மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று பேசுபவர்கள் இன்று வரையிலும் அதற்கான சரியான பொருளை கொடுத்தது இல்லை. அவரவர்களுக்கு என்ன தோன்றுகின்றதோ, அதைத்தான் அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்கியம் என்று இன்றுவரையிலும் கூறி வந்திருக்கின்றார்கள். அப்படி பேசும் பல பேருக்கு குறைந்த பட்சம் கருத்துமுதல்வாதம், பொருள் முதல்வாதம் என்றால் கூட என்ன என்று தெரியாது. அதிலும் தமிழ்நாட்டில் இந்த மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று சொல்லும் பல பேர் அடிப்படையில் எந்தவித அரசியல், பொருளாதார, வரலாற்றுப் பார்வையும் அற்ற, முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என தன்னுடைய கனவில் கூட நினைக்காதவர்கள். அப்படி என்றால் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற ஒன்று இல்லையா என கேட்பவர்களுக்கு நிச்சயம் இருக்கின்றது, அதுதான் உண்மையானதும் கூட என்பதுதான் பதில்.
சமூகம் மாறிக்கொண்டே இருக்கின்றது. நேற்று இருந்த மனிதர்கள் இன்று இல்லை. நேற்று இருந்த சமூக நிலை இன்று இல்லை. மனிதனின் அபிலாசைகள் மாறிக்கொண்டே இருக்கின்றது. நேற்றுவரை ஆயுதம் ஏந்திய புரட்சியை விரும்பிய மனிதன் இன்று தேர்தல் பாதையை விரும்பலாம், தேர்தல் பாதையை விரும்பிய மனிதன் இன்று ஆயுதம் ஏந்திய புரட்சியை விரும்பலாம். சமூகத்தின் சூழல் எதை கோரி நிற்கின்றதோ அதைத்தான் நம்மால் செய்ய முடியும். ஒரு பெரும் அசமத்துவமான நிலை, இனி ஆளும் இந்த அரசு நீடித்தால் நம்மால் உயிர் வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஏற்படும்வரை, எந்த ஒரு புரட்சிகர கருத்தும் மக்களை பற்றிக் கொள்ளாது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதன் புரட்சிகர செயல்பாடுகளை மதிப்பிட்டோம் என்றால், நம்மால் மக்கள் மனதில் இருந்து, இன்றைய தலைமுறை மறந்து போன, கேள்விப்படாத நக்சல்பாரி, தெலுங்கான, தெபாகா, புன்னபுரா வயலார் போன்றவற்றை தவிர இன்று சொல்லுவதற்கு எதுவும் இல்லை. நாம் பழம் பெருமைகளை பேசியே உயிர்வாழ விரும்புகின்றோம். இன்று நாம் என்ன நிலையில் உள்ளோம் என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று பேசினாலும் சரி, மரபு வழி மார்க்சியம் என்று பேசினாலும் சரி அடிப்படை என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி நாம் போராடுகின்றோமா, அந்தத் திசைவழியை ஏற்று செயல்படுகின்றோமா என்பதில் தான் இருக்கின்றது. இந்திய நாட்டில் ஓர் ஆயுதம் ஏந்திய புரட்சி என்பது சாத்தியப்படுவதற்கான புறச்சூழ்நிலை நிலவுகின்றதா? பெரும்பான்மை மக்கள் அதை ஆதரிக்கின்றார்களா? என்பதைப் பற்றியெல்லாம் கூராய்வு செய்து தெளிவான முடிவுகளை நாம் இந்நேரம் வந்தடைந்திருக்க வேண்டும். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தன்னுடைய காலத்தில் புரட்சி நடக்கும் என்று மதிப்பிட்ட பல நாடுகளில் புரட்சி நடக்காமலே போய் உள்ளது. குறிப்பாக எங்கெல்ஸ், மார்க்ஸ் இருவரும் புரட்சியானது ஒரே நாட்டில் சாத்தியமில்லை, அது உலகு தழுவியதாக இருக்கும் என மதிப்பிட்டார்கள். புரட்சியானது ஒரேயொரு நாட்டில் மட்டும் நடைபெற முடியுமா என்பதற்குப் பதிலளித்த எங்கெல்ஸ்,
