தமிழுக்கு நீண்ட நெடுங்கால வளர்ச்சி உண்டு.

நிலவுடைமை அரசுகளாகப் பிரிவுற்றிருந்ததாலும், ஆரிய சமசுக்கிருத ஊடுருவலாலும், சமண புத்தத்தின்வழி பிராகிருதமும், பாலியும் நுழைந்ததாலும், பிற நாட்டினரின் வந்தேறி ஆட்சியால் அரபு, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட பலமொழிகள் கலப்புற்றதாலும் தமிழ் பெருமளவில் சிதைக்கப் பெற்றது.

தமிழ் - அரசு மொழியாக இருந்ததைக் காட்டிலும், மக்கள் வாழ்க்கை மொழியாகவே இருந்து வந்திருக்கிறது.

பழங்காலத்தில் தமிழே வீரர்கால மொழியாக, நிலவுடைமை அரசுகளின் மொழியாக இருந்திருக்கிறது. ஆனால் பல்லவர் காலம், தொடந்து பிற்காலச் சோழர்கள் காலம் முதல் விசயநகரக் காலம், மராட்டியர் காலம் எனத் தொடர்ந்து தமிழை அரசு மொழியாக ஏற்கிற முதன்மை குறைக்கப்பட்டுச் பிராகிருதமும், சமசுக்கிருதமும், தெலுங்கும் பிறவுமே அரசு மொழிகளாக ஆளுமை செய்தன.

எனவே பல காலங்களில், மக்கள் வாழ்வியல் மொழியாக மட்டுமே தமிழ் இருக்க நேர்ந்தது.

அரசின் நடைமுறை வழக்கில் அல்லாமல் தமிழ் வாழ்வியல் மொழியில் கலப்பு இல்லாமலேயே இருந்து வந்தது. அரசு நடைமுறைவழிச் சொற்கள் சமசுக்கிருத வயமாயின; தொடர்ந்து அரபுக் கலப்பும் பின் ஆங்கிலவயமுமாயின,

சமயச் சார்பு நிலையில் புத்த சமணப் பெருக்கம் தோன்றியது. அதன்வழி வடபால் தமிழிய (திராவிட) மொழியான பிராகிருதமும், அதன் ஒரு கூறாக இருந்த பாலிமொழியின் கலப்பும் தமிழில் ஏற்பட்டன.

தொடர்ந்து புத்த, சமணத்தை மறுத்துத் தமிழகத்தில் எழுந்த சிவனிய ­மாலிய மதப் புகைச்சல்களைத் தன்வயப்படுத்திக்கொண்ட வைதிகம், சமசுக்கிருதச் சார்பின்றிச் சமய வழக்காறுகள் இல்லை என்பன போலான நிலையை உருவாக்கி அதன்வழி சமசுக்கிருதம் தேவமொழி என்றும், சமய வழிபாட்டு மொழி என்றுமாய்ப் பரப்பல் செய்தது.

ஆக, தமிழ்மொழி மீதான கலப்புகள் இயல்பாக ஏற்பட்டவையல்ல. வன்மையான பிற வந்தேறிய ஆளுமையர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது.

இன்றைய நிலையில் வரலாறும், வாழ்வியலும் இந்திய வயமாக்கப்பட்டுப் பொய்ம்மையாகத் திரித்துப் பதிவாக்கப்பட்டுவருகின்றன.

எனவே தமிழிய வரலாறு என்பதையும், தமிழ்மொழி வரலாறு என்பதையும் இத்தியவய வரலாற்றிலிருந்து விடுதலைசெய்து விளக்கப்படுத்த வேண்டியுள்ளது.

இதே தன்மையிலேயே பழந்தமிழர்கள் பரவியிருந்த நாவலந் தீவு எனும் விரிந்த பரப்பில் ஆங்காங்கே வந்தேறிய ஆட்சியால் சிதைந்த தமிழ் மொழியால் திரிபுற்றுப் பிற மொழிகள் உருவெடுத்தன..

