மொழி என்பது கருத்தைப் பரிமாறும் கருவி. அவை மட்டுமல்லாமல் மொழி பயில் துறையாகவும், சமூக இருப்பிற்கான அடையாளமாகவும், சமூக சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதனமாகவும், பொருளாதாரத்திலும், அரசியல், பண்பாட்டுத்தளங்களிலும் மொழி உற்பத்தியோடு தொடர்புடையதாகும். ஒவ்வொரு அசைவிற்கு பின்னால் ஒரு வர்க்கம் ஒழிந்திருக்கும் என காரல்மார்க்சு குறிப்பிட்டுள்ளதைப்போல் மொழி மேல்கட்டுமானம், கீழ்கட்டுமானம் எனும் இரண்டு கட்டுமானங்களிலும் இயங்குகின்றது. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சமநிலையிலேயே மொழி இயங்குகின்றது.

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தில் உள்ளவர்கள் யாரும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடும், சட்டதிட்டங்களும் வகுத்து ஒருவருக்கு ஒருவர் எவ்விதக் கருத்துப் பரிமாற்றமும் தாய்மொழியில் பேசக்கூடாது என்ற வரையறையை வெளிப்படையாக செய்தோமானால் அனைவரும் இறந்ததற்கு ஒப்பாகும். இம்மாதிரியே இன்றைய       சூழலில் வெளிப்படையாகவே தமிழ் இனத்தின் மொழிவழிப் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கப்பட்டு வருகின்றது. ஒரு இனத்தை அழிக்க அம்மக்கள் பேசும் மொழியைச் சிதைத்தால் அந்த இனம் அழிந்துவிடும். ஒரு நாட்டின் வளர்ச்சி மொழியின் வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டே செயல்பட வேண்டும். இதனை சங்ககால சமூகத்தில் பார்க்க முடியும். அரசர்களும், புலவர்களும் ஒன்று கூடி நட்புணர்வோடு தமிழ் மொழிக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அவர்கள் தமிழோடும், தமிழ் நாட்டு மக்கள் அனைவருடனும் நெருங்கிய தொடர்புடையவராக இருந்ததை அறிய முடியும். ஆனால் இன்றோ தமிழ்மொழி மீது எந்த அக்கறையும் எவருக்கும் இருப்பதில்லை. இன்றைய சூழலில் வணிகநோக்கில் அமைந்த கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மொழியுணர்வு இல்லை. மொழிப்பாடம் கற்பதோடு நின்றுவிடக்கூடியதல்ல என்பதை எவறும் உணர்வதில்லை. மொழி பேசுவதோடு நின்றுவிடக் கூடியதன்று. தமிழ் இலக்கண அமைப்பு, வரலாறு, வாய்மொழிமரபு, பண்பாடு, சுவடியியல், மானுடவியல், தொல்லியல், உளவியல் எனும் பண்பாட்டுப் பின்னணிகளோடு தொடர்புடைய தாய்மொழி தமிழ்மொழி பன்னெடுங்காலமாக, தொன்மை வாய்ந்த மொழியைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியை புதிய கல்விக் கொள்கையில் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ள காரணங்கள் என்ன? மொழிக் கொள்கை தான் காரணமா?ஆசிரியர் மேல் குற்றமா? அல்லது மொழி குறித்த பார்வையை நவீன ஊடகங்கள் ஒருபுறம் மாற்றியமைத்து வருகின்றதோ அதுவா காரணம்? மொழி உணர்வு இல்லாமல் இருப்பது காரணமா?அல்லது மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் காரணமா? தமிழ் மொழிக்கு மாற்றாக இரு மொழி, மும்மொழி கொள்கையா? எனப் பல கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் மொழி சிதைவிற்கு நாம் எல்லோரும் காரணம் தான்.

