நடுநிலையோடு வாழ்கின்ற வாழ்க்கையே நல்ல வாழ்க்கையாகும். அதுவே வன்முறை இல்லாத வாழ்க்கையுமாகும். நடு என்பதற்கு மையம் என்பது பொருளாக இருந்தாலும் நிலைபெறுதல் என்பதே சரியான பொருளாக அமைந்திலங்குகின்றது. நடுநிலைமை என்பது நாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொதுவான மனிதப் பண்பாக விளங்குகின்றது. விளையாட்டு, பட்டிமண்டபம், சுழலும் சொற்போர், நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் நடுவர்கள் உள்ளனர். இவர்கள் யாரையும் சாராமல் நடுநிலையுடன் இருந்து தங்களது பணிகளைச் செவ்வனே செய்கின்றனர்.

valluvar 229இவர்கள் நடுநிலையின்றி இருந்தால் தகுதியற்றவர்கள் என்றே கருதப்படுவர். நீதியரசர்கள் நடுநிலையுடன் இருந்து தீர்ப்பினை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் நாட்டில் குழப்பங்களும் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்து நாடு காடாக மாறிவிடும். மக்களாட்சியின் சிறப்பில் நீதி மன்றங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

இந்நடுவு நிலையை மனிதர்களின் அடிப்படைத் தகுதியாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நடுவுநிலையுடன் இருப்பவர்கள் எல்லாக் காலங்களிலும் போற்றப்படுகின்றார்கள். நடுநிலை தவறி நடப்பவர்கள் தூற்றப்படுகின்றார்கள்.

நாட்டை ஆள்கின்றவர்களுக்கும் இந்த நடுநிலை என்பது மிகப்பெரிய தகுதியாகும். வேண்டியவர், வேண்டாதவர், உறவினர், உறவில்லாதவர், நண்பர், பகைவர் என்று பேதம் பாராமல், பணம், பொருள், பதவி உள்ளிட்டவற்றிற்கு மயங்காது நடுநிலையோடு நாடாளும் மன்னர்களும், நீதியை நிலைநாட்டுவோரும் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோடும்.

மகாபாரதப் போர் தொடங்கியது. தருமனின் தலைமையில் ஓரணி. துரியோதனனின் தலைமையில் ஓரணி. இரண்டு அணிகளிலும் மன்னர்கள் விரும்பியதில் இணைந்து கொண்டு போரிடுவதற்குத் தயாரானார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சேரமன்னன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற மன்னன் எப்பக்கமும் சாராமல் இருதிறத்துப் படைவீரர்களுக்கும் உணவளித்தான். நடுநிலையோடு நின்றான். சேரமன்னனின் நடுவுநிலைப் பண்பு இன்றைய உலகிற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது.

நாட்டில் ஏற்படும் பல்வேறுவிதமான பிரச்சனைகளுக்கும் காரணம் நடுவுநிலைப் பண்பு குறைந்ததே ஆகும். நடுவுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டியவர்கள் ஒருபக்கம் சார்ந்து நடந்து கொள்வதால் நாட்டில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன.

காட்டிலே இரண்டு பூனைகள் இருந்தன. அவை எப்போதும் ஒன்று சேர்ந்து வேட்டையாடி அதனைப் பகிர்ந்து உண்டு வாழ்ந்து வந்தன. காட்டிலே உணவுக்காகத் தேடித் தேடிப் பார்த்தன. இரண்டு மூன்று நாள்களாக ஒன்றுமே கண்ணில் படவேயில்லை. இரு பூனைகளும் மூன்று நாள்கள் பட்டினியாகக் கிடந்தன.

சரி காட்டுக்குள் இருந்தால் நமக்கு உணவு கிடைக்காது. காட்டின் அருகில் இருக்கும் நகருக்குள் சென்று மனிதர்கள் வசிக்கக் கூடிய வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா என்று பார்த்து வருவோம் என்று இரண்டும் கிளம்பின.