நன்னன் என்னும் பேரரசன் ஆண்ட கொங்கணப் பகுதி திரிபுற்றுத் துளுவாகவும் கொங்கணியாகவும் மாறிவிட்டது போல் பழந்தமிழே தெலுங்கும் கன்னடமும் மலையாளமுமாக மாறிப்போயின. தென் கேரளத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை அரசு அலுவல் மொழியாகவும் தமிழே இருந்தது என்பது அறியத்தக்கது.

ஆக, பிராகிருத, சமசுக்கிருத மொழி கலப்பாலேயே தமிழ் திரிந்து தமிழியச் சார்பில் பல மொழிகள் உருவாயின.

அவ்வகைத் திரிபு மொழிகளின் மூலமொழி தமிழே என்று முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல்.

சமசுக்கிருத தொடர்புடையனவே இந்தியாவில் உள்ள மொழிகள் என்பதை மறுத்துத் தமிழியத் தொடர்புடைய மொழிகள் பல உண்டு என்று அவர் கண்டறிந்தார்.

அவர் ஆய்வு செய்த காலத்தில் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் பல கண்டறியப்படவில்லை என்பதை அறிய வேண்டும். எனவே, சில குறைபாடுகள் அவரின் ஆய்வில் இருந்தன. திராவிடம் என ஒரு மொழி இருந்ததாக அவர் கருதினார் அதிலிருந்தே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றியதாக அவர் எண்ணினார்.

அவருக்குப் பிறகு மாகறல் கார்த்திகேயனார், தேவநேயப் பாவாணர் என மொழியியல் அறிஞர்களின் ஆய்வுகள் பல விளக்கங்களைத் தந்தன.

அவர்களெல்லாம் தமிழியத் தொடர்பு கொண்ட திரிபு மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும், அவற்றை வடபால் திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் என வகைப்படுத்திக் காட்டினர். ஏறத்தாழ 45 மொழிகளை அவ்வகைத் தொடர்புடையன என விளக்கப்படுத்தி நிறுவினர்.

அந்த மொழிகளுக்கெல்லாம் மூல மொழி தமிழ்தான் என்பதை மொழியியல் வழி நிறுவினர். இக்கால் சொல்லாய்வு அறிஞர் அருளியார் உள்ளிட்டுப் பலர் அவை குறித்து விரிவாக ஆய்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எமினோ, பர்ரோ, நோம் சோம்ஸ்கி உள்ளிட்டு உலகின் எண்ணற்ற மொழியியல் ஆய்வறிஞர்கள் அவற்றை ஏற்று நிறுவி வந்திருக்கின்றனர்..

ஆக, ஆரியத் தொடர்புடையது அல்லாத தமிழை அடியாகக் கொண்டதே அத்தகைய தமிழிய (திராவிட) மொழிக் குடும்பம்.

இக்கருத்து மொழியியல் அறிஞர்களிடையே தமிழ் ஆர்வலர்களிடையே பரவிய அளவில் தமிழ், திராவிட மொழிகள் சார்ந்த வெகு மக்களிடையே பரவிடவில்லை.

அதாவது தமிழில் இருந்து பிறந்தவைதாம் திரவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட 45க்கும் மேலான மொழிகள் என்பதை அவர்கள் தெரிந்திடவில்லை..

அவ்வாறு தெரிய வைக்கிற வாய்ப்பு தமிழ்நாட்டரசுகளுக்குக் கடந்த காலங்களில் ஏற்படவில்லை, ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

ஏன் ஏனெனில் தமிழ்நாட்டு அரசளவில் அதை உணர வைப்பதற்கே பாவாணரும் அவரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கமும் அரும்பாடுபட வேண்டி இருந்தது..

பாவாணரின் கண்டறிவை வையாபுரி(ப்பிள்ளை), தெ பொ மீ போன்ற தமிழ் அறிஞர்களும், பொள்ளாச்சி மகாலிங்கம்  போன்ற தமிழ்நாட்டுப் பெரு முதலாளிகளும் ஏற்கவில்லை..

