மதிப்புமிகு பேராசிரியர் திரு. கோபாலகிருஸ்ண காந்தி அவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின்போது, “கடவுளின் பேரால்” உறுதிமொழி ஏற்பதை மறுத்து, ஓர் அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை என்றாலும், இன்றைய அரசியல் சூழலில் மிகவும் பொருத்தப்பாடுடைய கட்டுரை என்பதால் மொழிபெயர்த்தேன். மூலக் கட்டுரையில், உள்ள தலைப்பை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளேன். சில கூடுதலான தகவல்களையும், மூலத்தை அப்படியே பெயர்க்காமல் என்னளவிலும் பெயர்த்துள்ளேன். - ப.பிரபாகரன்

இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, தலைசிறந்த சான்றோர்களால் பெரும்பான்மை வெகுளிகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றது.

அந்தத் தலைசிறந்த சான்றோர் பெருமக்கள் யாவரும் இன்று சுவரோவியங்கள் ஆகி விட்டார்கள். (இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் மொத்தம் 299 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுள் 290 பேர் ஆண்கள்; 9 பேர் பெண்கள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இவர்களின் எண்ணிக்கை மொத்தம் 379 ஆக இருந்தது என்பது தனிச் செய்தி.) அந்தச் சுவர் ஓவியங்களின் நிறம் மங்கியிருக்கலாம்; ஆனால் ஒருபோதும் மாறுவதில்லை. அவர்களது சான்றான்மை எப்போதும் நிலைத்திருக்கும். ஆனால் இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசுப் பொறுப்புகளில் பதவி ஏற்பவர்களின் உறுதிமொழி வாசகத்தில் உள்ள “உளமார உறுதியளிக்கிறேன்” என்ற சொல்லாடலின் நிலை இன்று என்னவாக இருக்கின்றது என்பது குறித்துதான்.

ambedkar and people "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற சொல்லாடல் மங்கிப் போய் விடாது. நாம் இந்திய குடிமக்களாகவே நீண்ட காலத்திற்கு நிலைத்து இருப்போம்; மாறப் போவதில்லை. ஆனால் அந்த உறுதிமொழியில் ’கடவுளை’ இணைத்துக் கொள்வதில் நாம் வெகுவாக மாறி விட்டோமா?

 கடந்த 67 ஆண்டு கால இந்திய குடியாட்சி கால வரலாற்றில் நாம் மக்களாட்சி குறித்த அறியாமையிலிருந்து அனுபவத்தின் வழி பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குள் நின்று வேலைசெய்து நமக்கான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றோம். இந்திய அரசியலமைப்பின் முகப்புரை மற்றும் அடித்தளத்திலிருந்து மட்டுமல்லாது, அதன் உள்ளார்ந்த கட்டமைப்பிலிருந்தும் நாம் நல்ல அனுபவங்களை பெற்றிருக்கின்றோம். இந்திய அரசியலமைப்பு முறையாக எழுதப்பட்ட சட்ட ஆவணம் (written constitiution) என்பதால், ‘நெகிழாத்தன்மை’ (rigidity – சட்டத் திருத்தங்களை அவ்வளவு எளிதில் கொண்டு வர முடியாது) பண்பியல்பானபோதும் மாறிவரும் காலத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப நாம் நமது அரசியலமைப்புச் சட்ட ஆவணத்தை பலமுறை திருத்தி அமைத்து இருக்கின்றோம். அது காலத்திற்கேற்ப தகவமைக்கப் பட்டிருக்கின்றது.

இந்திய நாடாளுமன்ற அவைகளால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கும் அப்பால், நமது உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கியுள்ள பல முக்கியத் தீர்ப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான சாராம்சத்தை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளன. அவை நமது அரசியல் அமைப்பின் மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கின்றன.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்தாக ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவி, அக்கட்சியோடு இணைந்து புதிய கூட்டணிகளை அமைக்குமேயானால் நடப்பில் உள்ள ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை இழக்க நேரிடும். ஆனால், மக்களாட்சியில் இதுபோன்ற ‘கட்சி தாவும்’ வாய்ப்புகள் எதிர்காலத்தில் அமையக் கூடும் என்பதான சிந்தனைகள், கருத்தக்காங்கள், அரசியலமைப்பை உருவாக்கியச் சமயத்தில் நம் முன்னவர்களுக்கு எழவில்லை. ’கட்சித் தாவல்’ என்பது இன்று பரவலாகக் காணப்படும் ஓர் அரசியல் நிகழ்வாக இருந்த போதிலும் அரசியல் கட்சிகள் கூட அதன் விளைவுகளை உணரவில்லை. அத்துடன், 'அரசியல் கட்சி' (political party) என்ற சொல்லாடலும் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால் 'கட்சித் தாவல்' போன்ற புதிய அரசியல் அனுபவங்கள், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள உள்கட்டமைப்புக் கோளாறுகளை நமக்கு அறிவித்தன. எனவே நாம் அவற்றைத் தடுப்பதற்காக, 1985 ஆம் ஆண்டு 'கட்சித் தாவல் தடைச் சட்டத்தை' அறிவுக் கூர்மையோடு, அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்தோம். இவ்வாறாக, 'அரசியல் கட்சி' என்ற சொல்லாடலானது, புதிதாக சேர்க்கப்பட்ட பத்தாவது அட்டவணையின் மூலம், கண்ணியமான முறையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதன்முறையாக உள் நுழைந்தது.

