சாமானிய மனிதன் தனக்கான நீதியைப் பெற ஜனநாயக அமைப்பில் உள்ள கடைசியான வாய்ப்பு நீதிமன்றங்கள் தான். சட்டம் அனைவருக்கும் சமம், நீதியானது ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்த்தெல்லாம் வழங்கப்படுவது கிடையாது என பள்ளி பாடப்புத்தகத்திலும் ஜனநாயகத்தை விதந்தோதும் அதன் புரவலர்களாலும் வழக்கமாக சொல்லப்பட்டு வந்தாலும் நடைமுறையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாமானிய மனிதனும் அதை ஒரு ஜனநாயகப் புரட்டாகவே பார்க்கின்றான். நீதி மன்றங்கள் என்பவை எல்லாம் நீதியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வாங்கி வைத்துக் கொண்டு அதை சில்லரை விற்பனையில் தங்கள் விருப்பம் போல விலை வைத்துக் கொள்ளையடிக்கும் விற்பனை நிலையங்களாகத்தான் அது சாமானிய மனிதனின் நினைவில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது. நேர்மையின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நின்று நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்கும் என்று  சாமானிய மனிதன் ஆத்மார்த்தமாக நம்புவானேயானால் அவன் நிச்சயம் தனக்கான நீதி சமூகத்தில் மறுக்கப்படும் போது அதைப் பெறுவதற்கு ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்க மாட்டான்.

high court chennai

நீதி மன்றங்கள் மூலமும் அரசு அமைப்புகள் மூலமும் தனக்கான நீதியைப் பெறமுடியாது என்று உறுதியாக நம்பும் நிலைக்கு, சமூகம் அவனைத் தள்ளும் போது அவன் அதற்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு மாற்றுவழியே இல்லை என்பதை உணர்கின்றான். அரசு அமைப்புகள் அனைத்தும் ஊழல்மயமாகி அதைச் செய்வதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் முழு நேரத் தொழிலாக மாறியிருக்கும் போது சாமானிய மக்கள் தனக்கான உரிமைகளை வென்றெடுக்க அதே அதிகார வர்க்கத்திடம் மனுகொடுத்து, மனுகொடுத்து ஏமாந்துபோய் இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம் என்பதை தம்முடைய நடைமுறை செயல்பாடுகள் மூலம் நன்றாக உணர்ந்தே தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள். யாரும் பொழுது போகவில்லை, வேறு வேலைவெட்டி  இல்லை என்று போராடுவது கிடையாது. தனக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது போராடாத எந்தச் சமூகமும் ஆளும் வர்க்கத்தால் நிர்மூலமாக்கப்படுவதில் இருந்து தப்பிக்க முடியாது.

ஆனால் நீதிபதிகளுக்குப் போராட்டம் என்றாலே கசக்கின்றது. பொது இடத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்குமா? குடங்களை எடுத்து வந்து போராடினால் தண்ணீர் கிடைத்துவிடுமா? என்று அகம்பாவமாக கேட்க வைக்கின்றது. பின்பு என்ன செய்தால் தீர்வு கிடைக்கும்?. தினம் தினம் அதிகாரிகளிடமும் அரசு அலுவலர்களிடம் மனு கொடுத்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தால் தண்ணீர் வந்துவிடுமா, இல்லை நீதி மன்றத்தில் 'குழாயில் தண்ணீர் வரவில்லை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும்' என்று ஒரு முப்பது நாற்பது ஆண்டுகள் வழக்கை நடத்தினால் தண்ணீர் வந்துவிடுமா? என்ன செய்தால் தண்ணீர் உடனே வரும் என்று மாண்புமிகு நீதிபதிகள் சொல்ல வேண்டும். நீதிபதி அவர்களுக்கு பிரச்சினை இல்லை. நல்ல வரும்படி வருகின்றது. அவர் குளிப்பதற்கு, குடிப்பதற்கு, குண்டி கழுவுவதற்கு என அனைத்துக்குமே சுத்திகரிக்கபட்ட குடிநீரை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள்? நிதிபதி வீட்டு நாய்களின் ஒரு நாள் பராமரிப்புச் செலவுக்கும் அவர்களின் மனைவிமார்கள் மேக்கப் செய்துகொள்ள செலவழிக்க ஆகும் தொகையைவிட மிகக் குறைவான வருமான உள்ள எங்களுடைய மக்களுக்கு அவர்கள் வாழ்நாளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடிப்பதற்குக் கூட காசுகொடுத்து வாங்க முடியாத நிலையில்தான் இன்னமும் உள்ளனர்.

