இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கும் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந்தும் சிதைவுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும். அங்கங்கு அவரவர்கள் வாழ்ந்திருந்த நிலத்தியல் அமைப்பின்படியும் அங்கங்கு நிலவிய தட்ப வெப்ப நிலைகளின்படியும் உடம்பின் நிற மாற்றங்களையும் உருவ அமைப்பில் சிறுசிறு வேறுபாடுகளையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

Tamilnaduஒவ்வொரு பிரிவும் தன் வாழிடச் சூழலுக்கு ஏற்பத் தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் உருவாக்கிக் கொண்டது. உலகெங்கும் உள்ள பல்வேறு இனங்கள் இவ்வாறு தான் உருவாயின. சூழல் அமைப்புக்கும், தட்பவெப்ப நிலைக்கும், பழக்க வழக்கங்கட்கும் ஏற்ப ஒவ்வோரினத்தின் மக்கள் தொகையும் மாறுதல் அடைந்தது. வளமான பகுதிகளில் மக்கள் தொகைப் பெருக்கமும், வறண்ட பகுதிகளில் மக்கள் தொகைச் சுருக்கமும் நேர்ந்தன.

மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் வாழ்க்கையை மேலும் வளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தாலும் அங்கங்கு வாழ்ந்த மாந்த இனங்கள் தங்கள் வாழிடத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் வளம் நிறைந்த சூழலைத் தேடியும் இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்றன. இதனால் அங்கங்கு வாழ்ந்த இனங்கட்கும் புதிதாகக் குடியேற வந்த இனங்கட்கும் இடையே பூசல்கள் மோதல்கள் நிகழ்ந்தன. வலிமை மிக்க இனம் வலிமையற்ற இனத்தை ஒடுக்கி முன்னேறியது. சில இடங்களில் மக்கட்பெருக்கமும் படைவலிமையும் மிக்க இனத்தின் நடுவில் மக்கட்பெருக்கமும் படைவலிமையும் குறைந்த ஓரினம் பிழைப்புத் தேடி நுழைந்த பொழுது, எதிர்ப்பையும் மோதலையும் நேருக்கு நேர் நிகழ்த்த முடியாமல், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளச் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மேற்கொண்டது.

சில இடங்களில் தன்தேவைக்கு மிகுதியான இயற்கை வளமும் செழுமையும் நிறைந்த பகுதியில் வாழ்ந்த இனம் பிழைக்க வந்த இனத்தை எதிர்த்து விரட்டாமல் வரவேற்று வாழ உதவி செய்தது. மாந்த இயல்பின் பொதுவான தன்மை ஒன்றுண்டு. வளம் மிகுந்த புறச்சூழலில் வாழ்பவர்கள் உள்ளத்தாலும் வளம் உடையவர்களாக இருக்கின்றனர். தங்கள் வளத்தைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கும் தன்மை அவர்களிடம் காணப்படுகின்றது. மாறாக, வறண்ட இடங்களில் வாழ்பவர்களோ உள்ளத்தாலும் வறட்சியுடையவர்களாகக் காணப்படுகின்றனர். தங்கட்குத் தேவையானவற்றைப் பிறரிடமிருந்து கவர்ந்து கொள்வதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். தமிழரின் மருதநில மக்களும் பாலை நிலமக்களும் இதற்குச் சான்றாவர்.

வளங்கொழிக்க வாழ்பவர்கட்குக் கொடுத்தலே வாழ்க்கையாகவும், வளங்குறைந்தவர்கட்குப் பெறுதலே வாழ்க்கையாகவும் ஆகிவிடுகின்றது. மிகப்பல நூற்றாண்டுகள் இவ்வாறு வாழ்ந்து வாழ்ந்து இந்தத் தன்மைகள் அவர்களின் குருதியில் ஊறி இயல்பிலேயே ஆழமாகப் படிந்து விடுகின்றன. எந்த அளவுக்கு என்றால், வளங்கொழிக்க வாழ்ந்தவர்கள் கால மாறுபாட்டால் வளஞ்சுருங்கி வறுமையுற்றுப் போனபின்பும், தங்கள் பழைய பண்பான கொடுக்குந் தன்மையைக் கைவிடாதவர்களாகவே இருக்கின்றனர்.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும், பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்
- என்று வள்ளுவர் இவர்களையே கூறுகின்றார்.

இது போலவே நூற்றாண்டு பலவாகப் பிறரிடமிருந்து பெறுதலையே வாழ்வாகக் கொண்டவர்கள், அவ்வாறு பெறுதலையும், பிறரைச் சுரண்டுதலையும் உறிஞ்சிப் பிழைத்தலையுமே அடிப்படையாகக் கொண்டு தங்கள் முன்னாள் வறண்ட வாழ்க்கையை வளம் கொழிக்கும் வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட பிறகும் தங்கள் முன்னாள் தன்மையாகிய பிறரைச் சுரண்டிவாழும் தன்மையிலிருந்து கடுகளவும் மாறாமலேயே இருக்கின்றனர். இதுவே அவர்களின் மரபுவழி இனப்பண்பாகவும் ஆகி விடுகின்றது.