“முடியாது, உலக சந்தையை உருவாக்கியதன் மூலம் பெருந்தொழில் அமைப்பானது உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக நாகரிமடைந்த நாட்டு மக்களை, ஏற்கனவே ஒருவரோடொருவர் நெருக்கமான உறவு கொள்ளும்படி செய்துள்ளது. இதன் விளைவாக, மற்றவர்களுக்கு ஏற்படும் எந்தவொரு நிகழ்ச்சியிலிருந்தும் எவரும் தனித்து இருக்க முடியாது. மேலும் நாகரிகமடைந்த நாடுகளில் முதலாளிகள் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஆகிய இரண்டு வர்க்கங்களை மட்டுமே , சமூகத்தின் தீர்மானகரமான இரண்டு வர்க்கங்களாக மாற்றி, அவற்றிடையே போராட்டமாக மாற்றி அவற்றின் சமுதாய வளர்ச்சியை ஒன்றிணைத்துள்ளது. எனவே கம்யூனிஸ்ட் புரட்சியானது ஒரு தேசம் தழுவியதாக மட்டுமே இருந்து விடாது. அது ஒரே நேரத்தில் நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் குறிப்பாக சொல்வதானால் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழும். இந்தப் புரட்சியானது, அந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் அந்த நாடு கொண்டுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகுந்த செல்வம், முக்கியமான பெருந்திரளான உற்பத்தி சக்தி ஆகியவற்றைப் பொறுத்து மிகவும் விரைவாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ உருவாகும்.
எனவே இந்தப் புரட்சியானது ஜெர்மனியில் மிகவும் மெதுவாகவும், அதிகமான தடைகளைச் சந்தித்தும் முன்னேறும்; இங்கிலாந்தில் மிக விரைவாகவும் எளிதாகவும் நடைபெறும். இந்தப் புரட்சியானது உலகத்தின் மற்ற நாடுகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அந்த நாடுகளில் இது வரையிலிருந்த வளர்ச்சிப் போக்கைத் தலைகீழாக மாற்றித் தீவிரப்படுத்தும் இப்புரட்சி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும் இதன் காரணமாக உலகளாவியதாகவும் இருக்கும்.” என்றார். (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்- பிரெடெரிக் எங்கெல்ஸ் - ப.எண்.228 )
ஆனால் எங்கெல்ஸின் கணிப்புக்கு மாறாக ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சிகள் நடைபெற்றன. காரணம் அந்தந்த நாடுகளுக்கென்று ஒரு பிரத்யேக சூழ்நிலை உள்ளது. அதை உள்வாங்கிக் கொள்ளும்போது நிச்சயம் புரட்சியை நோக்கி மக்களை நாம் அழைத்துச் செல்ல முடியும். மாவோ சொல்கின்றார் “மார்க்சியம்- லெனினியம் குறித்து சிறிது கற்றுக் கொண்டுள்ளோம் என்பது உண்மைதான், ஆனால் மார்க்சியம்- லெனினியம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்துவிடாது.(நாம்) சீனாவின் பிரச்சினைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், சீனாவின் பிரத்யேக குணங்கள், வரலாறு ஆகியவற்றிலிருந்து தொடங்க வேண்டும். சீனர்களாகிய நாங்கள் – நான் உட்பட சீனாவைப் பற்றி வேண்டிய அளவுக்கு இப்போதும் கூடத் தெரிந்து கொள்ளவில்லை. ஏகாதிபத்தியத்தையும் அதன் ஏவல் நாய்களையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எப்படிப் போராட வேண்டும் என்பதை அறியாதவர்களாக இருந்தோம். எனவே சீனாவின் பிரத்யேக அம்சங்களைப் பற்றி நாங்கள் படிக்க வேண்டியிருந்தது…” “:...சீனாவின் பிரத்தியேக சூழ்நிலைக்குப் பொருந்தும் வகையில் எமது கொள்கைத் திட்டங்களைப் படிப்படியாகவே நாங்கள் வகுத்தோம்- செயல்படுத்தினோம்- இதற்கு நீண்ட காலம் அதாவது முழுமையாக இருபத்தெட்டு வருடங்கள் ஆனது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியது முதல் எமது ஒட்டுமொத்த தேசத்தையும் விடுதலை செய்த காலம் வரை” ( மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி 9 ப.எண்: 291)
