நாடு முழுவதும் பெண்கள் தினக் கொண்டாட்டம் என்பது ஓர் அடையாள நிகழ்வாக நடந்து முடிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி அரசியலிலும் இயக்க அரசியலிலும் ஈடுபடும் பெண்களும் வாழ்த்துச் சொன்னார்கள். ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற சில பெண்களைத் தேடிப் பிடித்து பேட்டி எடுத்து, கடுமையாக உழைத்தால் பெண்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறலாம் என்ற உயரிய உபதேசத்தை செய்தன. அத்தோடு பெண்கள் தினச் சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு, இந்தியா தனது வழமையான ஆணாதிக்க உலகத்திற்குள் நுழைந்துவிட்டது. மீண்டும் அவர்களுக்கு பெண்கள் மீது கவலையும், கருணையும் வர நாம் அடுத்த மார்ச் 8 தேதிவரை காத்துக் கிடக்க வேண்டும்.

odisha women

இந்திய சமூகம் தனது ஆணாதிக்கப் பிடியில் இருந்து பெண்களை விடுவித்து இருக்கின்றதா என்று பார்த்தோம் என்றால், அது மேலும், மேலும் அதிகமாகவே பெண்களை தனது ஆணாதிக்கத்தின் கோரப் பிடியில் வைத்திருக்க முயன்றுகொண்டு இருக்கின்றது. பெண்களுக்கான தொழிற்வாய்ப்புகள் , வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிப் பாதுகாப்பு, அரசியலில் பெண்களின் பங்களிப்பு, வளங்களின் பங்கீடு போன்ற அனைத்திலும் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகப் பின்தங்கியே இருக்கின்றது. நாட்டின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் 17 சதவீதம் மட்டுமே உள்ளது. சீனாவில் இது 41 சதவீதமாக உள்ளது. 20 சதவீதப் பெண்கள் மட்டுமே மாத வருமானம் வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் என்பது இந்திய சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் என்பதெல்லாம் வெறும் 8 சதவீதமே உள்ள அமைப்பு சார்ந்த தொழில்களைத் தவிர 92 சதவீதம் உள்ள அமைப்புசார தொழில்களில் சாத்தியமில்லாமலேயே இருக்கின்றது.

பெண் உரிமையைப் பற்றி பேசும் அமைப்புகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த அமைப்புகளைத் தவிர பிற அமைப்புகள் இதைப் பற்றி பெரிய அளவில் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களை ஒர் அமைப்பாக்கி, அவர்களை இணைத்துப் போராடி, அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதும் பெண் உரிமையின் ஒரு முக்கியமான கூறு ஆகும். வேலைக்குச் செல்லும் பெண்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாவதும், ஆண்களால் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவதும் பெண்கள் வேலைக்குச் செல்லும் மனநிலையை மாற்றி விடுகின்றது. 2004-05லிருந்து 2011-12 ஆம் ஆண்டு வரை சுமார் 20 மில்லியன் இந்தியப் பெண்கள் பணியிலிருந்து வெளியேறி உள்ளனர். மோடியின் ஆட்சியில் ஆண்களே கோடிக்கணக்கில் வேலையற்று தெருவில் வீசியெறியப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த எண்ணிக்கை நிச்சயம் இன்னும் அதிகரித்து இருக்கலாம்.

ஒரு சுயமரியாதையான வேலை என்பது பெண்கள் விடயத்தில் இன்னும் பெரிய கனவாகவே உள்ளது. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் படித்த பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான வேலைகளைக் கொடுத்தாலும் அந்த எண்ணிக்கை ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட அளவில் மிகவும் குறைவுதான். அப்படி மிகக் குறைவான எண்ணிக்கையில் வேலை செய்யும் பெண்கள் திட்டமிட்டு கடுமையான பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. துணிக்கடைகளிலும், கார்மென்ஸ்களிலும், தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும், வீட்டுவேலை செய்யும் பெண்களும் மிக சொற்ப கூலிக்கு கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இதற்காக பெரிய அளவில் பெண் உரிமையைப் பற்றி பேசும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வெறும் பேச்சளவில் பெண்ணுரிமையைப் பற்றி பேசினால் மட்டுமே பெண்ணுரிமை கிடைத்துவிடாது. களத்தில் இறங்கி பெண்களை அமைப்பாக்கும் வேலையை முற்போக்கு இயக்கங்களும் இடதுசாரி சிந்தனைகொண்ட பெண்ணிய அமைப்புகளும் செய்ய வேண்டும்.

