செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிலம்பு இசை அலைபேசிச் செயலி உருவாக்கத் திட்டத்தில், தமிழகத்திலிருந்து மறைந்துவிட்ட பண்ணான (இராகம்) செவ்வழிப் பண்ணை முதன்முறையாக மீட்டு அதன் அடிப்படையில் சிலப்பதிகாரப் பாடலுக்கு இசை அமைக்கும் பணியின் செயல் முறை அனுபவங்களை இக்கட்டுரை பகிர்கிறது.

தமிழர்கள் தாங்கள் வாழும் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகைகளாகப் பிரித்து, அந்த ஐந்து நிலங்களுக்கும் முப்பொருட்களை வகுத்தனர். அதில் கருப்பொருளில் பண் முக்கிய இடத்தைப் பெறுகிறது. நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் குறிக்கிறது. இங்கு சிறு பொழுதாக சூரியன் மறையும் பிற்பகல் அந்திப் பொழுது குறிக்கப்பட்டுள்ளது. வருணன், கடற்காகம், சுறா, மீன், உப்பு, உவர்நீர் மலர், நன்னீர் மலர், தாழை, உவர்நீர்க்கேணி மற்றும் கடல் ஆடுதல் என்று நெய்தல் நிலக் கருப்பொருட்கள் விளங்கின.

நெய்தல் நிலத்தில் வாழும் ஆண் (தலைவன்) கடலுக்குச் செல்வது வழக்கம். பிரிதல் எல்லா நிலத்திலும் நிகழ்ந்தாலும், நெய்தல் நிலத்தில் மட்டும், அபாயகரமான பணிக்குச் சென்ற ஆணின் வருகையை எண்ணி வருந்துவது பெண்ணின் (தலைவி) நிலையாக இருக்கிறது. கடலுக்குச் சென்ற பலர் வராமலே இருந்திருக்கிறார்கள். ஆக, இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இயல்பான உரிப்பொருட்களாக நெய்தல் நிலத்துக்குச் சொந்தமாக விளங்கியது.

துன்ப நிலையில் பாடுதல் வழக்கமாதலால், இரங்கல் மிகுந்த, செவ்வழிப்பண் நெய்தல் நிலத்துக்குரிய பண்ணாக விளங்கிவிட்டது. இந்நிலத்துக்கு உரிய இன்னொரு பண்ணாக விளரிப் பண் (இன்றைய தோடி) விளங்கியது. விளரியாழ், மீன்கோட்பறை மற்றும் நாவாய்ப் பம்பை ஆகியன இசைக்கருவிகளாக இருந்தன.

கடற்கரைப் பகுதியில் பனை மரங்களில் வாழும் அன்றில் பறவை, துணை அன்றில் (இல்லாமல்) உயிர் வாழாது என்று பெயர் பெற்றது.

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்

துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண் (அகம்: 50 - 11-12)

அன்றில் பறவை, தனது துணை ஒன்றைப் பிரிந்தால், இரவு முழுவதும் கண்துஞ்சாது. அந்நிலையில் நான் என்ன செய்வனோ என்று தலைவி வருந்துவதாகக் கருவூர்ப் பூதஞ்சாத்தனார் அகநானூற்றில் பதிவு செய்துள்ளார்.

குடமுத லிடமுறை யாக்குர றுத்தம்

கைக்கிளை யுழையிளி விளரி தாரமென (சிலப். 3: 17-13)

இதற்கு விளக்கம் அளித்த அடியார்க்கு நல்லார், குரல்குரலாயது செம்பாலைப்பண் துத்தம்குரலாயது படுமலைப்பாலைப்பண், கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலைப்பண் என்று செவ்வழிப்பண் பிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆபிரகாம் பண்டிதர் தனது கருணாமிர்த சாகரம் எனும் முதல் நூலில் அளித்த விளக்கத்தில், சட்சமமே சட்சமமாக (குரல் குரலாக) ஆரம்பிக்கிற காலத்தில் குறிஞ்சியாழ் என்றும், பஞ்சமம் சட்சமமாக (இளிகுரலாக) ஆரம்பிக்கும்பொழு நெய்தல் யாழ் (செவ்வழிப் பண்) கிடைக்கும். எனினும் செவ்வழிப்பாலையைத் தோடியாகக் கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில், கடற்கரையிலுள்ள கானல் அருகே கானல் வரியை

காந்தண் மெல்விரற் கைக்கிளை சேர்குரல்

தீந்தொடைச் செவ்வழிப் பாலை யிசையெழீஇப் (சிலப். 1: 7-47)

என அமைக்கிறார் இளங்கோ அடிகள்.

