கொலை செய்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள், கும்பலாக சேர்ந்து அடித்து துன்புறுத்துபவர்கள் எல்லாம் மிக தைரியசாலிகள் என்று பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருப்போம். அது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் மிகுந்த பயத்துடனும் அச்சத்துடனுமே பழகுவோம். கூடுமானவரை அவர்களைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்வோம். ஆனால் உண்மை என்னவென்றால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் அனைவருமே மிகப் பெரிய கோழைகள் என்பதுதான். அவர்களின் மனதில் எழும் கட்டுக்கடங்காத உயிர் பயம்தான் அவர்களைக் கொலை செய்யவும், அடுத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கவும் நிர்பந்திக்கின்றது. தன்னுடைய செயல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த திராணியற்ற வர்க்கம் இயல்பாகவே அதை வன்முறை மூலமே நிலைநாட்டுகின்றது. சுரண்டலை நியாயப்படுத்த முடியாத வர்க்கம் எப்படி அரசு என்ற வன்முறைக் கருவி மூலம் அதை தக்க வைத்துக் கொள்கின்றதோ அதே போலத்தான் மதவெறியர்கள், சாதி வெறியர்கள், பிற்போக்குவாதிகள் எல்லாம் தங்களது உலுத்துப் போன சித்தாந்தங்களை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்த எந்த நேர்மையான காரணத்தையும் கண்டறிய முடியாத போது, அதை வன்முறை மூலம் ஏற்றுக் கொள்ள வைக்க முயலுகின்றார்கள்.

human rights activists

நரேந்திர தபோல்கரும், கோவிந்த் பன்சாரேவும், கல்புர்கியும், கெளரி லங்கேஷும் அப்படித்தான் கோழைகளால் கொல்லப்பட்டார்கள். கருத்தியல் ரீதியாக மோதிப் பார்க்க அவர்களிடம் எந்தத் தார்மீக நியாயமான காரணங்களும் இல்லாதபோது தாங்கள் தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதை எதிர்கொள்ள முடியாமல், கருத்தை துப்பாக்கிகளால் எதிர்கொண்டார்கள். கொல்லப்பட்டவர்கள் யாரிடமும் இந்தச் சமூகத்தை பிரித்து துண்டாடுவதற்கான சதித்திட்டம் இருந்ததாகவோ, இல்லை அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாகவோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதியவாதிகளுக்கு எதிராகவும், மதவாதிகளுக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் எழுதினார்கள். அந்த எழுத்துக்களில் மனிதம் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடியது.

ஆனால் இதற்கு எல்லாம் மாறாக குஜராத் கலவரத்தின் போது கையில் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு தேடித் தேடி முஸ்லிம்களை வேட்டையாடியது சங்பரிவார கொலைக் கும்பல். அவர்களின் கொலைப் பட்டியலில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, இந்து மதத்தின் இழிவுகளை அம்பலப்படுத்தும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல பேர் இன்னும் உள்ளார்கள். அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. சங்பரிவாரத்தின் கொலைக் கரங்கள் இந்தியாவெங்கும் பரவிக் கிடக்கின்றது. அது பார்ப்பனியம் கட்டமைத்த கோட்டையை அசைத்துப் பார்ப்பவர்கள் அனைவரையும் தனக்குக் கிடைத்திருக்கும் அற்பத்தனமான அதிகாரத்தைப் பயன்படுத்தி வேட்டையாட துடித்துக் கொண்டு இருக்கின்றது.

இன்னும் மோடியின் ஆட்சி முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ளன. சமூக வலைத்தளங்கள் எல்லாம் மோடி என்ற போலி பிம்பத்தை அடித்து சுக்குநூறாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நாட்டு மக்களை ஏமாற்ற மோடி அள்ளிவிட்ட பொய்யான, அபத்தமான வாக்குறுதிகளை எல்லாம் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து நாட்டுமக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இனி எந்தப் பொய்யையும் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்ற முட்டுச்சந்தில் வந்து மோடியும், அவரைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பன-பனியா கார்ப்ரேட் கும்பலும் நின்று கொண்டு இருக்கின்றது. இடதுசாரி அறிவுஜீவிகளை எதிர்கொள்வது என்பது மோடிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்வதைவிட, சீனாவை எதிர்கொள்வதைவிட மிகப் பயங்கர சவாலாகத் தெரிகின்றது.