அவர்களையெல்லாம் சார்ந்தே தமிழ்நாட்டு அரசினர் இயங்கினர்.. உலகத் தமிழ் மாநாடுகளில் வையாபுரி, தெ பொ மீ கருத்தொட்டியவர்களே பெரிதும் பங்கேற்க வைக்கப்பட்டனர்.. பாவாணரும், பாவலரேறுவும் அவர்கள் கருத்தொட்டியவர்களும் புறக்கணிக்கப்பட்டனர். பாவாணரும் பாவலரேறுவும் பல வகையில் சிறுமைப்படுத்தப்பட்டு அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டனர்.

பாவாணர் கருத்தைப் பரப்பல் செய்து இயக்கப்படுத்தியவர்களாகப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தென்மொழியரும், உலகத் தமிழ்க் கழகத்தவர்கள் எனச் சிலருமே இருந்தனர்..

அவ்வகை மொழி இயல் கருத்துகளைப் பெரியாரிடம் பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் நேரில் விளக்கப்படுத்திய நிலையில் பிற்காலங்களில் ஒப்புக்கொண்டவராய்ப் பெரியார் இருந்தார். பாவாணருக்குத் திராவிட மொழியியல் ஞாயிறு எனப் பட்டமளித்துச் சிறப்பித்ததுடன் பாவாணரின் மொழியியல் கருத்துகளை அவரின் எளிய மக்கள் வழக்கில் பல நிகழ்ச்சிகளில் பேசவும் செய்தார்.

எனவே, பாவாணரின் மொழியியல் கருத்துகள் காட்டிய விளக்கங்கள் வழி நாம் அறிய வேண்டுவது முகமையானது. திராவிடம் என்பது ஏதோ தனித்த மொழி அன்று. திராவிடம் என்றொரு மொழி இருந்திடவும் இல்லை என அறியலாம்.

திராவிடம் என்பது தமிழில் இருந்து பிரிந்த அல்லது தமிழை அடித்தளமாகக் கொண்டு பிற மொழிக் கலப்பால் உருவான மொழிகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுத்தப்பட்ட சொல்லாக அமைந்தது.

அந்த மொழிகள் ஆரிய மூலத்திலிருந்து வந்தன அல்ல. ஆரிய மொழிக் குடும்பம், ஆரிய மொழிக் குடும்பத்தினர் என்று அடையாளப்படுத்தப்படாமல் திரவிடக் குடும்பம், திரவிட மொழிக் குடும்பத்தினர் எனப் பாவாணர் அவர்கள் விளக்கப்படுத்தினார்..

தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்பது பாவாணர் அவர்களின் மொழியியல் ஆய்வின் முழு வெளிப்பாடாக இருந்தது..

இக் கருத்தை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கட்டுரைகளைப் பாவாணர் அவர்கள் எழுதியுள்ளார்..

அவரின் திரவிடத் தாய், தமிழ் வரலாறு ஆகிய நூல்களில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்..

“தென்னிந்திய மொழிக்குடும்பத்தைக் கால்டுவெல் கண்காணியார் முதன் முதலாக ஆராய்ந்ததினால், தமிழையும் அதனொடு தொடர்புள்ள பிறமொழிகளையும் வேறுபடுத்தாது, திரவிடம் என்னும் ஒரே பெயராற் குறித்தார். ஆயின், இன்று தெலுங்கு கன்னட மலையான நாடுகள் வெவ்வேறு பிரிந்து போனமையாலும், தமிழ் ஒன்றே ஆரியத்தை எதிர்த்துத் தன் தூய்மையைப் போற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளமையாலும், வடசொற்கள் சேரச் சேரத் தெலுங்கு கன்னட மலையாளத்திற்கும் தீரத்திரத் தமிழுக்கும் உயர்வு ஏற்படுவதனாலும், இந்தியும் வடமொழியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் அவர்தம் இனமொழியாளர்க்கும் நேர்மாறான கருத்துண்மையாலும், தெலுங்கு கன்னடம் முதலிய இனமொழிகளெல் லாம் மீளத் தமிழொடு சேர முடியாவளவு ஆரியவண்ணமாய் மாறி விட்டமையாலும், அதனால் இனமொழிகளையும் புறக்கணிக்கும் நிலை தமிழுக்கு ஏற்பட்டு விட்டதனாலும், தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், பிரித்துக் கூறல் வேண்டும்.”

