பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. அதுவும், கேள்விப்படும்பொழுதே பதறிக் கைவிரல்களை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கொடூரமான வன்முறைகள்!
தில்லியில் ஜோதிசிங் (நிர்பயா), கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிசா, சேலத்தில் வினுப்பிரியா, சென்னையில் சுவாதி எனப் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நாகரிகம் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மண்ணில் அதே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயகரமான சூழலில் இன்றைய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், நாம் வாழும் சமூகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மாறிய பின்பும் இதே சமூகத்தில் வாழும் நாம் நம் பெண் / ஆண் பிள்ளைகளின்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்படி என்ன மாற்றத்தை வளர்ப்பு முறையில்கொண்டு வந்தோம்?...
ஒரு நிமிடம்!... குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமைதானே என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால், வெறுமே இராம்குமார்களைப் பிடித்து உள்ளே தள்ளுவதாலோ இன்ன பிற குண்டர்களைக் கைது செய்வதாலோ புதுப் புதுச் சட்டங்களைக் கொண்டு வருவதாலோ மட்டும் பெண்களுக்கு எதிராக எந்த வன்முறையும் நடக்காமல் தடுத்து விட முடியுமா? அட, தொடர்ச்சியாக எத்தனையோ வன்முறைத் தாக்குதல்கள் பெண்களுக்கு எதிராக நடந்தும் இந்த அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லைதான். ஆனால் அதற்காக, நம் வீட்டுப் பிள்ளை இன்னொரு தொடர்வண்டி நிலையத்தில் இதே போல் வெட்டுப்பட்டுக் கிடந்தால் “எல்லாம் இந்த அரசாங்கதால வந்த வினைம்மா! நான் என்ன செய்யறது” என வெட்கமில்லாமல் அவளிடம் போய் ஒப்பாரி வைக்க முடியுமா? நம் பிள்ளைகளைப் பாதுகாக்கத் தேவையானவற்றை நாம் செய்துவிட்டும் அப்படி ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்தால் நாம் அரசையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்லித் திரியலாம். ஆனால், நம் கடமையை நாம் நிறைவேற்றாமலே அரசின் மீதும் காவல்துறை மீதும் பழி போட்டுத் தப்பிக்க நினைப்பது கேடு கெட்ட இழிசெயல் இல்லையா?
சரி, இப்பொழுது நாம் என்னதான் செய்ய வேண்டும்?... இதற்குப் பதில் சொல்லவே எனக்குவெட்கமாக இருக்கிறது. மழை பெய்தால் குடை பிடித்துக் கொண்டு போக வேண்டும் எனத் தெரிகிறது; குளிரடித்தால் வியர்வை அங்கி (sweater) மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அறிவு நமக்கு இருக்கிறது; ஆனால், சக மனிதர்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் தற்காப்புக் கலைகளைக் கற்று வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவு நமக்கு ஏன் இல்லை?
‘ப்பூ, இவ்வளவுதானா? இதைச் சொல்லவா இவ்வளவு பீடிகை?’ என நினைக்காதீர்கள்! மாறாக, உங்களுக்குத் தெரிந்த மனிதர்களில் தற்காப்புக் கலை தெரிந்தவர்கள் எத்தனை பேர் என ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்! இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் 90% பேர் இதற்குச் சுழியம் (zero) முதல் ஆகக்கூடி ஐந்து வரையிலான எண்ணைத்தான் விடையாக அளிப்பீர்கள் என நம்புகிறேன். வீட்டில் திருமணம், காதுகுத்து என வந்தால் ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறோம். அத்தனை சொந்தங்கள், நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். ஆனால், அந்த ஆயிரக்கணக்கானோரில் தற்காப்புக் கலை தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் கூட இல்லை. காரணம், நம் சமூகத்தில் இந்தக் கலையைப்பயின்றவர்கள் எண்ணிக்கை அந்தளவுக்குக் குறைவு. “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ‘வாளொடு’ முன்தோன்றிய மூத்தகுடி”யில் இன்று வீரத்தின் நிலைமை இதுதான்.
