இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப் பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள் தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது? இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பார்க்கலாம்.

globe scienceமுதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளுதல் முக்கியம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) [1,2]. ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதே அதன் வாழ்வை தீர்மானிக்கிறது. தாவரங்கள் விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம்; அதுதான் வித்தியாசம். இந்த அறிவின் தேவை உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரை ஒட்டிய அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். ஒரு தனிமனிதனின் வெற்றி, வணிக நிறுவனத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி உட்பட தீர்மானிப்பது அவ்வமைப்புகள் பெற்றுள்ள அறிவு [4]. அதுபோல ஒரு அரசியல் அமைப்பின் வெற்றியும் அது பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமைகிறது. அறிவுதான் ஊற்றுக்கண், அதிலிருந்துதான் மற்றவை எல்லாம் வருகின்றன. இதிலிருந்து நமது அரசியல் வெற்றிக்கு அடிப்படை என்பது அவ்வெற்றியைப் பெறுவதற்கான அறிவு என்று சுருங்கி விடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை.

இப்பொழுது நமது கேள்வி “அந்த அறிவை எப்படிப் பெறுவது?” என்று மாறுகிறது. நீங்கள் நினைக்கலாம்: அறிவைப் பெறுவதில் என்ன பெரிய சிக்கல் இருக்கப்போகிறது? நாம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, அதைக் கொண்டு சிந்தித்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகத் தெரியப்போகிறது. இதில் என்ன பெரிய சிக்கல்?உண்மை என்னவென்றால் இதுபோன்ற சிந்தனைதான் நமது வெற்றிக்கு எதிராக இருக்கும் பெரிய தடைக்கல். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் அரிசுடாட்டில் அறிவைப் பற்றி இவ்வாறு கூறினார். நமது புலன்கள் இவ்வுலகில் உள்ளதை உள்ளவாறே காண்பிக்கிறது. அதனால் அறிவு என்பது நமது புலன்களின் வழியாக வருகிறது என்றார் [3]. இது போன்ற பார்வையின் விளைவாகத்தான் பூமி தட்டை என்றும், பூமியைச் சுற்றி சூரியன் வருகிறதென்றும் கருத்துக்கள் தோன்றின. அறிவியல் முன்னேற்றம் என்பது நமது புலன்கள் நம்மை ஏமாற்றும் என்பதை உணர்ந்தபின்தான் ஆரம்பித்தது. இருப்பதிலேயே இதுதான் சிக்கலானது. நாம் பார்ப்பவை தவறாக இருக்கலாம் என்று எண்ணுவது மிகக்கடினமானது. ஆனால் அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. இக்கருத்து அறிவியலுக்கு மட்டும் பொருந்துவது என்று நினைப்பது தவறானது. அனைத்து அறிவுக்கும் (அரசியல் உட்பட) பொருந்தும்.

அறிவை நாம் பார்த்து அடைவதில்லை. மாறாக நாம் இவ்வுலகை தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம் [1,13]. உதாரணமாக நியூட்டனின் கண்டுபிடிப்பை எடுத்துக் கொள்வோம். ஆயிரக்கணக்கான வருடங்களாக, ஆப்பிள்கள் மரங்களில் இருந்து விழுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள், விண்ணில் உலவும் கோள்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏன் நியூட்டன் மட்டும் அதன் இயக்க விதிகளை அறிய முடிந்தது? ஈராயிரம் வருடங்களாக மக்கள் நினைத்தது என்னவென்றால் விண்ணை கடவுளர் இயக்குகின்றனர் என்றும், பூமியில் உள்ள பொருள்கள் அனைத்தின் இறுதி நிலை பூமி என்பதால் அனைத்து பொருட்களும் பூமியை நோக்கி விழுகின்றன என்று கருதினர்.

