freedom of press

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் - அரசு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம்-ஆணையம் மற்றும் லோக்பால் சட்டம் போன்று, இந்த ஊடகப் பாதுகாப்புச் சட்ட - முதலாளித்துவ ஜனநாயக கோரிக்கையை மக்கள் ஜனநாயக இயக்கங்கள் ஜனநாயக ஆர்வலர்கள் அனைவரும் முன் வைக்க வேண்டும். ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இக்கோரிக்கைகள் எழுந்துள்ளன. சில இடங்களில் சட்ட வரைவு செயல் முறையிலும் (process) உள்ளன.

மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடுகளில் -  மோதல்களில் முதலாளித்துவ ஜனநாயக ஊடகங்களும் ஏகாதிபத்தியம் தவிர்க்க முடியாமல் வழங்கியிருக்கும் சமூக வலைதளங்கள் என்கிற மக்கள் ஊடகங்களும் ஒடுக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கீழ்கண்ட விசயங்களில் தேவையானவற்றிற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வது அல்லது தனிச் சிறப்பு வகை மத்திய சட்டம் உருவாக்குவது அல்லது சிலவற்றிற்கு concurrent listல் வைத்து மத்திய - அனைத்து மாநில அரசுகள் உரிய மசோதா  மூலம் சட்ட திருத்தத்தை உருவாக்குவது வேண்டும்:

1. ஒரு குடிமகன் தனிமனித அந்தரங்க விசயங்கள், ஆபாசம் தவிர்த்து (பட்டியலிடப்பட்டு), மற்ற அனைத்து விசயங்களை ஊடகங்கள் மட்டுமல்லாது எந்த தனி நபரும் மொபைலில் படம் பிடிப்பதையும்... Online or Offline மூலமாக, any app or transfer method or connectivity tool மூலமாக, எந்தக் கருவிகள் (குறிப்பாக Mobile to Mobile) மூலமாக ஒருவருக்கொருவர் எந்த தகவல்களையும் தரவுகளையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதையும் online grouping or assembly-யையும் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்.

2. தனியார் மற்றும் அரசு பொது நிகழ்ச்சிகள், சம்பவங்கள், மக்கள் போராட்டங்கள், மக்கள் மீதான தாக்குதல்கள், கலவரங்கள் எதற்கும் ஊடகங்கள் மட்டமல்லாது தனிக் குடிமகன் படம் பிடிக்க - செய்தி சேகரிக்க குறிப்பாகவோ, பகுதியாகவோ தடுக்கப்படக் கூடாது. அப்படி தடுப்பது உபகரணங்களை குறிப்பாக மொபைலைப் பறிப்பது - உடைப்பது சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். தண்டனைக்குரியதாக்கப்பட வேண்டும்.

3. அரசாங்க - அரசு அதிகாரிகளின் மக்கள் நலத் திட்டங்களுக்கான பொது இடத்திலல்லாத தனிப்பட்ட இடத்திலான மாநாடுகள், கூட்டங்கள், சந்திப்புகள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் எதையும் ஊடகங்கள் மட்டுமல்லாது தனி ஆர்வலர்களும் படம்பிடிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சிலவற்றை (பட்டியலிட்டு) தவிர மற்ற அனைத்து  அரசு அலுவலக நடவடிக்கைகள் மக்களுக்கு வெளிப்படையாக்க வேண்டும்.

4. 144 தடை விதிக்கப்பட்ட இடங்களிலோ, அரசு தடைவிதிக்கும் பிற பகுதிகளிலோ ஆளில்லா சிறு விமான காமிராக்கள் (Helecam) மூலம் ஊடகங்கள் மட்டுமல்லாது குடிமகனும் படம்பிடித்துக் கண்காணிக்க உரிமை - அனுமதி வழங்கப்பட வேண்டும். அதைத் தடுப்பது, சுட்டு வீழ்த்துவது சட்ட விரோதமாக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட வேண்டும்.

5. எந்த ஒரு இணைய சேவை வழங்குவோரும் (Internet Service Providers - ISPs) பயன்பாட்டாளரின் browsing history- யை internet activity-யை உளவு பார்ப்பதற்கும் தகவல்களை அரசுக்கு வழங்குவதற்கும் தனியாருக்கு விற்பதற்கும் தடை விதிக்க வேண்டும். அரசு அல்லது தனியார் நிறுவனம் அல்லது எந்த தனிநபரும் மக்களின் சமூக வலைதள கணக்குகளை வேவு பார்ப்பது, hack செய்வது, முடக்குவது போன்றவை சட்டவிரோதமாக்கப்பட்டு தண்டனைகள் உருவாக்கப்பட வேண்டும்.

