தமிழன் தமிழனாய் வாழ்தல் வேண்டும். தமிழன் தமிழனாய் வாழ்ந்தால் மட்டும் போதாது. அவன் மாந்தனாகவும் வாழ்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தலே இயல்பு நிலை.

மாந்தனாய் வாழ்தல் என்றால் மாந்தனுக்குரிய எல்லா நல்லியல்புகளும் வாய்க்கப் பெற்று வாழ்தல் என்பதே பொருள். மாந்த உருவத்தோடு வாழ்தல் மட்டும் மாந்தனாய் வாழ்தல் ஆகாது.

இயல்பு நிலையில் வாழப்படுவதே வாழ்க்கை. இயல்பு நிலையும் ஒழுங்கு நிலையும் ஒன்றே. நாம் வாழும் இப்புவி இயற்கைத் தோற்றம். இயற்கையின் ஒழுங்கே புடவியியக்கத்தின் ஒழுங்கு.

தமிழன் தமிழனாய் வாழ்தலும் மாந்தனாய் வாழ்தலும் இயல்பு நிலையில் ஒன்றே. இயல் புதிரிந்த நிலையில்தான் இதிற் பிறழ்ச்சி ஏற்படுகின்றது.

ஒரு பூங்காவில், பொழிலில் எத்தனையோ மலர்கள் மலர்கின்றன. மலருக்குரிய முழு மலர்ச்சியை அவை எய்துகின்றன. ஆயினும் மலர் என்று ஒன்று தனியாக இல்லை. மலராக முழுமலர்ச்சி பெறும் அதுவே தாமரையாகவும், அல்லியாகவும் முல்லையாகவும், செருந்தியாகவும், காந்தளாகவும் பல்வேறு தனித் தன்மை உடையதாகவும் விளங்குகின்றது. தாமரை தாமரையாக இருக்கும் பொழுதே மலராகவும் இருக்கின்றது. தாமரை தாமரை என்ற அளவில் முழு மலர்ச்சி எய்துவதே அது மலர் என்ற அளவில் முழுமலர்ச்சி எய்துவதும் ஆகும். இயற்கையின் ஒழுங்கு இதுவே.

இயற்கையோடு இயைந்த நிலையில் வாழ வேண்டியவன் மாந்தன். அவனது முழுமலர்ச்சி இயற்கையோடியைந்தது. இயற்கை ஒழுங்கின் கூறு. மாந்தன் பல்வேறு நிலைகளில் தன்னைச் செயற்கைப் படுத்திக் கொண்டமையால், வாழ்வியல் அறியாமையால் அவனுக்குள் ஏற்பட்ட தன்முனைப்பால் அவன் இயல்பு திரிந்து, ஒழுங்கு குலைந்து வாழ்கின்றான்.

இயல்பு திரிந்த நிலை – ஒழுங்கற்ற நிலை ஒரு நாளும் வாழ்தல் ஆகாது. ஒழுங்கற்ற நிலையில் வாழ்தல் இன்று பெரும்பான்மை மாந்தரின் செயலாக இருக்கின்றது. உலகின் அவலங்கள் அல்லல்கள் யாவுக்கும் இவ்வொழுங்கின்மையே காரணம்.

மாந்தன் தனக்குரிய முழுமலர்ச்சியும் எய்தி வாழ்ந்து இம்மண்ணுலக வாழ்வை அழகு படுத்த வேண்டுமென்றால் இயல்பு திரிந்த நிலையிலிருந்து அவன் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தே தீரல் வேண்டும்.

இயல்பு திரிந்த நிலையிலிருந்து மாந்தனை இயல்பு நிலைக்குக் கொண்டுவரப் பாடுபடுதலே என் வாழ்க்கைப் பணியாக இருக்கின்றது. இயல்பு திரிந்த தமிழனை இயல்பு நிலைக்குத் கொண்டு வருதல் என் வாழ்க்கைப் பணியின் ஒரு கூறாக இருக்கின்றது.

தாமரை என்பது மலர்களுள் ஓர் இனம். தன் இனத்தன்மையோடு அது முழு மலர்ச்சி எய்துகின்றது. தமிழன் என்பவன் மாந்தருள் ஓர் இனம். எப்படி ஒரு மலர் (தாமரை) அல்லது அல்லி, அல்லது வேறெதேனும் ஒன்று) தன் இனத்தன்மையோடு மலர்த்தன்மையும் இயைந்த மலர்ச்சியை எய்துகின்றதோ அப்படியே தமிழனும் தமிழன் என்ற தன் இனத் தன்மையோடும் மாந்தன் என்ற பொதுத் தன்மையோடும் முழு மலர்ச்சி எய்தல் வேண்டும்.

