இராம்குமாரின் மரணம் என்பது தமிழ்நாட்டின் சிறைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு காவல் மரணங்களில் ஒன்றுதான் என பியூசிஎல் கருதுகிறது. தமிழகத்தில் காவல் மரணம் என்பது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. இராம்குமாரின் மரணங் குறித்து நிர்வாகம் அளிக்கும் விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை. காவல்துறை மற்றும் சிறைத்துறை நிர்வாகத்தின் கடமை புறக்கணிப்புப் போக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதிகாரிகளின் இத்தகைய போக்கு, அவர்கள் தங்களது கடமையிலிருந்து தவறி விட்டதற்கு இணையானது என பியூசி எல் கருதுகிறது. எனவே தவறிழைத்த அலுவலர்கள் மீது சிறைத்துறைத் தலைவர் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இராம்குமாரின் மரணம், மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், உண்மையைக் கண்டறியத் தமிழக அரசு ஒரு சிறப்புப் புலன் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இதற்காகப் பதவியிலுள்ள உயர் நீதிபதியின் தலைமையின் கீழ் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவைத் தமிழக அரசு நியமித்து, குறிப்பிட்ட கால எல்லைக்குள் அக்குழுவின் அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டும் என இத்தருணத்தில் பியூசிஎல் வலியுறுத்துகிறது.
இராம்குமார் இறந்து விட்டதால் , சுவாதியின் கொலை வழக்கை முடித்துவிடக் கூடாது. ஏனெனில் இராம்குமார்தான் குற்றவாளி எனக் காவல் துறை இதுவரை மெய்ப்பிக்கவில்லை. இராம்குமார் பொய்யாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் தெரிவிப்பதால், ஒரு முழுமையான விசாரணைக்கு ஏற்பாடு செய்து, இக்கொலைக்கான நோக்கத்தையும், கொலையாளியையும் கண்டறிய வேண்டியது அரசின் கடமை ஆகும்.
மேலும் தமிழகச் சிறைகளிலுள்ள நிலைமைகளை மீளாய்வு செய்ய அரசு ஒரு சிறப்புத் குழுவை நியமிக்க வேண்டும். மேலும் அங்கு நிலவி வரும் பரிதாபமான சூழலையும், சிறையாளர்களுக்கு எதிரான சட்ட விரோதமான நடைமுறைகளையும் போக்கத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சிவில்உரிமைக் கழகம் கோருகிறது. தங்களது தண்டனைக் காலம் முடிந்த பிறகும், நூற்றுக்கணக்கானோர் இன்னும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டுள்ளனர். கணிசமான விசாரணைக் கைதிகள் தீர்ப்பை எதிர்நோக்கிப் பல்லாண்டுகளாகக் காத்துக் கிடக்கின்றனர். தவிரவும், அவர்கள் சமமாகவும் நடத்தப்படுவது இல்லை என்பதோடு, பாகுபாடும் காட்டப்படுகிறது.
நீதிபதிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மூத்த வழக்குரைஞர்களைக் கொண்ட குழு ஒன்று, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது சிறைச்சாலைகளை மேற்பார்வையிட வேண்டும். அந்தக் குழுவின் விசாரணை அறிக்கையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய ஊடகங்களில் அது வெளியிடப்பட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், உரிய தீர்வு நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பியூசிஎல் பரிந்துரைக்கிறது.
தண்டனை என்பது மனிதர்களைத் திருத்தத்தக்க வகையில் இருக்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் உறுதியாக நம்புவதால், சிறையாளர்களின் பரிதாபமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களது மனித உரிமையைப் பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். தண்டனைக் காலம் முடிந்த அனைத்துச் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 14 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுவோரைக் காந்தி ஜெயந்தி அன்று விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகிறது .
- இரா.முரளி (மாநிலச் செயலர்), கண.குறிஞ்சி (மாநிலத் தலைவர்)