ரசிகமணி டி.கே.சி என்று மனத்துள் எண்ணும் போதே கவிதை நினைவுக்கு வரும். அதே போல் அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும்.

கவிதையை எப்படி அனுபவித்தாரோ அப்படி இசையையும் அனுபவித்தவர் டி.கே.சி.

கவிதைக்கு தமது வாழ்க்கையையே அர்ப்பணித்த பெரியவர் ரசிகமணி. இசைக்காகவும் தம்மை ஆட்படுத்திக்கொண்ட ரசிகர் என்பதை தமிழுலகம் அறியும்.

டி.கே.சி.யின் வாழ்க்கையே ஒரு இலக்கியம்தான் என்று அறிஞர்கள் போற்றி வந்திருக்கிறார்கள். அத்தகைய இலக்கியத்தோடு இசையும் இரண்டறக் கலந்தே வந்திருக்கிறது நெடுகிலும், “.... பாடலைப் பாட வேண்டுமே ஒழிய, வசனத்தைப் போல வாசிக்கத் கூடாது. நாட்டியத்துக்கும் சாதாரண நடைக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் பாடலுக்கும் வசனத்துக்கும்” என்பது டி.கே.சி வலியுறுத்திய முக்கியமான கருத்தாகும்.

கவிதையை எடுத்துச் சொல்லும் போதெல்லாம் ரசிகமணி ஏதேனும் ஒரு ராகத்தில் பாடித்தான் விளக்குவார்.

தமிழ்நாட்டின் பழைமையான மரபு கவிதை இசையோடு பாடுவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. திருஞானசம்பந்தர் தாம் இயற்றிய தேவாரப் பதிகங்களைப் பாடியே வந்தார் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

இலக்கிய அன்பர்களுக்கு கவிதை சொல்லும் வேளையில் இசையுடன் டி.கே.சி பாடினது மட்டுமல்ல, தாம் தனியாக கவிதையை அனுபவித்த சமயங்களிலும் குரலெழப் பாடியே மகிழ்ந்தார் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

இசை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் ராகத்தோடு பாடுவதினின்றும், ஓதுவாமூர்த்திகள் தேவாரம் பாடும் முறையினின்றும் விலகி கவிதையை இசையோடு பாடுவதற்குத் தனி வழியை வகுத்துச் சொன்னவர் டி.கே.சி.

கவிதையின் அடிமுடியும் போது ராகமும் நின்று அடுத்த அடிக்கு இடம் தர வேண்டும். ராகத்தை நீட்டிக்கொண்டே சென்றால் அது இசையை முன்னிறுத்தி கவிதையின் உருவத்தை கற்போர் மனத்தில் நிலைக்கச் செய்யாது என்பது குறிப்பு.

இது சம்பந்தமாக டி.கே.சி என்ன சொல்லுகிறார் என்பதைப் பார்க்கலாம்;

“... தமிழ்ப் பாடல்களை சவுக்கத்தில் பாடுவதற்கான ஒரு வகையான ராகம் தமிழர் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது. தமிழ்ப் பாடல்களுடைய அமைப்பையும், அழகையும் அனுபவிக்க வேண்டுமானால் பாடவே வேண்டும். எந்த ராகத்தைக் கொண்டாவது பாட வேண்டும். இந்த விஷயத்தில் ஆங்கில ஹோதா, உத்தியோக ஹோதா முதலியவை வந்து குறுக்கிட்டு நிற்கக்கூடாது” என்பது ரசிகமணியின் வேண்டுகோள்.

ரசிகமணியின் நண்பரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கியவருமான திருப்புகழ்மணி டி.எம். கிருஷ்ணசுவாமி அய்யர் அவர்கள் கையில் ஜால்ரா ஏந்தி பஜனை செய்தார் என்பதை டி.கே.சி. அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

புலவர்களிடம் சிக்கிக் கொண்டிருந்த கவிதையையும் தமிழ் இலக்கியத்தையும் விடுதலை செய்து, எளிமைப்படுத்தி, எல்லோருக்கும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்த மாதிரியில் தமிழ் மக்களுக்கு வழங்கிய பெருந்தகை ரசிகமணி.

சாதாரணமாக கல்வி கற்ற ஆண், பெண் குழந்தைகள் அடங்கலாக அனைவரையும் தமிழ்க் கவிதையை அனுபவிக்கச் செய்யலாம் என்பதை நிரூபித்துக்காட்டினார்.

