சாதிய ஆணவப் படுகொலைகளால் தொடர்ந்து தலைக்குனிவை சந்தித்து வரும் தமிழ்ச் சமூகத்தில் மேலும் இரண்டு கொடூர சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடைப்பகுதியை சேர்ந்த கனகராஜ் (21) வலையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த வர்ஷினி பிரியாவும் (18) காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களின் காதலை ஏற்க மறுத்த கனகராஜின் அண்ணன் வினோத் இருவரையும் கொடூரமாக அருவாளால் வெட்டி இருக்கின்றார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துவிட, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். இருவரையும் கொலை செய்த வலையர் சாதிவெறியன் வினோத் ஏற்கெனவே போலீசில் சரணடைந்துள்ளான்.
தமிழ்நாட்டில் சாதி நோய் எந்த அளவிற்கு முற்றிப்போய் இருக்கின்றது என்பதற்கு ஒரு கொடூர சாட்சியாக மாறியிருக்கின்றது கனகராஜ், வர்ஷினி பிரியா படுகொலைகள். இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போது ஊடகங்கள் குற்றத்தில் ஈடுபட்ட நபரை மட்டுமே பொறுப்பாக்கிவிட்டு அந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை தப்புவித்து விடுகின்றன. சாதி ஆணவப் படுகொலைகளில் கொலையில் ஈடுபட்ட நபரைவிட பலமடங்கு பொறுப்பு சாதிய உணர்வை தீவிரமாகத் தூண்டிவிடும் சாதிவெறி பிடித்த கழிசடைகளுக்கும், அதைத் திட்டமிட்டே அனுமதிக்கும் அரசுக்கும், தன்னுடைய சக மனிதனை தன்னைவிட மேலானவன், கீழானவன் எனக் கருதும் மனநோய்க்கு ஆட்பட்டிருக்கும் பொதுச்சமூகத்திற்கும் இருக்கின்றது.
சாதிய மேல்நிலையாக்கம் தீவிரமாக நடந்து வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கம்யூனிஸ்ட்கள் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று அறைகூவல் விட்டால் இங்கிருக்கும் சாதியப் பிற்போக்குவாதிகள் ‘கவுண்டர்களே ஒன்று சேருங்கள்’, ‘வன்னியர்களே ஒன்று சேருங்கள்’, ‘தேவர்களே ஒன்று சேருங்கள்’ என்று இழப்பதற்கு ஏதுமற்ற, உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களை சாதி ரீதியாக அணிதிரள அறைகூவல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சாதி என்பது ஒரு உடைமையைப்போல தன்னிடம் இருந்து பிரிக்க முடியாத, கடவுளால் தனக்கு வழங்கப்பட்ட சொத்தாகக் கருதப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
தன்னுடைய சக மனிதனை தன்னிடம் இருந்து மேலானவன் என்றும், கீழானவன் என்றும் ஏன் பிரித்தாள வேண்டும், அதற்கான கருத்தியல் அடித்தளம் எங்கிருந்து பிறப்பெடுக்கின்றது என்பதைப் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்கவும் தயாராக இல்லாத இறுகிப் போன முட்டாள்களாய் சாதியைக் கொண்டாடுபவர்கள் இருக்கின்றார்கள். தன்னளவிலேயே சமூக சமத்துவத்தை ஏற்காத மனிதர்களால் ஒருபோதும் பொருளாதார சமத்துவத்தை அடைய முடியாது என்ற எளிய சிந்தனை கூட அற்ற, கடும் பிற்போக்குவாதிகளும், அருவருக்கத்தக்க சாதிவெறி பிடித்த மிருகங்களும் வாழும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றதோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.
