முதலில் பாளை. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் வெளியீடாகவும் புதுதில்லியின் சமயம் மற்றும் சமுதாய ஆய்வுக்கான கிறித்துவ நிறுவனத்தின் பிரதி உருவாக்கத்துக்கும் காரண காரியமாக இருந்து ஆக்க வழியில் பண்டிதர் அயோத்திதாசரின் 1907 - 1914 'தமிழன்' வார இதழின் எழுத்துப் பிரதிகளை முற்றிலும் நம்பகத்தன்மை கூடிய அரசியல் - சமூகம் - சமயம் - இலக்கியம் என்ற நான்கு பெரிய பிரிவுகளுக்குள் அடக்கி அடுக்கிய தொகுப்பாசிரியர் ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

Ayothidasarஎதற்கு என்றால்,1997ஆம் ஆண்டு 'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சுக்கூடம்' வெளியிட்ட 'இந்தியாவில் தேசம் இல்லாத தேசியம்,' 1998ஆம் ஆண்டு 'நியூ ஏஜ் இண்டர்நேஷனல்' வெளியிட்ட 'அடிமைத்தளை அறுக்கும் அடையாளமாக சமயம்: குடியேற்ற நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையின்கீழ் தமிழரிடை ஒரு பௌத்த இயக்கம்' என்ற ஆங்கில ஆய்வு நூல்களின் ஆசிரியர் என்று மெய்யாகவே பெருமிதம் அடைந்து நின்றுவிடாமல், தன் ஆய்வுகளுக்கான மூலப் பொருளை, நமக்கு 'வெள்ளைச் சட்டைப் பட்டி'கள் போலல்லாமல், ஆக்கவழியில் பொறுப்பாக அறிமுகம் செய்து வைத்ததற்காகத்தான். புதுச்சேரியில் முதலாவதாக நண்பர் திரு சீனு. தமிழ்மணிவழி 1999இன் கடைசி காலாண்டில் அறுநூறு ரூபாய்க்கு வாங்கி வாசித்த 'அயோத்திதாசர் சிந்தனைகள்' அசல் தொகுப்பு முதலாக, சில நாள் முன்னர் வாங்கி வாசித்த 'அநிச்ச' என்ற -அருமையானதும் 560 பக்கங்களில் ஓய்வாக எழுதப்பட்ட ஆய்வுநூல்கள் சாதிக்க முடியாத 'கம்யூனிகேஷ'னை 56 பக்கங்களில் சாதித்திருப்பதுமான இரு மாத இதழில் வெளிவந்திருக்கும் அயோத்திதாசர் பற்றிய 'மெல்ல முகிழ்க்கும் உரையாடலும் உரையாடலுக்கு முன்னான கதையாடலும்' என்ற நண்பர் ம. மதிவண்ணன் அவர்களின் செறிவான விவாதச் சொல்லாடல் வரையில் விசுவாசமாக, கிடைத்தவற்றையெல்லாம் வாசித்துவிட்டேன். இடையில் முனைவர் தர்மராஜன் முதலோனோரின் ஆய்வுகளையும் சிரமப்பட்டு வாசித்தேன்.