கோபெர்னிக்சு, கலிலியோ, கெப்ளர் ஆகியோரது கண்டுபிடிப்புகள், விண்ணில் உலவும் அனைத்தும் பூமியில் உள்ள பொருள்களும் சில இயந்திர விதிகளின் படி இயங்கின்றன என்ற பார்வையை கொண்டு வந்தது. இந்த தத்துவப் பார்வை கிடைத்தபின்தான் நியூட்டன் அதனைக் கொண்டு இயக்க விதிகளைக் கண்டறிந்தார்[12]. இல்லையென்றால் நியூட்டனும் மற்றவர்களைப் போல ஆப்பிள் விழுவதை பார்த்திருப்பார், ஆனால் ஒன்றும் அறிந்திருக்க மாட்டார். நியூட்டன் இதனை "என்னால் இவளவு தூரம் பார்க்க முடிந்திருக்கிறதென்றால், அது மற்ற அறிவியலாளர்களின் தோளின் மேல் ஏறி நின்று பார்த்ததனால் தான்" என்று கூறுகிறார்.

If I have seen further, it is by standing upon the shoulders of giants. ”

முதலில் தத்துவம், அதன்பின் தான் பார்வை வரும். தத்துவமில்லாமல் பார்க்க முடியாது.

இன்னொரு உதாரணம், ஒரு குழந்தை நம்மைப் பார்த்து நமது மொழியை எளிதாகக் கற்றுக்கொள்கிறது. ஆனால் நம்மைப் பார்த்து ஆடு மாடுகளோ, நாயோ, கோழியோ ஏன் பேச முடியவில்லை? அடிப்படைக் காரணம் என்னவென்றால், அவ்வாறு கற்பதற்கான வழிமுறைகள் குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலம் பிறப்புடன் வந்து விடுகின்றனஎன்ன கற்பது என்று தெரிந்தால்தான் கற்க முடியும். பார்த்து கற்றுக்கொள்ள முடியாது. கற்பதற்கான நிரலை (program) குழந்தையின் மூளையில் மரபணுக்கள் பிறப்பிலேயே எழுதிவிடுகின்றன. இந்த நிரல் எப்படிப் பட்டதென்று இன்னும் நமக்கேத் தெரியாது. அதனால் தான் நாம் இன்னும் இயந்திரங்களை விட புத்திசாலியாக இருக்கிறோம். செய்யறிவு (Artificial Intellegence) ஆராய்ச்சியின் ஒரு குறிக்கோள் இதைக் கண்டுபிடிப்பதே. அதைக் கண்டுபிடித்து விட்டால், இயந்திரங்கள் நம்மை முந்திவிடும். அதுவரை இயந்திரங்கள் நமக்கு அடிமைதான்.

கார்ல் பாப்பர் இவ்வாறு கூறுகிறார்:

Philosophers and even scientists often assume that all our knowledge stem from our senses… This kind of approach is a colossal mistake. For our senses to tell us we must have prior knowledge. In order to be able to see a thing, we must know what things are… This prior knowledge cannot be in turn be the results of observation; it must rather be the result of trial and error. [1]

அழிந்துபோன பண்டைய நாகரீகங்களை ஆராய்ந்த ரெபேக்கா கோசுட்டா அவர்கள், அவ்வழிவிற்கு அடிப்படைக் காரணமாகக் கூறுவது "அறிவு முடக்கம்" [5,6]. ஒரு சமூகம் தனது வளர்ச்சியின் பொழுது தோன்றும் சிக்கல்களை காலகாலமாக தனக்குத் தெரிந்த முறைகளைக் கொண்டு சாதாரணமாக தீர்த்துவிட முடியும். ஆனால் சமூகம் பெரிதாக வளர்ந்து பெரிய சிக்கல்கள் உருவாகும்பொழுது, அச்சிக்கல்களை தீர்க்கும் அறிவாற்றல் இல்லாவிட்டால் அச்சமூகத்தின் அழிவு ஆரம்பமாகிறது. ஒரு சமூகம் இந்நிலையில் உள்ளதா என்பதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. 1) அறிவு முடக்கம் ஏற்படும்: புதிய சிந்தனைகள் இல்லாமல், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக சில மாறுதல்களுடன் அதே வழிமுறைகளை பின்பற்றுவார்கள். 2) நிலைமை மோசமானபின் நம்பிக்கைகள் முன் நிறுத்தப்படும். தாம் கடினமாக அர்ப்பணிப்புடன் குறிக்கோள்களை நோக்கி உழைத்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற நம்புவர், ஆனால் நிலவரம் அதுபோன்ற முயற்சிகள் தோல்வியடைவதையே காட்டும். இவ்விரண்டு குறிகளும் தோன்றியபின், அச்சமூகம் அழிவிற்குத் தயாராகிறது. என்னுடைய பார்வையில் தமிழ்ச்சமூகமும் இதுபோன்ற அறிவுச் சிக்கலில் மாட்டியிருக்கிறது போன்று தோன்றுகிறது. உதாரணமாக கடந்த பல பத்தாண்டுகளாக மொழி சீரழிந்து வருகிறது, குறிப்பாக ஆங்கில மொழியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, தமிழ் வழியில் பயிலுவோரின் விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. ஈழத்தில் இனவழிப்பு, தமிழகத்தில் மொழி அரசியல் உரிமைகள் எனப் பல சிக்கல்கள் என தமிழ்ச்சமூகம் பல பத்தாண்டுகளாக எதிர்நோக்கி வருகிறது. இச்சிக்கல்கள் ஓரிரு தலைமுறைகளையும் கடந்துவிட்டன, ஆனாலும் தீர்ந்த பாடில்லை [6].