வடவேங்கடம் முதல் தென்குமரி

  ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என இந்தியா முழுக்க விரிந்த தேசமாக தமிழ்மொழிபேசும் தமிழ்தேசம் இருந்துள்ளதை தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கணநூல் எடுத்துரைக்கின்ற வரலாற்று உண்மையை எவறும் மறைக்க முடியாது. இந்தியாவை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் தமிழர்களே அதற்கு உரியவர்கள் என அண்ணல் அம்பேத்கர் தமிழ், தமிழரின் தொன்மையைப் பறைசாற்றியுள்ளதை அறிமுடிகிறது. திராவிட மொழிக்குடும்பம், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் எனும் அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்மொழி என அறிஞர் கால்டுவெல்லின் கூற்று உண்மையினும் உண்மை. அறிஞர் கால்டுவெல் தமிழ்மொழியின் தொன்மை பற்றிக் கூறுமிடத்து பார்ப்பனர்களும், பார்ப்பனர்கள் வழியில் வந்த பண்டிதர்களும் சமஸ்கிருதமே முதன்மையான மூத்தமொழி என்று கூறி வந்தார்கள். இது முற்றிலும் தவறு என்றும், திராவிட மொழிகளில் முதன்மையான தமிழ்மொழியே அனைத்து மொழிகளுக்கெல்லாம் மூத்தமொழி தமிழ்மொழி என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் விளக்கியுள்ளார். ஆனால் இதனை இன்ளவிலும் பார்ப்பனிய மேலாதிக்க மனநிலையும் முதலாளித்துவ அதிகார வர்க்கமும் உள்ளுர் வணிகச்சந்தையும் பன்னாட்டு சந்தையையும் இந்திய சுதேசித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தி மொழிக் கொள்கையை விரிவுபடுத்துவதற்காகவே மும்மொழிக் கொள்கைகளை உருவாக்கி அனைவருக்குமான கல்விக் கொள்கையாக செயல்படுத்த எண்ணுகின்றதைப் பார்க்க முடிகிறது. இச்சூழலில் கிராமக் குழந்தைகள் கூட தமிழ்வழிக் கற்பதற்குத் தயாராக இருப்பதை பெற்றோர்கள் உருவாக்குவதில்லை. ஆங்கிலம் படித்தால் அறிவு கிடைக்கும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும், சமஸ்கிருதம் படித்தால் இறைவனுக்கு புரியும், தமிழ் மட்டும் படித்து என்ன செய்ய முடியும் என்கிற கருத்து உருவாகியுள்ளது. இங்கு ஆங்கிலம், இந்தி எனும் மொழிகளை கூடுதலாக கற்றுக்கொள்ளல் நல்லது என்கிற எண்னத்தை உருவாக்காமல் தமிழ் மொழியின் மீது வெறுப்பை உருவாக்கியும், தமிழ்மொழி தாழ்ந்தது. இந்தி, சமஸ்கிருதம் உயர்ந்த மொழி, சமஸ்கிருதம் தேவ பாஷை எனும் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியின் மூலம் நவீன விஞ்ஞானக் கருத்துக்களை உணர்த்த முடியாது என்றும் ஆங்கில மொழியை கைவிட்டால் கிணற்றுத் தவளையாக ஆகிவிடுவோம் என்கிற கருத்து மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட சூழலே தமிழ் மொழி குறித்த அக்கறை இல்லாமல் போனது. ஆங்கில வழி கற்றலுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகுதியாக வசூலிக்கப்பட்டாலும் கடைக்கோடி தமிழர்களும் தம் குழந்தைகள் ஆங்கில வழிக் கற்பதைப் பெருமையாக நினைக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் தமிழகக்கல்வியில் கற்றல்மொழியாக இந்தி வருவதற்கான சாத்தியப்பாடுகளையே புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்பதே உண்மை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே பள்ளி, கல்லூரிகளில் மூன்றாம் தர மொழியாகவே தமிழ்மொழியை பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. மாணவர்கள் விருப்பப்பாடத்தேர்வு எனும் பெயரில் மொழிப் பாடத்தேர்வில் பிறமொழியைத் தேர்ந்தேடுத்துப் படிக்க மாணவர்களுக்கு உரிமை உண்டு என்று கொண்டு வந்துள்ளதாலும் கட்டாயமாக தமிழ் அல்லாத பிறமொழியைப் படித்தாக வேண்டும் என்பதாலும் தமிழ்மொழிப் பாடம் கற்றல் ஆர்வம் குறைந்துள்ளது.

