(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன்? மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா! - 5)

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசின் நடவடிக்கை ஆளுவோர், ஆளப்படுவோர் ஆகிய இரு தரப்பினருமே, காலம், காலமாக பாதுகாத்து வரும் தமது பாரம்பரிய பண்பாட்டை, மேலும் வளர்த்துக் கொள்வதற்கான, கூர்மை படுத்திக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

ஆளுவோரான, இந்திய ஆட்சியாளர்களும், முதலாளிகளும் நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காட்டிக்கொடுக்கும், பறிக்கும் தமது பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளனர்.

மக்களாகிய நாமும், ஆளுவோர் நமக்கு ஏற்படுத்தும் ஒவ்வொரு நெருக்கடியையும் பயன்படுத்திக் கொண்டு, மனித மந்தைகளுக்கே உரிய ஒற்றுமை இன்மையையும், புலம்பல் விகிதத்தின் அளவையும் உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.

ATM in Odisha

ஆட்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் நமக்குத் தரும் நெருக்கடிகளை, எதிர்கொள்வதற்கு அவசியமான ஒன்றுபடுவதற்கு நேர்மாறாக, ஏற்கனவே இருந்த அரைகுறையான கூட்டுத்துவப் பண்புகளையும் இழந்து போகிறோம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட சமூக தலைவர்கள் உருவாக்கிய குறைந்த அளவு ஒற்றுமை உணர்வுகளையும் கழுவி, சுத்தம் செய்து கொண்டு, நாம் தொடக்க நிலை மனித மந்தைகள் என்பதை இவ்வுலகிற்கு நிரூபித்து வருகிறோம்.

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி வாயிலும், மனித மந்தைத்தனத்தை வளர்த்தெடுப்பதற்கான சிறந்த களங்களாக இப்போது உருவெடுத்துள்ளன என்றால் அது மிகையல்ல!

இந்திய ஆட்சியாளர்களுக்கு கைவந்தக் கலையான, இந்தியாவின் இயற்கை வளங்களையும், மக்களின் நலன்களையும் அந்நியர்களுக்கு காட்டிக்கொடுப்பது என்ற, தமது பாரம்பரிய பண்பாட்டின்படி, தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதில் மிக உறுதியாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இன்று இந்தியாவாக உள்ள இந்த நிலப்பரப்பில், முதல் அரசு என்று ஒன்று உருவான காலத்திலிருந்தே உருவாக்கப்பட்டு, ஆட்சியாளர்களால் இன்று வரை பேணி பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பண்பாடு என்றால், அது காட்டிக்கொடுப்பதுதான்! ஆட்சியாளர்களின் இந்த இழிவான பண்பை எதிர்த்து, மோதி வீழ்த்துவதற்கான ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான திறன் இன்மையின் விளைவாக, அதனுடன் இணங்கிப் போவதுடன், அதையே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முன்னுதாரணமாகவும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதை செய்ய இயலாதவர்கள், ஏற்காதவர்கள் தமது எதிர்ப்பை புலம்பலாக பதிவு செய்து வாழ்ந்து விட்டு போகிறோம். புலம்பல், தனது உணர்வுகளை வெளியிடுவதற்கு போதுமான அல்லது சரியான வடிவமாக இல்லாதபோது அதிகப்படியாக உரக்க ஒப்பாரி வைக்கும் அளவுக்கு மேலாக நமக்கு ஆற்றல் இருப்பதில்லை.

இந்த ஆற்றல் குறைபாடு ஆகப்பெரும்பாலோரை காரியவாதிகளாக உருவாக்கிவிடுகிறது. இதுவே வாழ்வியல் பண்பாடாகவும் மாறிப்போகிறது.

இந்த வாழ்வியல் பண்புகள், மனித மந்தைத் தனத்தின் தொடக்க கால கூறுகளை இன்னமும் உயிர்ப்புடன் கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குலம் என்ற மனித சமூக வளர்ச்சி கட்டத்தின் மிகக்குறுகிய அளவிலான கூட்டுத்துவ கூறுகள் அவைகள். இதை கேட்பதற்கு பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆனால் உண்மை அதுவாக இருக்கும் போது, அதை மறுப்பதோ, அல்லது பரிசீனைக்கு உட்படுத்தாமல் நிராகரிப்பதோ, தற்போது நிலவுகிற தேக்க நிலையிலிருந்து, இச்சமூகத்தை விடுவித்து, வளர்த்தெடுப்பதற்கான ஆர்வத்தை, முயற்சியை பின்னுக்கு இழுக்கும் ஒன்றாக இருப்பதை தவிர வேறு எதையும் சாதித்து விடப்போவதில்லை.

