‘ஆட்சி போனாலும் போகட்டும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் பின் வாங்கோம்’ என்ற முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் ஆட்சி வந்துவிட்டது. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக தனது கூட்டணி பங்குதாரர்களான இடதுசாரி கட்சிகளைக் கைகழுவி, முலாயம் சிங்கின் ‘சமாஜ் வாதி’ கட்சியுடன் காங்கிரஸ் பேரம் பேசத் தொடங்கிவிட்டது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறிவிட்டால் எத்தகைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்கும்?
1) அணுசக்தி பிரச்சனைகளில் மட்டுமல்ல, ராணுவம் தொடர்பான பிரச்சினைகளிலும், இந்தியா, அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் ஹைட் சட்டத்திலுள்ள 123 பிரிவுகள் இதற்கு வழியமைத்து விடுகின்றன.
2) எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்த ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக, இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு வரும் சீரிய திட்டத்தை, அமெரிக்கா எதிர்ப்பதால், இந்தியாவும் கைவிடுகிறது.
3) அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. மொத்தத் தேவையில் 8 சதவீதம் வரை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். அதுமட்டுமல்ல, அனல் மின் நிலையம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.2.50 ஆனால், அணுசக்தி மின்சாரத்துக்கு ஆகும் செலவோ யூனிட்டுக்கு ரூ.5.50.
4) இவை எல்லாவற்றையும்விட அமெரிக்காவிடமிருந்து பெறும் அணுஉலைகளில் வெளிப்படும் ஆபத்தான அணுக் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான்!
அமெரிக்க இந்திய உறவு வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. பதவி விலகுவதற்கு முன், தனது சாதனைகளில் ஒன்றாக - இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட்டு, பதவி விலக புஷ் துடிக்கிறார். ‘ஒப்பந்தம் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் - மிக மோசமான இழப்பு நாள்’ என்கிறது அமெரிக்க வெளியுறவுத் துறை.
அமெரிக்காவின் புதிய அதிபர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் - இந்தியா, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்ற கேள்வியிலேயே - இதில் நாட்டின் நலனைவிட வேறு அரசியல் நலன்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன், அணுசக்தித் தலைவர் அனில் ககோட்கர், அமெரிக்காவின் இந்திய தூதர் ரோனான் சென், பிரதமரின் சிறப்பு தூதர் ஷியாம் சரண், வெளியுறவு செயலாளர் சிவ் சங்கர மேனன், சிங்கப்பூரின் இந்தியத் தூதர் எம்.ஜெய்சங்கர் என்று நாட்டின் அதிகாரம் மிக்க பார்ப்பன - உயர்சாதி அதிகாரவர்க்கம் தான் அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்தது. சர்வதேச ஒப்பந்தங்களை உருவாக்கும் அதிகாரம் இத்தகைய அதிகாரவர்க்கத்துக்கு கிடையாது. இந்திய அரசியல் சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லை.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர், பி.பி.சாவந்த், எச்.சுரேஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இதை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனாலும் பார்ப்பன அதிகாரவர்க்கம் சட்டத்தை மீறி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இப்போது நாடாளுமன்றத்திலும் அதை நிறைவேற்ற தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது. அமெரிக்க பிரதிநிதிகளாகவே செயல்படும் மன்மோகன்சிங், மகிழ்ச்சியாக தலையாட்டுகிறார்.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இடம் பெறாத ஒரு திட்டத்தை மக்கள் மீது பார்ப்பன ஆட்சி திணிக்கிறது.
ஜனநாயகம் என்ற பெயரில் நாட்டில் நடப்பது ‘பார்ப்பன நாடகம்’ தான் என்பதையே இந்த நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
மதம் செய்த நன்மை என்ன?
மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவதுதான் முக்கியப் பலனாக இருக்கிறதேயொழிய அது கஷ்டப்படுகின்ற, ஒரு பாவமுமறியாத பாமர மக்களுக்குக் காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக்கிறது; மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு (இது மதத் துரோகமான கேள்வி என்று சொல்லுவதல்லாமல் வேறு) எவ்விதமான பதிலும் சொல்லுவதற்கு இடம் காணவில்லை.
பெரியார் - குடிஅரசு 20.11.32