கல்லூரிகளில் இளங்கலைத்தமிழ்ப்; பாடத்தினைப் படிப்பதற்கு மாணவர்களின் சேர்க்கை கூடுவதற்கான காரணம், தமிழ்நாடு அரசுத் தேர்வு வாரியம் நடத்தும் அரசுப்பணிக்கான தேர்வில் பொதுத்தமிழில் 100 மதிப்பெண்களுக்கான வினாக்கள் தமிழில் இருப்பதால் என்னவோ தமிழில் பட்டப்படிப்பில் மாணவர்கள் அதிகம் சேர்கின்றனர். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பணிகளுக்கான தேர்வுகள் அனைத்தும் மாநில அரசிடமிருந்து பரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான வாசலை புதிய கல்விக் கொள்கை திறந்து வைத்துள்ளது. அப்படி மத்திய அரசின் கட்டுபாட்டில் அரசுத்தேர்வுகள் நடத்தப்படுமானால் பொதுத்தமிழான தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழக வரலாறும் பண்பாடும் என்பதான தமிழ்மொழி, இலக்கிய வழியான அடையாளங்களை இழக்கநேரிடும். பழைமைவாதத்தை முன்வைக்கக்கூடியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடும்.

15ம் நூற்றாண்டளவில் இங்கிலாந்தில் கிரேக்க, இலத்தீன் மொழிகள் ஆட்சி மொழிகளாக இருந்தன. இப்பொழுதும் வழங்கி வரும் எல்லாத் துறைகள் சார்ந்த ஆங்கில கலைச் சொல்லாக்கத்திற்கு கிரேக்க, இலத்தீன் மொழிகள் அடித்தளமாக விளங்குகின்றன. ஆனால் இத்தொன்மையான கிரேக்க, இலத்தீன் மொழிகளில் உள்ள சொல்வளம், இலக்கிய வளங்கள் முதலியவைகள் ஆங்கில மொழிகளில் இருக்கின்றன எனப் படிப்படியாக மக்கள் மத்தியில் ஆங்கில அறிவு அறிஞர்கள் ஆங்கில மொழியை விரிவுபடுத்தி கிரேக்க, இலத்தீன் மொழிகளைச் சிதைத்தனர். இச்சூழலில் ஆங்கில மொழி முழு வளர்ச்சி அடைந்து இங்கிலாந்தின் முதன்மை மொழியாக மாறி விட்டது. இவைபோலவே தமிழ் மொழி மீதுள்ள மதிப்பீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இந்தி மொழிகள் ஆட்சிப் பீடத்தை பிடிக்க இங்குள்ள கல்விக் கொள்கையும் காரணகர்த்தாவாகும் ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றைச் சிதைத்து, ஒன்று இன்னொன்றின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. இதில் மொழியை திட்டமிட்டே சிதைப்பதற்கான கல்விக்கொள்கை வழியான வரைவை உருவாக்கியுள்ளார்கள். இந்நிலையில் பல வழிகளில் மொழிச் சிதைவுகள் ஏற்படுகின்றன. அரசுப்பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் புதுமையான கல்விமுறையாக தனியார் நிறுவனம் இலாப நோக்கில் கரடிபாத் கற்றல்முறையை அறிமுகப்படுத்திவருகிறது. இது மாணவர்களின் செயல்வழிக் கற்றலையும் படைப்பாக்கத்திறனையும் மழுங்கடிக்கச் செய்வதோடு கல்வி கற்றல் அமைப்புமுறையைச் சிதைக்கும் போக்கைக் கொண்டதாக தமிழகக் கல்விச்சூழல் நிலவுகிறது. பல தனியாhர் கம்பெனிகள் கல்வி-கற்றல் செயலிகளை உருவாக்கி மாணவர்களை நோக்கிவருவது சூனியக்கலாச்சாரத்திற்குள் மாணவ சமுதாயத்தை அழைத்துச் செல்லும் நிலை உருவாகும். . கார்ப்பரேட் முதலாளிகள் கல்விக்கொடையாளிகள் மாயஒப்பனைமுகத்தில் வலம் வர ஆரம்பித்துவிட்டதன் வெளிப்பாடே இன்றைய கல்விச்சூழலாக உருக்கொண்டுள்ளன. இன்னிலையில் தமிழ்மொழி சிதைவை நோக்கிப் பயணிக்கிறது.

