தமிழ்நட்டில் மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து ஒரு பொற்கால ஆட்சியைத் தமிழ் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜீவாத்மாவில் இருந்து பரமாத்மாவாக மாறியபின், யார் வைத்த செய்வினையாலோ, இல்லை பில்லி சூனியத்தாலோ அதிமுக என்ற கட்சி அக்கக்காக உடைந்து அரசியலில் ‘அ’னா போடத் தெரியாதவர்கள் எல்லாம் அதிகார மையங்களாக மாறினார்கள். நம்ம ஊரில் சாராய போதை அதிகமான குடிமகன்கள் சுடுகாட்டு சமாதியில் மயங்கிப் படுத்துக் கிடப்பதைப் பார்த்திருக்கின்றோம். போதை தெளிந்தவுடன் பேய்க்குப் பயப்படும் அதே குடிமகன், அடுத்த நாள் போதைத் தலைக்கேறியவுடன் மீண்டும் அதே சமாதியில் ஆழ்நிலைத் தியானத்தில் மூழ்குவான். போதை அனைத்துப் பயங்களையும் போக்கி விடுகின்றது. ஒரு தன்னெழுச்சியான தூண்டுதலை அது வழங்கி விடுகின்றது. சாராய போதை மட்டும் அல்லாமல் அதிகார போதையும் கூட அப்படியான அசட்டுத்தனமான உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கக் கூடியதுதான் என்பதை ஜெயலலிதாவின் சமாதியில், படுத்து, உருண்டு பஜனைபாடி, அழுது, அரற்றி இன்னும் என்ன என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்துகாட்டி, அதிகார போதையின் உச்சபட்ச அழிச்சாட்டியங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் முன்னே காட்சிப்படுத்தினார்கள் அதிகார போதைத் தலைக்கேறிய அரசியல் தற்குறிகள்.
ஓ. பன்னீர்செல்வம் நான்தான் உண்மையான அதிமுக என்றார். சசிகலா, ஜெயலலிதாவின் சமாதியை ஓங்கி அடித்து உள்ளே இருந்த ஜெயலலிதாவின் பிணத்தை ஒரு உலுக்கு உலுக்கி, 'நான் தான் உண்மையான அதிமுக' என்றார். இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா , 'நீங்கள் எல்லாம் ஜெயலிதாவுக்கு அரசியல் சொந்தம். ஆனால் நான் மட்டும் தான் ஜெயலலிதாவின் ரத்த சொந்தம். எனவே எனக்குத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக அனைத்து உரிமையும் உள்ளது' எனச் சொல்லி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். பின்னர் அது அதிமுக ஜெ.தீபா அணி என்று பெயர் மாற்றம் செய்யப்படது. அதற்கும் சில அடிமைகள் தமிழ்நாட்டில் கிடைத்தார்கள். இந்தக் கொடுமையை எல்லாம் எப்படி ஜீரணிப்பது என்று தெரியாமல் கட்டிங் போட்டுவிட்டு தமிழக குடிமகன்கள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே, அந்த மிகப்பெரிய அவலம் அரங்கேறியது. தீபாவின் புருஷன் மாதவன் தனக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சராக வருவதற்கு உரிமை உள்ளது என உரிமைக் குரல் எழுப்பினார், தனிக்கட்சியும் ஆரம்பித்தார். இப்படி ஒரு அட்டூழியம் அழிச்சாட்டியத்தை இதற்கு முன் தமிழக மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு அட்டூழியம் அழிச்சாட்டியம். தமிழக மக்கள் தங்களைச் சுற்றியும் பல சாக்கடைகள் சூழ்ந்து விட்டதை எண்ணி மனம் கலங்கி நின்றார்கள்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் எப்படியாவது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று களம் இறங்கிய பிஜேபி அதற்குத் தோதாக ஒரு நல்ல அடிமைக்கு உரிய எல்லாவகைப் பொருத்தங்களும் பொருந்திய ஓபிஎஸ் மூலம் காய்களை நகர்த்தியது. ஏற்கெனவே பிஜேபியை விட இந்துத்துவா கொள்கைகளையே கட்சியின் போராட்ட வடிவமாக வளர்த்தெடுத்து வைத்திருக்கும் அதிமுகவை கபாளீகரம் செய்வது என்பது நிச்சயம் பிஜேபிக்கு ஒரு எளிய வழிதான். தமிழ்நாட்டில் பிஜேபி தன்னை வலுவாக நிலை நிறுத்திக்கொள்ள உள்ள ஒரே சிறந்த வழியும் அதுவாகத்தான் இருந்தது. ஊர்ப் பணத்தை எல்லாம் கொள்ளையடித்து, தமிழ்நாட்டையே மொட்டை அடித்துக் கொண்டிருந்த கொள்ளைக் கும்பலின் உச்சிக்குடுமியை வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என அனைத்தையும் பயன்படுத்தி ஆட்டிப் பார்த்தது பிஜேபி. கடைசியில் ஓபிஎஸ் மட்டும் அல்லாமல் ஈபிஎஸ்சும் ‘நான் வாழ வேண்டும் ஐயா’ என்று மோடியின் காலில் விழ வைத்தது.
