இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.

இலங்கையில் உள்ள 9,25,000 பேரை அவரவர் வசதிக்கேற்பப் பகிர்ந்து கொண்டது இந்த உடன்படிக்கை. இவர்களை மனிதர்களாக அல்லாமல் மாடுகளைப் போல் கருதியது இந்த இரண்டு அரசுகளும்.lal bahadur shastri and sirimavo bandaranaikeஏன் இந்த ஒப்பந்தம்?

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கங்காணிகள் மூலம் தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்கள் கூலிகளாக இலங்கைக்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் செல்லப்பட்டதும்... இலங்கையில் தங்கள் கடும் உழைப்பால் தோட்டங்களையும், சாலைகளையும், பாலங்களையும், கட்டடங்களையும் உருவாக்கினார்கள் என்பதும் உலகறிந்த செய்திகள்.

கடுமையாக உழைப்பைச் சுரண்டிய ஆளும் வர்க்கம் நல்ல உணவோ, தங்குவதற்கு வீடோ, மருத்துவ வசதிகளோ, கல்வி வாய்ப்புகளோ கொடுக்காமல் கொத்தடிமைகளாக வைத்திருந்தது ஆங்கிலேயத் துரைக் கூட்டம்.

நூறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. நூறு ஆண்டுகள் கடந்த பின்னர்தான் கோ. நடேசய்யர் அவர்களால் இம்மக்களின் உரிமைகளுக்கான குரல் எழுந்தது. கோ. நடேசய்யர் அவர்களின் கடும் முயற்சியால் 1931இல் 'இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்' என்ற முதல் தொழிற்சங்கம் உருவானது. தோட்டத் தொழிலாளர் வர்க்கம் வாக்குரிமை பெற்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஏழு உறுப்பினர்களை அனுப்பியது (இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இல்).

குடியுரிமைப் பறிப்பு

காட்டையும் மேட்டையும் தோட்டமாக்கி... இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்த இந்த மக்களை நன்றியோடு பார்த்திருக்க வேண்டும். இனவாத இலங்கை அரசியல் இம்மக்களின் 'இந்திய மற்றும் பாகிஸ்தானிய வசிப்போர் குடியுரிமைச் சட்டம் 1949'-ன் மூலம் குடியுரிமையைப் பறித்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் நாடற்றவர்களாய் தங்கள் வாழ்வுரிமைகளை இழந்தனர்.

இலங்கை மக்கள்தொகையில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களே இருந்தனர். அரசியல்ரீதியாக இம்மக்கள் பலம்பெற்றுவிடக் கூடாது என்று எண்ணி இம்மக்களின் குடியுரிமையைப் பறித்தனர்.

மக்கள்தொகை

  • சிங்களவர்: 1931இல் 65%  1981இல் 74%
  • மலையகத் தமிழர்: 1931இல் 13%  1981இல் 5.5%
  • இலங்கைத் தமிழர்: 1931இல் 12%  1981இல் 12.6%
  • இஸ்லாமியர்: 1931இல் 10%  1981இல் 7.7%

பல ஒப்பந்தங்கள்

உழைப்பையும் உயிரையும் அர்ப்பணித்து இலங்கை தேசத்தை செல்வங் கொழிக்கும் பூமியாக மாற்றிய மலையக மக்கள், தாங்கள் உழைத்து உருவாக்கிய மண்ணில் வாழும் உரிமையை இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்கள் எந்தவித ஜனநாயக நெறிகளோ மனிதநேயமோ இன்றிப் பறித்துவிட்டு... இம்மக்களைப் பண்டங்களைப் போலப் பகிர்ந்துகொள்ளப் பல ஒப்பந்தங்களைப் போட்டன.

1. நேரு - கொத்தலாவல ஒப்பந்தம்:

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் இலங்கைப் பிரதமர் கொத்தலாவலவும் 1954இல் ஓர் ஒப்பந்தம் செய்தபோதும், இந்த ஒப்பந்தம் நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை.

2. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்:

இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் போட்டுக்கொண்டதுதான் கொடிய 'சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்'.

இந்த ஒப்பந்தப்படி அன்று நாடற்றவர்களாக்கப்பட்ட... குடியுரிமைப் பறிக்கப்பட்ட மக்கள் 9,75,000 பேர். இவர்களில் 5,25,000 பேரை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வது என்றும், 3,00,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை கொடுப்பது என்றும், மீதமுள்ளோர் பற்றிப் பின்னர் முடிவெடுப்பது என்றும் இந்தச் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இரு அரசுகளும் முடிவு செய்தன.

3. இந்திரா - சிறிமா ஒப்பந்தம்:

இந்த ஒப்பந்தம் 28.06.1974இல் இரு அரசுகளாலும் செய்யப்பட்டது. இதன்படி மீதமுள்ளவர்களை இரு நாடுகளும் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மக்களா! மனிதப் பண்டங்களா!

இலங்கை மலையகத்தின் இலக்கிய முன்னோடியான சி. வி. வேலுப்பிள்ளை தனது ஆங்கிலக் கவிதையில், இந்தியாவுக்குக் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட மக்களை "Human Cargo" (மனிதப் பண்டங்கள்) என்று குறிப்பிட்டது மிகச் சரியான கருத்து.

ஆம், ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களைப் பெரும்பாலும் இலங்கை அரசு நிராகரித்தது. மூட்டை முடிச்சுகளுடன் வறுமையையும் கண்ணீரையும் சுமந்துகொண்டு தோட்டப்புறத் தமிழ் மக்கள் தலைமன்னாரில் 'ராமானுஜம்' என்ற இந்தியக் கப்பலில் ஏற்றப்பட்டு இராமேசுவரம் கரையில் கொட்டப்பட்டனர்.

இவ்வாறு 1981 வரை 2,80,000 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்; 1,60,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை கொடுக்கப்பட்டது. 1984இல் கப்பல் நிறுத்தப்பட்டு மக்களை அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2003இல் இலங்கையில் இருந்த நாடற்றவர்களான மலையகத் தமிழர் அனைவருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது.

தாயகம் திரும்பியோர் (Repatriates from Sri Lanka)

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் சிறிமா - இந்திரா ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் "தாயகம் திரும்பியோர்" என்று குறிப்பிடப்படுகின்றனர். இம்மக்களுக்கு இந்திய மற்றும் தமிழக அரசுகளால் பல மறுவாழ்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், இத்திட்டங்களால் சிறிய அளவிலான தாயகம் திரும்பியோர் மட்டுமே முழுமையாகப் பயனடைந்தனர்.

இலங்கையின் மிகப்பெரிய தொழிலாளர் வர்க்கத்தை இரண்டாகப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தியது இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள ஆளும் முதலாளி வர்க்கத்திற்கும் மிகவும் உகந்ததாக இருந்தது. அதேபோல இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கத்திற்குத் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவது மகிழ்ச்சியாக இருந்தது.

வர்க்கப் பகையாலும் இனப் பகையாலும் இன்னும் இலங்கையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் இன்றி வாடுகின்ற மலையக மக்களுக்கு இந்த அக்டோபர் 30 கறுப்பு நாளாகும். இது மிகக் கொடிய, அதேவேளை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின்... ஒரு தேசிய இனத்தின் வலி நிறைந்த வரலாற்றின் துயர நாளாகும்.

- வழக்கறிஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.