நமது பலம் என்பது நாம் பெறும் அறிவிலேயே உள்ளது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நமது அறிவு நமது சூழலுக்கு ஏற்றபடி இல்லையென்றால், நமது அழிவு என்பது உறுதியானது. அது இயற்கையின் விதி, அதுதான் இடார்வினின் பரிணாமக் கோட்பாடும். "பலமானது வெல்லும்" என்பது தவறான புரிந்து கொள்ளல் [1].

அவ்வாறான அறிவை எளிதாக புலன்கள் மூலம் அடைய முடியாது. அதற்கு ஆழமான ஆராய்ச்சியும், அறிவியல் கருத்துக்களை கற்றறிதலும், பல்வகையான அறிவியல் பிரிவுகளை இணைத்து அறிதலும் அவசியம். இது ஒரு கூட்டு முயற்சியின் மூலமே சாத்தியமானது. அவ்வாறு பெறப்படும் அறிவு நமது புலன்கள் கூறுவதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம். உதாரணங்களாக நான் சில சமூகம் சார்ந்த நேர்மாறான அறிவியல் கருத்துக்களை முன்வைக்கிறேன். இவற்றைப் பற்றி ஏற்கனவே தனியாக கட்டுரைகள் எழுதி இருப்பதால், அதிக விவரத்திற்கு சுட்டிகளை பார்க்கவும்.

  1. பகுத்தறிவுதான் மனிதனை இயக்குகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவதோ "பகுத்தறிவு உணர்வுகளுக்கு பெரும்பாலும் அடிமை" என்று. [7]
  1. ஒரு பலமான நாட்டை சமூகத்தை உருவாக்க ஒரு பலமான தலைமையின் கீழ் செயல்படவேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது. இது உண்மையென்றால், ஏன் பலமான பண்டைய ரோமாபுரியும், எகிப்தியர்களும் அடையாளமே இல்லாமல் அழிந்தார்கள்? ஆனால் பலமற்ற யூதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது கீழிருந்து மேலாக சமூக அமைப்புகளைக் கட்டி எழுப்பவேண்டும். அதில் அரசியல் தலைமை என்பது ஒரு பங்கே. அது முதன்மையானது அல்ல. [7,8]
  2. மொழி வளர அது பயனுள்ளதாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அழிந்து போகும் என்ற எண்ணம் நிலவுகிறது. இது சரியென்றால், அழிந்துபோன ஈப்ரு மொழியை எப்படி யூதர்கள் உயிர்பித்தார்கள்? அழிந்த மொழிக்கு பொருளாதார பலம் பூச்சியம் தானே! அடிப்படை உண்மை என்னவென்றால், ஒரு மொழி வாழ அதன் தகுதி உயர்வாக இருக்கவேண்டும். அந்த உயர்வு பொருளாதார வழியாக வரலாம் அல்லது வேறு வழியாகவும் வரலாம். யூதர்கள் மொழியை அவர்களின் அடையாளத்தில் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டார்கள். ஒருவரின் அடையாளத்தில் அங்கமாவது, அனைத்தையும் விட உயர்வாகவே கருதப்படும். அப்படித்தான் அவர்கள் தங்கள் மொழியை மீட்டார்கள். [9]
  3. மனிதர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மை (Freewill) உடையவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அறிவியல் கூறுவது என்னவென்றால் "மனிதர்களின் சுயமுடிவு என்பது ஒரு மாயை". அவன் எடுக்கும் முடிவு அவன் கைகளில் இல்லை. ஒருவரின் செயல்பாடு என்பது வரலாற்றாலும், சுற்றுச்சூழலாலும், ஓரளவு குருட்டுத்தனத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியென்றால் நமது அரசியல் சமூக சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி? இவ்வுலகில் அனைத்தும் விதைகள் போன்றதுதான். சரியான சூழலை அமைந்துவிட்டால் அவை தானாக செழிக்கும். விதை முளைக்கவிட்டால் குற்றம் விதையில் இல்லை. அது நிழலில் நடப்பட்டிருக்கலாம். [10]