இந்தியாவைத் தொடர்ந்து, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தென்அமெரிக்க நாடான வெனிசுலாவும் அறிவித்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்த வெனிசுலா மக்களின் போராட்டங்களால், அந்நாடே கலவர பூமியாக மாறிப்போனது. வங்கிகளும், வணிக நிறுவனங்களும் மக்களால் சூறையாடப்பட்டன. வெனிசுலாவின் மொத்த செயல்பாடும் முடங்கிப்போனது. வேறு வழியேதும் இல்லாத நிலையில், தனது அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, மூன்றே நாட்களுக்குள் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாளும் மக்கள் நலன்களுக்கு விரோதமான அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகிறது. முதலில் இரண்டொரு நாட்களில் நிலைமை சீராகிவிடும் என்றவர்கள், இப்போது பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறுங்கள் என்று நம்மை கட்டாயப் படுத்துகின்றனர். இதற்காகவே திட்டமிட்டு, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நம்மிடம் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, பணத்தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி நம்மை பணமற்ற பொருளாதாரத்துக்கு மாற நிர்பந்திக்கின்றனர்.

ஆரம்பத்தில் டிசம்பர் இறுதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் என்றார்கள். பின்னர், டிசம்பர் இருபதாம் தேதியன்று இனி ரூ 5000-ம் மட்டுமே வங்கியில் செலுத்தலாம். இவ்வளவு கால தாமதமாக செலுத்துவதற்கான உரிய காரணத்தையும் சொன்னால் மட்டுமே, இந்தப் பணத்தையும் வங்கிகளில் செலுத்த முடியும் என்கிறார்கள். பின்பு அதையும் மாற்றிக் கொண்டார்கள்.

நமது ரத்தத்தை வியர்வையாக்கி, ஒவ்வொரு நாளும் உயிரைக் கொடுத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அன்றாட செலவுகளுக்கே கூட அதை எடுத்து பயன்படுத்த முடியாமல் நாம் தவியாய் தவிக்கிறோம். ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளுக்காக, வங்கி வாசலில் நாள் முழுக்க தவம் கிடக்கிறோம். வெறி நாய்களைப் போன்று ஒருவருக்கொருவர் கடித்துத் குதறிக்கொள்கிறோம். குறுக்கு வழியில் முந்திச்செல்ல வழியேதும் கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.

ஆனால், பெரும் பணக்காரர்களோ வங்கியின் வாசலை மிதிக்காமலேயே கோடி, கோடியாய் புதிய ரூபாய் நோட்டுக்களை குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்களில், ஆளுவோருக்கு ஆகாதவர்கள் சிலரின் வீடுகளில் மட்டும் பணத்தை பறிமுதல் செய்துவிட்டு, சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார்கள். இதை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள். இவைகள் அனைத்தும் நாடகம், நம்மை ஏமாற்றும் வேலைகள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இவைகள் உண்மை இல்லை என்பது தெரிந்தாலும், அவர்கள் சொல்வதை கேட்பதை தவிர, நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்? நம்பினாலும், நம்பாவிட்டாலும், தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் எதுவும் நம்மால் ஆகப்போவதில்லை!

இலஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும், விதிமீறல்களும் நமது நாட்டில் மிகவும் வெளிப்படையான விவகாரங்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்த உண்மைகள். எதுவும் தேவ ரகசியங்கள் இல்லை. இவைகள் அனைத்தையும் தடுப்பதற்கு என்று இல்லாத சட்டங்களே இல்லை. எல்லாவற்றுக்கும் எதிரான சட்டங்களும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், இந்த சட்டங்களில் ஒன்றுக்கு கூட உயிர் கிடையாது என்பதால் ஆகாதவர்களை பழிவாங்கவும், விதி விலக்காக பயன்படுத்தப்படும் கருவிகளாக மட்டுமே இவைகள் இருக்கின்றன.

