓரளவு கவனிக்கத் துவங்கினேன். தினம் ஒரு பஸ்ஸில் ஏறி சுமார் அறுபது கார்டுகளை வினியோகிக்கிறாள். அதில் குறைந்தது நாலைந்து பேராவது ஏதாவது காசு போடுகிறார்கள். ஐந்து நிமிடத்தில் இது முடிந்து அடுத்த பஸ். தினந்தோறும் இது நடக்கிறது... பஸ் ஸ்டாண்டில் எங்களைப் போல தினம் வருபவர்கள் அந்தப் பெண்ணின் கார்டைத் தொடுவதே இல்லை. ஆனால் வந்து போகும் ஜனங்கள் ஏதாவது போடத்தான் செய்கிறார்கள். எனது மனநிலை அப்பெண்ணின் பால் இரக்கம் கொண்டதாகத் தான் இருந்தது. காசு போடாவிட்டாலும்கூட அந்தப் பெண்ணை ஒரு குற்றவாளி போல் சித்தரிப்பதை எனது மனம் ஏற்கவில்லை.

ஒரு நாள் சிறியதொரு மாற்றம் நிகழ்ந்தது. வழக்கம்போல நாங்கள் பஸ்ஸில் அமர்ந்து இருக்கையில், அந்தப் பெண் வந்து கார்டுகளைப் போட்டாள். அழுக்கான பழைய கார்டு இல்லை... இது புத்தம் புதிதாக இருந்தது... எடுத்துப் படித்தோம். அதே வாசகங்கள். புதிதாக பிரிண்ட் செய்யப்பட்ட கார்டு. பையன்களின் முகத்தில் கேலிப் புன்னகை. “இது பிஸினஸ் இல்லாம வேற என்ன?'' என்று சிரித்து... அந்தப் பெண்ணை நக்கல் செய்தனர்... அவள் எதையும் சட்டை பண்ணாமல் வழக்கம் போல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு அடுத்த பஸ்ஸுக்குப் போய் விட்டாள்... எனது மனதில் அவள் பற்றிய பிம்பம் சற்றே மாறித்தான் போனது... ஆனாலும் கோபம் வரவில்லை. மாறாக குழப்பம் தோன்றியது. புதிதாக கார்டை அச்சடித்து தனது வாழ்வைத் தொடர்வது... அவள் வாழ்நிலை மாறியதற்கான அடையாளமில்லையே... திருவோடுகளின் பளபளப்பு யாசகர்களின் மதிப்பை உயர்த்துகிறதா? என்கிற குழப்பம்.

அதனையொட்டிய நாட்களிலேயே... இன்னொரு விஷயம் நிகழ்ந்தது.. ஒரு நாள் கல்லூரிக்கு வெளியே பத்து இருபது மாணவர்கள் கும்பலாக நின்றிருந்தார்கள். நான் அந்தப் பக்கமிருந்து வந்த ஒரு மாணவனிடம் என்ன விபரமென்று விசாரித்தேன். “யாரோ ஒரு பெரியவர்... திருவனந்தபுரத்தில் இருக்கிற மகனைத் தேடிப் போகனுமாம். காசைத் தொலைச்சுட்டாராம். இங்க வந்து சொன்னாரு. பசங்க ரூவா கலெக்ட் பண்ணிகிட்டிருக்காங்க'' என்றான். நான் ஆவலுடன் அந்தப் பக்கம் சென்றேன். மற்றவர்களுக்கு உதவி செய்கிற துடிப்பு... மிகுதியாக மாணவப் பருவத்தில் அனைவரிடம் இருப்பதை யாவராலும் உணர முடியும். பயல்கள் வெகு ஈடுபாட்டுடன் அங்கங்கே அஞ்சும் பத்துமாகத் திரட்டிக் கொண்டிருந்தனர்.