6. முன்னறிவிப்புடன் கூடிய சில மணி நேர பராமரிப்புக் காரணங்களைத் தவிர, எக்காரணத்தை முன்னிட்டும் இணைய வசதியை எந்தப் பகுதியிலும் எந்த இணைய சேவையாளரும் (ISPs)  தமது எந்த சேவையையும் நிறுத்தக் கூடாது. அரசு மற்றும் தனியார் இணைய சேவைதாரர்கள் (ISPs) பற்றிய கம்பிவழி மற்றும் கம்பியில்லா சேவையில் அவர்களது குறிப்பான Internet Geographical Map, Network Tier Map, Internet Exchange Points (IXPs - like NIXI), Peering points போன்றவற்றின் Status விவரங்கள் வெளிப்படையாக்கப்பட்டு அதன் சேவை மற்றும் இணைப்பை (Service and Connectivity) மக்கள் ஆன்லைனில் சோதிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். தனிபட்ட பழுதுகள் தவிர்த்து பகுதி அடிப்படையிலான இணைய சேவை முடக்கம் சட்டவிரோதமாக்கப்பட்டு தண்டனைகள் வகுக்கப்பட வேண்டும்.

7. தனியார் நிறுவனங்களின் - குடியிருப்பு உடமையாளர்களின் சிசிடிவி footage-ஐ போலீசு வந்து கேட்டு பெறுகிறார்கள். ஆனால் போலீசு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் சிசிடிவி காட்சிகளை - footageஐ மக்கள் பெறுவதற்கு உரிமை இல்லை. RTI actலும் இதற்குரிய வழிவகை தனியே இல்லை.

எனவே, போலீசு, கோர்ட், சிறைச்சாலை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களின் சிசிடிவி காமிராக்களும் மக்கள் பார்வையில் படும்படி அலுவலக வரவேற்பறையிலோ, கட்டிடத்திற்கு வெளிப்புறத்திலோ காட்சிப்படுத்தப்பட வேண்டும். சிசிடிவி காட்சிகள் remote server உடனும் cloud server உடனும் இணைக்கப்பட வேண்டும். அலுவல முகவரியில் வெப் முகவரி - இமெயில் விவரம் தருவது போல், ரிமோட் சர்வர், கிளௌவுட் சர்வர் விவரமும் அதன் பொது user id + passwordம் தரப்படவேண்டும். மக்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய சுய விவரங்களை - ஆதாரங்களைக் கொடுத்துவிட்டு எந்த footage-யும் தரவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும். பராமரிப்பு, பழுது காரணமாக சிசிடிவி உபகரணங்கள் இயங்கவில்லை எனில் அதற்குரிய ஆதாரங்களும் அங்கிருப்பதோடு அவற்றை எவரும் நேரில் அந்த அலுவலகத்தில் சோதிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். வேண்டுமென்றே சிசிடிவி காட்சிகள் அரசு அதிகாரிகளால் மறைக்கப்படுகிறது; ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது எனில் அவை சட்டவிரோதமாக்கப்பட்டு தண்டனைகள் வரையறுக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதன் ஆணையத்தின் அரசு சார்பான நிலை,  லோக்பால் சட்ட நிறைவேற்றுதலின் வெட்கக்கேடான நிலை அனைவரும் அறிந்ததே. இத்தகைய கோரிக்கைகள் - அரசின் அங்கீகரிப்புகள் மக்களுக்கு முழுமையான ஜனநாயகத்தையோ மாற்றத்தையோ பெற்றுத் தந்துவிடப் போவதில்லை என்பதும் யாவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் இச்சாதாரண ஜனநாயக கோரிக்கை ஆளும் வர்க்கத்திற்கு குறிப்பிட்ட சிறிய நெருக்கடியையும் மக்களுக்கு தற்காலிகமாக குறிப்பிட்ட சிறிய பயனையும் தரும். முதலாளித்துவ ஜனநாயகம் தனக்குத்தானே போட்டுக் கொள்கிற ஒரு கடிவாளம்தான் இது; அதன் கட்டுப்பாட்டு கயிற்றை சில பொழுதுகளில் வரம்புக்குட்பட்டு தொட்டு சுண்டிவிடும் அளவிற்கே மக்களுக்கான வாய்ப்பு இருக்கும்.

- ஞாலன்

Pin It