சென்னை ராஜா அண்ணாமலை மன்றம், தமிழ் இசைச் சங்கத்தின் 80 ஆம் ஆண்டு விழாவின் போது “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும்,” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருக்கிறார். சிறப்பு வாய்ந்தது அவரின் அன்றைய பேச்சு.

தமிழர்கள் மீது அந்நியர்கள் நடத்திய பண்பாட்டுப் போர்களினால் தமிழர்கள் இழந்ததில் ‘தமிழிசை’யும் ஒன்று.

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழு தமிழிசைப் ‘பண்’களை, சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் அதாவது ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்கள் ஆக்கித் தமிழிசையை மொத்தமாக விழுங்கிக் கர்நாடக இசையாக மாற்றி விட்டார்கள் பார்ப்பனர்கள்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, மு.ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’, விபுலானந்த அடிகளின் ‘யாழ் நூல்’, புலவர் புரட்சிதாசனின் ‘இசைத்தமிழ்’ போன்றவைகளால் இதனை அறியலாம்.

 ஒருகாலத்தில் தமிழ் இசையை நீசப் பாட்டு, தீட்டுப் பாட்டு என்று கர்நாடகப் பாட்டுக்காரர்கள் சொன்ன போது, வெகுண்டெழுந்தவர் ஐயா பெரியார் அவர்கள்.

அவாள்களின் பாட்டு மேடைகளில் சூத்திரர்களை ஒதுக்கிய போது, பக்திமானான சீர்காழி கோவிந்தராஜனைப் பகுத்தறிவு மேடைகளில் பாட வைத்தவர் பெரியார்.

செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், தமிழிசையை உயர்த்திப் பிடிக்க தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்த பின்னர் அதற்குத் துணையாய் இருந்தவர் பெரியாரும், திராவிட இயக்கமும்.

மார்கழி மாத உத்சவச் சுரங்களுக்கு நடுவே, தமிழிசையை ஓங்கிப் பாடும் அண்ணாமலை அரங்கத்தில் நின்று கொண்டு, “இந்த அரங்கம் இங்கே கம்பீரமாக நிற்கிறது என்றால், இது வெறும் கட்டடம் அல்ல, கலைச் சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! இசைச்சின்னமாக நின்று கொண்டு இருக்கிறது! தமிழ் அடையாளமாக நின்று கொண்டு இருக்கிறது! இந்தக் கட்டடம்தான், தமிழிசையை, கோட்டை கட்டிக் காத்த அரங்கம்!” என்று சொல்கிறார் நம் முதல்வர்.

திராவிடத்தால் தமிழிசை வளர்கிறது, வரவேற்போம் நாமும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It