குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்

ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவுமுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும். அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் சக்திக்கும் தகுதிக்கும் போதுமான அளவே குழந்தைகளைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், சக்திக்கும், அளவுக்கும் மீறி பெற்றோர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற்குள்ளாவதுடன், குழந்தைகளும் பலவீனர்களாகவும், சௌகரிய மற்றவர்களுமாகி, அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள்.

periyarr 450உதாரணமாக. நமது நாட்டையே எடுத்துக் கொள்ளுவோமேயானால், நாளுக்கு நாள் ஜனங்களின் எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மையோர்கள் தொழிலில்லாமல், வாழ்வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவைகளை காப்பாற்றவும், படிப்பிக்கவும் சத்தியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும், பார்த்தும் வருவதுமான சம்பவங்களாகும். சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பங்களுக்கும், அதிகமான பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை, நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம். முதலாவது, பிள்ளைகளை அதிகமாக பெறப் பெற, பெற்றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்து கொண்டு வருகின்றன. அதுபோலவேதான், ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களை உடையதாக ஆகிவிட்டால் அது சதா காலமும் பஞ்சத்தினாலும், நோயினாலும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதோடு, அது தன் அழகையும், முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையும் இழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.

இந்த உண்மையை அறியாமலே இதுவரை அனேக சமூக சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும், பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமூகத்தின் முற்போக்கிற்கும், பொருளாதார முற்போக்கிற்கும், வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக, ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டு மக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதாகாலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமைப்பட வேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள்.

ஆனாலும், சமீப காலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து, இவ்வித கொடுமையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று, ஜன சமூகத்தைப் அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதேயாகும்.

ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல்நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக்காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, இத் துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அன்றியும், இந்த தத்துவத்தை அநேக அறிஞர்கள், தங்கள் வாழ்க்கைகளில் அமுலுக்குக் கொண்டு வந்து கொண்டும் இருக்கின்றார்கள். அதாவது மேல் நாட்டார்களில் படித்தவர்கள் என்று சொல்லப்படும் கூட்டத்தார்களிலேயே, அநேகர் கர்ப்பம் தரிக்காமல் இருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள். இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து, பொது ஜனங்களுக்கு அறிவித்து, சில சாதனங்களை வினியோகித்தும் வருகின்றார்கள். ஆனால், சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள்.

உண்மையிலேயே, இம் மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் - கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள். ஆனால், இவர்களோ இம் மாதிரியான, அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரீக விரோதமான பேச்சென்று கருதுகிறார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும், மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும், இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென்றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும் பேசி, இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும், பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக்கின்றது என்று அறியக்கூட சௌகரியமில்லாமல் போய் விட்டது. ஆனால், மேல் நாட்டில், டாக்டர் மாரீஸ் டோப்ஸ் என்கின்ற ஒரு ஆங்கிலப் பெண் ஒருவர், தைரியமாக முன்வந்து எவ்வித பழிப்புக்கும், எதிர்பிரசாரத்திற்கும் அஞ்சாமல், இவ்விஷயத்தை, கர்ப்பத் தடையை, பிரசாரம் செய்யத் துணிந்ததின் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய்ப் பேசிக் கொள்ளப்படும்படியாக ஆகிவிட்டது. அதுமாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப்பேற்றை தடுக்கும்படியான வசதிகள் சம்மந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப் பட்டும் இருக்கின்றன. கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர்களுக்கு அம் மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன், அதற்கு வேண்டிய சாதனங்களையும், கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள். மருந்து வியாபாரக்கடை முதலியவைகளில், கர்ப்பத்தடைக்கு அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள்.

இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமூகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால் இதை சட்ட விரோதமென்றும் யாரும் சொல்லத் துணியவில்லை. இது எவ்விதத்திலும் சட்ட விரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும். ஏனெ னில், சட்ட விரோதமான காரியமென்பதெல்லாம் அன்னியனுக்கும், தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்க கூடிய காரியங்களைத் தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ, அதிருப்தியோ ஏற்படுவதற்கில்லை.

அன்றியும், இந்த கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல. அதற்கு இந்த முறைகள் பயன்படவுமாட்டாது. அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கரைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்குமே ஆபத்தை விளைவிக்க கூடியதாயிருப்பதால் கண்டிப்பாக அந்த முறையை யாரும் கையாளக் கூடாது என்பதே நமதபிப்பிராயம்.

கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும். தேசப் பொது நன்மையையும், சமூக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.

பெண்ணானவள் திட சரீரியாயில்லாமலும், காயாலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்திய சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளை பெறுவதென்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.

உதாரணமாக, க்ஷயரோகத்தாலும் நீரழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும் பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும், கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும்.

தொத்து வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும்.

பிரசவத்தினால் சரீர மெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவ சரீரமுடையவர்கள், மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாகப் பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும், முதலில் கர்ப்பமாகி பிள்ளைப் பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தைக்கு சௌகரியமில்லாமல் போவதோடு மறு குழந்தையைப் பெறுவதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.

பெண்ணும் ஆணும் தகுந்த வயது அடைவதற்குமுன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக்கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்த குழந்தைகள் மிக்க இளமைப் பருவத்தின் காய்ப்பாகி உறுதியற்ற சரீரக் கட்டுடையதாகி விடும். குடும்பத்திற்கு போதிய வரும்படி இல்லாத நிலையில், பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் குடும்பத்திற்கு தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி விடும்.

அன்றியும், ஆண், பெண் ருது சாந்தியானவுடன் பெண் கர்ப்பமாகி விட்டால், கொஞ்ச காலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கலவி இன்பம் அடைவதற்கு சாவகாசமில்லாமல் போய் விடும்.

இவ்வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாயிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கின்றது. என்னவெனில், பெண்களுக்கு கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணைச் சேர்ந்ததாயிருக்கின்றதே தவிர, மற்றபடி, கருப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும், பிள்ளை பெறும்போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும் பெண்களே அடைகின்றார்கள். பிள்ளையைப் பெற்ற பின்பும், தாயானவள் தான் தனது இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.

குழந்தைக்கு வரும் வியாதிகளுக்கும் தானே பத்தியமிருக்க வேண்டியவளாகிறார். அதைச் சுமந்து, போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.

பெண்ணானவள் ஒன்று, இரண்டு பிள்ளைகளை பெற்றவுடனேயே சகலவித சுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகி விட வேண்டியவளாகிறாள்.

குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு, புருஷனுக்கும், குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டியவளாகிறாள். புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண்ஜாதி ஒரு புருஷனைத் தவிர வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாயிருக்கின்றது. பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்குச் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிட நேரிடுகின்றது. சிறிதளவாவது சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இதுவரை கூறி வந்தவைகளாலும், பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.

ஆகவே, இந்த தலையங்கத்தில் கர்ப்பத்தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம். இனி அடுத்த வியாசத்தில் அதன் உபாயங்கள் என்ன என்பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப்பிராயத்தை எடுத்து விளக்க எண்ணியுள்ளோம்.

(குடி அரசு - கட்டுரை - 01.03.1931)

Pin It