சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் அவர்கள் தனக்கு இஸ்லாமியர் என்ற காரணத்தினாலேயே சென்னையில் வீடு மறுக்கப்படுவதாக ‘தமிழ் இந்து’ நாளிதழிலில் கட்டுரை எழுதியிருந்தார். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இஸ்லாமியர்களுக்கு வீடுகள் மறுக்கப்படுவது, தமிழகத்தில் நீண்ட காலமாகவே இருந்து வரும் பிரச்சினைதான். பலபேர் ‘தான் இஸ்லாமியன்’ என்ற காரணத்தினாலேயே வீடு மறுக்கப்படுவதைத் தொடர்ந்து பொதுவெளியில் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். ஆனால் தமிழகத்தில் இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டதற்கும், அதை இன்னும் தீர்க்கத் துப்பற்று, அதற்கான அரசியல் உரையாடல்கள் பெரிய அளவில் பொதுவெளியில் நடைபெறாமல் போனதற்கும், நாம் யாரைக் குற்றம் சாட்ட வேண்டும் என்ற தெளிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என்ற பிம்பத்தைத் தமிழகத்தில் ஆழமாக வேறூன்றச் செய்தது இங்கிருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்கள்தான். அவர்களின் அடியாட்கள் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக திரைப்படத் துறையில் ஊடுறுவி அதைப் பெரிய அளவில் செய்து முடித்தார்கள்.

 manushyaputhiranதமிழகத்தில் முஸ்லிம்களின் பிம்பத்தைத் தொடர்ந்து மோசமாகக் கட்டமைத்து, அதை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற கீழ்த்தரமான பெருமை தமிழ்த் திரை உலகையே சாரும். தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன நாளிதழ்களும் துக்ளக், குமுதம், விகடன் குழுமம் போன்ற பார்ப்பன வார இதழ்களும் படித்த மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களிடம் இந்தப் பணியைச் செய்தது என்றால், தமிழ்த் திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அதைச் சாதாரண படிக்காத பாமர மக்கள் வரை கொண்டு சேர்த்தனர். தங்களுடைய படங்களில் கண்டிப்பாக வில்லன் கதாபாத்திரமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் வருமாறு பார்த்துக் கொண்டனர். இதனால் பொதுச் சமூகத்தில் தீவிரவாதி என்றாலே அது முஸ்லிம்கள் தான் என்ற ஒரு பொதுபிம்பம் மிகத் திறமையாக கட்டமைக்கப்பட்டது. அது தொடர்ந்து அழிந்துவிடாமல் பராமரிக்கப்பட்டும் வருகின்றது. அப்படியான ஒரு நிகழ்வு இங்கு தொடந்து நடந்து கொண்டிருந்தபோது, அதற்கு எதிராக எழுதியவர்களையும், பேசியவர்களையும் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக, தமிழ் மக்களின் நலனுக்காக உண்மையாக உழைப்பவர்கள் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் எந்த அரசியல் கட்சியும், இப்படியான முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்நிலையில் கட்டமைக்கப்படும் பிம்பத்தைப் பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

 ரம்ஜான் நோன்புகளில் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடித்த எந்த அரசியல் கட்சித் தலைமைகளும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டன. பண்பாட்டுத் தளத்தில் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புணர்வை எப்படி தீர்த்து வைப்பது என்ற எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. மாறாக அவர்கள் பிஜேபியுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பீயைக்கூட தின்கத் தயங்காத கழிசடைகள் என்பதை நிரூபித்தார்கள். இங்கிருந்த தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல், அதே கட்சிகளுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அதே நரகலை நோக்கிச் சென்றார்கள்.

 இஸ்லாமியர்களுக்கு வீடுகள் மட்டும் அல்ல தமிழகத்தில் நிறைய தொழிற்நிறுவனங்களில் வேலை கூட மறுக்கப்படுகின்றது என்பது தான் உண்மை. அதற்கு எதிராக இங்கிருக்கும் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் அவர்களை இங்கிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் எப்போதும் கவனமாக தவிர்த்தே வந்திருக்கின்றன. தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் எவ்வளவு துரோகங்களை இஸ்லாமிய மக்களுக்கு செய்திருந்தாலும், அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அவர்களிடம் இஸ்லாமிய மக்களை அடமானம் வைக்கும் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய மக்களுக்காக உண்மையாகப் போராடும் முற்போக்கு அமைப்புகளை ஒரு பொருட்டாகக் கூட எப்போதும் எடுத்துக் கொண்டதில்லை. அப்படியே முற்போக்கு அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தாலும், அது அவர்களின் பிழைப்புவாதத்தையும், சுயநலத்தையும் கேள்விக்குட்படுத்தாத வரையிலும் தான் தொடரும். இந்து பயங்கரவாதத்தைப் பற்றி பேசும்போது கைதட்டி ஆதரவு தரும் அவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றி பேசும்போது மட்டும் முகம் சுழித்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள்.