காதல் சார்ந்த இல்வாழ்வை அகம் என்றும், வீரம் சார்ந்த பொதுவாழ்வைப் புறம் என்றும் வாழ்வையே இருபெரும் கூறுகளாகப் பிரித்து உலக நாகரிகங்களுக்கெல்லாம் உயர்தனிப்பெரும் நாகரிகமாய் வாழ்ந்து வழிகாட்டிய தமிழன் இன்று காதல் எது, காமம் எது எனக் கூடப் புரியாமல் அல்லாடுகிறான்; காதலை ஏற்க மறுத்தால் பெண் மீது அமிலத்தை வீசுகிறான். வேங்கைப்புலியையே வெறும் முறத்தால் விரட்டி அடித்த தமிழச்சியோ இன்று சக மனிதனின் தாக்குதலிலிருந்து கூடத் தப்பத் தெரியாமல் செத்து மடிகிறாள். இதுவா வாழ்க்கைமுறை?... நாமா தமிழர்கள்?... சிந்தியுங்கள் நண்பர்களே! அகநானூற்றையும் புறநானூற்றையும் வாங்கி வீட்டில் அடுக்கி வைத்தாலோ, செயலிகளாகத் தரவிறக்கிச் சேமித்துக் கொண்டாலோ மட்டும் போதாது. படித்து, அவற்றின்படி நடக்கக் கொஞ்சம் முயற்சியாவது செய்ய வேண்டும்!
இசையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே பாடக் கற்றுக் கொள்வதைப் போல, ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே வரையக் கற்றுக் கொள்வதைப் போல வீரக்கலைகளையும் அவற்றில் ஆர்வம் உடையவர்கள் மட்டும் கற்றுக் கொள்ளட்டுமே என நாம் நினைக்கிறோம். ஆனால், ஆபத்துகள் என்பவை அந்தச் சிலருக்கு மட்டுமே வருபவை அல்ல என்பதுதான் மிக எளிமையான உண்மை. அவை பொதுவானவை. எனவே, ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான கலைகளும் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை!
நினைத்துப் பாருங்கள், கணினி இயக்கத் தெரிந்த சுவாதிக்குக் கொஞ்சம் கராத்தேவும் தெரிந்திருந்தால் இராம்குமாரிடமிருந்து அவர் தப்பித்திருக்க வாய்ப்பு உண்டு இல்லையா? அல்லது, அன்று அதே தொடர்வண்டி நிலையத்தில் அந்தக் கொடூரக் கொலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருராவது தற்காப்புக் கலை தெரிந்தவராக இருந்திருந்தால், கண்ணெதிரே அப்படி ஒரு கொடுமை நடப்பதை அவர் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும் இல்லையா? ஜோதிசிங்கோ (நிர்பயா) அவர் கூட இருந்த அந்த ஆண் நண்பரோ, இருவரில் ஒருவராவது வீரக்கலை ஒன்றையாவது தெரிந்து வைத்திருந்தால் நாட்டையே நடுநடுங்கச் செய்த அந்தக் கொடூரம் நடந்திருக்குமா?
பெண்களுக்கு நாம் ஒன்று கரண்டி பிடிக்கக் கற்றுத் தருகிறோம் அல்லது கணினி இயக்கக் கற்றுத் தருகிறோம்; ஆனால், கூடவே களரியோ கராத்தேவோ கற்றுத் தர மாட்டேன்கிறோமே ஏன்? அங்கே நிற்காதே, இங்கே பார்க்காதே, இப்படி ஆடை அணியாதே, அப்படி நடந்து பழகாதே எனவெல்லாம் பெண்களைச் சிறுமிகளாக இருக்கும்பொழுதிலிருந்தே வலிக்க வலிக்கச் செதுக்கிச் செதுக்கியேவளர்க்கிறோம். பெண்ணின் ஒவ்வோர் அசைவுக்கும் இயக்கத்துக்கும் அந்த அளவுக்குத் துல்லியமாக இலக்கணம் (!) வகுத்து, அதற்குப் பாதுகாப்பைக் காரணமாகக் காட்டுகிறோம்.ஆக, இந்த சமூகத்தில் பெண்ணுக்கு எப்பொழுது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது பெற்றோருக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், பெற்றோர்கள் சொல்லும் அத்தனையையும் இம்மி பிறழாமல் கடைப்பிடித்தாலும் பெண்களுக்கு இந்த சமூகத்தில் ஆபத்துகள் நிகழாமல் இல்லை.எனில், இப்படியெல்லாம் கண் சிமிட்டுவது தொடங்கி கட்டையில் போவது வரைக்கும் இத்தனை கட்டுப்பாடுகளைப் பெண்களுக்குப் போடுவதற்குப் பதில் நல்லதொரு தற்காப்புக் கலை ஒன்றை அவர்களுக்குப் பயிற்றுவித்து வளர்த்தால் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் அஞ்சாமல் தன் விருப்பப்படியும், அதே நேரம் பாதுகாப்பாகவும் பெண்கள் வாழ முடியும் இல்லையா? அதற்கான ஏற்பாட்டை நாம் ஏன் செய்வதில்லை?!
