ஒரு நாடு, நகரம் மக்கள் தொகுப்பு, ஆட்சி நிர்வாகம், சட்ட ஒழுங்கு, நீதி பரிபாலனம் போன்றவை சரியாக இருக்கிறதா ? மக்கள் அச்சமின்றி பாதுகாப்போடு இயங்குகிறார்களா ? என்பதை அவதானித்து உலகிற்கு ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கும் ஊடகவியலாளர்களுக்கே கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மைகளை உலகிற்கு அறிவிக்கும் பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பில்லை உலகளவில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுவது ஒரு புறம் இருப்பினும் இந்தியாவிலும் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையே நிலவுகிறது.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷாஜகான் பூரை சேர்ந்த ஜதீந்திரா சிங் உள்ளூர் போலீஸ் காரர்களாலும் ரவுடிகளால் கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி தீவைத்து கொளுத்தப்பட்ட்டார்.அவர் உடல் பெரும்பகுதி எரிந்த நிலையிலும் துணிச்சலுடன் அந்த கொடூர தாக்குதலை எதிர்கொண்ட அவரது செயலை அவரது நண்பர்களும் உறவினர்களும் பாராட்டினர். இருப்பினும் தாக்குதலின் விளைவாக அவரது உடல் மோசமடைந்து. விட்டது. ஜூன் 8ம் தேதி பதிவு செய்யப்பட்ட அவரது இறுதி வாக்குமூலம் கதறலுடன் கூடிய இறுதி வீடியோ காண்பவர்களை எல்லாம் பதற செய்தது.
என்னை ஏன் எரித்தார்கள் ? என்மீது அமைச்சர்களோ ரவுடிகளோ சட்டப்பூர்வமாக புகார் கொடுத்தர்களா? என்னை தாக்கி விட்டு விட்டு இருக்கலாமே பாவிகள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டார்களே என்ற கதறல் யாராலும் மறக்க முடியாத ஒன்று.
பன்னாட்டு ஊடக உரிமைக்குழு பத்திரிகையாளர் பாதுகாப்பு கமிட்டி பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் விதமாக உறுதியான கொள்கை முடிவுகளை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என அந்தந்த நாட்டு அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
மீடியா காரர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா உலகில் 14 வது இடத்தை பெறுகிறது. 1992க்கு பிறகு இந்தியாவில் பத்திரிக்கையாளர்களின் நிலைமை இந்தியாவில் மோசமாக தொடங்கியது. என பத்திரிகையாளர் பாதுகாப்பு கமிட்டி கூறுகிறது. குறிப்பாக 1992 க்கு பிறகு என அழுத்தி அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுவது எதற்கு தெரியுமா ? உங்களுக்கும் தெரிந்தது தான். 1992 ல் நிகழ்ந்த ஓர் அராஜக சம்பவம் இந்திய திருநாட்டை அவமான சேற்றில் தள்ளியது.. 1992 டிசம்பர் 6ல் உச்ச நீதிமன்றத்தின் உத்திர வையும் மீறி நாட்டின் நாட்டின் அனைத்து இழி நிலைகளுக்கும் காரணமான பாசிச சக்திகளால் அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது.
இடித்து தள்ளப்பட்டது மஸ்ஜித் மட்டுமல்ல இந்திய நாட்டின் இறையாண்மையும் தான் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மனம் கசிந்தனர். அந்த துயர சூழலில் பாப்ரி மஸ்ஜித் என்ற அந்த அழகிய கட்டிடத்தில் கும்பங்கள் ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டு இருந்தபோது அதனை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் காவி அணிந்த கரசேவை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். ஒளிப்பட கருவிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
அன்றுதான் இந்தியாவில் கூட ஊடக இயலாளர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ ல் ஏற்படும் என உலகம் உணர்ந்து கொண்ட நாள் எனலாம்.
குறைந்த பட்சம் இரண்டு டஜனுக்கு மேற்பட்ட சம்பவங்களில் பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த படுகொலையில் உள்ள அபாய அரசியல் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் தொலைக்காட்சி செய்தி அறைகளில் நடைபெறுபவை முற்றிலும் வேறுபட்டவை.நாம் அனைவரும் அறிந்துகொண்டது தான். ஆளும் கட்சிக்கு ஜால்றா அடிப்பதற்காக விதவிதமான வினோதமான காரணங்களை தேடிக்கண்டு பிடிக்கும் அவலம் தலையில் அடித்துக்கொள்ள தோன்றும்.
