கடந்த 3-11-2017 அன்று நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் உதவி ஆய்வாளர் பழனி, பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல் குமார்ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பழவூர் மாறன்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழக மக்கள் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளருமாகிய தோழர் செம்மணி என்கிற இராசரத்தினத்தை(அகவை 46) வீடுபுகுந்து அவரை வள்ளியூர் டி.எஸ்.பி அழைத்துள்ளார் என்று கூறி, இழிவாகத்திட்டியும் அடித்தும் இழுத்துச்சென்றுள்ளனர். எந்த வித புகாரும் அவர் மீது கொடுக்கப்படவில்லை என்பதும், கைது வாரண்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி ஆகும்.

கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர் செம்மணி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருபவர். அதற்காகவே சட்டம் பயின்று வழக்கறிஞராகி. வள்ளியூர் வழக்குமன்றத்திலேயே வழக்கறிஞராக மண்ணின் மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். பணம் ஈட்ட வேண்டும் எனும் நோக்கமின்றிச் செயல்பட்டு வருபவர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மாறன்குளம் என்கிற சிற்றுாரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரும் தோழர்களும் சிலநாள்களுக்கு முன்புதான் அப்பகுதி காவல் துறை மீது ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான சிக்கலில் காவல்துறையைக் கண்டித்து அமைப்பு சார்பில் சுவரொட்டிகளையும் ஒட்டியிருந்தனர். அதுபோன்று அந்த மாவட்டத்திலேயே இருபதாண்டுகளாகக் காவல்துறையின் பல அடாவடிப் போக்குகளை வெளிக்கொண்டு வந்ததோடு, மனித நேயமற்ற பல காவல்துறை அதிகாரிகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். காவல்துறை தன் கடமையைச் செய்யவில்லை என்று வழக்குத் தொடுத்ததோடு. அதன் காரணங்களுக்காகவே அவர்மீது காவல்துறையின் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இத்தாக்குதலைப் படமெடுத்த செம்மணியின் துணைவியாரை மிரட்டியும், கையைப் பிடித்துத் திருகியும், அவரதுகைபேசியைப் பறித்துக்கொண்டும்காவலர்கள் சென்றுவிட்டனர்.

செம்மணியை அத்துமீறி வீடுபுகுந்து அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் நள்ளிரவு நேரத்தில் அவரை இராதாபுரம் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் ஒரு செருப்பைத் திணித்துவிட்டு, பழனி, விமல்குமார், ஜோஸ், முகமது சபீர், உள்ளிட்ட ஏழு காவலர்கள் சுற்றிநின்று இரும்புத்தடியால் அடி அடியென்று அடித்துத்துவைத்திருக்கின்றனர். செம்மணியின் மனைவி நாகர்கோவில் ஆசாரப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 சித்திரவதை செய்யப்பட்டு, எந்தவிதமான மருத்துவ உதவியும் வழங்கப்படாது, சட்டையின்றி லுங்கி மட்டும் கட்டிக்கொண்டிருந்த, அரை அம்மண நிலையில் ஒரு வழக்கறிஞர் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்.. செம்மணியின் இடதுகால் பாதம் முறிக்கப்பட்டுள்ளது. இடது கால் பெருவிரல் சிதைக்கப்பட்டு, நகம் கிழிக்கப்பட்டு, இரத்தம் கொட்டிய நிலையில் அவர் உவரி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். உவரி காவல்நிலைய அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் எந்தப் பொறுப்பும் ஏற்க மறுத்துள்ளனர். அவர்களிடம் வழக்கறிஞர் செம்மணி மீது என்ன புகார் என்று கேட்டால், எந்தப் புகாரும் கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.

இறுதியாக நீதிமன்றத்தின் உத்திரவின் பேரிலேயே அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவருகிறார். கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்கள் மீது உலகத்திலேயே அதிகமான தேசத் துரோக வழக்குகளைப் போட்டுள்ளது நெல்லை மாவட்ட காவல் துறையாகத்தான் இருக்கும். நூற்றுக் கணக்கான அவ்வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி வரும் இராசரத்தினம் என்கிற தோழர்.செம்மணி மீது நடைபெற்றுள்ள தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை காவல் துறையின் கொடூர வெறிபிடித்த நடவடிக்கையாகும்.மனிதத் தன்மையற்ற, சற்றும் மனிதஉரிமைகளை மதிக்காத செயலில் ஈடுபட்ட நெல்லை மாவட்டக் காவல் துறையைத் தமிழக மக்கள் முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.

ஒரு வழக்கறிஞரே, அதுவும் ஓர் அமைப்பின் தமிழகப் பொறுப்பாளரே காவல்துறையினரால் கடுமையான தக்குதலுக்கு உள்ளாவது என்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

அவ்வகையில் தோழர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய காவல்துறையில் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கீழ்க்காணும் கோரிக்கைகளைத் தமிழக மக்கள் முன்னணி முன்வைக்கிறது.

  •  மக்கள் நலனுக்காகப் போராடுகிறவர்களையும், மனித உரிமைகளுக்காகச் செயல்படுகிறவர்களையும் நள்ளிரவில் கடத்திக் கொண்டு போய் சட்ட விரோதமாக அடைத்து வைத்துத் தாக்குகிற காவல்துறை அதிகாரிகளின் வெறிப் போக்குகளைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அப் போக்குகளை அரசும். நீதிமன்றங்களும் உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், அப்படியாகச் செயல்படுகிற அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
  •  தொடர்புடைய வள்ளியூர் நீதிமன்றமே தன்னுடைய உத்திரவில் நெல்லைக் காவல் துறையினர், சட்டப்பிரிவு 41-பி, 41-டி,50,50-ஏ,54-55 ஏ,58 போன்ற பிரிவுகளை மதிக்காமல் செயல்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்டக் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரையும் உடனடியாக பணி இடை நீக்கம் செய்து விசாரணை மேற்கொண்டுத் தண்டிக்கவேண்டும் என்று கோருகிறோம்.
  • பாதிக்கப்பட்ட தோழர் செம்மணிக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் அவருக்கு அனைத்து வகை மருத்துவ உதவியையும் செய்வதோடு, அவர் துணைவியாருக்கும் மருத்துவ உதவி செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.

- தமிழக மக்கள் முன்னணி

Pin It