 அவர்கள் கேட்பதெல்லாம் சுத்திகரிக்கப்படாமல் அரசு வழங்கும் சுகாதாரக் கேடான நீரைத்தான். எந்த நீதிபதியின் மனைவியும், கலெக்டரின் மனைவியும், தாசில்தாரின் மனைவியும், இல்லை எம்பி, எம்எல்ஏவின் மனைவியும் வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதில்லை. எங்கள் தாய்மார்கள்தான் வேகாத வெயிலில் கால்கடுக்க பலமணி நேரம் காத்துக்கிடந்து தண்ணீர்வரும் அன்று ஒருநாள் வேலையையே தியாகம் செய்துவிட்டுத் தண்ணீர்பிடிக்கின்றார்கள். நீதிபதிகளுக்கு மக்கள் தண்ணீருக்காக சாலையில் அமர்வதைப் பார்த்தால் கோபம் வருகின்றது. ஆனால் சாலையில் உட்கார்ந்தால்தான் தண்ணீர்வரும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம், சாலையில் குடத்துடன் போராட்டம் நடத்தும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் என்றால் அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக அப்படித்தான் தண்ணீரை வரவழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

 அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டுமாம். போராட்டமே மக்களுக்கு எதிராக மாறியிருக்கும் இந்த அரசு அமைப்புக்கு எதிராக என்றிருக்கும் போது, அதே அரசு அமைப்பிடம் உங்களுக்கு எதிராகப் போராட எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்க வேண்டுமாம். எவ்வளவு கேலிக்கூத்தானது நீதிபதிகளின் சமூகம் சார்ந்த அறிவு! டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று மக்கள் அனுமதி பெற்றுப் போராடிய எத்தனை இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கின்றது? மக்கள் கடைகளை அடித்து நொறுக்கிய பின்னர்தான் வேறு வழியில்லாமல் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் டாஸ்மாக் கடைகளைக் கண்டிப்பாக மூடவேண்டும் என்று சொன்ன நீதிமன்றங்கள் தான், இப்போது கிராம சபைத் தீர்மானங்கள் எந்த வகையிலும் டாஸ்மாக் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு கொடுக்கின்றன. அப்படி என்றால் மக்கள் என்ன செய்வது? இனி நீதி மன்றங்களுக்கும் போக முடியாது, அரசிடமும் முறையிட முடியாது,  வேறு என்ன தான் மக்கள் செய்வார்கள்? ஒரே வழி கடையை அடித்து நொறுக்குவதுதான். இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவு போட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.செல்வம் மற்றும் என். ஆதிநாதன் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசு செயல்படும்போதும் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு பூர்த்தி செய்யாமல் தட்டிக்கழிக்கும் போதும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.

சாலைவசதி இல்லை, தெருவிளக்கு இல்லை, தண்ணீர் இல்லை, அருகில் படிக்க பள்ளி இல்லை, டாஸ்மாக் கடை வேண்டாம் போன்ற சாதாரண வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக கூட இந்த மக்கள் இனி அரசிடம் அகிம்சையான வழியில் முறையிட வேண்டும் என நீதிபதிகள் விரும்புகின்றார்கள். அப்படி அகிம்சையான வழியில் மனு கொடுத்துப் பொறுமையாக காத்திருந்து தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடவேண்டும் என்று மக்களுக்குப் போதனை செய்கின்றார்கள். அப்படி அரசு அதிகாரிகள் செய்யத் தவறினால் அனுமதி பெற்று காவல்துறை எங்கு போராட்டம் நடத்த இடம் வழங்குகின்றதோ அது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இடம் ஒதுக்கினாலும் சரி, மந்தவெளியில் இடம் ஒதுக்கினாலும் சரி, அமைதியான முறையில் காவல்துறை விதிக்கும் அனைத்துக் கட்டுபாடுகளுக்கும் உட்பட்டு  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அப்படியும் காரியம் நடக்கவில்லை என்றால் கடைசியில் நீதிமன்றத்தை அணுகலாம். அவர்கள் குறைந்தது ஒரு முப்பது நாற்பது வருடத்துக்குள் உங்கள் ஊருக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு இடுவார்கள். அப்படி நீதிபதிகள் கொடுத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜனநாயகத்தில் ஒரு மைல்கல் என்று நாம் கொண்டாட வேண்டும். அதைத்தான் நீதிபதிகள் விரும்புகின்றார்கள்.

நாம் என்ன விரும்புகின்றோம் என்றால் இந்த நீதிபதிகளை குறைந்தது ஒரு ஐந்து ஆண்டுகளாவது கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கும், சேரிகளில் துப்புரவு செய்யும் வேலைக்கும், மலம் அள்ளும் வேலைக்கும், இன்னும் சாமானிய மக்கள் செய்யும் அத்தனை வேலைகளுக்கும் அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். பின்புதான் அவர்களை நீதி மன்றங்களுக்கு உள்ளேயே அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு சாமானிய இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எவ்வளவு சிக்கல் நிறைந்தவை என்பது இவர்களுக்குத் தெரியும். கைநிறைய சம்பளமும், பைநிறைய கிம்பளமும், மாளிகை போன்ற வீடும், ஏசி காரும், சொகுசு வாழ்க்கையும் இவர்களை வேகாத வெய்யிலில் ஒரு குடம் தண்ணீருக்காக சாலையில் போராடும் மக்களை ரவுடிகள் போன்றும், பொறுக்கிகள் போன்றும், அருவருப்பானவர்கள் போன்றும் பார்க்க வைக்கின்றது. நீதிபதிகள் எல்லாம் கார்ப்ரேட்டுகளின் ஏவல் நாய்களாக மாறிப்போனதைத்தான் இது போன்ற தீர்ப்புகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எனவே நாம் தண்ணீர் வரவில்லை என்று சாலையில் அமர்ந்து போராடுவது போல நீதி கிடைக்கவில்லை என்று நீதிமன்ற அறைகளுக்கு உள்ளேயே அமர்ந்து போராடுவதுதான் இனி சரியானதாக இருக்கும் போல் தெரிகின்றது.

Pin It