ஆதலின் மாந்தனை மாந்தனாக வாழச் செய்யும் வாழ்வியற்பணியோடு, தமிழனைத் தமிழனாக வாழச் செய்யும் இன மொழி எழுச்சிப் பணியினையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இவ்விரு பணிகட்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை.

தமிழன் தமிழனுக்குரிய எல்லா நல்லியல்புகளையும் பெறுவானானால் அதன் வழி நின்றே மாந்தனுக்குரிய எல்லா நல்லியல்புகளையும் பெற முடியும். தாமரை தாமரையாக மலரும் பொழுதே மலராகவும் மலர்கின்றதன்றோ? அது போன்றதே இது.

தாமரை தன் இனப் பண்புகள் எல்லாம் வாய்க்கப் பெற்றுத் தாமரையாக மலரும் அதே பொழுதில் எப்படித் தன் மலர்ப்பண்பு குன்றுவதில்லையோ அப்படியே தமிழன் தன் இனப் பண்புகள் எல்லாம் மலரப்பெற்று முழு மலர்ச்சி எய்தும் நிலையில் மாந்தனாகவும் முழுமலர்ச்சி எய்த வியலும். இதுவே இயல்பு நிலை. மீண்டும் சொல்கிறேன், தமிழன் தன் இன, மொழியளவில் முழு மலர்ச்சி பெற்றுச் சீரிய தமிழனாகத் திகழ்கையில் அவன் சிறந்த மாந்தனாகவும் திகழ்வான், திகழமுடியும்.

இன்றுள்ள இயல்பு திரிந்த நிலையில் தமிழன் தன் இனப் பண்பு கெட்டு மொழியுணர்விழந்து இழிந்த நிலையில் இருந்து வருகின்றான். அவனை நீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால் தமிழன்பால் கட்டாயம் இன எழுச்சியை உண்டாக்கியே தீர வேண்டும். மொழி உணர்வைப் பெருக்கியே தீர வேண்டும்.

ஆதலின் இன்றைய தமிழுரிமைப் போராட்டம் இயல்பு நிலைப் போராட்டம். அது நூற்றுக் நூறு சரியானது. ஆதலின் போலித் தனமாக உலகளாவிய மலர்ச்சி என்றும் இந்திய ஒருமைபாடு என்றும் பேசிக் கொண்டு தமிழனின் இன மொழி உணர்வினைக் குலைக்கவும் ஒழித்துக்கட்டவும் நினைப்பவர்கள் தமிழ்ப்பகைவர்கள் மட்டுமல்லர், மாந்த இனத்துக்கே எதிரிகள் ஆவர்.

தமிழனின் இன, மொழி மலர்ச்சிக்கு இடம் தராத ஏன் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்பதோடு அதனை அழித்தொழிக்கவும் படைதூக்கி நிற்கும் இந்திய ஒருமைப்பாடு போலி ஒருமைப்பாடு. உலகளாவிய வேலைவாய்ப்பு, உலகளாவிய முன்னேற்றம் என்று போலித் தனமான, பொய்யான கொள்கைகளைக் காட்டித் தமிழனின் இனமொழி உணர்வை அழித் தொழித்து அவனை ஒன்றுமில்லாமற் செய்து விடுவதற்காகவே கடந்த காலத்திலும் இன்றுமாகத் தமிழகத்தில் ஆண்டு வந்த, ஆண்டு வரும் கடுகளவும் தமிழன் நலம் கருதாத, முழுக்க முழுக்க, நூற்றுக்கு நூறு தன்னலம் கருதும் ஆட்சியாளர் தமிழை அதற்கு உரிய இடத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலத்தையே பயிற்றுமொழியாக மிக அதிகார வலுவுடன் திணித்து வருவது மிகப் பெருந்தீமை. தமிழனுக்கு இழைக்கப்படும் மிகப்பெருங்கொடுமை.

தமிழர்களே, தமிழனத் தலைவர்களே, நாம் அனைவரும் ஒன்றுபட்டுத் திரண்டெழுந்து ஆங்கிலப் பயிற்றுமொழித் தீமையை ஒழித்துத் தமிழகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி என்ற நிலையைச் சட்டப்படி உருவாக்கியே தீர வேண்டும். இல்லையென்றால் நாம் இனப் பண்பிழந்து, சொந்த மொழியைப் பறிகொடுத்து, மாந்தத் தன்மையும் இழந்து மிக இழிந்த மாந்தராய்ப் பிற வினங்களின் அடிமைகளாய்க் கிடந்து அவலம் உறுவது உறுதி: உறுதி.

(நன்றி: “முதன்மொழி” – ஏப்ரல் –மே 2014)

Pin It