இப்போது மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் ஆளுவோராக இருந்தாலும், ஆளப்படுவோராக இருந்தாலும் சட்டத்திற்கும், வாழ்வியல் முறைகளுக்கும் உட்பட்டு வாழ்வது என்பது,என்றென்றும் இந்தியச் சமூகத்தின் எந்த மட்டத்திலும், உயிர்ப்புடன் கூடிய செயலாக இருந்ததே கிடையாது.

எல்லாக் காலத்திலும் நிர்ப்பந்தத்தின் மூலமாக மட்டுமே வேறு வழியின்றி சடங்குத் தனமாக அவைகளை கடைபிடிக்கிறோம். நிர்ப்பந்தம் இல்லாத நேரங்களில் ஒருபோதும் அவற்றை கடைபிடிப்பதில்லை. அப்படியே சில நேரங்களில் கடைபிடித்தாலும், மனப்பூர்வமாக அதை செய்வதில்லை.

# போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளாகிய நம்மிடம் லஞ்சம் வாங்குவது ரகசிய அறைகளில் நடப்பதில்லை...

# காவல் நிலையங்களில் பணம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பது நாம் அறியாத ரகசியங்கள் இல்லை...

# அரசு அலுவலகங்கள் எல்லாற்றிலும் லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு, எந்தக் காரியமும் நடக்காது என்பது படிக்காத பாமரனுக்கும் கூட தெரியாத செய்திகளில்லை... எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகள்தான்.

இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும், விதி மீறல்களும் இல்லாத இடங்களே இல்லை. அதுவே எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

போக்குவரத்துக் காவலர் லஞ்சம் கேட்பதற்கு எதிராகப் பேசினால் என்ன நடக்கும் என்பது, வாகன ஓட்டிகள் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும். இது இருந்தால், அதைக் கேட்பார், அது இருந்தால், இதைக் கேட்பார். அவரிடம் சிக்கும் நூறுபேரில் 99 பேரிடம், ஏதாவது ஒன்று கட்டாயம் இல்லாமல் இருக்கும். அதனால், அவர்கள் அனைவரும் ஆளை விட்டால் போதுமடா சாமி என்று அவர் கேட்டதைக் கொடுத்து விட்டு ஓடிப்போவதில்தான் குறியாய் இருப்பார்கள். எல்லாம் இருந்தாலும் ஒருவரால் தனியே என்ன செய்து விட முடியும்? ஆவணங்கள் அனைத்தும் இருந்தாலும் அவரால் நம்மீது வழக்குப் போட முடியும். இது பொய் வழக்கு என்பது நீதிபதிக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், உடனே அவராலும் எதுவும் செய்துவிட முடியாது. ஆதாரமே இல்லாத வழக்கை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அவரால் தள்ளுபடி மட்டுமே செய்ய முடியும். போலீசு கேட்ட லஞ்சத்தை விட, வக்கீலுக்கு பத்து மடங்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்ததும், நீதிமன்றத்திற்கு ஆயிரம் வேலைகளை விட்டு, விட்டு அலைந்தது மட்டுமே மிஞ்சும். வேறு எதையும் நம்மால் சாதித்து விட முடியாது. பொய் வழக்குப் போட்ட போலீசை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

உலகிலேயே சாலை விபத்துகளின் தலைநகரம் இந்தியாவாம், கடந்த 2012-ல் 48768 பேரும், 2014-ம் ஆண்டில் 85462 பேரும், 2015-ல் 51204 பேரும், சாலை விபத்துகளில் சாவைத் தழுவியுள்ளனராம். அதாவது ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடக்கிறதாம்!

road accident

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் அனைத்தும் மதுகுடித்தல், விதிமீறல்களால் தான் நடக்கிறது என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. விதி மீறல்கள் இவைகள் மட்டுமா...?!

# பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது, குப்பைகளை போடக்கூடாது என்கிறது சட்டம். நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கிறோம்? இதை கடைபிடிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? இந்த சட்டங்கள் அநீதியானவை என்பதால், அதற்கு எதிரான கலகம் என்பதா அல்லது சமூக ஒழுங்கீனம் என்பதா?

# எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, கல்லூரி முதலாளி பாரிவேந்தரின் பினாமி மதனிடம், தலா ஒரு கோடி ரூபாயை தந்துவிட்டு, ஏமாந்து போனதாக நூறு பேர் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது. லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்கிறது சட்டம். உயர்நீதி மன்றம் என்ன செய்தது?