பெண் பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, ஆண் பிள்ளைகளுக்கும் நம் சமூகத்தில் பெரிய பாதுகாப்பு ஏதும் கிடையாது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதெல்லாம் அந்தக் காலம். இன்று கூட்டமாக வந்து தாக்கும் கூலிப்படையினரிடமிருந்தும், வீச்சரிவாள் முதல் வென்டட்டா துப்பாக்கி வரை அனைத்து விதமான ஆயுதங்களுடனும் உலவும் சமூக எதிரிகளிடமிருந்தும் தப்பிக்க வெறும் நெஞ்சுரம் மட்டும்போதுமானதாக இல்லை. சுவாதியைப் போலவே உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் பேருந்துநிலையத்தில்அத்தனைபேர்கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் ஆண்தான்; கடந்த மாதம் சென்னையில், இதே போல் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட வழக்குரைஞர் ரவியும் ஆண்தான். பெண்களைக் குறி வைக்கும் கேடு கெட்டவர்கள் முதலில் கட்டம் கட்டுவது உடன் வரும் ஆண்களைத்தான். அப்படிப்பட்ட சூழலில் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு, உடன் வரும் பெண்ணையும் காப்பாற்ற வேண்டிய ஆணுக்கு நாம் என்ன பாதுகாப்பு வழிமுறையைக் கற்றுக் கொடுத்து வளர்க்கிறோம்? ஒன்றுமே இல்லை.
“தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்” என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இங்கே தற்காப்புக் கலை பயின்றே தீர வேண்டிய இன்றியமையாத் தேவையும் நமக்கு இருக்கிறது; அந்தத் தேவையை நிறைவேற்றப் போதுமான கண்டுபிடிப்புகளும் - அதாவது பல்வேறு தற்காப்புக் கலைகளும் -இருக்கின்றன. அவற்றைப் பயில்வதற்குப் போதுமான வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. ஊர்ப் (கிராமப்) பகுதிகளில் இன்றளவும் களரி, சிலம்பம் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். நகரப் பகுதிகளிலோ பற்பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக கராத்தே பயிற்சிக்கூடங்கள் காணப்படுகின்றன. இருந்தும், நாம் இன்னும் நம் பிள்ளைகளுக்குத் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்க மறுப்பது ஏன்? நம் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் நமக்கே இல்லாத அக்கறை யாரோ ஒரு ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் வழிப்போக்கர்களுக்கும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
“அந்தக் காலத்திலெல்லாம் இப்படிக் கராத்தேவும் குங்பூவும் சொல்லிக் கொடுத்தா வளர்த்தார்கள்” என்று உடனே வெட்டிக்கதை பேச வேண்டா! போர்க்கலை பழகுதல் என்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிது இல்லை. பண்டைய தமிழகத்தில் பெரிய அளவில் போர் ஏதாவது வந்தால் வீட்டுக்கு ஒருவர் போருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்ட கதைகளை நாம் படித்திருக்கிறோம். இதற்குப் பொருள் என்ன? எல்லா வீடுகளிலும் போர்க்கலை தெரிந்தவர், ஆயுதம் சுழற்றப் பயின்றவர் ஒருவராவது இருந்திருக்கிறார் என்பதுதானே?