காட்டோரமாக நகரத்திற்குள் உள்ளே நுழையும் இடத்தில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டைப் பார்த்ததும் அந்த இரண்டு பூனைகளுக்கும் நிச்சயம் இந்த வீட்டில் நமக்கு ஏதேனும் உணவு கிடைக்கும் என்று நினைத்து அந்த வீட்டின் சமையலறைக்குள் மெதுவாக நடந்து சென்றன.

முதலில் சென்ற பூனையின் கண்களில் ஒரு பெரிய ரொட்டி கீழே கிடப்பது தெரிந்தது. ரொட்டி கீழே கிடப்பதை அடுத்து வந்த பூனையிடம் முதல் பூனை சொன்னது. அதைக் கேட்ட இரண்டாவது பூனை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்த ரொட்டியைக் கவ்வியது. இரண்டுக்கும் பசி மயக்கத்தில் நட்பு மறைந்து போய் சண்டை மூண்டது.

முதல் பூனை, "நான்தான் முதலில் ரொட்டியைப் பார்த்து உன்னிடம் சொன்னேன். அதனால் எனக்குத்தான் இந்த ரொட்டி சொந்தம். ரொட்டியை என்னிடம் கொடுத்துவிடு" என்று சொன்னது.

அதனைக் கேட்ட இரண்டாவது பூனை, "அது சரி. நீ வேண்டுமானால் பார்த்து என்னிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் அதை எடுத்தது யார்? நான்தானே எடுத்தேன். அதனால் ரொட்டி முழுவதும் எனக்குத்தான் சொந்தம். உனக்குத் தரமுடியாது" என்றது.

இதனைக் கேட்ட முதலாவது பூனை, "நான் உன் நண்பனல்லவா? இந்த ரொட்டிக்காக அதனை மறக்கலாமா? தயவு செய்து அந்த ரொட்டியை என்னிடம் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னோடு நான் சண்டையிட வேண்டியிருக்கும்" என்றது.

அதற்கு இரண்டாவது பூனை, "நமக்குள் ஏன் வீண் சண்டை. நம்முடைய வழக்கை காட்டில் இருக்கும் யாராவது ஒரு பெரியவரிடத்தில் சென்று கூறுவோம். அவர் என்ன முடிவு சொல்கிறாரோ அதன்படி செய்வோம். இல்லை இருவருக்கும் சமமாக ரொட்டியைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்றால் அவரிடமே பங்கிட்டுத் தரச் சொல்வோம். வா" என்று கூறிக் கொண்டே காட்டிற்குள் ஓடியது.

இரண்டாவது பூனை சொன்னதை ஏற்றுக் கொண்ட முதலாவது பூனை அதனைப் பின்தொடர்ந்தது. காட்டிற்குள் எங்கு தேடியும் யாரையும் காணோம். அப்போது ஒரு மரத்தடியில் ஒரு பெரிய குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. அதனிடம் சென்று நமது வழக்கினைக் கூறுவோம் என்று முடிவு செய்து கொண்டு குரங்கிடம் சென்று இரண்டு பூனைகளும் நடந்தவற்றைக் கூறின.

குரங்கு முதலாவது பூனையைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டது. அதற்கு முதலாவது பூனை நான் தான் முதலில் ரொட்டியைப் பார்த்து அவனிடம் கூறினேன். அததனால் ரொட்டி எனக்குத்தான். ஆனால் அவனோ எனக்குத்தான் என்று கூறுகிறான். நீங்கள்தான் நியாயம் வழங்க வேண்டும் என்று கூறியது.

இரண்டாவது பூனையிடம் நீ உண்மையைச் சொல் என்று குரங்கு கூறியவுடன் அந்தப் பூனை, "அது பார்த்துக் கூறினாலும் எடுத்தது நான்தான். அதனால் ரொட்டி எனக்குத்தான் சொந்தம். நான் எவ்வாறு அதற்கு ரொட்டியைக் கொடுப்பது. நீங்கள்தான் எனக்கு நியாயம் கூற வேண்டும் என்று கூறியது.