எனக்கு அயோத்திதாசர் பெயர் பண்டிதர் என்றுதான் எங்களூர் (கோயமுத்தூர்) பள்ளபாளையத்தில் அறிமுகம். இப்பொழுது அந்த ஊரின் பெயர், செல்வபுரம். ஊர்ப்பெயர்தானே மாறியுள்ளது என்று நாம் காலங்காலமாய்க் கோட்டை விட்டுவிட்டோம். பள்ளபாளையத்தின் வடக்கு வளவில் இருந்த சங்கத்துப் பெரியவர்கள்தாம் 'தமிழன்' பத்திரிகை குறித்தும் எனக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சொன்னவர்கள். ஆனால், உண்மையாகச் சொல்லுகிறேன் - அதன் பிரதிகளை நான் அலாய்சியஸ் அவர்களின் மறுபிரதியில்தான் முதன் முதலாகக் கண்டேன். அதனால்தான் அவருக்கு முதலில் நன்றி என்றேன். பிறகு என் மூத்த அண்ணார் உதகையில் வணிகவரி அலுவலகத்தில் பணிபுரிந்து அங்கிருந்தபொழுது, 'பெர்ன் ஹில்' என்று ஞாபகம், தமிழ்ப் பௌத்தர் ஒருவர்வழி அயோத்திதாசர் பற்றிக் கேள்வியுற்றேன். அன்றைய வடதமிழ் நாட்டுச்சூழலின் அடையாளங்கள் முற்றிலும் மறைந்துபோகுமுன்னரே அங்கே பிறந்து புழங்கி வாழ்ந்தவன் என்ற முறையில் உறுதியாகச் சொல்வேன். அவரை எங்களூரிலும் உதகையிலும் சங்கம் வைத்துப் போற்றியவர்கள் தமிழ்ப் பவுத்தம் தழுவியவர்களான தலித் உட்சாதியினர் அனைவரும் பிற சாதியினரும்தாம்.

அதனால்தான் 'தலித் முரசு' நேர்காணலில் ஞான. அலாய்சியஸ், “சக்கிலியர் சமுதாயத்தைப் பொறுத்த மட்டிலாவது இந்த பிரிவினை[இயல்பாய்த் தாழ்ந்தவர் - தாழ்த்தப்பட்டவர் பிரிவினை] தவறானது என்பது எனது அனுபவம். கோயம்புத்தூர்ப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த காலங்களில் நான் கண்ட உண்மை. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. அவர்களும் வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரே, விவசாயம் தவிர்த்த ஏனைய பணிக் களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனியாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெருவாரியாகத் தாழ்த்தப்பட்டது. இந்தத் தாழ்த்தப்பட்ட நிலையை அவர்களது தமிழ் இலக்கிய அறிவு மூலம் கதைகள், கவிதைகள், விடுகதைகள் மூலம் கண்டறிய முடிந்தது. .......... மேலும் நவீன காலகட்டத்தில், சமுதாயக் குழுக்களைப் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிரிப்பதிலான சிக்கல்களை சமூகவியலாளர் பெரிதும் விவரித்துள்ளனர். ஆகவே அயோத்திதாசரின் இந்த வரலாற்றுக் கணிப்பு தவறானது. இதை மூடி மறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை. மேலும் அயோத்திதாசரின் முழுமையான வரலாற்று விளக்கங்களில் ஏற்பட்டுள்ள தவறு இதுமட்டுமல்ல" என்று கூறவேண்டியிருந்துள்ளது. (இந்தப் பகுதியை நான் 'அநிச்ச' இதழ் நவம்பர் 2005 பக்கம் 39இலிருந்து எடுத்துத் தந்துள்ளேன். எனவே அப்பகுதி இடம்பெற்ற விவாதப் பிரதி ஆசிரியரான திரு ம.மதிவண்ணன் அவர்களுக்கும் பிரசுரித்த ஆசிரியர்கள் திரு நீலகண்டன், அ. மார்க்ஸ் முதல் சுகன் வரையிலான நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.)