எங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸின் கணிப்புக்கு மாறாக ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சிகள் நடந்தாலும் இரண்டும் வேறுபட்ட வடிவங்களில் நிகழ்ந்த புரட்சியாகும். “வர்க்கப் போராட்டம், சமூகப்புரட்சி, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச்செல்வது ஆகிய அனைத்தும் அனைத்து நாடுகளிலும் ஒரே அடிப்படைக் கோட்பாடுகளைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால் பெரிய கோட்பாடுகளைச் சார்ந்துள்ள சிறிய கோட்பாடுகளையும் வெளிப்பாடுகளையும் காணும்போது ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகின்றன. அக்டோபர் புரட்சியும் சீனப்புரட்சியும் இது போன்றவையே, அடிப்படைக் கோட்பாடுகளைப் பொருத்தவரை இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரியானவை; ஆனால் இக்கோட்பாடுகளால் வெளிப்படுத்தப்பட்ட வடிவங்களைப் பொருத்தவரை இரண்டு புரட்சிகளும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக ரசியாவில் புரட்சி நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறத்துக்கு வளர்ந்து சென்றது; அதேசமயம் நமது நாட்டில் அது கிராமப் புறத்திலிருந்து நகரங்களுக்கு வளர்ந்தது. இரண்டு புரட்சிகளுக்கும் இடையிலான பல வேறுபாடுகளில் இது ஒன்றாகும்" (மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி 7 ப.எண்: 493)
ஆனால் இங்கிருக்கும் சில கம்யூனிஸ்ட்கள் அப்படியே சீனாவைப் போலவோ, இல்லை ரஷ்யாவைப் போலவோ இங்கேயும் புரட்சியை நடத்திவிடலாம் என மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரது நூல்களை பக்கம் பக்கமாக படித்து அதை அப்படியே வியாக்கியானம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். அது போன்ற வறட்டுவாதிகளைப் பார்த்து மாவோ சொல்கின்றார் “….. உலகம் முழுமைக்கும் தீர்வு சொல்லும் தத்துவங்களையும், உண்மைகளையும் நாம் கற்றுத் தேற வேண்டும். இந்தக் கல்வியை சீனாவின் யதார்த்த நிலையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தத்துவமோ, கல்வியோ ஒவ்வொரு வரியையும் அப்படியே பின்பற்றுவது என்பது தவறாக முடியும் – அது மார்க்சியமாக இருந்தாலும் கூட. நமது தத்துவம் என்பது என்ன? ஒட்டுமொத்த உலகுக்கும் தீர்வு சொல்லும் மார்க்சிய லெனினிய தத்துவத்தை சீனப்புரட்சியின் யதார்த்த நிலைமையோடு இணைக்கின்ற தத்துவமாகும். ஒரு கட்டத்தில் நமது கட்சியில் சிலர் வறட்டுவாதத்தில் இறங்கினார்கள், அது நமது விமர்சனத்துக்கு உள்ளானது. இப்போதும் வறட்டுவாதம் பேசுபவர்கள் இருக்கின்றார்கள். கருத்தியல் வட்டாரத்திலும் பொருளியல் வட்டாரத்திலும் வறட்டுவாதம் இப்போதும் இருக்கின்றது”. ( மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி 5 ப.எண்: 433)
அது எல்லாம் முடியாது துப்பாக்கி முனையில் இருந்துதான் அதிகாரம் பிறக்கின்றது என்று மாவோ சொல்லியிருக்கின்றார், அதனால் நாங்கள் துப்பாக்கி ஏந்தி இந்திய அரசுக்கு எதிராகப் போராடி தளப்பிரதேசங்களை கட்டியமைப்போம் என சில குழுக்கள் ஆயுதப்பயிற்சி செய்வதும், சமவெளிப் பகுதிகளில் தங்களின் சித்தாந்த மேலாண்மையை நிலைநிறுத்த முடியாமல் காடுகளில் தஞ்சம் அடைந்து வெகுஜென மக்களிடம் இருந்து தனிமைப்படுவதும் இன்றும் நடந்து வருகின்றது. ஆனால் மார்க்ஸோ, இல்லை மாவோவோ உண்மையில் ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு எனச் சொல்லி இருக்கின்றார்களா எனப் பார்த்தோம் என்றால், அப்படி எல்லாம் எதுவும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. அரசியல் கட்சிகளோடு கம்யூனிஸ்ட்கள் கொள்ளும் உறவு பற்றி எங்கெல்ஸ் கூறும்போது,
“…. எப்போதும் மிதவாத முதலாளிகள் கட்சியையே ஆதரிக்க வேண்டும். எனினும் முதலாளி வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்தும், முதலாளிகளின் வெற்றியினால் பாட்டாளி வர்க்கத்திற்குக் கிடைக்குமென்று கூறப்படும் நன்மைகளைப் பற்றிய கவர்ச்சியான உறுதிமொழிகளிலிருந்தும் கம்யூனிஸ்டுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். முதலாளி வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்ட்கள் பெறப் போவதெல்லாம் இவைதான்.