இரண்டு பூனைகளும் கூறியதைக் கேட்ட அந்தப் பெரிய குரங்கு, "அடடா நீங்கள் ரெண்டு பேரும் கூறியதைப் பார்த்தால் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கின்றது. நியாயப்படி பார்த்தால் ரொட்டி உங்கள் இரண்டு பேருக்கும் சொந்தமானதுதான். சரிசமமாக நீங்கள் இந்த ரொட்டியைப் பகிர்ந்து உண்ணுங்கள்" என்று தீர்ப்பு வழங்கியது.

அதனைக் கேட்ட இரண்டு பூனைகளும், "ஐயா நாங்கள் பங்கிட்டால் சரியாக இருக்காது. அதனால் பெரியவராகிய நீங்களே இதனை எங்களுக்குப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கூறி ரொட்டியைக் குரங்கிடம் கொடுத்தன.

ரொட்டியை வாங்கிய குரங்கிற்கு வாயில் எச்சில் ஊறியது. அடடா நமக்கு இன்று நல்ல வேட்டை. நம் பசிக்கு நல்ல விருந்து கிடைத்திருக்கிறது. இதனை நழுவ விடக் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "சரி சரி நானே பங்கிட்டுத் தருகிறேன்" என்று கூறி ரொட்டியை வாங்கிக் கொண்டு சரிபாதியாக பிரித்தது.

பிரித்துவிட்டு இரண்டு துண்டுகளையும் உற்றுப் பார்த்து, "அடடா இந்தத் துண்டு அதை விடச் சற்றுப் பெரியதாக இருக்கிறதே? என்று கூறி அதிலிருந்து சிறிது எடுத்து உண்டது.

அவ்வாறு உண்டவுடன் குரங்கின் கையிலிருந்த மற்றொரு துண்டு பெரியதாக இருந்தது. அதைப் பார்த்தவுடன். "அடடா இந்தத் துண்டு பெரியதாக இருக்கிறதே. இவ்வாறு இருப்பது சரியாக இருக்காதே. இருங்கள் இரண்டு பேருக்கும் சரிபாதியாகத் தருகிறேன்" என்று கூறி அதிலிருந்து கொஞ்சம் ரொட்டியைத் தின்றது. இவ்வாறே மாறி மாறிக் கூறி ரொட்டி முழுவதையும் தின்று விட்டது.

அதனைப் பார்த்த இரண்டு பூனைகளும் ஐயையோ நாம் யாரைப் பெரிய மனிதன் என்று நினைத்திருந்தோமோ அவன் சரியான அயோக்கியனாக அல்லவா இருக்கின்றான். இதற்கு நாம் இருவருமே இந்த ரொட்டியைப் பகிர்ந்து உண்டிருக்கலாமே. அதைவிட்டுவிட்டு ஒரு கழிசடையிடம் கொடுத்துப் பகிர்ந்து கொடுக்கக் கூறி இருப்பதையும் இழந்து விட்டோமே? விட்டுக்கொடுக்காத நம்முடைய செயலால் எத்தகைய விபரீதம் நிகழ்ந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஆளைப் பார்த்து இவன் தகுதியானவன், நல்லவன் என்று எடை போடுவதும் தவறு என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். நம்முடைய புத்தி சரியில்லை. கையில இருந்ததைப் பயன்படுத்தத் தெரியாம பயன்படுத்தி இப்ப எதுவுமே கிடைக்காம வெறுங்கையோட நிர்க்கதியா நிக்க வேண்டிய நிலை வந்துருச்சேன்னு" புலம்பிக்கிட்டே போனதுங்க.