இந்த இடத்தில் முக்கியமானதொரு 'வெள்ளைச்சட்டைப் பட்டி'[white collar]ப் பேராசிரிய மற்றும் முனைவ மற்றும் பெருநூலாசிரிய முரண்பாடொன்றைச் சுட்டவும் வேண்டும். வரலாற்று ரீதியில் அயோத்திதாசர் பாட்டனார் கந்தசாமி காலத்திலிருந்தே ஒடுக்கப்பட்டோரை மட்டம் தட்டி வந்த பார்ப்பனரை விட்டுவிட்டு [தன்னை அவர்கள் பரம்பரை ஏந்திப் பிடிப்பதனால்?] அவர் எங்களூரிலும் நீலமலைப்பட்டி [இப்பொழுது 'ஹள்ளி'கள்]களிலும் நட்புடன் வாழ்ந்த விவசாயிகளான வேளாளர்களின் பின்னணி அறியாமல் அவர்களின் பாடுகள் உணராமல் நடுநாட்டு - தொண்டைமண்டல வேளாளர்களோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக ['மம்மானை'யாக]க் கருணையின்றிக் குற்றங் கூறும் 'எல்லாவகைகளிலும் மேல்தட்டுக்குரிய உத்தியோக - பண்பாட்டுப் பின்னணியில் வாழும் 'நூலகக் கூட'[Library Research] ஆய்வாளர்களை என்ன என்று சொல்வது? 'தேவேந்திரகுல வேளாளரும்' அவர்களும் ஒருமுறைகூட எந்தப் பிணக்கும் கொள்ளாமல் வாழ்ந்த ஐம்பது ஆண்டுகளை நான், முன்குறிப்பிட்ட கோவை - பேரூர் சாலைப் பள்ளபாளையத்தில் கண்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்திலும் கந்தசாமி, கந்தன் என்ற பெயர்கள்தாம் அதிகம்.

அயோத்திதாசர் தன் பாட்டனார் அனுபவத்தைச் சொல்லும் விதத்தை மேற்கோள் காட்டும் திரு அன்பு பொன்னோவியம் அவர்களின் சிறப்புரைப் பகுதி இதோ: '' தமிழ்ப் பற்று கொண்ட எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தார். திருக்குறளை அவரிடம் யாரும் கொடுக்கவில்லை. அவருடைய நண்பர் ஆரிங்டன் என்ற மற்றொரு ஆங்கிலேயரிடம் வேலையாக இருந்த அயோத்திதாசருடைய பாட்டனாரான கந்தசாமி என்பவர் திருக்குறளையும் நாலடி நானூறு போன்ற சில ஓலைச்சுவடிகளையும் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வந்துகொண்டிருக்கும் பிராமணர்களிடம் கந்தசாமி கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் கந்தசாமி தீண்டாதவர் என்றும் சாதிப் பாகுபாட்டையும் கூறினார்கள். எல்லீஸ் மீண்டும் கந்தசாமியை அழைத்து மேலும் சில விளக்கங்கள் கேட்க கந்தசாமி கீழ்வரும் விபரங்களைக் கூறியதாக அயோத்திதாசர் தன் பத்திரிகையில் எழுதியுள்ளார்: "எங்கள் குலத்தோர்க்கும் இவர்கள் குலத்தோர்க்கும் ஏதோ பூர்வ விரோதம் இருக்கிறது. அதனால் இவர்களை இழிவாகக் கூறி துரத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வீதிக்குள் இவர்கள் வந்துவிடுவார்களானால் இவர்களை துரத்தி உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக்கொண்டு இவர்களைத் துரத்தி இவர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்து தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் (தமிழன் - 10.3.1909)என்று அயோத்திதாசர் எழுதுவதைப் பார்க்கும்போது இந்தப் பகைமை 19 ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவரது பாட்டனார் கந்தசாமி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 1785 வாக்கில் வாழ்ந்தவராகும். தமிழ்நாட்டின் தீண்டாமை வரலாற்றிற்கு இச்செய்தி மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டும். "

நிறப்பிரிகை ரவிக்குமாருடன் ழோன்போல் சார்த்தர் குறித்தும் எட்வர்ட் செய்த் பற்றியும் பயனுள்ளபடிப் பேசியிருந்த அந்தப் பொன் காலைப் பொழுதுக்குப் பின்னர், 'அநிச்ச'வில் முகம் தெரியாமல் [வாசிப்பதன்மூலம்] தொடர்புகொண்ட ம. மதிவண்ணன் அவர்களுடைய விவாத முன்வைத்தலில்தான் 'விஷயகனங்க'ளின் ஆளுகைக்கு உட்பட்டு 'சுயம்' இழந்து என் பாட்டனின் சிநேகிதர்பற்றி என்னால் யோசிக்க முடிந்தது. எனவே அவர்களுக்கும் நன்றி.

- தேவமைந்தன்