இக்கருத்துக்களின் சிறப்பு என்னவென்றால் இதன் வழியாக நாம் இன்று செய்யும் பிழைகளையும், எதிர்காலத்தில் என்ன நடக்கும், நாம் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்றும் பார்க்கமுடியும்:

  1. மக்களை வெறும் பகுத்தறிவு நோக்கில் அணுகுவது நீண்ட காலப் பலனைத் தராது. மக்களை பிணைப்பது உணர்வுகளே. அவர்களை உணர்வுகளால் ஒன்று திரட்ட வேண்டும். அதற்காகப் பகுத்தறிவு கூடாது என்பதல்ல. உணர்வுகளைப் பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து, தேவையற்றவையை நீக்கி, பயனுள்ளவற்றை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். பகுத்தறிவையும் உணர்வுகளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். மக்களின் உணர்வுகள் என்ன சொல்கிறதோ அதற்குத்தான் வாக்களிப்பர், பகுத்தறிந்து அல்ல. திரைப்பட நடிகர்கள் தொடர்ச்சியாக அரசியலில் வெல்வது இதற்கு நல்ல உதாரணம். [7]
  2. தனி ஒரு தலைவனை அல்லது ஒரு அரசியல் கட்சியை நம்பிய செயல்பாடுகள் நீண்ட கால நோக்கில் சமூகத்திற்குத் தோல்வியைத் தரும். மற்ற சமூக அமைப்புகளின் துணை இல்லாமல் அரசியல் மட்டும் செய்து வெல்வது கடினம். அவ்வாறு தனித்து நல்ல தலைமையுடன் வெற்ற பெற்றாலும், குறிக்கோள்களை நிறைவேற்றுவது கடினம். மேலும் அதற்கடுத்த தலைமை நல்ல தலைமையாக செயல்படும் என்று எந்த உறுதியும் இல்லை. நீண்ட கால அரசியல் அனைத்தும் அமைப்பு சார்ந்தவை. நாம் பல சமூக அமைப்புகளை உருவாக்கி இணைந்து செயல்படுவதுதான் நிலைத்து நிற்கும். [8]
  3. இன்று பெரும்பாலானோர் மொழியை அவர்களின் அடையாளமாகக் கருதுவதில்லை. அதனால் அதனை தரம் குறைந்ததாகப் பார்க்க முடிகிறது. இது தமிழ்மொழியின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். மொழியை மக்களின் அடையாளத்துடன் பிணைக்கும்படியாக செயல்படவேண்டும். அவ்வாறு பிணைத்தால்தான் மொழி அழிவை தங்கள் அழிவாக உணர்ந்து காக்கப் போராடுவார்கள். இந்த அடையாளம் பள்ளி செல்லும் வயதினில் உருவாவதனால், அதற்கேற்ற கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு திட்டத்தை ஏற்கனவே ஒரு கட்டுரையாக எழுதி இருக்கிறேன். [11]
  4. நாம் பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இந்துத்வா அணிகள் அரசின் பாடத்திட்டங்கள் மூலமும் மற்ற செயல்பாடுகள் மூலமும் பள்ளி சிறார்களை தமிழர் என்ற அடையாளத்தை நீக்கி இந்துத்வா அடையாளத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதை நாம் தொடர்ந்து புறக்கணித்தால், இந்துத்வாவின் வெற்றி சாத்தியமான ஒன்றே.
  5. மனிதர்களுக்கு சுயமுடிவெடுக்கும் தன்மை இல்லாததால், எது மாதிரியான சூழல் மக்களை ஒருமைப் படுத்துமோ, அதனை நாம் உருவாக்கவேண்டும். உதாரணமாக, ஒற்றுமை ஏற்பட அனைவருக்கும் தமிழர் வரலாறும் மொழியும் சிறு வயதிலிருந்து கற்பிக்கப்பட்டு தமிழர் என்ற உணர்வை அனைவருக்கும் அளிக்க வேண்டும். பண்பாடு என்பது ஒரு மனிதனின் பெரும்பாலான சுற்றுச்சூழல். அதை சரியான திசையில் இருந்தால், மனிதர்களின் செயல்பாடுகளும் அதற்கேற்ப இருக்கும். பண்பாட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு சாதிமதப் பிளவுகளைக் களையலாம், நம்மை ஒரு அறிவார்ந்த முன்னேறிய சமூகமாக மாற்றலாம். [10]

