“ஜனவரி 7, 2006. உயிர்மை நூல் வெளியீட்டு விழா சென்னை புக்பாயிண்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து புக்பாயிண்ட் கட்டடத்தின் மேற்கூரையில் பெண் கவிஞர்கள் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தாராணி, க்ருஷாங்கினி, பத்திரிகையாளர்கள் அமுதா, கவிதா ஆகியோர் குதிக்கிறார்கள். மெதுவாக கயிறு கட்டி, ஒருவர் ஜன்னல் வழியாக கூட்டத்தில் நுழைகிறார். இன்னொருவர் பின்வாசல் வழியாக நுழைகிறார். மற்றும் ஒருவர் ஏ.சி. பாக்சைக் கழற்றி விட்டு சத்தம் இல்லாமல் உள்ளே குதிக்கிறார். கூட்டத்தில் மெதுவாக ஊடுருவுகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் பேசி முடிக்கும்போது, பெண் எழுத்தாளர்கள் மொத்தமாக எழுந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுக்கிறார்கள்.
குட்டி ரேவதி சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கி மூலம் எஸ்.ராமகிருஷ்ணனை நோக்கிச் சுடுகிறார். எஸ்.ரா. லாவகமாகத் தப்புகிறார். சுகிர்தாராணி கையெறி குண்டை வீசுகிறார். எஸ்.ரா. குனிந்து கொள்கிறார். பின்புறம் தள்ளிப் போய் வெடிக்கிறது. அரங்கில் கூச்சலும், புகையும் எழும்புகிறது. மாலதி மைத்ரி ஏ.கே.47-ஐ எடுத்து சுட ஆரம்பிக்க, மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர் உதவியோடு கூட்டத்தை விட்டு எஸ்.ரா. வெளியேறுகிறார். அண்ணா சாலையில் பெண் எழுத்தாளர்கள் விடாமல் துரத்துகிறார்கள். அப்போது வந்த 18ம் நம்பர் பஸ்சில் எஸ்.ரா. தாவி ஏறிவிட, பெண் எழுத்தாளர்கள் சிறிது தூரம் துப்பாக்கியால் சுட்டபடி துரத்துகிறார்கள். பஸ் வேகம் பிடிக்க, எஸ்.ரா. ஒரு வழியாகத் தப்புகிறார்.”
‘திட்டமிட்ட சதி’ என்று மனுஷ்யபுத்திரனும், ‘உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’ என்று எஸ்.ரா.வும் மறுநாள் பேட்டி கொடுத்ததைப் படித்தால் மேற்கூறியதுபோலாவொரு சம்பவம்தான் நடந்திருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன் என்பதால், அத்தகைய சேசிங் எதுவும் நடக்கவில்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது. நாவல், சிறுகதைகளைத் தாண்டி, துணையெழுத்து, கதாவிலாசம் என எஸ்.ரா. எழுதும் கட்டுரைகள் கூட பிக்சன் தான் என்று எழுத்தாள நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர் தரும் பேட்டியும் பிக்சன்தான் என்று தெரியவரும்போது, உடம்பு புல்லரிக்கிறது.
நூல் வெளியீட்டு விழாவில் என்னதான் நடந்தது? எஸ்.ரா. பேசி முடித்தபோது பெண் எழுத்தாளர்கள் எழுந்து, ‘எஸ்.ராமகிருஷ்ணன்! சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை விமர்சித்து ஒரு வசனம் எழுதியிருக்கிறீர்களே? அதற்கு விளக்கம் தர வேண்டும்’ என்று கேட்டார்கள். எஸ்.ரா., ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை. அந்த வசனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. படத்தில் இப்படி ஒரு வசனம் சேர்க்கப்பட்டிருப்பதே படம் வெளியான பின்புதான் எனக்குத் தெரிய வந்தது’ என்றார். ‘வசனத்தை நீங்கள் எழுதவில்லை என்றால் மறுப்பு தெரிவிக்காமல் இத்தனை நாள் சும்மா இருந்தது ஏன்?’ என்று பெண் எழுத்தாளர்கள் வினவினார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எஸ்.ரா. இறங்கி விட, அப்போது பேச வந்த கவிஞர் யுவன் சந்திரசேகர், ‘கூட்டத்தில பொம்பளைங்க வந்து கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க? அவங்களை வெளியேற்றுங்க’ என்று பேச, அதைக் கேட்டு கூட்டத்தில் இருந்து ஆண்கள்(?) சிலர் எழுந்திருக்க, நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்து (பிரேம்) ரமேஷ் மைக்கைப் பிடித்து, எஸ்.ரா., யுவன் வகையறாக்களை எச்சரித்தார்.