நான் அவர்களை நோக்கிச் சென்றேன். சற்று தூரத்திலேயே அந்தப் பெரியவரை எனக்குத் தெரிந்துவிட்டது... அவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்... எனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவர் அவர். பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய தகப்பன். டீக்கடைகளில் யாராவது வாங்கித் தருகிற டீக்காகக் காத்திருக்கும் தருணங்களில் அவரைக் கண்டதுண்டு... அவருக்கும் திருவனந்தபுரத்துக்கும் எந்த சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. உடனடியாக வந்த வழியே திரும்பிவிட்டேன். அவருக்கும் எனது முகம் பரிச்சயமானதாகவே இருக்கக் கூடும். என்னை ஒரு வேளை அடையாளம் உணர்ந்தாரெனில்... அந்த வினாடி அவரது வாழ்நாளின் அவமானகரம் நிறைந்த வினாடியாக மாறிப்போகும்... வகுப்பறையில் பாடத்தில் கவனமின்றி அமர்ந்திருந்தேன். மதியம் பார்த்த சில மாணவர்கள் முன்னூற்றுச் சொச்சம் ரூபாயை வசூல் பண்ணிக் கொடுத்ததையும், அவர் கண்கலங்கி, கரம் கூப்பி விடை பெற்றதையும் சொன்னார்கள். மிகுந்த வேதனையாக இருந்தது.

கல்லூரி இறுதி ஆண்டு சமயம் அப்போதெல்லாம் மாலை வேளைகளில் தேனியிலிருந்து வரும் பிரதான சாலையில் ரத்தின நகர் பாலத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பதை ஓரிரு நண்பர்கள் வழக்கமாக சிலகாலம் வைத்திருந்தோம். அப்படி ஒரு பொழுதில், நாங்கள் பாலத்தில் அமர்ந்து பஸ்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததொரு மாலையில் இரண்டு பையன்கள் நடந்து வந்தனர். பாலத்தின் மறுகோடியில் அமர்ந்தனர். ஒருவனுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும். மற்றவன் அவனை விட சற்றே சிறியவன். தங்கள் பிரதேசத்தில் வருகிற புதியவர்களைப் பார்த்ததுமே பழையவர்களுக்குத் தோன்றுகிற குறுகுறுப்பு எங்களுக்கு ஏற்பட்டது... “ஏய் ... இங்க வாங்க... யாரு நீங்க!'' என்று எங்கள் குழு அதிகாரமாய் அவர்களை விசாரித்தது.

அவர்கள் எழுந்து எங்கள் அருகே வந்தார்கள். அதில் ஒருவன் கடுமையான மூச்சுத் திணறலுடன் இருப்பது தெரிந்தது. மிகுந்த பயத்துடனும் தடுமாற்றத்துடனும் அவர்கள் பேசினர். அவர்களுடையது கொஞ்சம் சுமாரான குடும்பம். இருவரும் அண்ணன் தம்பிகள். பழனியைத் தாண்டி ஏதோ ஒரு ஊர், படிப்பு ஏறவில்லை. எனவே அவர்களை வீட்டில் வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். சின்னமனூர் தாண்டி ஒரு எஸ்டேட்டில் வேலை. பெரியவனுக்கு உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொன்னால் எஸ்டேட்டில் விட மாட்டார்கள் என்று தெரியாமல் ஓடி வந்து விட்டார்கள். சின்னமனூர் வரை பஸ்ஸில் வந்ததாகவும் அதன்பின் கையில் காசு இல்லாததால் சின்னமனூரிலிருந்து நடந்தே வருவதாகவும் (சுமார் முப்பது முப்பத்தைந்து கி.மீ) சொன்னார்கள். காலையில் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டார்களாம்.