காந்தள் மலர் போன்ற மெல்லிய விரலால் கைக்கிளையைக் குரலாகக் கொண்டு செவ்வழிப்பாலைப் பண்ணை மாதவி இசைத்தாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இதைத் தொடர்ந்து வரும்

நுளையர் விளரி நொடி தரும் தீம் பாலை

இளி கிளையில் கொள்ள இறுத்தாயால்மாலை

இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்

கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி, மாலை (சிலப். 1: 7-48)

மாலைப் பொழுதே, நெய்தல் நில மக்களின் ‘விளரிபாலை’ என்னும் பாலைப் பண்ணை நான் பாடி யாழ் மீட்டும்போது, மயக்கத்தால் இளி நரம்பை வருடுவதற்குப் பதிலாகக் கைக்கிளை என்னும் அதன் பகை நரம்பைத் தடவச் செய்யும் விதமாக நீ என்னிடம் வந்து தங்கினாய். இவ்வாறு செய்யவல்ல நீ, என் உயிரையும் கொள்ளை கொண்டு சென்று வாழ்வாயாக என்று மாலைப் பொழுதைப் பற்றி பாடுகிறாள்.

இச்சிலப்பதிகாரப் பாடல் வரிகள் விளரிப் பண்ணின் இயல்பினை நமக்குக் காட்டுகின்றன.

நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,

வரவுஎமர் மறந்தனர் (புறம்: 149)

எனும் புறப்பாடல், 'நள்ளியே உன் ஆட்சியின் பயனாக மாலையில் மருதப்பண்ணையும் காலையில் செவ்வழிப் பண்ணையும் இசைக்கும் படி மறக்கச் செய்தவன் நீ' என்று புலவர் வன்பரானார், கண்டீரக் கோப்பெரும் நள்ளியைப் பாடுகிறார். எனவே, இதன்வழியாகச் செவ்வழிப்பண் மாலை நேரப் பண் என்பதும் தெரிய வருகிறது.

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்

அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்

அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்

செவ்வழிப் பண்ணிற் சிறை வண் டரற்றும்

தடந்தாழ் வயலொடு தண் பூங் காவொடு (சிலப்.2-11: 85-89)

எனும் அடிகள், ஓங்கிய தென்னனுடைய சிறுமலையென்னும் பெயரையுடைய மலை விளங்கித் தோன்றும். அம்மலையை வலப்பக்கத்துக்கு கொண்டு இடப்பக்கத்து நெறியிற் சென்று மதுரையிற் புகுமினென்றானென்க. அங்ஙனம் வலப்பக்கத்து நெறியைப் போதீராயின் இடப்பக்கத்துச் சிறையையுடைய வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும் தாழ்ந்த வயலோடும் குளிர்ந்த பூங்காவோடும் என்று பூம்புகாரிலிருந்து நடந்து கண்ணகி வரும் போது எழும் வண்டுகளின் ரீங்காரத்தை இளங்கோ அடிகள் செவ்வழிப் பண்ணோடு ஒப்பிடுவதை அடியார்க்கு நல்லார் உரையில் வர்ணிக்கிறார்.muthukandasamy desikar and nagaratnam

(தமிழகத்தில் மறந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பின் செவ்வழிப்பண்ணை அதன் உண்மையான வடிவத்தில் மீட்டுப் பாடிய திருப்பனந்தாள் முத்துக்கந்தசாமி தேசிகர் (இடது) திருச்சியில் ஒலிப்பதிவின் போது. உடன் கட்டுரையாசியர்.)

செவ்வழிப்பண் மிகுந்த சோகத்தை வழங்கக் கூடியது. செவ்வழிப் பண் தந்த இரங்கல், துன்பம் ஆகியனவோ என்னவோ பண்ணாய் அது தமிழர்களால் தொடர இயலாமல் விடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இப்போது செவ்வழிப் பண் வழக்கத்தில் இல்லை. அதற்கான பாடல்கள் கேட்பதற்கு இல்லை. அருகி மறைந்துவிட்டது என்றே கூறலாம். எனினும் இசை இலக்கண அறிஞர்கள் அப்பண்ணைப் பற்றி நூல்களில் நிறையக் கூறியிருக்கின்றனர். திரைப்படப் பாடல்களில் இப்பண்ணுக்கு இணையாக, இசை அறிஞர்கள் குறிப்பிட்ட எதுகுலகாம்போதி இராகம் பயன்படுத்தப்படுகிறது. பெங்களூரு நாகரத்தினம்மாள் செவ்வழிப்பண்ணுக்கான எதுகுலகாம்போதிப் பண்ணையே பாடினார் என்பது நாம் அறிந்ததே.

