தோழர் மணியரசன் அவர்களுக்கு,

   எப்போதும் முதன்மைச் செய்திகளை அம்போ என விட்டுவிட்டு, ஒரு சொற்றொடரையோ, ஒரு சொல்லையோ மட்டும் எடுத்துக்கொண்டு திசை திருப்பும் கலையில் வல்லவர் தாங்கள் என்பது உலகறிந்த உண்மை.

   அவற்றில் ஒன்றாகத்தான் தோழர் கொளத்தூர் மணி 2006ஆம் ஆண்டில் நடந்த குஷ்பு - கற்பு விவாதத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாகவும் - இன்றளவும் தொடர்கிறீர்கள்.

    அவ்வுரையில் உங்களை நோக்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், அதாவது எந்த பொருள் தொடர்பாக விவாதம் எழுந்ததோ அப்பொருள் தொடர்பாக உங்களை நோக்கி தோழர் கொளத்தூர் மணி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், “ஆரிய மாயை”க்கு எதிர்ச்சொல் ”திராவிட மாயை” ; ”ஆங்கிலமாயை”க்கு எதிர்ச் சொல் ”தமிழ்மாயை”. முன்னது இனம் பற்றியது ; பின்னது மொழி பற்றியது” – என்ற தோழர் கொளத்தூர் மணியின் உரையில் இருந்து அந்த ஒற்றை வரியை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு “தமிழ்த் தேசியம் – திராவிட தேசியம்” என்ற ஒரு தொடரை எழுதி - பந்தை விட்டுவிட்டு காலை உதைக்கச் சென்றவர் நீங்கள்.

    அந்த தொடரில் எழுதிய ஒரு செய்தியை மீண்டும், இப்போது “தமிழர் கண்ணோட்டம்” ( கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு வள்ளுவர் காலம் முதல் பாரதிதாசன் காலம்வரைகூட பாடல்களில் உள்ள பொருள் ‘தாட்சண்யம்” என்பதுதானே தவிர “பார்வை, கோணம், நோக்கு’ என்ற பொருள் இல்லை என்றுகூட அவ்வுரையில் தோழர் மணி பேசியிருந்தார் ) திசம்பர் 1-15 இதழில் மீண்டும் எடுத்தாண்டிருக்கிறீர்கள்.

     “ அவ்வையார் கூட உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ‘ என்று இடுப்புக்குகீழ் அணிந்த உடையை மட்டுமே கூறினார். ”  என்று தோழர் மணி பேசியதற்கு நீங்கள் “ உண்பது நாழி உடுப்பவை இரண்டே “ என்ற பாடல்தான் உண்டு! உடுப்பது நான்கு முழம் என்கிறர் தோழர் மணி “ என எள்ளி நகையாடிவிட்டு “மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடிய புறப்பாடல் (189 ) ” உண்பது நாழி, உடுப்பவை இரண்டே” என்றுதான் கூறுகிறது “ என்று சான்று கொண்டும் நிறுவுயுள்ளீர்கள்.

     இரண்டுமுறை குறைகூறிய பிறகாவது கொஞ்சம் நிதானமாக தோழர் மணியின் உரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள். நீங்கள் உலகத் தமிழ்க் கழகத்தின் மாணவர் கால, தொடக்க கால உறுப்பினர், தமிழ் அறிஞர் என்ற செருக்கினை சற்று விலக்கி வைத்துவிட்டு நிதானமாகப் படியுங்கள்.

       தோழர் மணி அவ்வையார் பாடலில் இருக்கிறது என்று பேசியிருக்கிறாரா? அல்லது மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனாரின் புறநானூற்றுப் பாடலில் இருக்கிறது என்று பேசியிருக்கிறாரா? அவ்வையார் பாடியதாகத்தானே பேசியிருக்கிறார்.

     யாரிடமாவது அவ்வையாரின் “ நல்வழி “ நூல் இருந்தால் எடுத்துப் பாருங்கள்; படியுங்கள். எந்த நல்வழி? பாலும் தெளிதேனும் பாகும், பருப்பும் என நான்கைக்  கொடுத்து, பிள்ளையாரிடம் சங்கத் தமிழ் மூன்றைக் கேட்கும் முதல் பாடலைக் கொண்ட நல்வழி தான். .சரி, கிடைக்கவில்லையா? வேறு வழியொன்றிருக்கிறது. நிதானமாக … நிதானமாக … என் கையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள்…. நிதானம்… நிதானம்.

      முன்பு ‘ தமிழ் இணையப் பல்கலைக் கழகம்’ என இயங்கி வந்த, தற்போதைய ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’ இயக்கிவரும் இணையப் பக்கத்துக்குச் செல்லுங்கள். ( www.tamilvu.org ) இணையப் பக்கத்தைத் திறந்ததும் > நூலகம் > நூல்கள் > நெறிநூல்கள் > நல்வழி …. சென்று சொடுக்குங்கள்…. அவ்வையார் அருளிய நல்வழி – ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை என்ற முகப்புப் பக்கம் தெரியும். அந்நூலின் 28ஆம் பாடலைப் படியுங்கள்.

மனவமைதி வேண்டும்

28.  உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
    எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
    சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

(பதவுரை)  உண்பது, நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம். (28)

       உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ! இருக்கிறதா நான்கு முழம்? இப்போது மீண்டும் ஒரு முறை தோழர் மணியின் உரையை நிதானமாகப் படியுங்கள். தோழர் மணி எடுத்துரைத்தது அவ்வையார் பாடலையே தவிர நக்கீரனார் பாடலை அல்ல என்பதையும், தோழர் மணி எடுத்துரைத்தது சரியே என்பதையும் இப்போதாவது உணர்கிறீர்களா ?

     மூன்றாவதுமுறையாக எழுதுகிறபோதாவது இதையே மீண்டும்  எடுத்தாளாதீர்கள் ! உங்கள் தோழர்கள் உங்களைப் பற்றியும், உங்கள் எழுத்துகளைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்!

-      பெரியார் தொண்டன்

Pin It