அணக்குடி...
14.12.1980 - மாலை சுமார் 4 மணி

கீழ்வெண்மணிக்குப் பக்கத்தில் உள்ள கிராமம்தான் அணக்குடி. அதுதான் இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் விரிந்து, பரந்த பண்ணை ராஜ்ஜியம் உள்ள ஊர்.

கடைசி அறுவடையும் முடிந்து விட்டது. பண்ணை வீட்டிலிருந்து, நெல் மூடைகள் அளந்து கட்டப்படும் இடத்திற்கு, எப்போதும் உடன்வரும் நாய் இல்லாமல் – ஜீப்பில் வராமல் - இரண்டு பக்கத்திலும் அடர்ந்த இலுப்பை மரங்கள், நெடுக மண்டிக் கிடக்கும் கருவேலப் புதர்கள். சப்தமே இல்லாத அந்த சந்தைவேலித் தோப்பின் ஒற்றையடிப் பாதையில் இடது கை கக்கத்தில் ஒரு மஞ்சள் பையும், வலது கையில் குடையுமாக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு.

பச்சைத் தீ...! (வெண்மணிப் பதிவுகள்) - 1

அவர் நடந்து வந்து கொண்டிருந்த பாதையின் எதிரே நட்ட நடுவே நின்று கொண்டிருந்த ஓர் ஆள், அவர் போவதற்காக பவ்யமாக உடல் குனிந்து ஒதுங்க,

“ ஏன்டா இங்க நின்னு என்னா பண்ணிகிட்டு இருக்கே, முனிய மவந்தானே நீ?”

கழுத்துப் பக்கம் வலது கையை வைத்து சொறிந்து கொண்டே, “ஆமாங்கய்யா, ஒன்னுமில்லிங்க அய்யா, குருவிதட்டு போட்டுருக்கேன் அதாங் ..”

“இன்னியோட நிறுத்திக்க, இனிமே போடாதே, எல்லாத்தையும் ஏலம் உடப்போறேன்”

"சரிங்க அய்யா ”

பேசிக்கொண்டே முனியன் மகனை கடந்த நொடியில் எதிரே இரண்டு புதிய ஆட்கள் வருவதை அவதானித்து,

“யார்ரா ஆளுங்க புதுசா இருக்கு"

irunchiyur gopalakrishna naiduகேட்டு முடிப்பதற்குள், அவரின் இடது முதுகுப் பக்கத்திற்கு கீழே அடிவயிற்றில் முனியன் மகனின் வலது கையிலிருந்த கத்தி ஆழமாகப் பாய்ந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு சுதாரித்து திரும்பும்போது, எதிரே வந்த ஒருவரின் கையிலிருந்த கண்டரைக் கோடாரி பலமாகவும், ஆழமாகவும் அவரின் பின்னந்தலையில் இறங்க, மற்றொருவரின் கையிலிருந்த அரிவாள், நாயுடுவின் பின்னந்தலையில் மீண்டும் வெட்டி தோள்பட்டையில் இறங்கியது. தலையிலிருந்து உருவப்பட்ட கண்டரைக் கோடாரி அடுத்த நொடியே அவரின் அடிவயிற்றில் செருகி இழுக்கப்பட குடல் சரிந்து வெளியே எட்டிப் பார்க்கின்ற வேளையில், பக்கத்திலிருந்த கருவப்புதரிலிருந்து மேலும் இரண்டுபேர் அரிவாள்களுடன் வந்த வேகத்தில் அவரது இடது கால்தொடையில் வெட்ட, கட்டைவிரல் துண்டிக்கப்பட்டு சில நொடிகளில் அந்த இடம் இரத்தச் சகதியாக மாறிப்போனது.

நிலைகுலையும் நேரத்தில் சுதாரித்த கோபாலகிருஷ்ண நாயுடு ஒரு கையை நீட்டி எதிரே இருந்த ஒருவரின் கழுத்தை மடக்கிப் பிடிக்க, அவரிடம் மாட்டிக் கொண்டவரின் விழிகள் பிதுங்க, மற்றொரு கையால் குடையை சிலம்பம்போல ஒரு தேர்ந்த சிலம்பாட்டக்காரனாக சுழற்றத் துவங்கினார். அவருக்கு அருகில் மற்றவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. என்ன செய்வது? நாயுடு மீது விழ வேண்டிய வெட்டும், வீச்சும் தங்களுடைய தோழர் மீது விழுந்து விட்டால்...? ஆனாலும் அரைகுறையாக விட்டுவிட முடியாதே..? எனவே துணிந்து நாயுடு மீது பாய, அவரின் பிடி தளர்ந்து, விலகி அப்படியே தியானம் செய்வதுபோல தரையில் உட்கார்ந்து கொண்டே உயிரின் வலியோடும், பயத்தோடும் கண்களால் கெஞ்சி கையெடுத்துக் கும்பிட்டு,

“விட்டுருங்கடா….”