நாகசுர வித்துவான் மதுரை பொன்னுச்சாமி பிள்ளை, விபுலானந்த அடிகள், இசைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி ஆகியோர் செவ்வழிப்பண்ணைச் சுத்ததோடி இராகத்துக்கு இணையானதாகக் குறிப்பிட்டுள்ளதாக நுண்ணலகுகளும் இராகங்களும் எனும் நூலில் இசைப் பேராசிரியர் து.ஆ. தனபாண்டியன் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் இசை எனும் நூலில் இசை அறிஞர் ராமநாதன் செவ்வழிப் பண்ணைத் தோடி இராகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், செவ்வழிப் பண்ணை எவ்வழியில் மீட்பது. செவ்வழிக்குப் பதிலாக, தோடி, சுத்தத்தோடி அல்லது எதுகுலகாம்போதி இராகங்கள் அடிப்படையில் முடித்துவிட்டால், செவ்வழிப் பண் எப்படி இருந்தது என்றது தெரியலாகுமா? தமிழ் இசை அறிஞர் பாகீரதி, செவ்வழிப் பண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, யாழ் நூலில் விபுலானந்த அடிகள் எழுதிய வரிகளை நினைவூட்டினார். யாழ் நூலில், 'செவ்வழிப் பாலை பஞ்சமம் பெறாது, இருமத்திமமும் பெற்றுப் பண்ணாய் நின்றது' என்கிறார். அப்படியானால் விபுலானந்தர் அப்பண்ணுக்கு இணையான பண் தோடியைக் குறிப்பிட்டிருந்ததால், தோடியில் இருமத்திமம் பெற்று பஞ்சமத்தை நீக்குவது என்று பொருள். தமிழிசை வரலாறு எனும் நூலில், விளரிப்பாலை என்று வழங்கும் தோடியில் பஞ்சமத்தை நீக்கிவிட்டு பிரதிமத்திமத்தை அமைத்துக் கொண்டால் செவ்வழிப் பண் கிடைக்கும் என்று நா. மம்மது குறிப்பிட்டுள்ளது இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே செவ்வழிப் பண் இவ்வாறு இருக்கும் போது, எதுகுலகாம்போதியையும் தோடியையும் செவ்வழிப் பண்ணுக்கு முழுஇணையானதாக எடுத்துப் பாடல் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

பஞ்சமம் இல்லாவிட்டால் அது தோடி. சுத்தத்தோடியில் பஞ்சமம் இல்லை. ஆனால் அதேநேரத்தில் பிரதிமத்திமமும் இல்லை. அப்படியானால் இசை இலக்கணப்படி அது செவ்வழி அல்ல என்பதை கலந்துரையாடலில் இசை ஆசிரியர் பார்த்தசாரதி தெரிவித்தார். ஆக, தலைசிறந்த இசை அறிஞர்களின் கருத்தின்படி இருமத்திமமும் பெற்ற தோடி, பஞ்சமம் நீங்கப் பெறின் கிடைப்பதே செவ்வழி என்பதே சரியாக இருக்கும். ஆகவேதான் செவ்வழிப் பண்ணை, ஈருழை விளரி என்றோ இருமத்திமத்தோடி என்றோ அழைக்கப்படலாம் என்று வீ.ப.கா. சுந்தரம் தனது தமிழிசைக் கலைக்களஞ்சித்தில் குறிப்பிடுகிறார். பஞ்சமத்தை நீக்கிவிட்டு, இருமத்திமமும் வருவதானால் அதன் தன்மை இனிமை தவிர்த்த, துயர் கொண்ட நெய்தல் மக்களின் குரலாக விளங்கியிருக்கிறது. ஆக, செவ்வழியை மீட்க, இருமத்திமத் தோடியில் பஞ்சமத்தை நீக்கிவிட்டுப் பண்செய்யப்பட வேண்டும்.

கண்ணகி தன் கணவன், கள்வன் எனப் பழித்துக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து, பாண்டியன் அரசபைக்குச் சென்று நியாயம் கேட்கும், அவல நிலையில், நெய்தல் நிலத்துக்குரிய செவ்வழிப் பண்ணில் 'நற்றிரம் படராக் கொற்கை வேந்தே என் கால் சிலம்பு மணியுடை அரியே' எனும் பாடலைச் செவ்வழியில் பண்ணிசை அமைப்பது என முடிவானது. இப்பாடலுக்கான களம் மதுரையானாலும், நெய்தல் நிலத்திலிருந்து வந்திருந்த கண்ணகி துன்பமான நேரத்தில் அவலச்சுவை உடைய இந்தப் பண்ணில் பாடுவது பொருத்தம் என்று தேர்வு செய்யப்பட்டது. இன்று கேட்பதற்கு ஏதாவது ஒரு பாடல் செவ்வழிப் பண்ணில் இருக்கிறதா என்றால், செவ்வழிப்பண்ணை நேரடியாக யாரும் பயன்படுத்தவில்லை. அதாவது இளி என்ற பஞ்சமத்தை விடுத்து இருமத்திமத்தில் யாரும் பாடவில்லை. யாரும் பாடுவதும் இல்லை. அவ்வாறெனில், நெய்தல் இயல்பில் தலைவியர் பட்ட துன்பத்தின் நிலையை இப்பண் காட்டுகிறது.