அதே போன்று இசையானது சங்கீத வித்வான்களின் பிடியில் அகப்பட்டிருந்ததையும், மக்களுக்குப் புரியாத வேற்று மொழியிலேயே அவர்கள் பாடி வந்தததையும் கண்டு கொதிப்படைந்தது டி.கே.சியின் மனம்.

மக்கள் மொழியில், தமிழ் மொழியில் பாடகர்கள் பாடினால்த்தான் அது இசை என்பதாகும், அனுபவிக்க முடியும், உணர முடியும் என்ற உண்மையினை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் டி.கே.சி.

தமிழிசைக்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் ரசிகமணி, சங்கீத வித்வான்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஒரே கை டி.கே.சி அவர்களின் கையே,

டி.கே.சி. அவர்கள் தான் தமிழிசை இயக்கத்திற்கு அடிகோலியவர் என்பதை அவரோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற ஆசிரியர் கல்கி அவர்களுடைய ஆணித்தரமான சொற்கள் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன.

“... உண்மையில் தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அதற்கு அஸ்திவாரம் போட்டு, திறப்புவிழாவும் நடத்தியவர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள்தான். தமிழ் நாட்டில் சென்ற பதினைந்து ஆண்டுகளில் தமிழ்ப் பற்று வளர்ந்து பெருகுவதற்கும், தமிழகத்தின் பழம் பெரும் செல்வமான பரதநாட்டியக் கலை புத்துயிர் பெறுவதற்கும் டி.கே.சிதம்பரநாத முதலியார் எப்படி பொறுப்பாளியோ அது போலவே தமிழிசை இயக்கத்துக்கும் அவரே பொறுப்பாளியாவர். அந்தப் பொறுப்பை ஸ்ரீ டி.கே.சி அவர்களே தட்டிக் கழித்து வேறு யார் பேரிலாவது போடப் பார்த்தாலும் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது” என்று கல்கி அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

தமிழிசை இயக்கத்தை தனியொருவராக ஆரம்பித்து டி.கே.சி அவர்கள் நடத்தி வந்த சமயத்தில் பலத்த எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. தெலுங்குப் பாடல்களையே பாடி வந்த இசைக்கலைஞர்களும், இசை வல்லுனர்களும், சில இதழ்களும் தமிழிசை இயக்கத்தையும் டி.கே.சி அவர்களையும் கடுமையாகச் சாடிய நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில் நடைபெற்றது.

பின்னர் தமிழிசையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பல பெரியவர்கள் டி.கே.சி அவர்களுக்கு பக்கபலமாக வந்து தமிழிசை இயக்கத்திலே இணைந்துகொண்டனர்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கல்கி, ராஜாஜி, ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார், ஸர். ஆர்.கே. சண்முகம் செட்டியார், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் வகித்த பங்கு சிறப்பானது.

ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசை இயக்கத்துக்குப் பலமான தூணாக விளங்கியவர் என்பதில் சந்தேகமில்லை.

தமிழிசை இயக்கம் வலுவடைய வேண்டுமாயின் அதற்கென ஒரு சங்கம் நிறுவுதல் அவசியம் என்றும், இசை நிகழ்ச்சிகளுக்கும் இசை ஆராய்ச்சிக்கும் அதில் பெரும் பங்கு இருக்க வேண்டும் என்றும் அவர் எண்ணம்கொண்டார்.

அவ்வுயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சென்னையில் தமிழிசைச் சங்கம் எனும் அமைப்பை அவர் நிறுவனம் செய்தார்.

தமிழிசைச் சங்கத்தின் துவக்கவிழா சென்னையில் 1943ம் ஆண்டு டிஸம்பர் மாதம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவிற்குத் தலைமை ஏற்க ரசிகமணி டி.கே.சி அவர்கள் திருக்குற்றாலத்திலிருந்து சென்றபோது எழும்பூர் ரயிலடியில் ஆளுயர மாலை அணிவித்து ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் உட்பட பலர் வரவேற்பு நல்கினர்.

தமிழிசை இயக்கம் கண்ட டி.கே.சி அவர்கள் இசையின் வரலாறு என்ன, இசையின் லட்சியம் என்ன பாவ சங்கீதம் என்றால் எது என்பன பற்றியெல்லாம் எவ்வளவு ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்ந்துள்ளார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் சிறப்பு என்று கருதுகின்றேன்.

