கீற்றில் தேட...

pulwama attackகாஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் லேத்போரா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள். ராணுவ வீரர்களின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த உலகில் யாருடைய மரணமும் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றல்ல. அப்படி ஒருவரின் மரணத்தை யாராவது கொண்டாடினார்கள் என்றால், கொண்டாடும் நபர் ரத்த வெறி பிடித்த பாசிஸ்டாக, மனித குலத்திற்கே விரோதியாகத்தான் இருப்பான். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது சிலர் இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டாடினர். அதே போல கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டபோது சில அயோக்கியர்கள் இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டாடினர். இது போன்ற நபர்களுக்கு எப்போதுமே தங்களின் மேலாண்மையை நிலை நாட்டிக் கொள்ள பிணங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒன்று தங்கள் அரசியலால் பிணம் விழ வைப்பார்கள்; இல்லை விழுந்த பிணத்தின் மீது தங்களின் அரசியலைத் திணிப்பார்கள்.

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் பல முறை நிகழ்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும்போதும் அது இந்திய ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்குமான பிரச்சினை என்ற நிலையில் இருந்து, இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை, இந்து முஸ்லிம் பிரச்சினை என்பதாக திட்டமிட்டே திசை திருப்பப்படுகின்றது. காஷ்மீருக்கு வெளியே இருக்கும் இந்தியக் குடிமகன்களில் பெரும்பாலான நபர்களுக்கு காஷ்மீரில் என்ன நடக்கின்றது என்பது பற்றி எதுவுமே தெரியாது. அவர்களின் பார்வையில் காஷ்மீரிகள் அனைவரும் பாகிஸ்தான் கைக்கூலிகள், இந்திய ராணுவத்தின் மீது கல்லெறிபவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியாவுக்குத் துரோகம் செய்பவர்கள். இப்படியான பார்வையைத்தான் வலதுசாரி, முதலாளித்துவ ஊடகங்களும் கருத்தியலாளர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து அதையே பொதுக்கருத்தாக மாற்றி இருக்கின்றார்கள்.

இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 70,000க்கும் மேற்பட்ட அப்பாவி காஷ்மீரிகளின் கதை இவர்களுக்குத் தெரியாது. 8000 இல் இருந்து 10,000 பேர் வரை காணாமல் போகச் செய்யப்பட்டதைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது. இந்திய இராணுவத்தால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி காஷ்மீர் பெண்களைப் பற்றி இவர்களுக்குத் தெரியாது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காஷ்மீரில் இடைவிடமால் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒப்பாரி சத்தத்தைப் பற்றியும் இவர்களுக்குத் தெரியாது. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எந்தவித உள்ளீடும் அற்ற நாசமாய்ப் போன தேசபக்தி மட்டுமே.

இப்போது நடத்தப்பட்டிருக்கும் புல்வாமா தாக்குதல் மோடி அரசாங்கத்தின் மீதே சந்தேகத்தைக் கிளப்புவதாக உள்ளது. 100க்கும் குறைவாக உள்ள போராளிகளைப் பிடிக்க காஷ்மீரில் 6,00,000 மேல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி 38 தீவிரவாதிகளைக் கொன்றதாக இந்திய இராணுவம் கூறியது. அதன்படி பார்த்தால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். ஏறக்குறைய 5 காஷ்மீரிகளுக்கு 1 இராணுவ வீரர் என்ற விகிதத்தில் அங்கு அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உங்களால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்றால், உங்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்றால், உங்களால் நிம்மதியாக வேலைக்குப் போக முடியவில்லை என்றால், உங்கள் வீட்டுப் பெண்கள் எந்த நேரத்திலும் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படலாம் என்றால், உங்கள் வீட்டு சிறுவர்கள் பாலியல் வக்கிரம் பிடித்த இராணுவத்தால் ஆசனவாய் வழியாக புணரப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார்கள் என்றால், உங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சாகும்வரை சித்தரவதை செய்தார்கள் என்றால், நீங்கள் என்ன செய்வீர்களோ அதைத் தான் காஷ்மீரிகள் செய்கின்றார்கள்.

இந்திய அரசாங்கம் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி ஓட ஓட விரட்டி அடிக்கின்றது. இது ஒரு பழிவாங்கும் உணர்ச்சி. “நீ என் மண்ணையும், மக்களையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றாயா, என் சகோதரிகளைப் பாலியல் வன்புணர்வு செய்து வீதிகளில் வீசி எறிகின்றாயா, தட்டிக் கேட்டால் பெலட் குண்டுகளால் சுடுவாயா, அப்படி என்றால் உன்னிடம் உன்னுடைய மொழியிலேயே பேசுகின்றோம்” என்கின்றார்கள். எந்த ஒரு காஷ்மீரியும் இந்திய அரசை தன்னுடைய அரசாக ஒருபோதும் கருதுவதில்லை, அவர்கள் வெறுக்கின்றார்கள். தங்களைத் தினம் தினம் சித்தரவதை செய்து கொல்லும் ஒரு கொலைகாரப் படையின் மீது அந்த மக்களுக்கு எப்படி நல்லெண்ணம் வரும்?