 அதைப் போலவே, சட்டப் பிரிவு 356 வழங்கியுள்ள 'நெருக்கடி நிலைப் பிரகடனம்' இவ்வளவு கீழ்த்தரமாகப் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தக்கூடும் என, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முன்னவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் 1975-ஆம் ஆண்டு நாம் சந்தித்த அந்த அதிர்ச்சி மிகுந்த நெருக்கடி நிலைப் பிரகடனம், 356-ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அதிகார மேலாதிக்கமும் பதவிப் பேராசையும் இந்தியக் குடியரசுக்கு உண்டாக்கிய பேராபத்தை நமக்கு சுட்டிக் காட்டியது. அதனிடமிருந்து மக்களாட்சியைக் காப்பாற்றுவதற்காக, நெருக்கடி நிலையை அவ்வளவு எளிதில் பிரகனப்படுத்திவிட முடியாத அளவிற்கு, 1977-ஆம் ஆண்டு அவற்றில் பல கடுமையான மாற்றங்களை நாம் கொண்டு வந்தோம்.

 தொடக்க கால அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த நமது அறியாமைகள் யாவும் இன்று வரலாறாக உருக் கொண்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் இன்று அறிவுக் கூர்மையோடு விளங்கினாலும், அவற்றில் சில கசப்பான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. அரசியலமைப்பிலுள்ள அத்தகையதோர் அம்சம், காலாகாலத்திற்கும் மாற்றத்திற்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருக்கின்றது என்பதோடு மட்டுமல்லாது, அது மேலும் மேலும் தனக்குத் தானே ஆழம் காண்கிறது. அது யாதெனில், 'கடவுள்' பற்றிய அம்சம்தான் அது.

கடவுளா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடவுளுக்கு இடம் உண்டா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வியக்கத்தக்க வகையில் உண்டு என்பதே விடையாகக் கிடைக்கின்றது.

 பெரும்பாலான நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டத்தை போலவே, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலும் 'கடவுளை' நாம் எங்கும் குறிப்பிடவில்லை. அதாவது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் 'கடவுள்' என்ற கருத்தாக்கம் காணப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு 'தெய்வ நம்பிக்கை' உடையவர்களால் நிரம்பி இருந்தது என்பது உண்மைதான். அவர்களுள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையையும், மனசாட்சியையும் நம்பியவர்கள் என்று ஒருவர் கூறுவாரேயானால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான். ஆனால், அவர்களது நம்பிக்கை எப்படி இருந்தபோதிலும், "எல்லாம் வல்ல இறையை" அரசியலமைப்புச் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமானதென்றோ, சரியானதென்றோ அவர்கள் ஒருபோதும் கருதி இருக்கவில்லை. கடவுளை அவர்கள் அரசியலமைப்புச் சட்டவரைவுக்கு வெளியேதான் வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் மேலாக, இந்தியா ஒரு 'மதச் சார்பற்ற நாடாக' வரலாற்றில் பயின்று வந்திருக்கின்றது. சட்ட வரைவுக் குழுவிற்கு வெளியே நின்று காந்தியடிகள் ஆற்றிய உரையானாலும் சரி அல்லது சட்ட வரைவுக் குழுவிற்குள் நின்று நேரு, சட்டமேதை டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் ஆற்றிய உரையானலும் சரி, அவர்களது உரையில் நாடு என்பதை நாடாகவும், மதம் என்பதை மதமாகவும் தனித்தனியாக, தெளிவாகக் கையாண்டார்கள். அவற்றை ஒன்றுடன் மற்றொன்றை கலக்கவில்லை. அப்படியிருந்தும் என்னவாயிற்று? எல்லாம் வல்ல இறை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதன்றோ..!!??

 அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவினர் எவரும் கண்டு கொள்ளாத வகையில் கடவுள் பதவிசாக அரசியலமைப்புச் சட்டத்திற்குள் நுழைந்து விட்டார். அப்படியானால், அவருடைய காலடித் தடங்கள் எங்கே காணப்படுகின்றன? அரசியலமைப்புச் சட்டத்திற்குள் அவர் எவ்வாறு நுழைந்தார்? நாம் நினைப்பதைப் போன்று அவர், பின்வாசல் கதவுகளின் வழியே நுழையவில்லை; தலைவாசலின் வழியாகத்தான் நுழைந்திருக்கிறார். ஆனால் எவரது கண்களுக்கும் புலப்படாமல் நுழைந்திருக்கிறார். ஆம் அவர் இந்திய அரசியலமைப்பின் அட்டவணையில் உள்ளார்; மூன்றாவது அட்டவணையில் தான் அவர் இடம் பிடித்துள்ளார்.

 இந்திய அரசியலமைப்பின் 'அட்டவணைப்' பகுதியில் (schedule) குறிப்பிடப்பட்டிருக்கும் இனங்கள் (subjects) எவை?

நம் இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆவணத்தின் அட்டவணைப் பகுதியில் தான், ஒன்றிய அரசுக்கு (’மத்திய அரசு’ என்ற பதம் பொருத்தமற்றது) உரிய இனங்கள் (Union Government lists of subjects) எவை; மாநில அரசுக்கு (State government lists of subects) உரிய வகைகள் எவை; இரண்டுக்கும் பொதுவான 'பொதுப் பட்டியல்கள்' (Concurrent lists of subjects) எவையெவை என்று அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் நன்கறிவோம். இப்பகுதியில் அரசுகளும் மொழிகளும் அட்டவணைப் படுத்தப்பட்டிருப்பது / குறிப்பிடப் பட்டிருப்பதைப் போலவே, 'பதவியேற்பு உறுதிமொழி' என்பதற்குள் கடவுளும் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குள் குடி கொண்டிருக்கும் கடவுளை அவ்விடத்தை விட்டு நீக்க வேண்டுமெனில், அதனை ஓர் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தால் மட்டுமே செய்ய முடியும்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ள அரசுப் பதவிகளுக்கான பதவியேற்பு உறுதிமொழிப் படிவத்தின்படி, தேர்தல்களின் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஏனைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், அரசு இயந்திரத்தை இயக்கக்கூடிய உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்தப் பதவிகளில் அமர்வதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய பதவியேற்பு உறுதிமொழி வாசகத்தில், இருவகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

 அதாவது "சட்டப்படி நிறுவப் பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன்" என 'கடவுள் அறியவோ' (in the name of God) அல்லது 'உளமார (solemnly affirm) உறுதியளிக்கிறேன்' என்று கூறியோ அவர்கள் பதவி ஏற்கலாம்.

 நமது நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், முதன்மை அமைச்சர் (prime minister) உள்ளிட்டோருக்கும், அரசியலமைப்பில் வேறொரு தனிச் சட்டப்பிரிவில் இந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

 "உளமார உறுதி அளிக்கிறேன்" என்று கூறுவதைக் காட்டிலும் "கடவுள் அறிய உறுதி அளிக்கிறேன்" என்று கூறுவதை விரும்புபவர்கள், கடவுளின் பெயராலேயே தத்தம் அலுவலகத்திற்கு பணிபுரிய வருகிறார்கள். இவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

 இந்தச் செய்தி நமக்கு எதை உணர்த்துகிறது? நாம் நாளுக்கு நாள் கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்களாகிறோம் என்பதையா? அல்லது மூட நம்பிக்கை அதிகம் உடையவர்களாகிறோம் என்பதையா?

 நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை ’கடவுள் வழிபாட்டை’ வேண்டி நிற்கவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனெனில் இந்தியா ஒரு “மதச்சார்பற்ற நாடு” என்பதனை நாம் பிரகடனப்படுத்தி, அதை இத்தனை ஆண்டுகளாமாக கடைப்பிடித்தொழுகி வருகிறோமாயின், அதைத் தனியே எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என்பதாம். ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது: "அண்டம் முழுமையும் அல்லாஹ் ஒருவனாலாயே ஆளப்படுகிறது. பாகிஸ்தான் மக்களாகிய நமது செயல்முறைகள் யாவும் அவனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே அமைகிறது". பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய மதச்சார்பு கொண்ட நாடு ஆதலால், அவர்களுடைய அரசியலமைப்பு முகப்புரையில் அவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