“பெண் எழுத்தாளர்கள் இங்கே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அதைக் கூட விடமாட்டேன் என்றால் எப்படி? எதை வேண்டுமானால் எழுதி விட்டுப் போகலாம் என்ற நினைப்பா? இதேபோல் மாலதி மைத்ரியைப் பற்றி எழுதியிருந்தால் இந்நேரத்தில் இங்கு மூன்று தலைகள் உருண்டிருக்கும்” என்று கர்ஜிக்க, பெண் எழுத்தாளர்களை வெளியேற்ற எழுந்த ஆணாதிக்கச் சிங்கங்கள் அரண்டு போய் உட்கார்ந்தார்கள். யுவன் சந்திரசேகர் பம்மியபடி மாலதி மைத்ரியிடம் குழைய ஆரம்பித்தார். இதனையடுத்து மனுஷ்யபுத்திரன், ‘இது உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா. கூட்டத்திற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். பெண் எழுத்தாளர்கள் அரங்கை விட்டு வெளியேறினர். வெளியேறும்போது கவிஞர் சுகிர்தாராணி, ‘துப்பட்டாதானே உங்கள் கண்களை உறுத்துகிறது. இதே நானும் துப்பட்டாவை கீழே போடுகிறேன். அடுத்த படத்தில் என்னைப் பற்றியும் எழுதுங்கள். இது புகழ் பாடும் கூட்டம்’ என்று கூறியபடி சென்றார். 5, 6 நிமிடங்களுக்குள் இது நடந்து முடிந்தது.
பின்பு பெண் எழுத்தாளர்கள் புக் பாயிண்ட் வாசலில் நின்று கொண்டு, எஸ்.ரா.வின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவர் கீழே இறங்கி வரும்போது, அவரைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அவ்வளவுதான் நடந்தது. எஸ்.ரா. மறுநாள் கூறியதுபோல் அவரை யாரும் ஆபாசமாகத் திட்டவில்லை, அவரை ‘நாயே’ என்று விளித்து வாயில்லா ஐந்தறிவு ஜீவனை யாரும் இழிவுபடுத்தவும் இல்லை. கூட்டத்தை நடத்த விடாமல் யாரும் கலாட்டா செய்யவுமில்லை. அந்தக் கூட்டத்தில் இருந்தவன் என்ற முறையில், எஸ்.ரா. அளித்த பேட்டி முழுக்க முழுக்க பிக்சன் தான் என்பதை உறுதியாகக் கூறுவேன்.
இலக்கிய உலகில் ‘பார்ப்பனர்களின் மானம் காக்கும் கோவணமாக’ (நன்றி: அ. மார்க்ஸ்) செயல்பட்டு வரும் மனுஷ்யபுத்திரன், இதை ‘திட்டமிட்ட சதி’ என்கிறார். ‘ஊடகப் பரப்பில் உயிர் வாழும் இத்தகைய ஒட்டுண்ணிகளுக்கு அறிவுலகில் எந்த இடமும் இல்லை’ என்று சாபம் கொடுக்கிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நிகழ்ச்சி முடிந்த பின்பு, எஸ்.ரா.வும், மனுஷ்யபுத்திரனும் தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு தங்கள் பக்கம் ஆள் சேர்த்த கதை இருக்கிறதே, அரசியல்வாதிகளின் சகுனித்தனத்தையும் தோற்கடித்து விடும். மனுஷ்யபுத்திரன் காலச்சுவடிடம் ‘இலக்கிய அரசியல்’ கற்றவராயிற்றே, சொல்லியா தரவேண்டும்? எஸ்.ரா.வை அடிக்க முற்பட்டார்கள் என்றும், பெண் எழுத்தாளர்களை காலச்சுவடு தான் தூண்டிவிடுகிறது என்றும் போன் மூலம் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு சாணக்கியத்தனம் செய்திருக்கிறார். ‘பாபா’வின் அருள் கிடைப்பதற்கு முந்தைய காலத்தில் நட்புறவுடன் இருந்த எழுத்தாளர்களை எல்லாம் எஸ்.ரா. தொடர்பு கொண்டு, ‘என்னை அடிக்க வந்தார்கள். உயிர் பிழைத்தது பெரிய விஷயம்’ என்று அழுதிருக்கிறார். எஸ்.ரா.! நீங்கள் ஏன் ஒரு அரசியல் கட்சி தொடங்கக் கூடாது? அதற்கான முழுத் தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. கொள்கைப் பரப்புச் செயலாளராக மனுஷ்யபுத்திரனையும், தளபதியாக யுவன் சந்திரசேகரையும் நியமித்து விட்டால், சீக்கிரமே ஆட்சியைப் பிடித்து விடலாம். இலக்கிய உலகமாவது நிம்மதியாக இருக்கும்.