என்று (தமிழர் வரலாறு - பக்கம் 28 - நூலுள்) விளக்கப்படுத்துவார் பாவாணர்..

மேலும் திராவிடம் எனும் சொல் முதலில் தமிழ் என்னும் பொருளிலேயே வழங்கியதாகப் பல சான்றுகளைக் காட்டி விளக்குவார் பாவாணர்.

தமிழ் எனும் சொல்லை வெளிநாடுகளில் பிற மொழியினர் எவ்வாறு கூறிவந்தனர் என்ற விரிந்த ஒரு பட்டியலையும் தந்திருப்பார்..

அவைமட்டுமன்றித் திராவிடம் எனும் சொல் குறித்து ஞானப்பிரகாசரும், கனகசபையும், கந்தையாவும், தாமோதரரும் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் என்னவெல்லாம் கருத்து கொண்ருந்தனர் எனப் பாவாணர் விளக்குவார்.

நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பண்டைக்காலத்தில் 'அம்' ஈறு பெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மைத் தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது.. தமிழம் , த்ரமில(ம்), த்ரமிள(ம்), த்ரமிட(ம்), த்ரவிட(ம்) என்னும் வடிவங்களை முறையே நோக்கின் தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம் _ என்றெல்லாம் விரிவுபட விளக்குவார்..

மொழியியல் தன்மையில் பாவாணர் இக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இனவியல் கருத்தில் அயோத்திதாசப் பண்டிதர் திராவிடக் கருத்தை விளக்கி இருப்பதும் கவனிக்கத்தக்கது..

சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரும் சீர்பெறுவார்களென்பது சத்தியம். ஆதலின் நமதரிய திராவிட சோதிரர்கள் யாவரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்தை நாடுங்கள். சாதிபேதமற்ற திராவிட மகாஜன சங்கக்கூட்டத்திற் கூடுங்கள். நீதிமார்க்கத்தையே என்றும் நாடுங்கள். ஆதிபரனையே என்றும் பாடுங்கள், பாடுங்கள் என்று வேண்டுகிறோம். (சனவரி 26, 1910)

பூர்வக் குடிகளாம் திராவிடர்களைத் தாழ்த்தி நாசமடையச் செய்வதற்கே சாதிபேதத்தை உண்டுசெய்துண்டவர்களாதலின் அவர்கள் சொந்த பூமிகளை வைத்துப் பயிர்செய்யவும் சுகம் பெற்று வாழ்கவும் மனம் பொறார்களென்பது திண்ணம் (மே 18, 1910)

முத்தமிழுக்குத் திராவிடமென்னும் பொதுப்பெயர் வழங்கலாயிற்றேயன்றி வேறன்றாம். இவற்றை நூதனமத வித்வான்களெவரேனும் மறுப்பரேல் பூர்வ நூலாதாரத்துடன் விளக்கக் காத்துள்ளோமாக. (மார்ச் 4, 1914)

வடமொழி தென்மொழியென்னும் இருவகுப்பில் தென்மொழி யாம் திராவிடம், தமிழ் என்னும் இருமொழிகளும் ஒருபாஷைக்குரிய பெயர்களேயாம். அம்மொழிகள் தோன்றியவற்றிற்கு மூலகாரணங்கள் யாதெனில், அவ்வட்சரங்களுள் நஞ்செழுத்தாம் விடவட்சரங்களும், அமுதெழுத்தாம் இனியவட்சரங்களுள்ளது கண்டு நஞ்செழுத்தால் தீராவிட மென்றும், அமுதெழுத்தால் தமிழென்றும் இருபெயர்களுண்டாயிற்று தீராவிடமென்னு மொழியே குறுக்கல் விகாரத்தால் திராவிடம் திராவிடமென வழங்கலாயிற்று.