“... உலகம் எங்கும் சங்கீதம் இருக்கிறது. அது மாத்திரமல்ல அந்த சங்கீதத்தில் பாவமுள்ள சங்கீதம் என்றும் பாவமற்ற சங்கீதம் என்றும் இருக்கின்றன. மேல்நாட்டில் நடைபெறுகிற சங்கீதம் எல்லாம் அனேகமாக ஜெர்மன் சங்கீதத்தை தழுவுவியது தான். மேலான ஜெர்மன் சங்கீதத்தை ஜெர்மன் சாகித்யத்தோடு சேர்த்து மிக்க உணர்ச்சி பாவம் விளையும்படி செய்தார்கள். அந்த சாகித்யங்களுக்கு மேல்நாட்டு முறைப்படி சுரம் அமைத்து வைத்தார்கள். பியானோவில் அந்த சுரத்தை அழுத்தி ஏதோ பாடியும் விட்டார்கள். ஜெர்மன் பிராந்தியத்தையும் இங்கிலீஷ் சானலையும் கடந்து போனபோது சுரமும் பியானோவும்தான் மிஞ்சின. ஜெர்மன் பாஷையின் உணர்ச்சி ஊக்கம், பக்தி முதலிய உயிரான அம்சங்கள் எல்லாம் ஜெர்மன் பூமியில் தங்கிவிட்டன”. மேலே எடுத்துக்காட்டிய டி.கே.சி.யின் கருத்து இசைக்கு மொழி எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்லுகிறது நமக்கு. நமது இசைக்கு வரும்போது பாவம் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை ரசிகமணி அவர்கள் எவ்வாறு தெளிவாக விளக்கியுள்ளார் என்பதனையும் பார்த்து விடுவோம் இப்போது.

“... தமிழ் நாட்டுக்கு வருவோமானால் இங்கேயும் சங்கீதத்தை இரண்டு விதமாகப் பிரிக்க வேண்டும் பாவமான சங்கீதம்,பாவமற்ற சங்கீதம் என்பதாக, தெலுங்கு சங்கீதத்திலும் அப்படித் தான் தெலுங்கு சாகித்யத்தை உணர்ச்சியோடும் பக்தியோடும் பாடும்போது அது பாவ சங்கீதம். வெறும் விளையாட்டாக, உணர்ச்சி இல்லாமல்ப் பாடும்போது சாமான்யம் என்று சொல்லிவிட வேண்டியது தான். நான் சொல்லுவதெல்லாம்:
சங்கீதம் பாவ சங்கீதமாகவே இருக்க வேண்டும். தெலுங்கர்கள் பாவத்தை உணரவேண்டுமென்றால் தெலுங்கு பாஷையில்தான் சாகித்யமும் இருக்க வேண்டும்; தமிழில் இருந்தால் விஷயம் புரியாது. உணர்ச்சியை உணர முடியாது. பாவத்தைக் காணமுடியாது. “மேற்படி மேற்படி தான்”, காமட்ச்சக்காவில் உள்ளவர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் தமிழ் சங்கீதம் தான் பாவ சங்கீதம் என்று நான் சொல்லவில்லை”.•

இப்போது நாம் பார்த்த டி.கே.சி.யின் சீரிய கருத்து இசை சம்பந்தமான மிகவும் அடிப்படையான உண்மையை நமக்குப் புரிய வைக்கின்றது. அதாவது நமக்குத் தெரிந்த நம் தாய்மொழியில் அமைந்த பாடல்களைத் தான் இசையோடு நம்மால் முழுமையாக அனுபவிக்க இயலும் என்பது அது.

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நாதசுரக் கலைக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இசை ஆர்வலர் பலரையும் வருந்தவைக்கும் நிலை இது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாதசுரக் கலைஞர் பலர் கோலோச்சிய காலமாய் இருந்தது. எனினும் சங்கீத வித்வான்களும், சங்கீத சபாக்களும் நாதசுரக் கலைஞர்களுக்கு உரிய இடமோ, மரியாதையோ தராமல் ஒதுக்கியே வந்திருக்கிறார்கள்.

அந்த நிலையில் தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் நாதசுரத்தின் மாண்பினையும் இசைக்கு நாதசுரக் கலைஞர்கள் ஆற்றிவரும் அரிய பங்கு பற்றியும் எல்லோருக்கும் விளக்கி சிறந்த உரையாற்றி நாதசுரத்தின் பெருமையை உணரச் செய்தார்.