நிச்சயமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன –பனியா- கார்ப்ரேட் கூட்டணி பெரும் தோல்வி அடைவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் அச்சத்திலும், பீதியிலும் இந்தப் பாசிச கும்பல் உறைந்து கிடக்கின்றது. அந்தப் பயம்தான் இடதுசாரி சிந்தனை கொண்ட செயற்பாட்டாளர்களை தேடித் தேடி அவர்களை கைது செய்ய வைக்கின்றது. ஆனால் நாட்டு மக்களிடம் ஒரு பொறுப்பான அரசாக கைதுக்கான நியாயமான காரணங்களை அது சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. என்ன சொல்லலாம்? அவர்கள் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்கள் என்றா, இல்லை பன்னாட்டு பெருநிறுவனங்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய அரசப் படைகளால் பசுமை வேட்டை என்ற பெயரில் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்கள், அதனால் கைது செய்தோம் என்றா சொல்லமுடியும்? வேறு எந்தப் பொய்யையும் சொல்லி கைது நடவடிக்கையை நம்ப வைக்க முடியாத நிலையில் ஏற்கெனவே சொன்ன பழைய பொய்யையே மீண்டும் தோண்டி எடுத்து பயன்படுத்தி இருக்கின்றார்கள். அதுதான் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பொய்.

ஏற்கெனவே இந்தப் பொய்யை பயன்படுத்தி குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கல்லூரி மாணவி இஷ்ரத், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் போன்றவர்களும், சொராபுதின், அவரது மனைவி கவுசர்பீ, துளசிராம் பிரஜபதி போன்றவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மோடியைக் கொலை செய்ய முயன்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்ற புனித சிந்தனைக்கு சங்பரிவார ஆதரவாளர்கள் என்றோ வந்துவிட்டார்கள். பசுவின் புனிதமும், மோடியின் புனிதமும், கொலைகளை நியாயப்படுத்த இந்தியாவில் போதுமானதாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வாஸ், அருண் பெரைரா, கவுதம் நவலகா போன்றோருக்கு மாவோயிஸ்ட்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசு கூறுகின்றது. இவர்களுக்கும் பீமா கோரோகான் கிராமத்தில் டிசம்பர் 31 அன்று நடந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளதாகவும், மாநில அரசு கதை கட்டிவருகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். அப்படி இருந்தும் ஏன் இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்றால், இவர்கள் அனைவரும் தலித்துக்கள் மத்தியில் வேலை செய்வதுதான். ஆண்டாண்டு காலமாக தலித்துக்களை அடக்கி ஒடுக்கி வரும் மராத்தா சாதிவெறியை இத்தனை நாளாக சகித்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது திருப்பி அடிக்க ஆரம்பித்து இருப்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.

சாமானிய தலித் மக்கள் இன்று கருத்தியல் ரீதியாக எழுச்சி பெற்று தங்களை அடக்கி ஒடுக்கி வரும் மராத்தா சாதிவெறியர்களுக்கு எதிராகப் போராட களத்திற்கு வருகின்றார்கள் என்றால் நிச்சயம் அதற்கான கருத்தியல் பிரச்சாரம் அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதை அந்த மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வரும் இவர்களைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுதான் இவர்களை பிஜேபி அரசு கைது செய்ததற்கான காரணங்கள். இவர்கள் மட்டுமில்லாமல் ஆனந்த் தெல்தும்டே, கேவி குர்மானத், கிரந்தி தெகுலா, கே.சத்யநாராயணா, ஸ்டான் சாமி போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றார்கள் என்ற பொய்யை நம்ப வைப்பதன் மூலம் மோடியின் பாசிச ஆட்சிக்கு பலிகொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான சாமானிய இந்திய மக்களின் உயிர்கள் எல்லாம் அற்பத்தனமானவை ஆக்கப்படுகின்றன. மோடி தன் அரசியல் பயணத்தில் வெற்றி பெறுவதற்காக குஜராத் கலவரத்தில் இருந்து ஜிஎஸ்டி வரையும் எத்தனை ஆயிரம் இந்திய மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பி இருக்கின்றார்? அவர்களின் உயிர்களைவிட மோடியின் உயிர் மேன்மையானது அல்ல. மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் வெட்கம் கெட்ட முறையில் படுதோல்வி அடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது, லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவிக்கின்றார்கள்.

சாமானிய மக்களின் பணத்தை எல்லாம் விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் பாதுகாப்பாக கொள்ளையடிக்க இந்த அரசு உதவி வருகின்றது. இந்தியப் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்திருக்கின்றது. ஓட்டுமொத்த இந்திய மக்களும் மோடியின் ஆட்சியை வெட்கக்கேடான படுதோல்வி அடைந்த ஆட்சி என விமர்சனம் செய்கின்றார்கள். ஒரு முழு நிறைவான பாசிச ஆட்சி எப்படி இருக்கும் என்பதை மோடி நாட்டு மக்களுக்குக் காட்டிவிட்டார். அதனால் இனி என்ன பொய்யைச் சொன்னாலும் அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. அது மட்டும் அல்லாமல் வீரர்கள் வீரர்களோடு மட்டுமே போரிட்டு வெற்றி பெறுகின்றார்கள். அவர்கள் கோழைகளோடு எப்போதுமே போரிடுவதில்லை. காரணம் கோழைகள் அவர்களாகவே பயத்தில் செத்து விடுவார்கள்.

- செ.கார்கி