ஐம்புலன் உணர்வுகளுள் ஒன்றிரண்டு குறையப் பெற்றவர்கள் எப்படி இருக்கும் புலன்களின் உணர்வைப் பன்மடங்கு நுட்பமாகவும் கூர்மையாகவும் வளர்த்துக் கொள்கின்றனரோ, அப்படியே புற வலிமை அல்லது படைவலிமை குறைந்தவர்கள் தங்களை நிலைநாட்டிக் கொள்வதற்காக மூளைக் கூர்மையை வளர்த்துக் கொண்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மிகுதியாகப் பின்பற்றித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். பெரும்பான்மையர் நடுவில் வாழும் சிறுபான்மையரின் நிலையும் இதுவே.

மொழி, இனம், நிறம், மதம் போன்ற ஒன்றின் அல்லது ஒன்றிரண்டின் அடிப்படையில் அமைந்துள்ள பெரும்பான்மைப் பிரிவின் நடுவில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள நேரும் சிறுபான்மைப் பிரிவும் மிக மிக எச்சரிக்கை (விழிப்புணர்வு)யுள்ள இனமாக உருவாகின்றது. பெரும்பான்மை வலிவின் கீழ் தான் நசுக்கப்படாமல் இருப்பதற்காக மிகுந்த விரகாண்மையோடு அது செயல்பட்டுத் தன்கையை மேலோங்கச் செய்து கொள்கின்றது. இவ்வாறு இனங்களின் நெஞ்சில் ஆழ்ந்து வேரூன்றிப்போன அடிப்படைத் தன்மைகளைத் தீர்மானிப்பதில் மற்றுமொன்றையும் நாம் கணக்கிற் கொள்ளுதல் வேண்டும்.

மாந்த இனம் ஓரிடத்தில் தோன்றி, அங்குப் பலகாலம் வாழ்ந்து, பின்புதான் உலகமுழுவதும் பரவியிருத்தல் வேண்டும் என்பதை முன்பே குறிப்பிட்டோம். அத் தொடக்கக் காலத்தில் ஒருமொழி பேசிய ஓரினமாகத்தான் மாந்த இனம் முழுமையும் இருந்திருத்தல் வேண்டும். பல்வேறு மொழிகள் உருவாதற்குமுன் ஒரு மொழி பேசி வாழ்ந்த அந்த முதல் மாந்த இனம் வேறெந்த மாந்தப் பிரிவின் எதிர்ப்புக்கும், ஊடுருவலுக்கும் போட்டி பொறாமைகட்கும் ஆட்பட்டிருந்திருக்க முடியாது, இல்லையா?

தானே மாந்த இனம் முழுமையுமாக இருந்தமையால் அதற்கு வேறெந்த எதிர் இனமும் இல்லை. அதனால் எதிர் இனத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற இனக்காப்புணர்வும் அதற்கு ஏற்பட்டிருக்க வழியில்லை. காப்புணர்வு இல்லாமையால் இனப்பற்றும் இல்லாமற்போகிறது. எதிரி என ஒருவன் இருந்தால்தானே அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றும்! அது இனப்பற்றாக மாறும்.

ஒரே மாந்த இனம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து பல்வேறு இனங்களாக மாறித் தங்களுக்குள் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டபிறகுதான் தனித்தனி இனப்பற்று உருவாகிப் போட்டி, பொறாமை, பூசல், மோதல் முதலியனவும் உருவாகின்றன, பிறர் நம்மைக் கீழே தள்ளி மிதித்து மேலோங்கி விடுவார்களோ என்ற அச்சம்தான் தற்காப்புணர்வுக்குக் காரணம் ஆகின்றது. பிறர் மீது பகையுணர்வும் வெறுப்பும் அப்பொழுதுதான் ஏற்படுகின்றது. எதிராளி என எவருமில்லாதபோது யாரைப் பகைப்பது? யாரை வெறுப்பது?

பல நூற்றாண்டுகளாக எதிரிகளே இல்லாமல் வாழ்ந்த தொன்முதுமாந்த இனம் தற்காப்புணர்ச்சி என்பது கடுகளவும் இல்லாமல் தன்னைச் சுற்றி எந்தச் சுவர்களையும் எழுப்பிக்கொள்ளாமல் எந்தக் கதவுகளையும் அடைத்துக் கொள்ளாமல், யார் மீதும் எந்தப் பகையுணர்வும் கொள்ளாமல் வாழ்ந்து வருவதில் வியப்பில்லை அன்றோ? இத்தகைய உணர்வுகள் கூர்தலற முறைப்படி ஆழ்மனத்திற் படிந்து போன உணர்வுகள் ஆதலால் இவை எளிதில் மாறுவன அல்ல. இத்தகைய ஓர் இனம் பிற்காலத்தில் ஏமாற்றப்பட்டுச் சுரண்டப்படும் பொழுது கூடத் தற்காப்புணர்வற்ற தனது பழைய மனநிலையிலிருந்து சிறிதும் விடுபடாமல் சுரண்டுவார்க்கும் ஏய்ப்பார்க்கும் தொடர்ந்து இடம் கொடுத்தே தன் அழிவைத் தேடிக் கொள்கின்றது.

தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மாந்தனின் பிறந்தகமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர். ஒன்றை நிறுவுதற்குப் போதிய சான்றுகள் இல்லை என்போர் அதனை மறுப்பதற்கும் மறுக்க முடியாத, திட்டவட்டமான சான்றுகள் காட்டுதல் வேண்டும்.

மேலை நாட்டு ஆய்வாளர்களிடையேகூடக் குமரிக்கண்டம் பற்றி இருவேறு கருத்துகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றனவே தவிர ஐயந்திரிபற எந்த உண்மையும் நிலை நாட்டப்படவில்லை. இந்நிலையில் வரலாற்று அடிப்படையில் தமிழனே நாகரிகமடைந்த முதல் மாந்தன் என்று நிறுவப்படாவிட்டாலும், மொழியியல் ஆய்வின்படி உலகின் பல்வேறு மொழிகளிலுள்ள பல அடிப்படைச் சொற்கள் தமிழ்ச் சொற்களினடியாகப் பிறந்தவை என்ற உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர் ஒரு பக்கம் இருந்தாலும், மனவியல் அடிப்படையில் மாந்தரின் இயல்பை ஊற்று நோக்குவோர் மறுக்கவியலாத ஓர் உண்மையைக் கண்டுகொள்ளவியலும்.

உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.

ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின்றும், கயமைகள் கரவுகளினின்றும், ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்றும் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி அற்ற இனம் தமிழினம்.

இதற்குச் சான்றுகள் காட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தமிழனின் இன்றைய அரசியல், கல்வி, பொருளியல், பண்பாட்டியல், சமயவியல், வரலாறு மட்டுமன்று, ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நடப்பு மெய்ம்மைகள் யாவுமே மறுக்கவியலாத சான்றுகள். இந்த அவலங்களையும் அல்லல்களையும் இழிவையும் நினைத்தால் தலை தாழும்; கண்ணீர் பெருகும். நெஞ்சு குமுறும்; நாடி நரம்புகள் தளரும். அவற்றை இங்கு விரிக்கப்போவதில்லை. இவற்றுக்கான மனவியல் காரணத்தையே நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

கோழி குப்பைமேட்டை அல்லது மண்தரையை இரண்டு கால்களாலும் சீய்த்துச் சீய்த்து அங்குள்ள புழு பூச்சிகளை அல்லது கூலமணிகளை மேற்கொணர்ந்து கொத்தித் தின்னும். வழுக்கைப் பாறை அல்லது கல்தரை மீது இரையைப் போட்டுக் கோழியைக் கொத்தித் தின்னவிட்டாலும் நேராக அதை உண்ணாமல் கால்களால் சீய்த்துச் சீய்த்துத்தான் அது இரை தின்பதைப் பார்க்கலாம். இது மரபு வழி வந்த ஒரு பழக்கம். சீய்த்துச் சீய்த்தே இரை பொறுக்கிய முன்னோர்களின் பழக்கம் மரபு வழியாகக் குருதியில் நிலைத்துப் போய்த் தேவையில்லாமலேயே பாறை மீதும் சீய்த்தலை மேற்கொள்ளச் செய்கின்றது, சீய்த்துத் தின்பது அதன் இனப்பண்பாகவே ஆகிவிட்டது.

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி''யாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வூழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இனித் தொடக்க வூழியில் தமிழ்பேசிய மாந்த இனம் பல்கிப் பெருகி மண்ணுலகெங்கும் பரவிப் பல்வேறு மொழி பேசிய பல்வேறு இனங்களாக மாறிப் பல்வேறு சூழல்களை எதிர்கொண்டாலும், பல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர்வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.

படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!

மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்சி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற்கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்? இலங்கையின் முதற்குடிகளாக வாழ்ந்து அரசமைத்து ஆண்ட ஈழத்தமிழர் பின்பு, இந்தியாவின் கலிங்கப் பகுதியிலிருந்து பிழைப்புத் தேடி அங்குப் போன சிங்கள நரிகளை அன்போடு வரவேற்று வாழ்வளித்து முதலில் மட்டுமின்றிப் பின்பு வெள்ளையன் போன பிறகும் நம்பி ஏமாறி இன்று தங்கள் வாழ்வையே தொலைத்து நிற்கும் பேரவலத்துக்கும் பிறஇனவெறுப்பின்மை தமிழனின் குருதியில் ஊறிப் போயிருப்பதே காரணம் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

- பேரா. ம.லெ. தங்கப்பா

Pin It