விலங்குகட்கும் மாந்தர்க்கும் வேறுபாடு உண்டு. விலங்குகட்கு அமைந்திருக்கும் வாழ்க்கை இயல்பூக்கத்தை நடுவாகக் கொண்ட வாழ்க்கை. மாந்தர்க்கு அமைந்த வாழ்க்கை பகுத்தறிவை நடுவாகக் கொண்ட வாழ்க்கை. விலங்குகளின் வாழ்க்கை இயற்கையால் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கை. மாந்தரின் வாழ்க்கை மாந்தன் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இயற்கையால் அமைந்த வாழ்வை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ள இயலாது. மாந்தனோ தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக் கொள்கின்றான்.

நல்லது எது, தீயது எது? சரியானது எது, சரியில்லாதது எது என்று தெரிந்து கொள்ளக் கற்றுக் கொடுப்பதே பகுத்தறிவு. பகுத்தறிவைக் கொண்டு தன் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ளும் கடப்பாடு மாந்தனுக்கு உண்டு.

விலங்குகட்குப் பண்பாட்டு வளர்ச்சி இல்லை. மாந்தனுக்கு மட்டுமே பண்பாட்டு வளர்ச்சி உண்டு.

விலங்குகளுள் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்ற வேறுபாடு இல்லை. மாந்தருள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் உளர். இவ்வேறுபாடு பிறவியிலேயே அமைந்ததன்று. அவரவர் செயலைப் பொறுத்தே அமைகின்றது. உயர்ந்த செயல்களைச் செய்வோர் உயர்ந்தோர் என்றும், தாழ்ந்த செயல் செய்வோர் தாழ்ந்தோர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

விலங்கு நினைத்தால் தன்னை உயர்த்திக்கொள்ள இயலாது. ஆனால் மாந்தன் நினைத்தால் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். பண்பாட்டில் உயர உயர மாந்தன் சிறப்படைகின்றான்.

விலங்குகள் தமக்கு அமைந்திருக்கும் முறையில் தங்கள் வாழ்க்கையை வாழ்வதே அவை இவ்வுலகுக்கு அளிக்கும் பங்களிப்பு ஆகும். பங்களிக்கும் விலங்கு என்றும் பங்களிக்கா விலங்கு என்றும் வேறுபாடு இல்லை. ஆனால் மாந்தர் உலகுள் வருவோமாயின் இவ்வேறுபாட்டைக் காணலாம். குமுகாயத்துக்கு எவ்வகைப் பங்களிப்பும் வழங்காமல் பிறரைச் சுரண்டியே வாழ்பவர்கள் ஒருவகை. தன்னலம் பேணாமல் உலக மலர்ச்சிக்குத் தம் பங்களிப்பை வழங்குவோர் ஒருவகை. இவ்வாறு தம் பங்களிப்பை வழங்குபவர்களே உயர்ந்தோர், அவர்களாலேயே இவ்வுலகம் நிலைபெறுகின்றது.

உண்டா லம்ம இவ்வுலகம்

....

....

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

என்பது புறநானூறு.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்

என்பதும்,

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை

என்பதும்,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

என்பதும் வள்ளுவர் கூற்றுகள்.

மாந்தப் பண்புடையராக வாழ்வதே மாந்தர்க்குரிய இயல்பான வாழ்க்கை. மக்கட்பண்பு உடையவராக வாழாமற் போனால் வாழ்க்கை பல தீமைகட்கு ஆளாகி விடுகின்றது. இன்று உலகிற் காணப்படும் எல்லாத் தீமைகட்கும் காரணம் மாந்தர் மாந்தப் பண்பு இல்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பதேயாகும்.

மாந்தப் பண்பை மலர்த்திக் கொள்ளுதல் அல்லது தன்னலமற்ற அன்பு செலுத்துதல் ஒன்றே மாந்தர் வாழ வேண்டிய சரியான வாழ்க்கை ஆகும்.

நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொண்டு வாழ்ந்தாலும், இவற்றைப் பெருக்கிக்கொண்டு செல்வ வளத்தோடு செழிப்பாக வாழ்ந்தாலும், நமக்கு இயல்பாக வாய்த்திருக்கும் பகுத்தறிவை இவ்வாறு செல்வச் செழிப்போடு வாழ்வதற்குப் பயன்படுத்தினாலும், அறிவு வளர்ச்சியால் தொழில்நுட்ப நாகரிகத்தைப் பெருக்கிக்கொண்டாலும், இது மாந்தர்க் குரிய சரியான வாழ்க்கை ஆகாது. ஏனெனில் இந்த வாழ்க்கை தன்னல வாழ்க்கை. இதனால் மாந்தருக்குள் தன்னலப் போட்டிகள், பொறாமை, பூசல்கள், போர்கள் போன்றவை ஏற்பட்டு மாந்தர் வாழ்க்கை அமைதி குலைந்து அல்லல் மிக்கதாகின்றது. வரலாற்றில் இதற்குப் பல்லாயிரம் சான்றுகள் உள.

