சின்னஞ்சிறிய கியூப நாட்டுக்கு எதிராகப் பொருளாதார முற்றுகையிட்டு அதை வீழ்த்துவதற்கு கடந்த 46 ஆண்டுக்காலமாக அமெரிக்க வல்லாதிக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அது மட்டுமல்ல. உளவாளிகள் ஊடுருவல், மறைமுகப் போர், எல்லாவற்றிற்கும் மேலாக கியூபாத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ அவர்களை படுகொலைச் செய்யத் தொடர்ந்து முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. ஐ.நா பேரவையில் கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானங்கள் வந்தபோது 191 நாடுகளில் 188 நாடுகள் அதை எதிர்த்து வாக்களித்தன. உலகம் கியூபாவிற்கு ஆதரவாகவும் அரணாகவும் நின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடும் மூன்றாம் உலக நாடுகளின் வழிகாட்டியாக பிடல் காஸ்ட்ரோ திகழ்கிறார். அவரது உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் கியூப மக்களை மட்டுமல்ல தென்னமெரிக்க நாடுகள் பலவற்றைப் பாதுகாத்து வருகின்றன.

2005 ஆம் ஆண்டு சூன் மாதம் கியூபாவின் தலைநிகரான ஹவானாவில் காஸ்ட்ரோ கூட்டிய மாநாட்டில் 700க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலத்தின் அமெரிக்க நாடுகளில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அவர்கள். இந்த நாடுகள் சிலவற்றில் உள்ள அரசுகள் அமெரிக்காவின் உதவியோடு தங்கள் நாட்டு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரச பயங்கரவாதத்தை அனைவரும் கண்டனம் செய்தார்கள். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் ஐக்கிய முன்னணி ஒன்றும் இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அர்ஜென்டினா, கியூபா, வெனிசூலா, பொலிவியா ஆகிய நாடுகள் கூடி அமைத்துள்ள இந்த முன்னணி தங்களுக்கென பொதுத் தொலைக்காட்சி ஒன்றையும் உருவாக்கி உள்ளது.

வெனிசூலா நாட்டின் மக்கள் பெரும் புரட்சியை நடத்தி எளிய குடிமகன் ஒருவரை நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகத்திலேயே எண்ணெய் வளம் அதிகமாகக் கொண்ட நாடுகளில் வெனிசூலாவும் ஒன்றாகும். அந்த எண்ணெய் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் நலன் பயக்கும் பொருளாதாரத் திட்டம் ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். கியூபாவிற்கு 46 ஆண்டுகளாக எண்ணெய் அளிக்க அமெரிக்கா மறுத்தது. ஆனால் குறைந்த விலையில் எண்ணெய் வழங்க வெனிசூலா முன்வந்தது. அது மட்டுமல்ல ஏழை நாடுகள் பலவற்றிற்கும் சலுகை விலையில் எண்ணெய் வழங்க அது முன்வந்திருக்கிறது.

அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிராக கியூபா நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டம் இன்று உலக நாடுகளின் பேராதரவைப் பெற்றுள்ளது. அண்மையில் சென்னையில் 3ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய கியூபா ஆதரவு மாநாடு 21.01.06 அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, இந்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கியூபாவிற்கு ஆதரவாகக் கூட்டப்பட்ட இம்மாநாட்டின் நோக்கங்களை நாம் முழுமையாக வரவேற்பதுடன் அவர்களுடன் இணைந்து கியூபாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம். அதே வேளையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இந்து பத்திரிகை ஆசிரியர் என்.இராம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நமது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

உயிர்க் கொல்லாமையை வலியுறுத்தக் கூட்டப்பட்ட மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக கசாப்புக் கடைக்காரரைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்றது இது. அதுமட்டுமல்ல இலங்கையில் இனவெறி அரசியலுக்கு ஆதரவு அளித்து வரும் இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் குணசேகரா, மற்றொரு அமைச்சர் திசாவிதாரணர் ஆகிய இருவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

கியூபாவிற்கு எதிராக 46 ஆண்டுகாலமாக அமெரிக்கா பொருளாதார முற்றுகையைக் கடைப்பிடித்து வருகிறது. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு எதிராகக் கடந்த 15 ஆண்டு காலத்திற்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசு பொருளாதார முற்றுகையைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் விளைவாக தமிழர்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். போதுமான மருத்துவ வசதி இல்லாமலும், மருந்துகள் கிடைக்காமலும், ஏராளமான குழந்தைகளும், தாய்மார்களும் துடிதுடிக்க இறந்திருக்கிறார்கள்.

அப்போதுகூட சிங்களப் பேரினவாதிகளின் மனம் இரங்கவில்லை. இந்தப் பேரினவாத அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கியூபாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது சரியான பித்தலாட்டமாகும். அதைப் போலவே இலங்கையில் 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆதரவாகவும் எழுதி அதற்குக் கைமேல் பலனாக சிங்கள அரசினால் லங்காரத்னா என்னும் விருது பெற்றிருக்கிற என்.இராம் கியூபாவிற்காகக் கண்ணீர் வடிப்பது கடைந்தெடுத்த மோசடியாகும். கியூபாவிற்கு ஆதரவு திரட்டக் கூட்டப்பட்ட இம்மாநாட்டின் உயர்ந்த நோக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் மேற்கண்ட சந்தர்ப்பவாதிகள் கலந்து கொண்டது வருந்தத்தக்கதாகும்.

(நன்றி: தென்செய்தி)

- தென்பாண்டி வீரன்

Pin It