பள்ளிவாசல் இஸ்லாமிய சகோதரார்களின் வாழ்வியலில் கலந்தது. பஜார் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பயன்பாட்டு பகுதி. பள்ளிவாசல் பஜார் என்ற ஒரு பெயர் கொண்ட பகுதி அநேகமாக தமிழகத்தில் இந்த ஒரு ஊரில் மட்டுமே இருக்கலாம் என்பது ஒரு கணிப்பு.

நீதிபதி அய்யா அவர்களே, எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜென்மம். ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், அது தவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது? தூக்குக்குப்பிறகு ஆயுள் தண்டனையா ? அல்லது அதற்கு முன்பாகவா?

மேற்கண்ட கேள்விகள் இரு இளைஞர்களின் விடுதலை வேள்வியில் பிறந்தவை.

arumuganeri school1942 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, குலசேகரன்பட்டிணம் கலவர வழக்கில் ஆறுமுகநேரி ஊரைச் சேர்ந்த காசிராஜன், ராஜகோபாலன் ஆகிய இரு இளம் தோழர்களுக்கும் ஆங்கிலேய நீதிபதியால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அத்தோடு மூன்று ஆயுள் தண்டனை (60 ஆண்டுகள்சிறை),14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆங்கிலேய நீதிபதியினால் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் ஆறுமுகநேரி ஊர் அமைந்துள்ளது. இது தற்போது சிறப்புநிலை பேரூராட்சியாக உள்ளது. இதன் பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 27266 என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. 18 வார்டுகள், 117 தெருக்கள், மொத்தம் 7000 வீடுகள் என இப்பேரூராட்சி நிர்வாகப் பகுதி உள்ளது. இங்கே பலரும் வாடகைக்கு குடியிருப்பவர்களாக உள்ளனர். அதன் காரணம் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன் என பள்ளிகளுக்கு இவ்வூரைச் சுற்றிலும் பஞ்சமில்லை. மேலும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று வர ஏதுவாக பேருந்துகள் உள்ளன.

இவ்வூரின் எல்லையில் நாம் காணும் காட்சி மிக விநோதமானது. ரோட்டின் ஒரு பக்கம் உப்பளம். மறுபக்கம் நெல் விவசாயம். உப்பளங்களே இவ்வூரின் அடையாளம் என்றால் அது மிகையல்ல. கடல் மட்டத்திலிருந்து 19 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஆறுமுகநேரி.

தாரங்கதார இரசாயன தொழிற்சாலை இருப்பதால் தொழில் நகரம் என்றும் ஆறுமுகநேரி அடையாளம் காட்டப்படுகிறது.

வாரத்தின் இரண்டு நாட்கள் இவ்வூரில் சந்தையும் நடக்கிறது. இங்கு காய்கறிகளும் மீன்களும் கணிசமான விலையில் கிடைக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த சந்தை போராட்டக்காரர்கள் கூடும் இடமாகவும், அவர்களின் செயல்பாடுகளுக்கு களம் அமைத்த கொடுத்த பெருமையும் பெற்றது.

இவை அத்தனையும் தாண்டி நம்மை வியக்க வைப்பது ஆறுமுகநேரியில் மையப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் பஜார். இப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலே இப்பெயர் வரக் காரணமாக உள்ளது.

ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று காயல்பட்டிணம் வழி. மற்றொன்று அடைக்கலாபுரம் வழி.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இல்லாததால், பல்லாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இப்பேரூராட்சிக்கு பள்ளிவாசல் பஜாரே பேருந்து நிறுத்தமாகவும் செயல்படுகிறது. விடியற்காலை முதலே அரசு வேலைக்குச் செல்வோர் முதல், தினசரி கூலி வேலைக்கு செல்வோர் வரை அனைத்து உழைக்கும் மக்களும் சந்திக்கும் இடம் இப்பள்ளிவாசல் பஜார்.

மளிகைக்கடைகள், பழக்கடைகள், ஜவுளிக்கடைகள், தனியார் மருத்துவமனை, வங்கிகள் என்று எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இடமாக புழங்கி வருகிறது பள்ளிவாசல் பஜார். இங்குள்ள நொறுக்குத்தீனி கடைகளில் மாலை வேளைகளில் வேலைக்கு சென்று திரும்புவோரின் கூட்டம் மொய்க்கும்.

இங்குள்ள காயல்பட்டிணம் - ஆறுமுகநேரி பள்ளி, ஆம் பள்ளியின் பெயரே அதுதான். இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு பலமான அஸ்திவாரமாக அன்றும் இன்றும் அமைந்துள்ளது இப்பள்ளி. சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆறுமுகநேரி மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒரு கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டது. அது ஆறுமுகநேரி கிராமப்பகுதியில் உள்ள 6 வார்டுகளை காயல்பட்டிணம் தென்பாகம் கிராமம் என்ற அரசு கணக்கிலிருந்து பிரித்து, ஆறுமுகநேரி கிராமக் கணக்கின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கை. காயல்பட்டிணம் தென்பாகம் கிராமத்தின் கீழ் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் வருவதாலும், அவசரத் தேவைகளுக்கும் அரசு விஷயங்களுக்கும் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ள நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது என்பதும் இம்மக்களின் பிரச்சனை. எனவே ஏற்கனவே குறைந்த அளவிலேயே மக்கள் வாழும் பகுதிகளே ஆறுமுகநேரி கிராமம் என்ற அளவில் அரசு கணக்கில் வருவதால் மேற்படி 6 வார்டுகளையும் இதனுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் இவ்வூர் மக்கள்.