அப்துல்ரகுமான், பழனிபாரதி, பா.விஜய் வரிசையில் எஸ்.ரா.வும் சேர்ந்து கொண்டு, பெண் கவிஞரைக் கொச்சைப்படுத்தி வசனம் எழுதியிருக்கிறார். கேட்டால், ‘பெண் கவிஞர்களை பட்டியலிடும் போதெல்லாம் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி பெயரை சொல்லியிருக்கிறேன்’ என்று சால்ஜாப்பு. இருப்பது 5,6 பெண் கவிஞர்கள். அதில் இவர்கள் இருவரையும் எப்படி சொல்லாமல் விடமுடியும்? பிறகு, ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை’ என்று சமாளிப்பு வேறு! அப்படி என்றால் சினிமாவில் உப்புக்குச் சப்பாணி வேலையைத்தான் நீங்கள் செய்கிறீர்களா?
ஏதோ எஸ்.ரா. இந்த ஒரு விஷயத்தில்தான் இப்படி ஆகிவிட்டார் என்று யாரும் தவறான முடிவுக்கு வரவேண்டியதில்லை. இன்றுதான் அகப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான். சக எழுத்தாளர்களை மட்டம் தட்டி, அதன் மூலம் தன்னை ஒரு முக்கிய எழுத்தாளனாக முன்னிலைப்படுத்துவதில், மறைந்த சுந்தரராமசாமிக்கு இவர் சற்றும் சளைத்தவரில்லை. ‘சல்லாப சாமி’ ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டதை, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லாம் வரவேற்றபோது, ‘ஜெயேந்திரன் கைதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று முத்து உதிர்த்தவர்தான் எஸ்.ரா.
தீவிர இலக்கியத்தை இதுகாறும் இவர் பேசி வந்ததே ஒரு சினிமா சான்சுக்காகத்தான். அதனால்தான் ஒரு பக்கம் உலக சினிமாக்கள் பற்றி பேசிக் கொண்டே, பாபாவுக்கு பஞ்ச் டயலாக் எழுத முடிந்தது. ரஜினியை ‘சார்’ என்று விளித்து கட்டுரை எழுத முடிந்தது. எல்லாச் சாலைகளும் சினிமாவை நோக்கியே பயணிக்கும் தமிழ்ச் சூழலில், சினிமாதான் எல்லாமே என்று கருதும் விசிலடிச்சான் குஞ்சுகளின் மனநிலைதான் எஸ்.ராவுக்கும் வாய்த்திருக்கிறது. நாளையே, விஜயகாந்தின் மேடை பேச்சுக்களை எழுதிக் கொடுக்கும் வேலைக்கு இவர் போய்ச் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய ‘நல்ல’ படைப்பாளியைத்தான், சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் இலக்கிய உலகத்தை காக்க முனைந்ததாக இயக்குநர் லிங்குசாமி பேட்டி கொடுத்திருக்கிறார். இலக்கியவாதிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதை விட, தனது படம் நல்ல படமாக அமைய வேண்டும் என்பதில் லிங்குசாமி கவனம் செலுத்தினால் நல்லது. ‘என்னதான் ஜனநாயக நாடு என்றாலும் பறக்கிறது பறக்கிறதுக்குத்தான் ஆசைப்படணும், நடக்கிறது நடக்கிறதுக்குத்தான் ஆசைப்படணும்’ என்று பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித் சகோதரர்களை பஞ்சாயத்து தலைவர்களாக்க மறுக்கும் தேவர் சமூகத்தின் மேல்சாதித் திமிரை நியாயப்படுத்தும் படமாகத்தானே ‘சண்டக்கோழி’ வந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் தான் வசனம் எழுத வேண்டுமா? அடல்ட்ஸ் ஒன்லி ‘பாய்ஸ்’ புகழ் சுஜாதா போதுமே!
