‘கடப்பாரையை வைத்து நெம்பினால்கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது’ என சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருந்தார். சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், எடப்பாடியால் எப்படி இப்படி ஆணித்தரமாக பேச முடிகின்றது என்றால், அவருக்கு நீதிமன்றங்கள் மீதும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் தனது குருநாதர் மோடி மீதும் இருக்கும் நம்பிக்கைதான். குண்டுவெடிப்பு வழக்குகளிலும், கொலைக் குற்ற வழக்குகளிலும் நேரடியாக சம்மந்தப்பட்ட தனது நண்பர்களை எல்லாம் சட்டப்படியே விடுவிக்க முடிந்த மோடிக்கு எடப்பாடியை காப்பாற்றுவது எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. பெரும்பான்மை என்ன பெரிய பெரும்பான்மை, எடப்பாடிக்கு ஆதரவாக மொத்தமே பத்து எம்.எல்.ஏக்கள் இருந்தால் கூட போதும், மோடி அதை வைத்தே ஜனநாயகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் பெருச்சாளியைப்போல நுழைந்து, அதைக் கடித்துக் குதறி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை எல்லாம் கந்தல் கந்தலாக ஆக்கிவிடுவார். மோடிக்கு நீதியை நிலைநாட்டுவது என்று வந்துவிட்டால் நீதிபதிகளுக்கு பரலோகப் பதவியை கொடுத்தாவது அதைச் செய்துவிடுவார். உதாரணமாக நீதிபதி லோயாவை நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.
அதற்காக அனைவருக்குமே இந்தப் பாக்கியம் கிடைத்துவிடும் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. மோடியின் மனமறிந்து தீர்ப்பு கொடுப்பவர்களுக்கு அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, இல்லை ஆளுநராகவோ இவ்வுலகிலேயே பதவியைக் கொடுத்து அவர்களின் லெளகீக வாழ்க்கையை சிறப்பாக்கி விடுவார். நீங்கள் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின் படி தீர்ப்புக் கொடுக்கின்றீர்களா, இல்லை மனு எழுதிய சட்டத்தின் படி தீர்ப்பு கொடுக்கின்றீர்களா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு பதவி உயர்வு பூலோகத்திலா, இல்லை பரலோகத்திலா என்பது முடிவு செய்யப்படும். நிலைமை இவ்வாறு இருக்க தன்னுடைய கண்ணசைவுக்கு இந்திய அதிகார வர்க்கத்தையே கட்டுப்படுத்தும் ஒருவர் தனக்கு ஆதரவாக இருக்கும்போது, எடப்பாடி சுவாமிகள் எதற்காக கவலைப்பட வேண்டும். கடப்பாரையை அல்ல புல்டவுசரையே வைத்து தூக்கினாலும் இந்த அடிமை அரசை யாருமே கவிழ்க்க முடியாது என்பதுதான் உண்மை.
கடந்த மார்ச் மாதம் நாகர்கோயிலில் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்ட புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்துப் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள், நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிப்பது மட்டும் முக்கியமானது அல்ல. அந்த வழக்குகளில் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்றார். அதுதானே முக்கியம், தரங்கெட்டத்தனமாக தீர்ப்பு கொடுப்பதற்கு நீதி மன்றங்கள் என்ன கட்டப்பஞ்சாயத்து நிலையங்களா, எவன் அதிகமாக காசு கொடுக்கின்றானோ, அவன் காலை நக்கி தீர்ப்பு கொடுப்பதற்கு. சட்டத்தை நன்கு கற்ற அறிவுஜீவிகள் இருக்கும் இடமல்லவா நீதிமன்றங்கள். அதனால் வழக்கை நன்கு ஆராய்ந்து பார்த்து தரமாக தீர்ப்பு கொடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. சொன்னால் மட்டும் போதுமா? தரமான தீர்ப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என ஓர் உதாரணம் காட்ட வேண்டாமா?. அதைக் காட்டத்தான் பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் “சபாநாயகர் செய்ய வேண்டிய பணியை நீதிமன்றம் செய்ய முடியாது. ஓபிஎஸ் எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. சபாநாயகரின் அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிட முடியாது, உத்திரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பு கொடுத்தார்.
தீர்ப்பு விலைகொடுத்து வாங்கப்பட்டது என விமர்சனம் எழுந்த போது, “தான் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக” தெரிவித்தார். தரமான தீர்ப்பு என்றால் அது இதுதான். திருடுபவன், கொலை செய்பவன், ஊர்குடி கெடுப்பவன் எல்லாம் மனசாட்சிக்கு விரோதமாக அவற்றைச் செய்வதில்லை. அவர்கள் தன்னளவில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டே அவற்றை செய்கின்றார்கள். நீங்கள் அவர்களிடம் ஏன் கொலை செய்கிறாய், ஏன் திருடுகின்றாய், ஏன் ஊர்குடி கெடுக்கின்றாய் என கேட்டுப் பாருங்கள், அவர்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு நியாயமான காரணத்தை உங்களுக்கு உபதேசம் செய்வார்கள். தன்னை ஆண்டவன் ஆதரிப்பதாக கூறுவார்கள். அவரவர்களின் மனசாட்சி அவரவர்களுக்குப் புனிதமானது என்றால் அதன் படி நடப்பதும் சரி என்றால், இங்கே எதற்கு நீதிமன்றங்கள் என நீங்கள் கேள்வி கேட்டுவிடக்கூடாது. கேட்டால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூட தொடுக்கப்படலாம்.