1) கம்யூனிஸ்டுகள் தங்களது கோட்பாடுகளைப் பரப்புவதற்கும், விவாதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், உதவி செய்யும் வகையில் கிடைக்கவிருக்கும் பல்வேறு சலுகைகளும், அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தைப் பின்னிப் பிணைந்த, போர்த் திறன் மிக்க, ஒருங்கிணைந்த வர்க்கமாக இணைப்பதற்கு வாய்ப்பளிக்கும்.
2) எதேச்சதிகார அரசாங்கங்கள் விழுந்த அன்றிலிருந்தே முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையேயான போராட்டம் தொடரும் என்ற உறுதியும், அன்றிலிருந்து முதலாளி வர்க்கம் ஆட்சியிலிருக்கும் நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளின் அதே கொள்கைதான் இந்த நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட்களின் கொள்கையாகவும் இருக்கும். (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்- பிரெடெரிக் எங்கெல்ஸ் - ப.எண்.236 )
அதே போல பல்வேறு எதிர்க் கட்சிகள் பற்றிய கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு பற்றி மார்க்ஸ் கூறும்போது “பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான குறிக்கோள்களையும், நலன்களையும் நிறைவேற்றுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள். ஆனால் இன்றைய இயக்கத்தில் அவர்கள் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள். பிரான்ஸில் பழைமைபேண் மற்றும் தீவிரவாத பூர்ஷ்வாக்களுக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் சோசலிச – ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். அதேவேளை, புரட்சி மரபிலிருந்து வரப்பெற்ற சொல்லாட்சிகள், மாயைகள் ஆகியவற்றின் மீது விமர்சனரீதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் உரிமையை அவர்கள் கைவிடுவதில்லை.
ஸ்விட்ஸர்லாந்தில் அவர்கள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள். அதே வேளை, தீவிரவாதக் கட்சி பிரெஞ்சு நாட்டில் இருப்பதைப் போன்ற ஜனநாயக சோசலிசவாதிகளைக் கொண்ட ஒரு பகுதியும் தீவிர பூர்ஷ்வாக்களைக் கொண்ட இன்னொரு பகுதியுமான ஒன்றுக்கொன்று முரண்பட்ட கூறுகளைக் கொண்டிருப்பதை அவர்கள் மறப்பதில்லை.
போலந்துக்காரர்களிடையே அவர்கள், விவசாயப் புரட்சியை தேசிய விடுதலைக்கு முன்நிபந்தனையாக வைக்கின்ற, 1848 ஆம் ஆண்டில் கிராகோவில் கிளர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்த கட்சியை ஆதரிக்கிறார்கள்.
ஜெர்மனியில், பூர்ஷ்வா வர்க்கம் புரட்சிகரமான வழியில் செயல்படத் தொடங்கியவுடனே கம்யூனிஸ்ட் கட்சி பூர்ஷ்வா வர்க்கத்துடன் சேர்ந்து வரம்பிலா முடியாட்சி, நிலப்பிரபுத்துவ நிலச் சொத்து, குட்டி பூர்ஷ்வா வர்க்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுகின்றது” என்றார். (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-மார்க்ஸ் ப.எண்: 312).
இதில் இருந்து சூழ்நிலைதான் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாட்டை தீர்மானிக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அந்த நிலைப்பாடு என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முன்நிபந்தனை.
தொடரும்….
- செ.கார்கி