             தொலைக்காட்சி தொடர்களில் மொழி சிதைப்பு நிகழ்கிறது.

             தமிழில் வெளிவரும் நாளிதழ்களில் பிழைகள், தமிழ்த் தொடரில் இந்தி, ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுதல்.

             தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பினைத் தமிழில் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதை இன்னும் பல்துறைகளில் வரிவுப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.

             அரசு அலுவலகங்களில் தகவல் அறிக்கை முதலிய கோப்புகள் தமிழில் இல்லை

             பள்ளி, கல்லூரி பல்கலைக் கழகங்களில் தமிழில் அறிக்கைகள் கோப்புகள் உருவாக்குவதில்லை.

             அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் அனைவரும் தமிழில் கையொப்பம் இடுவதில்லை. மேலும் தமிழில் பெயர் எழுதினாலும் முதல் எழுத்து ஆங்கில எழுத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

             தமிழ்க் கற்பித்தலில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவாகக் கற்பித்துக் கொடுப்பதில்லை. மேலும் மாணவர்களுக்கு தமிழினம், தமிழ் மொழி மீதான உணர்வினை ஏற்படுத்துதல் இன்றைய சூழலில் அவசியமானதாகும். இம்மாதிரியான சிக்கல்களைத் தீர்த்து, தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் பெருமையையும் உயர்வையும் ஏற்படுத்த தமிழராகிய நமக்கு நல்லெண்ணம் வேண்டும்.

             தன்னுரிமைத் தமிழ்த் தேசம், சமைக்கின்ற களப்போரே, சனநாயகப் புரட்சி எனும் கவிஞர் தணிகைச் செல்வனின் கவிவரிகளுக்கு ஏற்ப, தமிழ்த் தேசியத்தின் தன்னுரிமைப் போருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் இனி ‘மெல்லச்சாகும்’ எனும் தமிழ் மொழி சிதைவதை ஆதங்கப்படும் கவிஉள்ளத்தினை உணர்ந்து, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எனப் பாரதிதாசனின் கனவினை நினைவாக்க, தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும், தமிழ் மொழியிலேயே கல்வி புகட்டும் சட்டம் இயற்றப்பட வேண்டும். சரித்திர நெடிகிலும் தாய் மொழியே ஆட்சி செய்யும் என்றும் தமிழ் மொழியே எல்லாவற்றிற்கும் தலைமை ஏற்கும் என தமிழர்கள் அனைவரும் எண்ணவேண்டும். பார்ப்பனியமயமாதலுக்கும் முதலாளித்துவத்திற்கும் துணைபோகும் மொழிகளான இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழிகளால் சிதைந்துவரும் தமிழ் மொழியினையும் தமிழ் நாட்டினையும் மீட்டெடுக்கவேண்டும் என எண்ணித்துணிவோம். தமிழ்வழி கல்வி வழங்கிட ஆவனம் செய்வோம்.

“இன்பத் தமிழ்மொழிக் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்

துன்பங்கள் நீங்கும்! சுகம் வரும்

தூய்மை உண்டாகிவிடும் வீரம் வரும்”

  எனும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வரிகள் அனைவரும் தமிழ்மொழியில் கல்விகற்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்படிக் கற்கும் நிலை எய்திவிட்டால் வாழ்வு இன்பமானதாக இருக்கும் என்று உரைக்கிறார் பாவேந்தர். இச்சிந்தனை நம் எல்லோர்க்குள்ளும் உருவாகும்போது தான் வீழ்வதற்கல்ல தமிழ்மொழி என்கிற எண்ணம் தோன்றும். அப்பொழுதுதான் தாய்மொழியில் சிந்தித்தல், செயல்படுதல், தமிழ்மொழியைஆட்சிமொழியாக பரவலாக்கப்படுத்துதலும் அரசியலாக்கப்படுத்துதலும் ஏற்படும்.

ம.கருணாநிதி

Pin It