இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 (A) இன் கீழ், 124 ஆண்டுகள் பழைமையான தேசத் துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

காலனி ஆட்சியில் பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தேசத்துரோகச் சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், தேசத் துரோகச் சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது என்றும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NCRB அறிக்கையின்படி 2015 - 2020 காலகட்டத்தில், 356 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 548 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை எல்லாம் இந்தக் கொடிய சட்டத்தின் மூலம் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கி, கருத்துரிமையைக் கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு பெரிய அளவில் ஒடுக்கி வருகிறது. மிக அதிகமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு இச் சட்டப்பிரிவுதான் என்று கூறப்படுகிறது.

இன்று உச்சநீதிமன்றமே ஒன்றிய அரசுக்கு இந்தச் சட்டத்தைப் பரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பித்திருப்பது கருத்துரிமைக்குக் குரல் கொடுக்கும் அனைவரும் வரவேற்க வேண்டிய உத்தரவாகும்.

Pin It