பண்பாட்டுத் தளத்தில் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் இன்று பெரிய அளவில் அதிகரித்து இருக்கின்றது. அவர்கள் எந்த ஆடையை உடுத்த வேண்டும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும் என எல்லாமே ஆணாதிக்கவாதிகளால் கட்டமைக்கப்படுகின்றது. உடல் முழுவதும் சீலையை சுற்றிக்கொண்டு, தலைநிறைய மல்லிகைப் பூவை வைத்துக்கொண்டு, கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு, தினம் வீட்டில் இராமாயணதையும் , மகாபாரதத்தையும், சமையல் குறிப்புகளையும் படித்துவிட்டு, வீட்டு வேலைகளான சோறாக்குவது, துணி துவைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, இன்னும் வீட்டில் மாமியார் மாமனார் இருந்தால் அவர்களையும் பராமரிப்பது என அனைத்தையும் சிரித்த முகத்தோடு செய்யும் பெண்களே பத்தினிகளாக, பதிவிரதைகளாக இந்திய சமூகத்தில் கொண்டாடப்படுகின்றார்கள். தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முற்படும் பெண்களும், திருமணத்திற்குப் பின்பு வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களும், அரசியலில் ஈடுபாடு காட்டும் பெண்களும் இன்றும் ஒழுக்கக் குறைவானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

சுய சிந்தனையோடு 'ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உள்ளது' என செயல்படும் பெண்களை ஆண்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வதில்லையோ, அதைவிட பல மடங்கு பெண்களே அதை ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அளவிற்கு பெண்கள் நமது நாட்டில் இன்னும் கட்டுப்பெட்டித்தனமாகவே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படிக்காத பாமரப் பெண்களைவிட நன்றாகப் படித்த மேட்டுக்குடி பெண்களிடமே இது போன்ற பிற்போக்குச் சிந்தனை மேலோங்கி இருக்கின்றது. நமது கல்விமுறை எந்த வகையிலும் ஆணாதிக்க சிந்தனையை ஒழிப்பதாய் இல்லாமல், அதைக் காப்பாற்றுவதாகவே இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற கல்விமுறையில் வார்த்தெடுக்கப்படும் பெண்கள் அதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வது என்பது அதற்கு வெளியே உள்ள முற்போக்கு இயக்கங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதும், அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதால் மட்டுமே முடியும்.

பெண்களுக்கு ஆதரவாக முற்போக்கு இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் ஆதரவைப் பார்த்தாலே இன்னும் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு பின்தங்கிய அறிவு நிலையில் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பெண்கள் மீதான பாலியல் வன்முறையைப் பற்றியோ, சாதி ஆணவப் படுகொலைகளைப் பற்றியோ, பார்ப்பன இந்து சமூகத்தின் ஆணாதிக்க கருத்தியலைப் பற்றியோ பொது மேடைகளில் தோழர்கள் பேசும்போது, அதற்குப் பொதுச்சமூகத்தில் இருக்கும் பெண்கள் ஆற்றும் எதிர்வினை என்பது மிக அவமானகரமானதாகவே உள்ளது. தனக்கும் அவர்கள் பேசுவதற்கும் எந்தச் சம்மதமும் இல்லை என்ற நிலையில் அதை மிக எளிதாக எவ்விதக் குற்றவுணர்வும் இன்றி கடந்து போகின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் பெண்கள் மத்தியில் முற்போக்குக் கருத்துக்களை விதைக்கும் நமது பணியை நாம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