இது கதைதான். ஆனால் இதில் அளப்பரிய வாழ்வியல் அறம் ஒன்று உள்ளது. ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பது ஆளின் தோற்றத்தை வைத்து முடிவு செய்துவிடுதல் கூடாது. அவனது நடுவுநிலைப் பண்பை வைத்தே முடிவு செய்தல் வேண்டும். இக்கதையில் வரும் நிகழ்வைப் போன்றே சிலர் நடந்து கொள்கின்றனர்.

நடுவுநிலைப் பண்பில்லாத மனிதர்களைத்தான் தகுதியில்லாத மனிதர்கள் என்று வள்ளுவர் அடையாளங் காட்டுகின்றார். அதாவது தகவிலா மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் நேர்மையானவரா, நேர்மையற்றவரா என்பது அவருக்குப் பின்னர் இவ்வுலகில் நிலைத்திருக்கும் புகழைக் கொண்டோ, பழியைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும். இத்தகைய தகவிலா மனிதர்களைப் பற்றி,

"தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்"(கு.எ., 114)

என்ற குறட்பாவில் வள்ளுவர் தெளிவுறுத்துகிறார். இதற்கு உரையெழுதும் மணக்குடவர், "செவ்வை உடையவார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத் தொழிலினானே காணப்படும். இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாம் என்பது விளங்குகின்றது" என்று உரை வகுக்கின்றார்.

இதனையொத்தே தேவநேயப் பாவாணரும் உரைவரைகின்றார். அவரவர் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப அவர்களுக்கு நல்ல குழந்தைகள் பிறப்பர். நல்லவர்களுக்கு நல்ல குழந்தைகளும், தீயவர்களுக்கு தீயவர்களும் குழந்தைகளாகப் பிறப்பர். இன்றும் வழக்கில், "நான் என்ன பாவம் செஞ்சனோன்னு தெரியல. எனக்கு இப்படி ஒருத்தன் மகனா வந்து பொறந்துருக்கான்" என்று மக்கள் புலம்புவதைப் பார்க்கலாம்.

நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதுவே நமக்குத் திரும்பி வருகின்றது. அது நம்மை மட்டும் பாதிக்காமல் நமது எச்சங்களாகிய சந்ததிகளையும் பாதிக்கும். இதனை, "இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம் அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாதலின் இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது"(திருக்குறள், பரி.உரை, ப., 53) என்று பரிமேலழகர் உரை வரைகின்றார்.

நடுவுநிலை என்பது மனிதர்களுக்கு உரிய அடிப்டையான தகுதியாகும். யாரும் அத்தகுதியிலிருந்து தவறுதல் கூடாது. அவ்வாறு தவறி நடந்தால் அவர் மட்டுமின்றி அவரது சந்ததியினரும் இறைத் தண்டனையிலிருந்து மீள முடியாது என்ற அறத்தை வள்ளுவர் இதன் மூலம் தெளிவுறுத்துகின்றார். மக்களைப் பாதுகாக்கின்ற, மக்கள் பணியில் ஈடுபடுவோர் யாராகினும் நடுநிலையாளர்களாக நீதி தவறாமல் நேர்மையுடன் நடத்தல் வேண்டும்.

பணம், புகழ், பதவி, பட்டம் உள்ளிட்டவற்றிற்கு ஆசைப்பட்டு நடுநிலை தவறி நடப்பவர்களை இவ்வுலகம் ஏற்றுக் கொள்ளாது. அத்தகையவர்களை அடையாளங்கண்டு அவர்களை விலக்கி தக்கவர்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் மக்கட் பணியை ஒப்படைக்க வேண்டும். அப்போது நாடும் வீடும் முன்னேற்றமடையும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். அதனால் தகவிலாராகிய நடுவுநிலை தவறி நடக்கும் மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களை ஒதுக்கி விட்டு தக்காரைப் போற்றி வாழ்வோம். வாழ்வு வளமுறும்.

(தொடரும்…)

- முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை

Pin It