 மனுஷ்ய புத்திரன் அவர்களின் ஆதங்கம் உண்மையில் வருத்தமளிக்கின்றது. தமிழ் இலக்கியத்திற்கு அவரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஊடகங்களில் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், சாதியவாதிகளுக்கு எதிராகவும் மிகத் திறமையாக பேசக் கூடியவர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரின் இத்தனை புகழும் கேவலம் ஒரு வீடு கிடைக்கக் கூட பயன்படவில்லை என்பதை அவர் எப்படி பார்க்கின்றார்? அதற்கு அவரின் தீர்வு என்ன? என்பதுதான் நமது கேள்வி. அவரே குறிப்பிட்டது போன்று “ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்த போதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது... வெளியே போ!” இப்படிப்பட்ட நிலையில், இஸ்லாமிய மக்கள் எந்த வகையான அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் நினைக்கின்றார்? மிகப் பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தும், அவருக்கு வீடு கிடைக்கவில்லை, அவருக்கான சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அவர் தேர்ந்தெடுத்த அரசியல் பாதை எந்தளவிற்கு சரியானது என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அவருக்கு மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அவர் என்ன தீர்வை முன்வைக்கின்றார் என்பதையும் சேர்த்துதான் நாம் இதைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

 இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் மத்தியில் வீடு மறுக்கப்படுவதின் பின் உள்ள அரசியலை அம்பலப்படுத்துவதும், அவர்களின் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள் பற்றிய பயத்தை அகற்றுவதும், மேற்கொண்டு அப்படியான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்படாமல் பாதுகாப்பதும் எப்படி என்பதில் தான் பிரச்சினைக்கான தீர்வு உள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தே இஸ்லாமிய மக்களுக்கான பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று இங்கிருக்கும் பிழைப்புவாத இஸ்லாமிய இயக்கங்கள் நினைக்கின்றன. அவர்களுக்கு அது வசதியாகவும் இருக்கின்றது. தாங்கள் அடிப்படையாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தங்களுடைய மத அடிப்படைவாதத்திற்கு எந்தப் பங்கமும் வராத, தங்களுடைய பிற்போக்குத்தனத்தைக் கேள்விக்குட்படுத்தாத கட்சிகள் அவர்களுக்கு மிகவும் தோதான கூட்டணியாக உள்ளது. இறுதியில் ஏமாந்து போவது சாமானிய இஸ்லாமிய மக்கள் தான். அவர்கள் வீடு கிடைக்காமல் அலைந்தால் என்ன, வேலை கிடைக்காமல் அலைந்தால் என்ன, இல்லை எக்கேடு கெட்டு நாசமாய் போனால் நமக்கென்ன, நமக்கு ஒன்றோ, இரண்டோ சீட்டு கிடைக்கின்றதா... அதுவே போதும் என்பதுதான் இஸ்லாமிய மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளின் இறுதியான முடிவாக உள்ளது.

ஆனால் நாம் முன்வைக்கும் தீர்வு என்பது அதற்கு வெளியேயானது. பெரியாரிய இயக்கங்களிலும், மார்க்சிய இயக்கங்களிலும் இஸ்லாமிய மக்கள் தங்களை இணைத்துக்கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். மதத்தை முன்வைத்து இத்தனை ஆண்டுகாலமாக உங்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளைவிட, 'மதமில்லை, கடவுள் இல்லை, சாதி இல்லை, அனைவரும் சகோதரர்கள்' என்று சொல்லும் முற்போக்குவாதிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. வீடு மறுக்கப்படுவதற்கும், வேலை மறுக்கப்படுவதற்கும் மதம் ஒரு காரணம் என்றால், அந்த மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியானதா, இல்லை அதற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பது சரியானதா என்பதை இஸ்லாமிய மக்கள் நேர்மையாக சிந்திக்க வேண்டிய தருணமிது.

- செ.கார்கி

Pin It