உலகமயமாக்கலுக்குப் பின் தீவிரமாக உருவாகி வளர்ந்து வரும் நுகர்வு வெறி கலாச்சாரமும், சந்தைப் பொருளாதாரமும் பெண்ணின் உடலை ஒர் நுகர்வுப் பொருளாக அடையாளப்படுத்தியுள்ளது. பெண்களை ஒரு நுகர்வுப் பொருளாக பார்க்கும் வக்கிரப் பார்வை ஆண்களிடம் மட்டும் ஏற்படாமல் தன்னை கவர்ச்சியாக ஆண்களிடம் காட்டிக் கொள்ள வேண்டும், அதற்காக இயல்பை மீறி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களிடமும் ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் இயல்பாகவே தன்னை ஆணாதிக்க வக்கிர சமூகத்தின் கருத்தியலை ஏற்றுக்கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கின்றது. இப்படி இயல்பிலே தன்னை ஒரு போகப் பொருளாக கருதும் பெண்கள் மிக எளிமையாக பார்ப்பனிய இந்து கருத்தியலுக்கு ஆட்பட்டு விடுகின்றார்கள். அதனால் எந்த விமர்சனமும் இன்றி மிக ஆபாசமான விபச்சார குணம் கொண்ட இந்து கடவுள்களான சிவன், பெருமாள், முருகன், விநாயகன் போன்ற பலரை வழிபடவும், அதற்காக விரதங்கள் இருக்கவும், பூசைகள் செய்யவும் பொருளாதாரத்தையும், நேரத்தையும் வீணாக செலவு செய்கின்றார்கள். இன்று நாம் பெண்களிடம் பொருளாதாரத் துறையில் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலையும் அத்துமீறலையும் எடுத்துச் சொல்லி விளங்கவைப்பது போல, அவர்கள் மீது பார்ப்பனிய இந்துமதம் எவ்வாறு கீழ்த்தரமான ஆணாதிக்க சிந்தனைகளை எல்லாம் திணித்து இன்று வரை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்பதையும் விளங்க வைக்க வேண்டும். அதற்குப் பெரியாரும், அம்பேத்கரும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் குரல் கொடுக்கின்றோம், அவர்களை முற்போக்கு சக்தியாக மாற்றுவதே எங்கள் முக்கிய கடமை, அரசியலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க எல்லா வழிகளிலும் நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போன்றவற்றில் தலைவர்கள் ஆண்களாகவே உள்ளார்கள் என்பது துயரமான ஒன்றாகும். நமக்குத் தெரிந்து சில இயக்கங்களில் சில தலைவர்கள் நாற்காலிகளை ஆண்டுக்கணக்கில் தேய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் அவர்களின் அமைப்புகளில் ஆளுமை நிறைந்த ஒரு பெண் தோழர் கூட இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. இயக்கங்கள் ஆரம்பித்து பல வருடங்கள் கடந்த நிலையில் கூட ஆளுமை நிறைந்த ஒரு பெண் தோழரை உருவாக்காத கட்சி இருந்தால்தான் என்ன, அழிந்து போனால்தான் என்ன என்றும் தோன்றுகின்றது. கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. பெரும்பாலும் ஆணாதிக்கக் கருத்தை எதிர்ப்பதாய்ச் சொல்லும், பெண்களை ஆண்களுக்கு சரிசமமாக நினைப்பதாய்ச் சொல்லும் பல பேர் இயல்பிலேயே ஆணாதிக்கவாதிகளாய், பதவி வெறியர்களாய் இல்லாமல் இருந்தால் தங்கள் கட்சிகளில் இயக்கங்களில் குறைந்தபட்சம் துணைத்தலைவர் என்ற பதவியை ஏற்படுத்தியாவது அதில் ஓர் ஆளுமை நிறைந்த பெண் தோழரை நியமித்து இருக்கலாம். இல்லை பொதுச்செயலாளர் பதவியாவது வழங்கலாம். இது மேலும் கட்சிக்கு வரும் பெண் தோழர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தப் பிரச்சினையை சமார்த்தியமாகத் தவிர்ப்பதற்காக பெண்களுக்கென்று தனியாக அமைப்புகளை உருவாக்கி, அதற்கு அவர்களை தலைவர்களாகப் போட்டு பெண்கள் மீதான தனது அக்கறையை காட்டிக் கொள்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் இது மோசடியான ஏமாற்று உத்தியாகவே படுகின்றது. தனது கட்சியில் பெண்களை தலைவர்களாகவோ, இல்லை துணைத் தலைவர்களாகவோ, பொதுச்செயலாளர்களாகவோ போட முடியாதவர்கள் தான் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீதம் கொடுக்க சட்டம் இயற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். முற்போக்கு பேசும் கட்சிகளே பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காதபோது நாம் பிற்போக்குக் கட்சிகளை எப்படி பெண்களுக்கு உரிமையைக் கொடுங்கள் என்று கேட்க முடியும்?

எனவே இந்த பெண்கள் தினத்தில் இருந்தாவது, இல்லை அடுத்த பெண்கள் தினம் வருவதற்குள் பெண் உரிமை பேசும் ஒவ்வொரு கட்சியும், இயக்கங்களும் தங்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பெண் தோழர்களை நியமித்து அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும். முக்கிய பொறுப்பு என்பது தலைவர் அல்லது துணைத்தலைவர், பொதுச்செயலாளர் போன்றவற்றிக்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் பெண்ணுரிமை பேசுபவர்கள் வெளி உலகத்திற்கு ஆணாதிக்க எதிர்ப்பாளர்கள் என்பதையும், உள்ளுக்குள் ஆணாதிக்க சிந்தனைக்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளவர்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை சம உரிமை படைத்த தோழர்களாகக் கருதி அவர்களுக்காகப் போராடும் எல்லா ஆண் தோழர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

- செ.கார்கி

Pin It