அட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டிப் போவானேன்? நம் தாத்தா, அப்பா காலத்து நிலைமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! அந்தக் காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, சிறிதும் பெரிதுமாகச் சில பல ஆயுதங்களைக் கையாளும் இவாவகம் கைவரப் பெற்றவர்களாகவே இருந்தார்கள். காரணம், அன்று உழவுத்தொழிலே முதன்மையான வேலையாக இருந்தது. காடு கழனி வேலைகள் நிறைய இருந்தன. அவை அனைத்துக்கும் பல ஆயுதங்கள் தேவைப்பட்டன. ஆண்கள் மரம் வெட்டுதல், இளநீர் - நுங்கு சீவுதல், ஆடு - கோழி அறுத்தல் என்று முரட்டுத்தனமான பற்பல வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர். பெண்களும் ஆண்களுக்குச் சளைத்தவர்களாக இல்லை. விறகு பிளத்தல், கதிர் அறுத்தல், களை எடுத்தல் எனப் பல முரட்டு வேலைகளை அவர்களும் செய்து பழகியவர்களாகவே இருந்தார்கள். இதனால் கோடரி, அரிவாள், பலவிதமான கத்திகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. தொடர்ந்து இத்தகைய முரட்டுத்தனமான வேலைகளைச் செய்து பழகியதால் யாருக்கும் எந்த ஆயுதத்துக்கும் அஞ்சாத துணிச்சலும் அந்தக் காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், ‘திருப்பாச்சி’ படத்தில் விஜய் சொல்வது போல எப்பொழுதும் அரிவாளும் கையுமாக அலைந்த கைகள் அவை.
ஆனால், இந்தக் காலம் அப்படியா? விழிய (வீடியோ) விளையாட்டுகளில் மட்டுமே குருதி பார்த்துப் பழகிய விழிகள், கணினியின் தட்டெழுத்துப் பலகையைத் தட்டுவதை விடப் பெரிய முரட்டு வேலை எதையும் செய்தறியாத விரல்கள், அடுப்பில் இருப்பதைக் கரித்துணி பிடித்து இறக்குவதால் உணரப்படும் சூட்டைக் கூடக் கண்டறிய வாய்ப்பின்றி முற்றிலும் நெகிழிப் (plastic) பிடிகள் வைத்த பாத்திரங்களுடனே புழங்கும் கைகள் என இப்படி வளரும் இன்றைய தலைமுறைக்கு எங்கிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறமும் துணிவும்?
எனவே, தற்காப்புக் கலைகள் இன்றி இனி நமக்கு இங்கு பாதுகாப்பான வாழ்வு என்பது இல்லை என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே, பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு வீரக்கலையைக் கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும்!
பெற்றோர்கள் மட்டுமில்லை, வெறுமே சமூக எதிரிகளைப் பிடித்துச் சில காலம் சிறையில் வைப்பதாலோ, காவல்துறையினர் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ மட்டும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது என்பதை ஆட்சியாளர்களும் உணர வேண்டிய வேளை இது. எனவே, மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரையான எல்லா அரசு - தனியார்க் கல்விக்கூடங்களிலும் கட்டாயத் தற்காப்புக் கலைப் பயிற்சியைக் கற்பிக்க அரசு முன் வர வேண்டும்! அதே நேரம், சமூக எதிரிகள் என்பவர்கள் யாரும் வேற்றுக் கோள் மனிதர்கள் கிடையாது. அவர்களும் இதே சமூகத்திலிருந்து பிறந்தெழுந்து வருபவர்கள்தாம். எனவே, அவர்களை எதிர்த்து அடித்து வீழ்த்தும் வல்லமையைப் பொதுமக்களுக்குத் தருவது என்பது தற்காலிகத் தீர்வு மட்டும்தானே தவிர அதுவே நிரந்தரத் தீர்வு ஆகி விடாது. இந்தப் பிரச்சினைக்கு உண்மையான, நிரந்தரமான தீர்வு என்பது சமூக எதிரிகளே உருவாகாத நிலையை ஏற்படுத்துவதுதான். அதற்கு யோகக்கலை கற்பித்தல் அருமையான வழிமுறையாக இருக்கும். எனவே, அதே மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரை எல்லாக் கல்விக்கூடங்களிலும் இலவச யோகப் பயிற்சி வகுப்புகளையும் தொடங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பெண்களின் எந்தெந்த உரிமைகளுக்காகவோ போராடும் மகளிர் அமைப்புகள் பெண்களின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தக்கூடிய மேற்படி ஏற்பாடுகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அழுத்தம் தர முன்வர வேண்டும்!
- இ.பு.ஞானப்பிரகாசன்