இதில் ‘தமிழ்நாட்டில் எந்த பெயரையும் பயன்படுத்த முடியாது போலிருக்கிறதே’ என்று வருத்தம் வேறு! லிங்குசாமிக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்றுக்கு ஜெயலலிதா பெயரையும், போலி சாமியார் வேடத்துக்கு காஞ்சி ஜெயேந்திரன் பெயரையும் வைக்கலாமே! அந்தத் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? இல்லையெனும்போது வெற்று உதார் எதற்கு?
நக்கீரனில் கோவி.லெனின் "குட்டி ரேவதியின் படைப்புகள் பற்றி இலக்கிய உலகத்தில் எழுந்த விமர்சனங்களை அறியாத அப்பாவி எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் நிச்சயமாக இருக்க முடியாது. "துப்பாட்டாவை எடுத்து சுத்திக்கிட்டு இருக்கா.. கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லாம'' என்று சண்டக்கோழியில் குறிப்பிடப்படும் ‘குட்டி ரேவதி' பற்றிய விமர்சனம் தற்செயலாக நடந்ததென்பது காதில் பூ சுற்றும் வேலை. தனக்குத் தெரியாமல் இந்தப் பகுதி இடம்பெற்றுவிட்டது என்று எஸ்.ராமகிருஷ்ணன் தன் மனசாட்சியறிய சொல்வாரேயானால், படத்தின் முன்னோட்டம் பார்த்த போதாவது, இயக்குநரிடம் நிலவரத்தைச் சொல்லி, குட்டி ரேவதி என்ற பெயரை மாற்றச் செய்திருந்தால் கலவரம் எழுந்திருக்காது. படம் வெளியான ஒரிரு நாட்களில்கூட இதைச் செய்திருக்கலாம். பொறுப்பான இலக்கியவாதியின் கடமையாகவும் அது இருந்திருக்கும். திட்டமிட்டே செயல்பட்டுவிட்டு, தற்செயல் எனத் தப்பிக்கப் பார்க்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற கோபத்தில் படைப்புலக - பத்திரிகையுலக பெண்கள் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கேள்வி எழுப்பியதிலும், மன்னிப்புக் கேட்கக் கோரியதிலும் நியாயம் இருக்கிறது. குட்டி ரேவதிக்கு ஆதரவாக சில ஆண் படைப்பாளிகள் பேசியதும் வெளிநடப்பு செய்ததும் இதில் உள்ள நியாயத்தின் தன்மையை அதிகரிக்கவே செய்கின்றன. இந்த சர்ச்சைக்கு எஸ்.ராமகிருஷ்ணனே இறங்கி வந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடப் போவதுமில்லை, கீரிடம் கழன்றுவிழப் போவதுமில்லை. ஒரு சமுதாயத்தையோ தனி நபரையோ புண்படச் செய்வது சிறந்த இலக்கியவாதியின் நோக்கமாக இருக்கக்கூடாது." |
பிறகு நமது நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள், ‘என்ன இருந்தாலும் புத்தக வெளியீட்டு விழாவில் போய் இப்படி செய்திருக்கக் கூடாது. எஸ்.ரா. வீட்ற்கு முன்போ, தனியாக கூட்டம் போட்டோ கண்டித்திருக்க வேண்டும்’. கோவணம் விரும்புவதும் இதைத்தானே! உலகம் முழுக்க டிரைலராகவும், படமாகவும் இந்த வசனம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது எஸ்.ரா.வின் வீட்டிற்குப் போய் விளக்கம் கேட்டால், அது வெளியுலகிற்குத் தெரியவருமா? இல்லை தனியாக கூட்டம் போட்டால், அங்கு விளக்கமளிப்பதற்கு எஸ்.ரா.தான் வருவாரா? உயிர்மை கூட்டம் எப்படி புகழ் பாடும் கூட்டமாக இருந்ததோ, அதேபோல் இந்தக் கூட்டம் இகழ்ந்து பேசும் கூட்டமாக இருக்கும்.
