"நான் பிரீயாதான் இருக்கேன்... இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்" என்று ஒரு குறுந்தகவல் வருகிறது... நீங்களும் ஒரு சபலத்தில் கூப்பிட்டீர்கள் என்றால், நீங்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டீர்கள் என்று மற்றொரு செய்தி உங்களுக்கு வரும்...

"நான் எப்போது வாக்களித்தேன்?" என்று குழம்பிக்கொள்ளாதீர்கள்... அந்த எண் பாஜகவின் குடியுரிமை சட்ட ஆதரவுக்காக தயாரிக்கப்பட்ட எண்.

கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்

தமிழிசை சவுந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோது பாஜக கட்சியில் 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.

அனைவருக்கும் விசுக்கென்றிருந்தது.

என்னாது 2 கோடி உறுப்பினர்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்களா? பால்வெளி வீதியில் பாயாசம் காய்ச்சிக் கொண்டிருக்கிறார்களா? என்றெல்லாம் கேட்டு கிண்டலடித்தார்கள்...

அவர்களுக்கெல்லாம் தமிழிசை சொன்னார் "எங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று...

ஆனால் அவர்கள் யாருமே பாஜகவுக்கு வாக்களிக்காத உறுப்பினர்கள்போலும்... ஏனெனில் அடுத்து நடந்த சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக ஒரு இடம்கூட பெறவில்லை...

missed call bjpஇப்போது விஷயத்துக்கு வருவோம்... குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக ஒரு மிஸ்டுகால் கொடுங்கள் என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் முதல் தமிழ்நாட்டில் இருக்கும் தேசியச் செயலர் வரை ட்விட்டரில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அதன்படி, குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும்படி பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.

அமித்ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் ஆர்வத்தோடு மிஸ்டு கால் கொடுத்து, அதை ட்விட்டரிலும் பதிவு செய்து வந்தனர்.

அதைப் பரப்புவதற்கு சில கீழ்த்தரமான முறைகளை கையில் எடுத்துள்ளது.

ட்விட்டரில் சில பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த போன் நம்பரைப் பதிவிட்டு, 'இது ஒரு பெண்ணின் போன் நம்பர். பயன்படுத்திக் கொளுங்கள்' எனப் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் நெட்பிலிக்ஸ் ஆறு மாதம் இலவசம் என்றெல்லாம் ஏமாற்று வேலையைச் செய்து மாட்டிக் கொண்டது. இதனை பாஜக ஆதரவாளர்கள் பலரும் பரப்பி அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.

இதுசம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தா.பாண்டியன், "பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி" என்றார்.

“புதிய ஐபோன் மாடல் உங்களுக்கு வேண்டுமா, இந்த எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்”, “எனக்குப் போரடிக்கிறது. என்னோடு பேச விரும்புபவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்”, “இலவசமாக பிட்சா டெலிவரி வேண்டுமா? இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்” என்றெல்லாம் விதவிதமாக நூற்றுக்கணக்கான ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனது எதிர்ப்பைத் தெரிவிக்க மிகவும் அமைதியான முறையில் கோலம் போட்ட பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்துவிட்டு, கேடுகெட்ட அளவிலான குறுந்தகவலை அனுப்பி குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவை மிஸ்டுகாலின் மூலமாகப் பெறும் மோசமான ஒரு செயலை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்களே எடுத்துள்ளார்கள்...

இந்த அராஜகங்களையும் அசிங்கங்களையும் வழக்கம்போல் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்...

ஆனால் காவல் துறையும் அரசும் அப்படி கடந்து போய் விடலாமா? இதுபோன்ற கயவர்களின் மீது என்ன நடவடிக்கை?

- சஞ்சய் சங்கையா

Pin It