 நமது நாட்டின் முதல் முதன்மை அமைச்சரான (Prime Minister) நேரு (Nehru) அவர்களும், முதற்சட்ட அமைச்சரான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் கடவுளின் பெயரினால் அல்லாது "உளமார உறுதி அளிக்கிறேன்" என்று கூறித்தான் பதவி ஏற்றார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்புரிமை என்பதோடன்றி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுளுள் ஒன்றான ‘மதச்சார்பின்மைக்கும்’ வலு சேர்க்கக்கூடிய மிகச் சரியான தேர்வாகும். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் ஒளிவிளக்குகளான அவர்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி எடுத்தார்கள்? அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் அதே தேர்வைத்தான் வழங்க வேண்டும் என்பதற்காகவா? அவ்வாறெனில் அது ஓர் உலகச் செவ்வியல் நடைமுறையாக கடைபிடிக்கப்படுகிறதா? இல்லை ஒட்டுமொத்த வரலாற்றோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அந்தத் தேர்வு வெறும் ஏட்டளவில் மட்டும் உள்ளதா?

 நமது நாட்டில் இதுவரை நடந்து முடிந்துள்ள 16 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் எடுத்துக் கொள்வோமேயானால், அத்தேர்தல்களில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்பொழுது "உளமார உறுதி அளிக்கிறேன்" என்று கூறுவதைக் காட்டிலும் "கடவுள் அறிய உறுதி அளிக்கிறேன்" என்று கூறி பதவியேற்பவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. மே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஜூன் மாதம் 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார்கள். மொத்தம் உள்ள 513 உறுப்பினர்களில் 474 உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றார்கள். வெறும் 39 உறுப்பினர்கள் தான் "உளமார உறுதி அளிக்கிறேன்" என்று கூறி பதவியேற்றார்கள். அந்த 39 உறுப்பினர்களில் திருமதி.சோனியா காந்தி அவர்களும் ஒருவர். இதே நிலைதான் குடியரசுத் தலைவர் பதவியேற்பிலும் காணப் படுகிறது. 

"உளமார உறுதி அளிக்கிறேன்" என்ற சொல்லாடல், 'கடவுளின்' பெயரால் காலம் தோறும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறதோ? ஆம்! அதில் ஐயம் வேண்டாம். இருப்பினும், அந்த உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள 'கடவுள்' என்ற சொல் எதை உணர்த்துகிறது? நம்பிக்கையையா? அல்லது அச்சத்தையா? தெய்வ நம்பிக்கையையா? அல்லது மூட நம்பிக்கையையா? உறுதிமொழி என்பது கடவுள் தன்மீது காட்ட வேண்டிய கருணைக்கான வேண்டுகோளா? அல்லது நாட்டு மக்களுக்கு அவர் தர வேண்டிய பாதுகாப்பிற்கான உறுதிமொழியா? உறுதிமொழி என்பது பக்தியின் அகத்தூண்டலா? அல்லது நாட்டு மக்களுக்கு வரும் இழப்புகளில் இருந்து அவரை எதிர் காக்கும் காப்புறுதியா?

 "என்னை நம்புங்கள்", "என் மீது நல்லெண்ணம் கொள்ளுங்கள்" என்பதை நாட்டு மக்களுக்கு உரைப்பதற்காகத்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு, "நான் உளமார உறுதி அளிக்கிறேன்" என்ற சொல்லாடல் தான் மிகச் சரியான, மிகப் பொருத்தமான தேர்வாக இருக்க முடியும். 

 "என்னை நம்புங்கள்" என்று உறுதியளிப்பவரின் நம்பகத் தன்மையை அவரது அரசியல் செயல்முறைகளிலிருந்து நாம் சோதித்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், அதே நபர் "நான் கடவுளறிய செயல்படுகிறேன்" என்று கூறுவாரேயானால், அவரது நம்பகத் தன்மையை நாம் சோதித்துப் பார்க்க முடியாது. அவரது கடவுள் நம்பிக்கையை, கடவுள்தான் சோதித்துப் பார்க்க முடியும்.

- கோபாலகிருஸ்ண காந்தி (அசோகாப் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் ஒரு தலைசிறந்த வரலாறு & அரசியல் பேராசிரியர்)

மூலம்: https://www.hindustantimes.com/columns/why-give-mps-a-chance-to-swear-in-the-name-of-god/story-SZjVsSUi2j5C1MIBHe1HRI.html

தமிழில்: ப.பிரபாகரன்

Pin It