மன்னார்குடி மாஃபியா கும்பலின் பிடியில் அதிமுக இருக்கும் வரை முழுமையாக அதிமுகவை கபாளீகரம் செய்வது என்பது பிரச்சினை என்பதை உணர்ந்துதான் தற்போது தனது புதிய அடிமைகள் மூலம் மாஃபியா கும்பலுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. தினகரன் சங்காரச்சாரியைப் பார்த்து ஆசி வாங்கினாலும், மூக்குபொடி சித்தரைப் பார்த்து ஆசி வாங்கினாலும் எல்லாவற்றுக்கும் மேலே பிரம்மமாக உட்கார்ந்துகொண்டு ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மோடி சித்தரின் ஆசியை மட்டும் முழுவதுமாகப் பெற முடியவில்லை. அதற்குத் தமிழ்நாட்டில் இருந்த ஆடிட்டர் குருமூர்த்தி, எச்சிக்கலை ராஜா, இல.கணேசன் போன்ற பார்ப்பனக் கும்பல் கொடுத்த நம்பகமான தகவலாக இருக்கலாம். மன்னார்குடி மாஃபியா கும்பலை நம்புவது என்பது தற்கொலைக்குச் சமமானது என மோடிக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் தான் தற்போது முழுவதுமாக மன்னார்குடி மாஃபியா கும்பலை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளின் இணைப்பானது ஏற்கெனவே அழுகி நாறிக் கிடக்கும் தமிழக அரசியல் சூழ்நிலையை எந்த வகையிலும் மாற்றப் போவதில்லை என்றாலும், அது மேலும் இன்னும் சீரழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள். அதற்கு முன்னோட்டமாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தற்போது அறிவித்து இருக்கின்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ள எந்தப் பிரச்சினையும் தங்களுக்குக் கிடையாது என தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் அறிவித்து இருக்கின்றது. அதனால் அதிமுக இரு அணிகளின் இணைப்பு என்பதை நாம் பிஜேபியின் புதிய பிறப்பு என்றுதான் பார்க்க வேண்டும். இது ஒரு நிலைமாற்றம் என்றுதான் பார்க்க வேண்டும். அதனால் இனியும் அதிமுகவை நாம் அதிமுக என்று அழைப்பது தேவையில்லாதது. இப்போது அது நிலைமாற்றம் அடைந்த பிஜேபி.
இனி தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்றால் மத்திய அரசின் அனைத்து நாசகாரத் திட்டங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும். ஹைட்ரோகார்பன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள், இந்தி திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, இன்னும் என்ன என்ன நாசகாரத் திட்டங்களை எல்லாம் தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டம் தீட்டி வைத்திருக்கின்றதோ அது எல்லாம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டு மக்கள் இந்தக் கொள்ளையர்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்திற்கு இனி இதை எல்லாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
ஒரு நிமிடம் கூட நீடிக்கத் தகுதியிழந்து இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மானமற்ற கூட்டம் என்ன நடந்தாலும் ஆட்சியைக் கலைப்பதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கின்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் முகத்தில் காறித் துப்பினாலும், ஈபிஎஸ், தினகரன் முகத்தில் காறித் துப்பினாலும், இல்லை தினகரன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரண்டு பேரின் முகத்திலும் காறித்துப்பினாலும் அனைவருமே துடைத்துக்கொண்டு 'அம்மாவால் உருவாக்கப்பட்ட அரசை கவிழ்க்க விடமாட்டோம்' என சூடு சுரணையற்று, வெட்கமானமற்று இந்த அரசை காப்பாற்றி நடத்தி வருகின்றார்கள்.
எங்கே ஆட்சி களைந்து மீண்டும் தேர்தல் வந்தால் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை வருமோ என்ற அச்சமும், முடிந்தவரை ஆட்சியைப் பயன்படுத்தி கொள்ளையடித்துச் செட்டில் ஆகிவிட வேண்டியதுதான் என்ற பிழைப்புவாதமும் தான் இந்த மானங்கெட்ட ஆட்சியை நிலைக்க வைத்திருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வரச்சொல்லி ஆளுநருக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார். ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் கொண்டுவந்த போது என்ன நடந்ததோ அது இம்முறையும் நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இருக்கும் மூன்று ஆண்டுகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துவிட்டு தமிழ்நாட்டை துடைத்து அழித்துவிட்டுத்தான் போவார்கள். மூக்குப்பொடி சித்தரைவிட மோடி சித்தரின் ஆசி தற்போதைய ஆட்சிக்கு முழுமையாக இருப்பதால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் சில அல்லக்கை எம்எல்ஏக்களை வளைத்துப் போடுவது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலையில்லை.
அதனால் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவிற்கு இன்னொரு முறை வாய்ப்பை வழங்கி தாங்கள் செய்த வரலாற்றுப் பிழைக்கான மிக மோசமான தண்டனைகளை அனுபவிக்க தற்போது நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். எவ்வளவு கீழ்த்தரமான ஊழல் பேர்வழிகளுக்கும் நிபந்தனை இன்றி ஓட்டுப் போடும் மக்களின் பிழைப்புவாதமும், காரியவாதமும், அரசியலற்ற தனமும் என எல்லாம் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டில் பிஜேபிக்கு கதவு திறந்து விட்டிருக்கின்றது. இதில் இருந்து மீள வேண்டுமா, இல்லை அடிமை நுகத்தடியை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமா என்பதை அதிமுகவிற்கு ஓட்டு போட்ட மகா ஜனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
- செ.கார்கி