திராவிடமென்பதே தமிழென்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன் வடநாட்டோரும் சிங்களத் தேசத்தாருந் தமிழைத் திராவிடபாஷையென்றும், தமிழ் பாஷைக்குரியோரைத் திராவிடர்களென்றும் வழங்கி வருவதை நாளது வரையிற் காணலாம். இத்தேசப்பெயரையும் வேதாகம புராணங்களையும் கடவுளர்களையும் புரட்ட ஆரம்பித்துக் கொண்டவர்கள் திராவிடமென்னும் பாஷையையும் புரட்டப்பார்க்கின்றார்கள். (டிசம்பர் 4, 1912)

என்றெல்லாம் பல இடங்களில் அயோத்திதாசப் பண்டிதர் விளக்குவார்.

திராவிட மொழி என்று ஒரு மொழி இருந்தது என்றும், திராவிட மொழியிலிருந்துதான் தமிழ் உள்ளிட்ட சில மொழிகள் உருக்கொண்டன என்றும் தமிழ்த் தேசப் பார்வையாளர்கள் சிலர்கூடக் கடந்த காலங்களில் கூறிவந்தது, ஆழ்ந்த இயங்கியல் பார்வையில்லா முடிவுகளே.

திராவிட மொழியிலிருந்தே தமிழும், தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் - பிறவும் பிறந்தன என்பது இயங்கியல் வரலாற்றைத் தலைகீழாய்ப் படித்திடுவதே ஆகும்.

தமிழையே - ஆரியத்தினரான சமசுக்கிருதத்தினர் - 'திராவிடம்' எனத் திரித்துக் கூறினர்.

மிகப் பழங்காலந்தொட்டே நம் தமிழ் மொழிக்குத் தமிழ் எனும் சொல் வழக்கு இருந்தது. தமிழ் என்கிற சொல்லே பழைய இலக்கியங்களிலும் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

'தமிழ் கூறும் நல்லுலகு, 'தமிழ்' என்கிளவி என்ற சொற்றொடர்களில் எல்லாம் பதிவாகியுள்ள 'தமிழ்' - என்பதே தொல்காப்பியப் பாயிரத்திலும், எழுத்ததிகாரத்திலும் இருப்பதைக் காணலாம்.

ஆனால் - பிற்காலத்தில் அத் தமிழ் எனும் சொல்லை ஆரியத்தினரின் சமசுக்கிருதம் தன் வழக்கப்படி முன்திரித்து வழங்கியிருக்கிறது. பவழம் என்பதைப் 'ப்ரவாளம்' என்றும், 'படி' என்பதைப் 'ப்ரதி' என்றும் வழங்கியதுபோல் தமிழ் என்பதை த்ரமிள் - த்ரமிளம் - திரவிடம் என்பதாகவே அழைக்கலாயினர்.

திரமிளா - என்பது மொழிகள் என்றும், த்ரவிடா- என்பது அம்மொழியையும், அம்மொழி வழங்கு நாட்டையும், த்ரமிடா மொழி இலக்கண வழக்காற்றுப் பள்ளியைக் குறித்ததாயும், த்ரமிட்டா - ஒரு நாக அரசனைக் குறிப்பதாயுமே மானியர் வில்லியம்சு தாம் தொகுத்த சமசுக்கிருத ஆங்கில அகராதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வகையில் மேலும் பலரின் ஆய்வுகளையும் ஒப்பிட்டு அறிய வேண்டுவது கட்டாயத் தேவைக்குரியது. அவை குறித்தெல்லாம் அடுத்த இதழில் பார்ப்போம்.. ...

(தொடரும்)

- பொழிலன்

Pin It