இப்படி தரமான தீர்ப்பு கொடுத்த நீதிபதி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மீண்டும் மனசாட்சி படியே தீர்ப்பு கொடுத்திருக்கின்றார். இந்த முறையும் அவர் போன தீர்ப்பில் சொன்னதையே தான் சொல்லி இருக்கின்றார். அவர் கொடுத்த தீர்ப்பில் “இந்த விஷயத்தில் பேரவைத் தலைவர் எடுத்த முடிவு நியாயமற்றது எனக் கூற முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி பேரவைத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்துள்ள முடிவில் நீதிமன்றம் தலையிட்டு, நீதிமன்றம் கூறுவதுதான் சரியெனக் கூற முடியாது. அவ்வாறு தலையிடுவதும் உகந்ததாக இருக்காது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பேரவைத் தலைவரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதற்கு குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பேரவைத் தலைவர் சட்டத்துக்கு விரோதமாக விபரீதமான, முரண்பாடான முடிவுகளை எடுக்கும்போது மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். உதாரணமாக, பேரவைத் தலைவரின் அதிகார வரம்பை மீறி செயல்படுதல், இயற்கை நீதிக்கு எதிராக செயல்படுதல், அமலில் உள்ள சட்டத்துக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும். மேலும் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் எடுத்துள்ள முடிவில் நீதிமன்றம் சரியான காரணங்கள் இல்லாமல் தலையிட முடியாது. எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது என ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாது. எனவே தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பேரவைத் தலைவரின் எந்த முடிவிலும் தலையிடக்கூடாது என்பதில் தலைமை நீதிபதி உறுதியாக இருப்பது இதன் மூலம் தெரிகின்றது. ஆனால் மற்றொரு நீதிபதியான எம். சுந்தர் பேரவைத் தலைவர் உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்திரவை ரத்து செய்கின்றேன் என்று தீர்ப்பு கொடுத்திருக்கின்றார். இதன் மூலம் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்படவுள்ளது.
ஏன் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்றால், இரண்டு நீதிபதிகளுமே தங்களின் மனசாட்சிப்படி செயல்பட்டிருக்கின்றார்கள் என்பதால்தான். ஒரு நீதிபதியின் மனசாட்சி பேரவைத் தலைவரின் முடிவில் தலையிடக்கூடாது என்றும், மற்றொரு நீதிபதியின் மனசாட்சி 'தலையிடலாம்' என்றும் சொல்லியிருக்கின்றது. இது மனசாட்சிகளுக்கு இடையேயான முரண்பாடு. இரண்டு மனசாட்சிகளும் ஒரே போல தீர்ப்பு கொடுத்திருந்தாலும் தற்போதைக்கு எதுவுமே நிகழ்ந்திருக்கப் போவதில்லை. ஏனென்றால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநரின் மனசாட்சியோ, இல்லை நீதிமன்றத்தின் மனசாட்சியோ இப்போதைக்கு உத்திரவிடும் நிலையில் இல்லை. காவிகளின் மனசாட்சி நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்தே தமிழக சட்டசபைக்கு தேர்தல்வரும் என்று உறுதியாக சொல்லி வருவதால் பிஜேபி தன்னுடைய ஆட்சியை நிறைவு செய்யும்வரை எடப்பாடி சுவாமிகள் தன்னுடைய புஜபல பராக்கிரமத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டுவதை யாரும் தடுக்க முடியாது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய கடைசி தமிழனையும் கொல்லும்வரையிலும் சேலம் முதல் சென்னை வரை எட்டுவழி சாலை அமைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், வனங்களையும் அழிக்கும் வரையிலும், இன்னும் கெயில், நியூட்ரினோ போன்ற திட்டங்களை நிறைவேற்றும் வரையிலும், கனிசமான அளவு தமிழ்நாட்டு மக்களை அம்மாவின் பரலோக ராஜ்ஜியத்திற்கு அனுப்பி வைக்கும் வரையிலும் இந்த ஆட்சி நீங்கப் போவது கிடையாது.
காவிகளின் கனவுத்திட்டங்கள் இன்னும் பல செயல்படுத்த முடியாமல் இருக்கின்றது. அதுவரை மனசாட்சிபடி இந்த ஆட்சி நீடித்தே தீரும். காவிகளின் ஆட்சி முடியும் தருவாயில் திடீரென்று ஒரு மனசாட்சி வந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி சுவாமிகள் தலைமையிலான ஆட்சிக்கு உத்திரவிடும். அந்த நாளில் இந்த ஆட்சி தனது பூத உடலை துறந்து அதன் ஆன்மா காவிகளோடு இரண்டற கலக்கும்.
- செ.கார்கி