இதில் காலச்சுவடின் கைங்கரியம் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை அப்படியே இருந்தாலும், இலக்கிய போலீசாகவும், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையாகவும் வளர்ந்து வரும் காலச்சுவடு இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பு, நியாய உணர்வுள்ளவர்கள் அல்லவா இதைக் கையில் எடுத்திருக்க வேண்டும்?
எஸ்.ரா. விவகாரத்தில் ஊடகங்கள் அதிகம் கண்டு கொள்ளாமல் போன ஒரு நச்சுப் பாம்பு இருக்கிறது. அது யுவன் சந்திரசேகர். ஹிட்லரின் பாசிசக் குரலைக் கேட்காதவர்கள் உயிர்மை கூட்டத்திற்கு வந்திருந்தால், ‘பொம்பளைங்க கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க?’ என்ற யுவனின் குரலில் அதை உணர்ந்திருக்கலாம். இந்த பார்ப்பனரின் குரலைக் கேட்டு எழுந்த ஆண் குரங்குகள் பெண் எழுத்தாளர்களைப் பிடித்து வெளியே தள்ளியிருந்தால்...? நினைக்கும்போதே உடல் பதறுகிறது! கூட்டத்தினரை பெண்கள் எதிராகத் திருப்பும் இந்த அற்ப எழுத்தாளர், என்ன எழுதி, எதைக் கிழித்து விடப்போகிறார்? இவர் வாந்தி எடுப்பதையெல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடும் மனுஷ்யபுத்திரன் ஊடகப்பரப்பில் வாழும் பரோபகாரி. மற்றவர்கள் ஒட்டுண்ணிகள்! வாழ்க உமது இலக்கிய வியாபாரம்!
உண்மையான இலக்கியவாதிகளாக, உயிர்மைக் கூட்டத்தை விட்டு பிரபஞ்சன் வெளிநடப்பு செய்தார். பா. செயப்பிரகாசம் அந்த நிமிடமே பெண் எழுத்தாளர்கள் பக்கம் இருந்தார். ஆனால் உயிர்மை கூட்டத்தில் இருந்து, இதுவரை கள்ள மௌனம் காத்துவரும் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பி.ஏ. கிருஷ்ணன், சுகுமாறன், ஞானக்கூத்தன், ஜி.முருகன் உள்ளிட்ட வகையறாக்கள் இனிமேலாவது தர்மாவேசம் பொங்கும் பேச்சுக்களை எந்த மேடையிலும் பேசாமல் இருப்பது நல்லது.
வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதுவரை மௌனம் காத்து வந்த எழுத்தாளர்கள் தாங்கள் யார் பக்கம் என்பதை தெரிவிக்க வேண்டிய நேரமிது.
சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகியோரை அடுத்து எஸ்.ரா.வும் இப்போது ஊடகப்பரப்பில் அம்பலப்பட்டு நிற்கிறார். துணையெழுத்து, கதாவிலாசம் ஆகியவற்றில் பொங்கி வழிந்த மனித நேயம் எல்லாம் வாசகர்களுக்கு சொறிந்து கொடுப்பதற்காகத்தான் என்பது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி மாத உயிர்மை, காலச்சுவடு வெளியாகும்போது மேலும் சில அசிங்கங்கள் வெளிச்சத்திற்கு வரலாம். மொத்தத்தில் இந்த எழுத்தாளப் புடுங்கிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் உரத்த குரலாக கவிஞர் ஆதவன் தீட்சண்யா எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
“அடேய் எழுத்து விபச்சாரகனே நில்
பேனாமுனை கொண்டும்
என்னுடலை எத்தனைமுறை கிழிப்பாய்
நீ அறிந்தது எதுவென்று
எழுதத் துணிந்தாய் என்னை
... ... ... ...
... ... ... ...
என்னையே விலை கூவி விற்கமுடியாத ஆதங்கத்தில்
என்னைப்பற்றி எழுதி விற்கும் உன் காகிதத்திலிருந்து
எனது விடுதலைக்கான எதுவும் கிடைத்துவிடாது
முறித்துப் போடடா பேனாவை முட்டாக்...”
- கீற்று நந்தன்
படங்கள் நன்றி: நக்கீரன், தமிழ்முரசு