இன்னும் கூற வேண்டுமானால் செய்தியாளர்களின் ஆற்றல் மீதான குறைவதற்கே தொலைக்காட்சி செய்தி அறைகளில் நடத்தப்படும் இது போன்ற கூத்துக்கள் தான் காரணம் என்கிறார்கள்.
ஆனால் கிராமப்புற பத்திரிகையாளர்கள் நிலை மிகவும் பாதிப்படைந்த நிலையிலும் தங்களின் உயிர்களைக்கூட விட்டு விடக்கூடிய நிலையிலேயே உள்ளனர்.
இந்தியாவில் 1992 ல் இருந்து இன்று படுகொலை90 சதவீதம் அச்சு ஊடகங்களில் இருந்து வந்தவர்களே. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் அம்பலப்படுத்த முடியாத ஊழல் முறைகேடுகள் குறித்து முழுமையான துப்பறிவில் ஈடுபட்டதால் அவர்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. உபி மற்றும் பீகாரில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலை பரிதாபத்துக்குரிய நிலையாகவே உள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டின் நிறுவனத்தை சேர்ந்த ஹிந்தி மொழி பத்திரிகையான ஹிந்துஸ்தான் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் ராஜ் தியோராஜன் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் 5 வன்முறையாளர்கள் கொண்ட கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த நிகழ்வுகள் குறித்த ஆய்வுகள் உண்மைகளை வெளிப்படுத்த தொடங்கின. பலவீனமான சட்ட ஒழுங்கு நிலைமை தான் கிரிமினல்களை குற்றங்கள் செய்வதற்கு துணிச்சலை வழங்கி வருகின்றன என்றால் அது மிகையில்லை. நாம் முன்னரே குறிப்பிட்ட 27 வழக்குகளில் ஒரு ஒரு குற்றவாளி மட்டுமே பிடிபட்டார். அந்த குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்பு மேல் முறையீட்டில் அந்த கிரிமினல் விடுதலை ஆகிறான்.
பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழு அண்மையில் ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அதனைத்தொடர்ந்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா 2015 ம் ஆண்டில் ஒரு வெளிச்சம் தர தக்க நடவடிக்கையை பத்திரிக்கையாளர்களை காப்பாற்றும் விதமாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதனை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்காமல் தடுக்கவேண்டும் என பெருமெடுப்பிலான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை. மோடி அரசால் இந்த அச்சுறுத்தல்களில் இருந்து காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படவேயில்லை.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் எடிட்டர்ஸ் கில் டு என்ற சுயேச்சையான அமைப்பு 200 க்கும் மேற்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு. அது உள்ளூர்,தேசிய செய்தி ஏடுகள் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள் தொடர்பாக ஓர் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆய்வுக்காக சென்ற எடிட்டர்ஸ் கில்டு ஊடகவியலாளர்கள் மிகப்பெரிய அழுத்தத்தில் துன்புறுவதை கண்டறிந்தார்கள். மாநில அரசின் நிர்வாக ரீதியிலான கெடுபிடி, மற்றும் காவல்துறையின் அடாவடியான எதிரடி ஆகியவற்றை சகித்துக்கொண்டு செயல்பட வேண்டிய நிலை. அவர்கள் அச்ச உணர்வுடனே செயல்படுகிறார்கள் குறிப்பாக பஸ்தர் பகுதியில் அவர்களுக்கு காவல் துறையில் இருந்தும், அரசு அதிகாரிகளாலும் இடையூறுகள் வருகின்றனவாம் அரசியல் வாதிகள், காவல்துறை ஆகியவற்றின் மனம் கோணாமல் எழுதவேண்டுமாம். இல்லையெனில் அவர்களது பகையை எதிர்கொள்ள வேண்டி வரும். (இங்கு மட்டும் என்ன வாழுதாம் என்ற உங்கள் உள்மன ஓசை எனக்கு கேட்கிறது ).
இதில் மாவோயிஸ்டுகளால் ஏற்படும் பிரச்னைகள் தனி. வரலாற்று ரீதியில் வன்முறைகளங்களாக இருக்கும் பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடையாது. உலகிலேயே ஊடகவியலாளர்கள் மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளாக சிரியா, ஈராக், உள்ளிட்ட நாடுகள் உள்ளன. 2015 ஆக்டொபரில் இருந்து இன்றுவரை 85 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளர் பாதுகாப்புக்குழு இம் புனிட்டி இண்டக்ஸ் ரிப்போர்ட்டில் இதனை குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பத்திரிக்கையாளர்கள் மீதான குற்றங்களை இழைத்தவர்கள் நீதியின் பிடியில் இருந்து மிக எளிதாக தப்பித்து விடுகிறார்கள்.