Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

sasikala and ops and edapppadiடிசம்பர் 5-ம் தேதி தொடங்கிய அதிமுகவின் அதிகார யுத்தம் எப்போது முடிவிற்கு வருமென்பதுதான் இப்போது எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் கேள்வி. ஏனென்றால் தமிழகத்தின் வலுவான கட்சி கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக குழம்பிக் கிடக்கிறது.. அந்தக் குழப்பம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும் கடந்து பொது மக்களையும் குழப்பமடைய வைத்துள்ளது.

பன்னீர்செல்வத்தின் கடற்கரை தியானம், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம், எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவி,சசிகலாவின் சிறை, டிடிவி தினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம், இரட்டை இலை முடக்கம் என ஏகப்பட்ட உட்கட்சி பிரச்சனைக்கு இடையில் தீபாவும் தன்னை இந்த குழப்பத்தில் இணைத்துக் கொண்டார். இவ்வளவு குழப்பங்களையும் தாண்டி இன்று அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த அணிகள் இணையுமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இந்த அணிகளை சேர்க்கப் போகும் அந்த ஆளுமை யார்? இணைந்த பிறகு கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

செப்டம்பர் மாதம் 1979 ம் ஆண்டு பிஜு பட்நாயக் தலைமையில் திமுகவையும் அதிமுகவையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கலைஞரும் எம்ஜிஆரும் எதிர் எதிரே அமர்ந்து பேச்சு வார்த்தையைத் தொடங்கினர், பேச்சுவார்த்தைக்கு இரண்டு தரப்பிலும் குழுக்கள் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. பிறகு காரணமே தெரியாமல் இணைப்பு தடைபட்டது. பலவருடங்களுக்குப் பிறகு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் அதிமுகவின் இரண்டாம்நிலை தலைவர்கள் இணைப்பிற்கு ஒத்துழைக்கவில்லை. ஏனென்றால் கட்சிகள் இணைந்தால் தங்களின் அதிகாரத்தையும், பதவிகளையும் இழக்க நேரிடும் என்பதை உணர்ந்திருந்தனர். இப்போதும் அப்படியான நிலை தான். இந்த மூன்று அணிகளிலும் தலைமைகளைத் தாண்டி அதிகாரத்தை அடைய விரும்பும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் ஏராளம். எனவே இவர்கள் இணைப்பை ஏற்று கொள்ள மாட்டார்கள். மேலும் அதிமுகவில் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியமற்றது.

அதிமுகவில் இப்போது நடந்து கொண்டிருப்பது கட்சியின் , அடிமட்டத் தொண்டர்களுக்கு இடையிலான மோதல் இல்லை. இங்கு நடந்து கொண்டிருப்பது தலைமைக்கான அதிகார மோதல். இதிலும் சிக்கல் இருக்கிறது. அதிமுக உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே அது வலுவான கொள்கைப் பற்றுள்ள கட்சி அல்ல. மாறாக தனிநபர் ஆளுமையின் கவர்ச்சியின் கீழ், திமுக எதிர்ப்பில் ஒன்றிணைந்த கட்சி. இப்போது அப்படியான தனிநபர் ஆளுமை செலுத்தக்கூடிய தலைவர்கள் கட்சியில் யாருமில்லை என்பதுதான் உண்மை. அப்படியான தலைவர்கள் அதிமுகவில் இப்போது இருக்கிறார்களா? என்பதை சோதித்துப் பார்க்க தேர்தலே இறுதியானது. அதுவரை இந்தக் குழப்பங்கள் மேலும் அதிகரிக்க மட்டுமே செய்யும்.

அதிமுக இணைந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஏனென்றால் ஆட்சியில் நிலவிவரும் ஸ்திரமற்ற தன்மை முடிவிற்கு வர வேண்டும். ஆனால் நாம் இழந்த மாநில சுயாட்சி அதிகாரங்கள், நீட், ஜிஎஸ்டி, உதய் மின்திட்டம்,ரேஷன் மானியம் ரத்து என எதுவும் மக்களுக்கு திரும்ப வரப்போவது இல்லை. மாறாக மேலும் சில உரிமைகளை நாம் இழக்க நேரிடலாம். ஒருவேளை இணைப்பு நடந்து அதிமுக ஆட்சி தொடருமானால் அந்த ஆட்சியின் தலைமையும் மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில்தான் செயல்படும். மத்திய அரசின் அனுமதியில்லாமல் அதிமுகவில் இனி ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாது.

இதையும்தாண்டி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுக மீளவேண்டுமென்றால் அதற்கு வலுவான கொள்கைப் பிடிமானம் உள்ள தலைமை தேவை. தற்போதைக்கு அதிமுகவில் அப்படி யாரும் இல்லை என்பதையே கடந்தகால வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

- மணிகண்டன் ராஜேந்திரன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 avudaiappan 2017-08-08 19:11
diravida katchikal olinthu b j p achikku varavendum
Report to administrator

Add comment


Security code
Refresh