லஞ்சம் வாங்கியவனிடம் இருந்து பணத்தை வாங்கி, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு திருப்பித் தருகிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற சட்டம் இருப்பதையே உயர்நீதி மன்றம் மறந்து போய் விட்டதா என்றால் அப்படியில்லை?

சட்டத்தை மீறுவோர் அனைவரும் குற்றவாளிகள் என்றால், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளில் பெரும்பான்மையினர் மட்டுமல்ல, மக்களாகிய நம்மில் பெரும்பாலோரும் குற்றவாளிக் கூண்டில்தான் நிற்க வேண்டியிருக்கும் என்கிறபோது நீதிமன்றங்களால் அனைவரையும் சிறைக்கு அனுப்ப முடியுமா?

இது வரை நாம் பரிசீலித்த சில விவரங்களில் இருந்து, இந்தியச் சமூகம் சட்டப்படி அமைந்த, ஜனநாயக சமூகத்தின் தன்மைகளுக்கு ஏற்ப, எந்த வாழ்வியல் முறைகளையும், விதிகளையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, அதன்படி செயல்படும் சமூகம் அல்ல என்பதையே தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு நாட்டில் சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான ஏற்புத்திறனும் அந்த சமூகத்திற்கு இருக்க வேண்டும். சமூக ஏற்பு திறனுக்கு மாறான சட்டங்கள் அனைத்தும், அச்சமூகத்தின் மீதான திணிப்பாகத்தான் இருக்கும்.

குரங்குக் கையில் கிடைத்த பூ மாலையை போன்று, நவீன வாழ்வியல் கூறுகள் அனைத்தும், இந்தியச் சமூகத்தால் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியாதவைகளாகவே உள்ளன.

ராஜஸ்தானில் ஜாட்டுகளும், குஜராத்தில் பட்டேல்களும், தமிழகத்தில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டைப் போன்று தங்களுக்கும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லி, தாங்கள் வாழும் மாநிலங்களின் இயக்கத்தையே முற்றாக வாரக் கணக்கில் முடக்கி வைக்கும் அளவுக்கு தமது பலத்தை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

ஆனால், இப்போது உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட நகர்த்த இவர்களால் முடியவில்லை. இதைப்பற்றி அவர்களால் நினைத்து கூட பார்க்கக்கூட முடியவில்லை. இதற்கு என்னக் காரணம்? இந்திய அரசின் நடவடிக்கை சரி என்று கருதுகிறார்களா? அதுதான் இல்லை.

சரியோ, தவறோ தனக்கு மேலே இருப்பதாகக் கருதும் சக்திகளுக்கு எதிராக செயல்படுவது என்பது, இந்தியச் சமூகத்தின் இயல்புக்கு மாறானது என்பதுதான் இதற்கான காரணமாகும்.

இந்தியச் சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் ஒன்று திரளும், திரட்டும் ஆற்றலின் எல்லையும், பரப்பளவும் குலம் என்ற மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே தேங்கிக் கிடக்கிறது. இந்த தேக்கத்தை உடைப்பதற்கான வழிமுறைகளை காணாமல், இச்சமூகத்தை இழிப்பதோ, பழிப்பதோ, எள்ளி நகையாடுவதோ, நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பதை போல அறிவாளித் தனத்தின் அடையாளங்கள் கிடையாது. மாறாக இவைகள் நம்மையே அறியாமல், மனித மந்தைகளில் நாமும் ஓருவர் என்பதற்கான ஆதாரங்களே அன்றி வேறல்ல!

இந்தியச் சமூகம் தொடக்க நிலை மனித மந்தைகள் என்றால், இதை மாற்றவே முடியாதா? நாம் மிருக மந்தைகள் இல்லை. செக்கு மாடுகளைப் போன்று சுற்றி, சுற்றி வருவதற்கு! மாற்றம் ஒன்றுதான், மாறாத உண்மை. எதை எங்கே தொலைத்தோமோ, அதை அங்கேதான் தேட வேண்டும். எது, எங்கே விடுபட்டதோ, அதை அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்...!

இன்றிலிருந்தே தேடவும், தொடங்கவும் முற்படுவோம் வாரீர்!

(தொடரும்)

- சூறாவளி

Pin It