இந்த உரை காரணமாக தமிழ் நாட்டின் நாதசுரக் கலைஞர்கள் அனைவரும் டி.கே.சி அவர்களை தங்கள் கலைக்குக் கிடைத்த கிடைத்தற்கரிய அருந்தனம் என்று போற்றிக் கொண்டாடினர்.

இதனை ஒட்டி ஒரு சுவையான நிகழ்ச்சியை நினைவு கூர விரும்புகிறேன்.

ஒரு முறை குற்றாலத்தில் நாதசுர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரசிகமணி டி.கே.சி அவர்களை நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பிக்க வேண்டிக் கொண்டார்கள். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே டி.கே.சி அவர்கள் சென்று நடுநாயகமாக அவையில் வீற்றிருந்தார்.

ராஜரத்தினம் வந்து மேடையில் ஏறப் போன தருணத்தில் அருகில் நின்ற ஒருவர் டி.கே.சி வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அவரிடம் தெரிவித்தார். உடனே மேடையில் ஏறாமல் நேரே முன்பக்கம் சென்று டி.கே.சிக்கு எதிரில் பதினைந்து அடி தூரத்தில் நின்றார். தம் தோளில் கிடந்த உத்தரியத்தை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். இரு கைகளையும் சிரத்தின் மேல் குவித்து “அடியேன்” என்று கூறி தலை தாழ்த்தி வணங்கினார்.

டி.கே.சி அவர்கள் வலது கையை உயர்த்தி வாழ்த்தினார்.

கூடியிருந்தோர்க்கெல்லாம் இந்த நிகழ்ச்சி அதிசயத்தையும் ஆனந்தத்தையும் ஒரு சேர அளித்தது. ராஜரத்தினத்திடம் இதைப் போன்ற அடக்கத்தையும், பவ்யத்தையும் இதுவரை யாரும் கண்டதோ கேட்டதோ இல்லை.

ரசிகமணி அவர்கள் இலக்கியத்திலும், கவிதையிலும் மூழ்கி உண்மையான இலக்கியத்தையும் கவிதையையும் தமிழர்களுக்கு இனம் காட்டிய ரஸஞ்ஞானி. அவர் தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியத்தோடு இசையையும் இணைத்துப் பேசியும் ரசித்தும் வந்தவர்.

இசை பற்றி, தமிழிசை, பற்றி மட்டும் அல்லாது உலகளாவிய இசை பற்றியெல்லாம் கற்றுத் தெளிந்து எடை போட்டு வந்தவர் என்பதனை இவ்வுரையின் இறுதியாக நினைந்து மகிழ விரும்புகிறேன்.

“... மேல் நாட்டுச் சங்கீதம், சுரங்களைக் கணக்குப்படி ஒழுங்குபடுத்தியும் ஒன்றோடொன்று பிணைத்தும் உண்டாக்குவது என்றும், அது காரணமாகவே காதுக்கு ஒரு விதமான சுகத்தைக் கொடுக்கும் என்றும் அதில் வல்லவர்கள் சொல்லுவார்கள். அவர்களே நம்முடைய கர்நாடாக சங்கீதத்தைக் கேட்டு விட்டு உணர்ச்சியோடு ஒட்டுவதற்கு இயைந்தது இதுதான் என்று சொல்லியிருக்கிறார்கள். கணக்கிலிருந்து பிறந்தது மேல்நாட்டுச் சங்கீதம். உணர்ச்சியிலிருந்து பிறந்தது நம்முடைய சங்கீதம். நம்முடைய சங்கீதம் உணர்ச்சியிலிருந்து பிறந்த காரணத்தால் இயல்பான தத்துவம் அமைந்திருக்கிறது; எல்லாரும் அனுபவிக்கக் கூடியதாய் இருக்கிறது. தமிழ்ச் சங்கீதத்தை வைத்துக்கொண்டு முப்பது கோடி தமிழர்களையும் சந்தோஷப்படுத்தலாம். அப்படி சந்தோஷப் படுத்தவதற்கு ஒரே ஒரு வழிதான்: சங்கீதம் எல்லாம் தமிழிலேயே இருக்க வேண்டும்.

நன்றி: கதைசொல்லி

Pin It