அத்தியாவசியத் தேவைகளும், அடிப்படை பிரச்சனைகளும்:

               ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இல்லாதது முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுமார் 27000 மக்கள் வாழும் ஒரு பேரூராட்சியில் ஒரே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லாதது மிகப்பெரும் அவல நிலை.

               பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் அருகிலேயே வாரத்தின் சில நாட்களில் நடுத்தெருவில் வைத்து, சாலையின் ஓரத்தில், பன்றிக்கறி விற்பனை என்ற பெயரில் சுகாரதாரமற்ற முறையில் வணிகம் நடைபெறுகிறது. மேலும் இங்குள்ள கோழி மற்றும் ஆட்டு இறைச்சிக்கூடங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல், பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள குப்பை எரிக்கும் பகுதியிலேயே கொட்டுகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி இப்பகுதியை கடந்து செல்கின்றனர். அரசு கால்நடை மருத்துவமனையும் இப்பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

               பேரூராட்சியின் எதிரே அரசு நிர்வாகம் ஆறுமுகநேரிப்பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கழிவுகளை தினமும் எரித்து வருகிறது. முறையாக மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பாமல் அரசு நிர்வாகமே பிளாஸ்டிக்கை எரித்து விட்டு, பிளாஸ்டிக்கை எரிக்காதே கேன்சரை வாங்காதே என்று பிரச்சாரம் செய்வதால் என்ன பயன்? மக்களுக்கு வழிகாட்டிவிட்டு அரசே தவறு செய்வது சமூக நல விரும்பிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுவரி, குப்பை வரி என்று வரிகளை மார்ச் -2019 முதல் 2 மடங்காக உயர்;த்தி விட்ட பேரூராட்சி நிர்வாகம் மக்களின் உடல்நலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதை மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்ப்பதை மக்களுக்கும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்பைக்கழிவுகள் கொட்டப்படும் பகுதி பஜாரிலேயே பள்ளமான பகுதியாகும். நியாயமாக பார்த்தால், அரசு நிர்வாகம் இப்பகுதியை மழை நீர் சேகரிக்கும் பகுதியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் மழைக்காலங்களில் ரோட்டிலும், பஜாரிலும் தேங்கும் மழைநீர் இப்பள்ளத்தை நிரப்ப வழி செய்திருக்கலாம்.

               பிளாஸ்டிக் எரிப்பு, வரி உயர்வு என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சாதனை ஆறுமுகநேரி மக்களுக்கு சோதனையாக உள்ளது.

               தாமிரபரணி கடந்து செல்லும் ஆத்தூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது ஆறுமுகநேரி. அதனால்தான் கிடைக்கும் சிறிதளவு தண்ணீரில் நெல் விவசாயம் இப்பகுதியில் நடந்து வருகிறது. இல்லாவிட்டால் ஊர் முழுமையும் என்றைக்கோ உப்பளமாக மாறியிருக்கும்.

               குடிதண்ணீரும் 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவிலேயே இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பல நாட்களில் குழாய் உடைந்து விட்டது எனக்கூறி நிறுத்தப்படுகிறது. ஆனால் தண்ணீர் வரி மட்டுமே பல மாதங்களுக்கு முன்பே இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.

               சில பத்து வருடங்களுக்கு முன்னால் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்களை கொண்டு செயல்பட்ட தாரங்க தாரா இரசாயன தொழிற்சாலை இன்று சில நூறு ஒப்பந்த தொழிலாளர்களுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தொழிற்சாலையும் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் கடலில் கலந்துவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

               இப்படிப் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளைக் கொண்ட ஆறுமுகநேரியில் பள்ளிவாசல் பஜார் எப்போதுமே அழகுற அமைந்துள்ளது. அந்த அழகு பஜாரின் அமைப்பில் இல்லை. சாலையின் தரத்தில் இல்லை. பள்ளிவாசல் பஜார் தினமும் தன்னை கடந்து செல்லும், ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களையும், பள்ளி செல்லும் குழந்தைகளையும், கல்லூரி மாணவர்களையும் கண்கொட்டாமல் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், அந்த மக்களின் இயக்கம் தான் அழகு. பள்ளிவாசல் பஜார் தான் மௌனமாக இருக்கிறது. ஆனால் மக்களின் மௌனம் கலைந்து சுதந்திர இந்தியாவில், டிஜிட்டல் இந்தியாவில் நம் வாழ்க்கைத்தரம் மேம்படாமல், ஏன் இப்படி நம் வாழ்க்கை எந்த பிடிப்பும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் அன்றாடங்காட்சியாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தால் சமூகம் நலம்பெறும், வளம்பெறும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

   எம்மக்களும் பயணம் செய்ய ஓட்டை உடைசல் இல்லாத நல்ல பேருந்து வேண்டும், எம்மக்களின் சுகாதாரம் மேம்பட பிளாஸ்டிக் எரிக்கப்படாமல் மறு சுழற்சி செய்யப்பட வேண்டும், நல்ல தரமான அரசு மருத்துவமனை வேண்டும், முக்கியமாக மருத்துவர்கள் அதிகம் வேண்டும், தனியார் தொழிற்சாலை என்றில்லாமல், அரசாங்கமும் தொழில் நிறுவனங்களை ஏற்று நடத்தி எம்மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், திருச்செந்தூர் கல்வி வட்டாரத்தில் அரசுக் கல்லூரிகள் எம்மாணவர்களுக்கு வேண்டும், வீணாய் கடலில் கலக்கும் நீரை சேமித்து வருடத்தின் 365 நாட்களும் பஞ்சமில்லா தண்ணீர் என்ற பஞ்சபூதத்தில் ஒரு பூதம் எம்மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு பள்ளிவாசல் பஜார் காத்துக் கொண்டிருக்கிறது.

- சுதேசி தோழன்

Pin It