மாந்தர் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளுதல் சரியான வாழ்க்கை ஆகுமா?

உலகியல் வாழ்க்கையோடும், அதனைச் செழுமைப் படுத்திக் கொள்வதோடும், பலநூறு நுகர்ச்சித் தேவைகளை நிரப்பிக் கொள்வதோடும் நின்று விடாமல், அதற்கு அப்பால் சென்று மாந்தப் பண்போடும், அன்போடும் வாழும் பொழுதுதான் மாந்தர் வாழ்க்கை அழகும் மேன்மையும் உடையதாகின்றது. உலக மலர்ச்சிக்கு அதுவே துணைபுரிகின்றது.

மாந்தப் பண்பைப் பற்றிக் கவலைப்படாமல் உலகியல் வெற்றியோடு நின்று விடுபவர்கள் உலக மலர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை.

உலகியல் நலன்கட்கு அப்பாற்சென்று மாந்தப் பண்போடும், தன்னலமற்ற மாந்த நேயத்தோடும் வாழ்பவர்களே சரியான வாழ்க்கை வாழ்பவர் ஆவர்.

இவ்வுலகில் வாழப் பிறந்த நாம் தீமை தரும் தவறான வாழ்க்கை வாழலாமா? மக்கள் இனத்துக்கு நன்மைதரும் சரியான வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டும். சரியான வாழ்க்கை வாழாதிருப்பதற்கு எந்த அமைவும் கூறமுடியாது. எந்தச் சப்பைக் கட்டும் கட்ட முடியாது.

மீண்டும் மீண்டும் சொல்லித்தான் தீர வேண்டும். வாழ்க்கை உலகியல் அன்று. ஏனெனில் இன்றைய மாந்தர் பலர் உலகியல் வாழ்வை வளமாக வாழ்ந்துகொண்டு, அதில் பெருமைப்பட்டுக்கொண்டு அதையே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் தீய விளைவுகளை உணராதிருக்கின்றனர்.

எங்கே தன்னலம் தலைதூக்குகின்றதோ, அங்கே ஒழுங்கு மீறப்படுகின்றது. மாந்தரிடையே, உராய்வுகள், பூசல்கள், மோதல்கள் நேர்கின்றன. இவை முற்றிப்போய் மாந்தர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாகின்றனர். இது வாழ்க்கை ஆகுமா?

நமக்கு உலகியல் வாழ்க்கை வேண்டும், அது வளமாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலகியல் நலங்களில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு பண்போடும், அன்போடும் மாந்தர்களோடு நல்லுறவோடும் வாழ்வதுபற்றிக் கடுகளவும் கவலைப்படாதிருப்பது சரியான வாழ்க்கை ஆகுமா?

தேவைகளை நிரப்பிக் கொள்வது மட்டுமே வாழ்வாகாது. அன்போடும் அழகோடும் வாழ்வதே வாழ்க்கை. அன்புநிலை களைப் புறக்கணித்து வாழ்க்கை அழகுகளைக் குலைத்துக் கொண்டு உலகியலில் மட்டும் விழிப்புணர்வோடிருப்பது ஒருநாளும் உயர்ந்த உள்ளத்தின் தன்மை ஆகாது. உள்ளம் செம்மாந்த நிலை நோக்கி நடையிடுதல் வேண்டும். சிறியவற்றில் கவனம் செலுத்திப் பெரியவற்றை விட்டுவிடல் கூடாது.

உலகியல் வாழ்க்கை வாழ்பவரும் அன்பைப் பற்றிப் பேசத்தான் செய்கின்றனர். மக்களோடு நல்லுறவு வேண்டும் என்று தான் நினைக்கின்ற வாழ்க்கையில் சில நல்ல செயல்களை மேற்கொள்ளத்தான் செய்கின்றனர்.

ஆனால் இவற்றைச் சற்றே உற்று நோக்கினால், இவை குறிப்பிட்ட சில எல்லைக்குள் உட்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிந்துகொள்ளலாம்.

முதன்மைக்குரியது எப்பொழுதும் முதன்மையாகவே இருக்க வேண்டும். முதன்மையல்லாதவற்றுக்கு முதன்மை கொடுத்தும், முதன்மையானவற்றைப் பின்னால் தள்ளியும் விடுவோமானால் அது சிறப்பாகாது. மாந்தர் வாழ்வில் மாந்தப் பண்பிற்குத்தான் முதலிடம். மற்றவையெல்லாம் அதன் பின்புதான்.

கொடுத்தல் என்பது உயர்ந்ததே; ஆனால் பயனை எதிர்பார்த்துக் கொடுத்தல் உயர்ந்ததாகாது. பிறர்க்கு உதவு தல் பாராட்டத்தக்கதே. ஆனால் ஓர் உள்நோக்கத்தோடு அது மேற்கொள்ளப்படுமானால் அது பாராட்டுக்குரியதாகுமா?