Indian military brutality in kashmirஆனால் இங்கிருக்கும் ஊடகங்கள் காஷ்மீர் பற்றிய அத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டு விபச்சாரத்தனமாக செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குப் போர் நடந்தே ஆக வேண்டும். இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ 3.05 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்போது சொன்னதைச் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பாதுகாப்புப் படைகள் மீது மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிருப்பதாக பிப்ரவரி 12ம் தேதியே நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்திருக்கின்றார். ஆனால் திட்டமிட்டே இந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது. காஷ்மீர் தாக்குதல் நிகழ்வுக்கு உளவுத் துறையின் தோல்வியும் ஒரு காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கும் கூறுகின்றார். இந்த இடத்தில் தான் பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அயோக்கியர்களின் முகங்கள் எல்லாம் நமக்கு வந்து வந்து போகின்றன. உண்மையில் இதை உளவுத் துறையின் தோல்வியாக எப்படிப் பார்க்க முடியும்?. தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை திட்டமிட்டே கண்டு கொள்ளாமல் விட்டது என்பது அப்படி ஒரு தாக்குதல் நடக்க வேண்டும் என விரும்புகின்றவர்களால்தான் முடியும். அவர்களுக்கு இதன் மூலம் ஏதோ பலன் இருந்திருக்கலாம். நாட்டு மக்களின் கவனத்தை ரபேல் ஊழல் வழக்கில் இருந்தும், கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்தும் திசை திருப்ப இதைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கலாம்.

தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு ஒத்துக் கொண்டுவிட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் அடில் அகமது என்பதும் தெரிந்துவிட்டது. அப்படி இருந்தும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? நேற்று டெல்லி-வாரணாசி வந்தே பாரத் புதிய ரயில் தொட்டக்க விழாவில் பேசிய மோடி “தினசரி செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, பல்வேறு நாடுகளிடம் அண்டை நாடு கெஞ்சிக் கொண்டிருக்கின்றது” என்று வக்கிரமாகப் பேசுகின்றார். இதன் உட்பொருள் என்ன? யாரோ ஒரு தீவிரவாதக் குழு நடத்திய தாக்குதலை மனதில் வைத்து ஒரு நாட்டையே அவமானப்படுத்துவது என்பது மோடியின் மனதுக்குள் பாசி பிடித்துக் கிடக்கும் இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்படாகும். இன்னும் தாக்குதலுக்கான காரணங்களை கண்டு பிடிக்கவில்லை. விசாரணை முதல் கட்டத்தில் இருக்கும்போதே எதிரியை முடிவு செய்துவிட்டுப் பேசுவது எவ்வளவு இழிவான செயல்?

அவர்கள் முடிவு செய்து விட்டார்கள், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி போர்ப் பதற்றத்தை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட வேண்டும் என்று. இப்போதே சமூக வலைதளங்களில் வலதுசாரி பாசிஸ்ட்கள் ‘இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மோடிக்கு ஓட்டு போடுங்கள்' என கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்கள். இந்தத் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால் ராஜ்நாத் சிங்கிடமும், நிர்மலா சீதாராமனிடமும் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவர்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்பட்டு, உரிய முறையில் விசாரிக்க வேண்டும். ஆனால் மோடி அரசின் கூலிப்படையாக செயல்படும் என்ஐஏ, சிபிஐ போன்றவை இதை 100 சதவீதம் செய்யாது என நாம் உறுதியாக நம்பலாம்.

அப்பாவி இராணுவ வீரர்களின் உயிர்களை இந்திய அரசு தன்னுடைய சுயநலத்துக்காக தொடர்ந்து காவு வாங்கிக் கொண்டு இருக்கின்றது. பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து விரட்டி அடித்து அவர்களின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கவும் லட்சக்கணக்கான துருப்புகளை களத்தில் இறக்கிவிட்டு சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாக விட்டிருக்கின்றது. இப்போது இந்தத் தாக்குதலை நடத்திய 20 வயதான அடில் அகமது ஒரு காஷ்மீரிதான். அவன் ஏன் இராணுவத்திற்கு எதிரான மனநிலைக்குச் சென்றான் என்பது பற்றி நம்மில் யாரும் யோசிக்கக் கூடத் தயாராக இல்லை. நம்முடைய சிந்தனை முழுவதும் பாகிஸ்தான் மீது இந்திய அரசு போர் தொடுத்து சில நூறு ராணுவ வீரர்களை சுட்டுக் கொல்ல வேண்டும், அந்தச் செய்தியை பிளாஷ் நியூஸில் பார்த்து புளங்காகிதம் அடைய வேண்டும் என்பதில்தான் நிலையாக இருக்கின்றது. கேடு கெட்ட விபச்சார ஊடகங்கள் தொடர்ச்சியாக இதைத்தான் செய்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் நாளை இன்னொரு அடில் அகமது வரமாட்டான் என்பதற்கு உங்களால் உத்திரவாதம் கொடுக்க முடியுமா? நிச்சயம் வருவான். உங்கள் மண்ணில் விடுதலையை துப்பாக்கி முனையில் யாராவது பறித்து வைத்துக் கொண்டால், இந்த மண்ணையும் மக்களையும் உங்கள் உயிரைவிட அதிகமாக பல நூறுமடங்கு நேசிக்கின்றீர்கள் என்றால், நீங்களும் அடில் அகமதாக மாறுவீர்கள். இராணுவ வீரர்களும் காஷ்மீர் மண்ணைக் காக்கப் போராடுகின்றார்கள், அடில் அகமதுகளும் காஷ்மீர் மண்ணை காக்கப் போராடுகின்றார்கள். ஒருவர் இந்திய அரசாங்கத்திற்காக, இந்திய அரசை வழிநடத்தும் கார்ப்ரேட்டுகளின் நலனுக்காகப் போராடுகின்றார், இன்னொருவர் பல தசாப்தங்களாக ரத்தம் கயாமல் பிசுபிசுத்துக் கிடக்கும் தன் மண்ணைக் காக்கப் போராடுகின்றார். நம்முடைய பார்வைதான் நமக்கான வெளிச்சத்தைக் கொடுக்கின்றது. தேசபக்தி என்னும் காட்டுக் கூச்சலுக்கு இரையாகிவிடாதீர்கள். உண்மையின் மீது நின்று பேசுங்கள் அப்பொழுதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு காண முடியும்.

- செ.கார்கி