பெரியவனது மூச்சுத் திணறல் சகிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது. எனக்கும் சிறுவயதிலிருந்தே ‘வீசிங்' பிரச்சனை உண்டு. எனவே எனக்கு அவன்பால் மிகுந்த பரிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரது கால்களும் நீர்கோர்த்தது போல் வீங்கீப் போயிருந்தன. உடனடியாக அவர்களை அமர வைத்துவிட்டு சைக்களில் போய் மாத்திரைகள் வாங்கி வந்தோம். (எனது அனுபவ அறிவின் உதவியால் மாத்திரைகளை அறிந்திருந்தேன்). பன்னும், டீயும் வாங்கிக் கொடுத்து மாத்திரைகளை சாப்பிட வைத்து, ‘ஒரு மணி நேரம் பேசாமல் ஓய்வாக இரு' என்று சொல்லிவிட்டு அவர்களை ஊருக்கு பஸ் ஏற்றி அனுப்ப காசு சேகரித்தோம். மாத்திரைகளை உண்ட பின் அவனது மூச்சுத்திணறல் மட்டுப்பட்டது. அந்தப் பையன் கண் கலங்கிவிட்டான். ‘அண்ணே, நீங்கள்ளாம் சாமி மாதிரி' என்று மூச்சுத் திணறலுக்கிடையே சொன்னான். நாங்கள் அனைவருமே உன்னதமான ஒரு உணர்வு நிலைக்கு அப்போது ஆட்பட்டிருந்ததை இன்னும் உணர முடிகிறது. அவர்களுக்குத் தைரியம் சொல்லி காசைக் கையில் கொடுத்தோம். பெரியவன் எங்களது விலாசத்தைக் கேட்டான். ‘ஏன்?' என்றதற்கு ‘நான் ஊருக்குப்போய் வீட்டில் வாங்கி உங்களுக்கு பணம் அனுப்புகிறேன்' என்றான். நாங்கள் ‘பரவாயில்லை' என்று சொல்ல, வற்புறுத்தி எங்களது விலாசத்தை வாங்கினான்.

‘பணமெல்லாம் அனுப்ப வேண்டாம். போய் சேர்ந்தாச்சுன்னு ஒரு லெட்டர் போடு போதும்' என்றோம்.

‘இல்லையில்லை. உங்களுக்கு லெட்டர் போட்டு பணம் அனுப்புவேன்’' என்றான். அதன் பின் பஸ் ஏற்றி அவர்களை அனுப்பி வைத்தோம். அவர்கள் பணம் அனுப்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் நிச்சயமாகக் கடிதம் போடுவார்கள் என்று நம்பினோம். ஆனால் ஒரு கார்டுகூட அவர்களிடமிருந்து வரவில்லை. ஓரு முறை அதைப் பற்றிப் பேச்சு வந்தபோது, ‘மொத்திட்டாங்க' என்றான் ஒரு நண்பன். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏனென்றால் அந்த வீங்கிப் போன கால்களும், அந்தப் பையனின் மூச்சுத் திணறலும் பொய்யான விஷயமில்லை. சொன்னபடி நடக்கவில்லையே தவிர அவர்கள் சொன்ன விபரங்கள் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது.

இப்போதும் இவ்வகையான நபர்களை அங்கங்கே சந்திக்க நேர்கிறது. அண்ணா சாலையில் மனைவி குழந்தையுடன் அணுகி, சேலம் போக வேண்டும் என்று காசு கேட்கிற நடுத்தர வயது மனிதன், சுரங்கப் பாதைகளின் அருகே, பஸ்ஸை மிஸ் பண்ணிவிட்டதாகவும் பஸ்ஸுக்கு ட்வென்டி ஃபைவ் குறைகிறது என்று ஆங்கிலத்தில் கேட்கும் கசங்கிப்போன பேன்ட் அணிந்த நபர், ‘உங்களால எனக்க ஃபைவ் ருப்பீஸ் தரடியுமா?' என்று போதை ஏறிய விழிகளுடன் நடுங்கும் கைகளுடன் கேட்கும் இளைஞன் என்று வகை வகையான நபர்கள் விதவிதமான அணுகுமுறைகளுடன் வருகின்றனர். இதில் யார் உண்மை? யார் போலி? எது தப்பு? எது சரி? என்ற கேள்விகளுக்கு கறாரான பதில் இன்னும் எனக்குத் தெரியவில்லை. வாழ்வின் ஏராளமான சங்கடப்படுத்தும் கேள்விகளில் பிரதான இடத்தை வகிக்கிறதொரு கேள்வியாகவே இன்னும் இது இருக்கிறது.

- பாஸ்கர் சக்தி

Pin It