அறம் செய்தல், தொண்டு புரிதல் சிறப்பானவை தாம். ஆனால் தனக்குப் பெருமை வேண்டும்; தன் புகழ் யாவராலும் பேசப்படவேண்டுமென்று அவற்றைச் செய்வது சிறப்பாகுமா?

மாந்தரிடையே நல்லுறவு என்பதும் எந்த வரம்புக்கும் உட்படாதிருப்பதே. தனக்குப் பயன்படுபவர்கள், தன்னோடு இணக்கமாக நடந்துகொள்பவர்கள், தன்புகழ் பாடுபவர்கள் ஆகியோர்களோடு மட்டுமே நல்லுறவு பாராட்டி, மற்றையோரிடத்தில் நல்லுறவு கொள்ளாமை சரியான செயல் ஆகுமா?

உண்மையான வாழ்க்கை உள்ளத்தின் நல்லியல்புகள் சார்ந்தது. உலகியல் அதன் கடைக்கால். கடைக்கால் மட்டுமே கட்டடம் ஆகுமோ?

எது சரியானது? எது உயர்ந்தது? எது அழகியது என்பதை எண்ணிப் பார்த்து அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். எந்த அறிவு நிலைக்கும் இடம் கொடாமல், எது வாழ்க்கை என்பதை விளங்கிக் கொள்ளாமல், தேவைகளை நிரப்பிக்கொள்வதை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டோமானால் நாம் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கின்றோம் என்பதே பொருள்.

விலங்குகட்குப் புற வாழ்க்கை மட்டுமே உண்டு. அகவாழ்க்கை இல்லை. மாந்தர்க்கோ அகவாழ்க்கையே வாழ்க்கை. புறவாழ்க்கை அதற்குத் துணை செய்வதே. இதைத் தெளிந்துகொள்ளாமல், அகவாழ்க்கையை முற்றும் புறக்கணித்துப் புறவாழ்க்கையில் மட்டுமே ஈடுபடுவோ மானால் நமக்கும் விலங்குகட்கும் என்ன வேறுபாடு?

நாம் உண்ணும் உணவைத் தேர்ந்தெடுப்பதில் விலங்குகளை விட உயர்வாக இருக்கின்றோம். விலங்குகளைப் போல் வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் நம் அறிவைப் பயன்படுத்தி எது உயர்ந்த உணவு என்று தேர்ந்தெடுத்து அறுசுவையோடு அதனைச் சமைத்து உண்கின்றோம். அதில் பெருமையும் அடைகின்றோம்.

வேறுபாடு பளிச்சென்று தெரிய ஓர் எடுத்துக் காட்டைக் காணலாம். பன்றி வயிற்றை நிரப்ப மாந்தக் கழிவை உண்கின்றது. ஆனால் நாம் அதை உண்பதில்லை; அருவருக்கின்றோம். நமக்கெது நல்லது, சுவையானது, உயர்ந்தது என்று தேர்ந்தெடுத்து உண்கின்றோம்.

உணவிற் காட்டும் இப்பகுத்தறிவுத் தன்மையை வாழ்கின்ற வாழ்க்கையிலும் ஏன் காட்டுதல் கூடாது? உணவைப் பொறுத்தவரை தாழ்ந்ததை விட்டு உயர்ந்ததைத் தேடிச் செல்லுதல் போல, வாழ்க்கையைப் பொறுத்தும், தாழ்ந்த வாழ்க்கையை விட்டு உயர்ந்த வாழ்வைத் தேடிச் செல்லுதல் வேண்டும். அதுவே பகுத்தறிவு. வயிற்றை நிரப்பிக் கொள்ளுவதை மட்டுமே வாழ்வாகக் கொண்ட விலங்கு களைத் தாழ்ந்தவை என்கின்றோம். அப்படியே நாமும் வயிற்றை - அதோடு பைகளை - நிரப்பிக் கொள்வதே வாழ்வாகக் கொள்வோமானால் நாம் எப்படி உயர்ந்தவர் ஆவோம்?

உயர்சுவை பற்றிக் கவலைப்படாமல் கீழ்நிலையிலிருக்கும் ஒரு பன்றியைப் போல் மாந்தப் பண்போடு கூடிய உயர்ந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், வெறும் வருவாயைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு, எதை எப்படிச் செய்தால் ஊதியம் கிடைக்கும், எந்த வங்கியில் வட்டி மிகுதி, எந்தத் திட்டத்தில் பணம் இரட்டிப்பாகும் என்பவை பற்றி மட்டுமே கவலைப்பட்டு, அதிலேயே முழுநேரமும் மூழ்கி ஒரு சிறு நிலையிலும் கூட மாந்தப் பண்போடு நடந்து கொள்ளாதவர் களை மாந்தருட் பன்றிகள் என்று ஏன் கூறுதல் கூடாது?

Pin It