எல்லா சாதி ஆணவப் படுகொலைகளுக்கும் தூண்டுகோலாய் அடிப்படையில் இருப்பது தலித் மக்கள் மீது சூத்திர சாதி மக்கள் கட்டமைத்து வைத்துள்ள போலியான வெறுப்புணர்வே ஆகும். பொதுவாக தமிழ்நாட்டை உலுக்கிய சாதி ஆணவப் படுகொலைகளில் எல்லாம் கொல்லப்பட்ட ஆண் தலித் வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் சூத்திர சாதியைச் சேர்ந்தவராகவுமே இருந்திருக்கின்றார்கள். ஆண்டாண்டு காலமாக பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரர்) என்று பார்ப்பனியத்தால் அசிங்கப்படுத்தப்பட்ட மக்கள்தான், அப்படியான கீழ்த்தரமான இழிந்த பட்டத்தை பெறாமல் இந்து மதத்திற்கு வெளிய சுயமரியாதையோடு அவர்ணகளாக வாழ்ந்த மக்களை இன்று வெட்கமே இல்லாமல் கொன்று போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சூத்திரன் என்ற கேவலமான இழி பட்டத்தை சுமந்து திரியும் பேர்வழிகளுக்கு அதைப் பற்றி எந்த உணர்வுமில்லாமல் அடுத்தவர்களை தனக்குக் கீழாக நினைப்பதும், தன்னை மேலாக நினைப்பதும் வெட்கக் கேடானதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு முறையும் சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போதும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும், இனி வரும் காலத்திலாவது இது போன்ற கொடூரங்கள் நடைபெறாத அளவிற்கு மக்களின் சிந்தனை சாதிக்கு எதிராக மாற்றமடையும் என்றுதான் ஒவ்வொரு முற்போக்குவாதியும் நம்பி களப் பணியாற்றுகின்றார்கள். ஆனால் இந்தச் சமூகத்தை அப்படி மாற விடக் கூடாது என்றே, சாதியை வைத்துப் பிழைக்கும் அயோக்கியக் கும்பல்கள் அரசு ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அதுபோன்ற அயோக்கியர்களின் நச்சு பரப்புரைக்கு இளம் தலைமுறையினர் பலர் பலியாகி விடுகின்றனர். அது போன்றவர்களால்தான் இன்று தமிழகத்தில் அதிகமான சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
படித்தவன், படிக்காதவன் என வித்தியாசம் இல்லாமல் சாதிவெறியர்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்த பலர் சுயசாதி பெருமை பேசும் வாட்ஸ்ஆப் குழுக்களையும், பேஸ்புக் குழுக்களையும் உருவாக்கி தீவிரமாக சூத்திர சாதி வெறியைக் கக்கி வருகின்றார்கள். தன்மானமும் சுயமரியாதையும் அற்ற, உலுத்துப்போன மனிதர்களாய் வாழும் இந்த அற்பப்பிறவிகள் தங்களை பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இரண்டு உயிர்கள் துடிதுடிக்க சாதிவெறிக்குப் பலிகொடுக்கப்பட்டு இருந்தாலும் இந்தச் சமூகம் அதற்காக பெரும் எதிர்வினை எல்லாம் நிச்சயம் ஆற்றப் போவதில்லை. இந்தச் சமூகத்தின் ஆன்மா சாதிவெறியால் சிதைக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல இதையும் ஒரு செய்தியாக அது மிக எளிமையாக கடந்து செல்லத்தான் போகின்றது. சாதிக்கு எதிராக ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியை நடத்தியாக வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம். சாதிக்கு எதிராக அறைக்கூட்டம் போடுவதாலோ, மாநாடு நடத்துவதாலோ, புத்தகம் போடுவதாலோ மட்டுமே சாதியை ஒழித்துவிட முடியாது. அதைக் கடந்து, இருக்கும் முற்போக்கு சக்திகளை வைத்துக் கொண்டு நேரடியாக மக்களிடம் சென்று பரப்புரை செய்வதற்கான வழிமுறைகளையும், செயல்திட்டங்களையும் நாம் உருவாக்க வேண்டும். அதை ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாக போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புப் பணியில் தன்னை உண்மையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த மாபெரும் பணியைச் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே நம்முடைய தோழர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவற்றில் தீவிரமாக சாதிவெறியர்களுக்கு எதிராகக் களமாடுகின்றார்கள் என்றாலும் நாம் சமூக வலைத்தளங்களைத் தாண்டி களப்பணியாற்ற வேண்டி இருக்கின்றது. இதை ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக நாம் வரித்துக் கொள்ள வேண்டும். முத்திப் போன சாதிப் பைத்தியங்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும், வளரும் இளைய தலைமுறையினரிடம் சாதி உணர்வு அசிங்கமான அருவருப்பான ஒன்று என்ற எண்ணத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். சமூகத்தின் சிந்தனையை மாற்றியமைக்காமல் வெறும் சட்டங்கள் கொண்டு வருவதால் மட்டுமே இது போன்ற சாதி ஆணவப் படுகொலைகளை நிச்சயம் தடுத்துவிட முடியாது என்பதை முற்போக்குவாதிகள் புரிந்துகொண்டு வரும் காலங்களில் செயல்பட்டால் நிச்சயமாக நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
- செ.கார்கி