அவரைச் சுற்றி நின்ற அய்ந்து பேரின் மனக்காட்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு எரித்துக் கரிக்கட்டைகளாக்கப்பட்ட அந்த 44 மனித ஜீவன்களும் வந்துபோயின.

“உன்னைய விட்டுட்டா, இன்னும் எங்க வாழ்க்கை என்னாவுறது?”

அடுத்த நொடி அய்ந்து பேர்களின் ஆயுதங்களும் ஒருசேர வெட்டிக்குத்த, கோபால கிருஷ்ண நாயுடு தன்னுடைய இரத்தத்தால் சகதியான மண்ணில் முகம் மடங்கி சரிந்து விழுந்து முடிந்து போனார். அவர்கள் அய்ந்து பேரும் அமைதியாக இரத்தத்தில் கைதொட்டு புரட்சி முழக்கமிட்டனர். ஏனோ தெரியவில்லை, கீழே கிடந்த கோபால கிருஷ்ண நாயுடுவின் இடது கையிலிருந்த கடிகாரத்தை முனியன் மகன் பார்த்தபோது மணி (மாலை) 5.32. அவர்களிடம் பதட்டமில்லை. ஆனால், ஓர் அவசர உணர்வு தெரிந்தது. அதனால்தான் அவர்களால் நாயுடுவின் உடலை 44 துண்டுகளாக்கி, வெண்மணியில் தொடங்கி தலையை திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் வைப்பது என்ற திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. கைகளால் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்ட நோட்டீசை கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல் மீது விசிறி எறிந்துவிட்டு அவர்கள் அய்ந்துபேரும் ஆயுதங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு லெட்சுமாங்குடி பக்கம், 10 நம்பர் பஸ் வந்தால் ஏறிவிடலாம் என்று நடக்கத் துவங்கினார்கள்.

"நடய்யாவைக் கொன்னுட்டாங்களாம்”

பொழுது சாய்ந்த பிறகுதான் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டிக் கொல்லப்பட்ட விசயம் வெளியே பரவியது. ‘இந்தக் காரியத்தை செஞ்ச புண்ணியவான் யாருடா?’. சப்தமில்லாத விசாரிப்பு. ஆனாலும் ஊருக்குள் என்ன நடக்குமோ என்ற பயத்தையும் மீறி, ஊர் முழுக்க முகத்தில் காட்டிக் கொள்ள முடியாத சந்தோஷம்.

******* ******* *******

கீவளூர்…
14.12.1980 - மாலை சுமார் 6.45 மணி

காவல்நிலையத்தில் அதிர்ச்சி. ஆனாலும் பதிவு செய்ய வேண்டுமல்லவா? கொலையுண்ட இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் தம்பி, கோவிந்தராஜ் நாயுடு நின்று கொண்டிருக்கின்றார்.

குற்ற வழக்கு எண் – 254 / 80
நடந்த தேதி -- 14.12.1980, மணி மாலை 6.45
நடந்த இடம் -- அணக்குடி, 10 கி.மீ தென்கிழக்கு
சட்டப் பிரிவு – இ.த.ச. 302
புகார்தாரர் -- கோவிந்தராஜ் நாயுடு
த/பெ.வேணுகோபால் நாயுடு, செண்பகபுரம்
இறந்தவர் -- கோபாலகிருஷ்ண நாயுடு
த / பெ பெருமாள்நாயுடு, இருஞ்சூர்
குற்றவாளி (யின்) -- பெயர், ஊர் தெரியவில்லை

“14.12.80ம் தேதி, மாலை 6.45 மணி சுமாருக்கு இருஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு என்பவரை அடையாளம் தெரியாத சில நபர்கள், கழுத்து, தலை, வயிறு ஆகிய பாகங்களில் வெட்டி கொலை செய்ததாக, நான் நிலைய பொறுப்பில் இருந்தபோது, செண்பகபுரத்தில் குடியிருக்கும் வேணுகோபால் நாயுடு மகன் கோவிந்தராஜ் என்பவர் 6.45 மணி சுமாரில் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த ரிப்போர்ட்” என்று காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையினை தலைமைக்காவலர் (எண் 666) பதிவு செய்கின்றார். வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.

(இனி அடுத்த பதிவில்….)

- பசு.கவுதமன்

Pin It