அடிப்படையில் நமது சிக்கல்கள் அனைத்தும் அறிவுச்சிக்கல்கள். அதை உணராதுதான் இன்று நமது முன்னேற்றத்திற்கு எதிரான பெரிய தடைக்கல். நாம் மிக எளிதாக நாம் கொண்டிருக்கும் தத்துவங்களில் திருப்தி அடைந்து விடுகிறோம். நாம் செயல்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தில் சிறிதாவது நமது அறிவு முன்னேற்றத்திற்கு அளிக்க வேண்டும். நமது தத்துவங்களை தீவிரமாக ஆராய்ந்து அதிலுள்ள பிழைகளை நீக்கி, புதிய தத்துவங்களை உருவாக்கி, நமது செயல்பாடுகளை அதற்கேற்ப சிறப்பாக்கிக் கொண்டே செல்ல வேண்டும். அவ்வாறு மாறுவதற்கு நாம் முதலில் நிராகரிக்க வேண்டியது, நமது புலன்களின் மீதான அதீத நம்பிக்கை. நமக்கு ஒன்றும் தெரியாது, நம்முடைய அறிவு எப்பொழுதும் அரை குறையான அறிவே என்று உணர்ந்து, அதை தீவிர அறிவியல் பூர்வமான சிந்தனையுடன் வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும். அவ்வாறான அறிவு பெரும்பாலும் நமது புலன்கள் என்ன கூறுகிறதோ அதற்கு எதிர்மரையாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், எந்த கருத்தையும் உடனடியாக ஆராயாமல் நிராகரிக்கக் கூடாது. இக்கட்டுரை அத்திசையை நோக்கிய ஒரு பார்வையே. அறிவியல் கருத்துக்கள் எதையும் உறுதியான உண்மை என்று அடித்துக்கூற முடியாது. அறிவியலின் தன்மை அப்படி, ஆனால் அதுதான் இருப்பதியிலேயே சிறந்த அறிவைத் தரவல்லது. அதை மேலும் ஆராய்ந்து தொடர்ந்து வளர்த்துக் கொண்டே செல்லவேண்டும். அது ஒரு கூட்டு முயற்சியினால்தான் சாத்தியமாகும். இதுதான் என் பார்வையில் வெற்றிக்கான ஒரு அறிவியல் பூர்வமான பாதை.

உசாத்துணை

  1. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge. Harvard University Press, 1997.
  2. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
  3. Feyerabend, Paul. Against method. Verso, 1993. ( page 107, 108)
  4. Hidalgo, Cesar. Why information grows: The evolution of order, from atoms to economies. Basic Books, 2015.
  5. Costa, Rebecca D. The watchman's rattle: thinking our way out of extinction. Random House, 2012.
  6. சு. சேது, ஒரு சமூகம் அழிவதற்கான அறிகுறிகள்
  7. சு. சேது, சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்
  8. சு. சேது, யார் ஆட்சி செய்வது?
  9. சு. சேது, மொழி வளர்ச்சிக்கு எது முக்கியம்?
  10. சு. சேது, சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள் - பகுதி 2
  11. சு. சேது, தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்
  12. Dolnick, Edward. The clockwork universe: Isaac Newton, the Royal Society, and the birth of the modern world. New York: HarperCollins, 2011.

Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK, 2011.

Pin It