இப்பாடலுக்காக, குரலிசைக் கலைஞர்கள் பலரை அணுகியபோது, அவர்கள் செவ்வழிப் பண்ணில் பாட இயலாது என்று கூறிவிட்டனர். சிலர், இந்த செவ்வழிப் பண்ணைப் பாடினால் எங்களது இசை வாழ்வையே இழக்க நேரிடும் என்றும் சொன்னார்கள். இதுவரை செவ்வழிப் பண்ணுக்கான பாட்டு ஒலிக்குறிப்புகள் இல்லாத நிலையிலும், வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பாட ஒப்புக் கொள்வதில் தயக்கம் காட்டுவதால், இப்பாடலைப் பதிவு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. எனினும், தொடர்ந்து முயற்சி செய்ததில், செவ்வழிப்பண்ணைப் பாடுவதற்கு ஓதுவார் கலைமாமணி திருப்பனந்தாள் முத்துக்கந்தசாமி தேசிகர் ஒப்புக்கொண்டார். திருச்சியில் அவரது பாடல் ஒலிப்பதிவு நடந்தது. கண்ணகியின் குரலுக்குச் செவ்வழியில் பாட குரலிசைக் கலைஞர் கற்பகமும் ஒப்புக் கொண்டார். அவரது ஒலிப்பதிவு சென்னையில் நடந்தது.

குரலிசைக் கலைஞர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், குழல் மற்றும் தமிழக வழக்கத்திலிருந்து மறைந்துவிட்ட இடக்கை இசைக்கருவி வழியே செவ்வழிப் பண் மீட்டுருவாக்கம் செய்ய முடிவானது. கேரள இடக்கை இசைக் கலைஞர் சுஜித் கோட்டால் இப்பாடலுக்கு இடக்கைக் கருவி வாசித்தார். அது கேரளாவின் திரூர் ஒலிப்பதிவு அரங்கில் பதிவானது. கலைஞர் மோகன்ராஜ் குழலிசை வழங்கினார். இவர்கள் இசையின் வழியே, செவ்வழிப் பண் மீட்கப்பட்டது. பாடலை நேர்த்தியாக ஒலிக்கோர்வை செய்தார் இசை ஆசிரியர் பார்த்தசாரதி. இந்தப் பாடல், ஒட்டுமொத்தத் தமிழ் உலகத்துக்கும் செவ்வழிப் பண்ணுக்கான உதாரணமான ஒரே பாடலாகத் திகழ்கிறது. வல்உழை மற்றும் மெல் உழை கொண்டு, பஞ்சமத்துக்குச் செல்லாமல் பிரதிமத்திமத்துக்கும் மத்திமத்துக்கும் தன் அனுபவ அறிவால் முத்துக்கந்தசாமி தேசிகர் சிறப்பான வகையில் அப்பண்ணின் இலக்கணத்தை இசையொலியில் காட்டினார். இப்பண் செவ்வழிப் பண் என்பதை உறுதி செய்தார் தமிழ் இசை அறிஞர் பாகீரதி. அதைக் கேட்க விரும்புவோர், அலைபேசிச் செயலியை கீழ்க்கண்ட இணைப்பின் வழியே தரவிறக்கம் செய்து. 'நற்றிரம் படராக் கொற்கை வேந்தே' எனும் பாடல் வழியே மீட்கப்பட்ட செவ்வழிப் பண்ணை ஆன்டிராய்டு செயலி நிறுவிக் கேட்கலாம். <https://shorturl.at/dyLRU>

இலக்கணம் வகுத்ததோடு நின்றுபோன செவ்வழிப் பண், வாய்ப்பாட்டுக் கலைஞர்களால் கைவிடப்பட்டது. மறைந்துவிட்ட இத்தமிழ்ப்பண் மீண்டும் உயிர்த்தெழவும், நெய்தல் நிலத்தின் இயல்பான இசையைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இந்தப் பாடலின் பண் அமைந்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு செவ்வழிப் பண் மீட்கப்பட்டது.

- பேராசிரியர் சு. நாகரத்தினம், தலைவர், தொடர்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிலம்பு இசைத்திட்ட முதன்மை ஆய்வாளர்.

Pin It