“ஒரு தலித் நாடாளுமன்றத்திற்குள் நுழையலாம்; ஆனால் அவனால் ஒரு பொது இடத்திலோ, உள்ளூரில் உள்ள ஒரு கோயிலிலோ நுழைய முடியாது. ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் ஒரு கிராமம் (சேரி) இருப்பது தேசிய அவமானம். மத்திய அரசு, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கென ஓர் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கு, பட்டியல் சாதியினர் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்று பெயரிட்டிருப்பது-தலித்துகளுக்கெதிரான பாகுபாட்டையே வெளிப்படுத்துகிறது. தலித் மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் முதல் இரண்டு பிரிவுகளை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றொரு அரசாணை உள்ளது. ஆனால் மாநிலத்தில் உள்ள எந்தப் பள்ளியிலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதில்லை.''
- தொல். திருமாவளவன், "தி இந்து', 1.7.2009
இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 70 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது, உலகிலேயே மிக அதிக அளவாகும். இதல் 19 சதவிகிதத்தினர் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 85 சதவிகிதத்தினர் முறைசாரா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 90 சதவிகித குழந்தைகள் கிராமங்களில் உள்ள பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கேடுகெட்ட கோயில்கள்
தென் மாவட்டங்களில் உள்ள 85 ஊராட்சிகளில், தலித்துகள் “கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா என்றொரு ஆய்வை "எவிடன்ஸ்' என்ற அமைப்பு மேற்கொண்டது. அதன்படி, 69 கோயில்களில் நுழைய தலித்துகளுக்கு அனுமதி இல்லை; பிற 72 கோயில்களில் அவர்களுக்கு அனுமதி இருந்தாலும், அக்கோயில்களில் உள்ள பொது வழிபாட்டுக்குரிய இடங்களில் நின்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகளுக்கு கோயில் தேரை இழுக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 54 கோயில்களைச் சேர்ந்த "தர்மகர்த்தாக்கள்' கோயில் தேரை தலித் தெருவுக்குள் அனுமதிப்பதில்லை. 64 கோயில்களில் திருவிழாக்களின் போது சடங்குகளை செய்யவோ, தங்களுடைய பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றவோ அனுமதி இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தலித் மக்களை ஒடுக்குவதற்கும், சாதி மோதல்களை வளர்த்தெடுப்பதற்குமான ஒரு களமாக இந்து கோயில்கள் விளங்குகின்றன என்றும், இதைத் தடுக்க அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவான 3(1) (14) 1989 அய் பயன்படுத்தி, வழிபாட்டு உரிமைகளையும், கோயில் நுழைவை மறுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஆய்வை மேற்கொண்ட அமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
மேற்கண்ட கள ஆய்வு தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டவை. எனினும், வேறு திசைகளில் உள்ள மாவட்டங்களிலும் இதே போன்ற கள ஆய்வை செய்தால், கூடுதல் உண்மைகள் வெளிவரும். சாதிகளை உற்பத்தி செய்து, தீண்டாமையை கடைப்பிடித்து, ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதைப் புனிதமானதாக ஆக்கவுமே கோயில்கள் உருவாக்கப்பட்டன. இந்த நவீன யுகத்திலும் கோயில்கள் ஜனநாயகமாக்கப்படவில்லை என்பதை யார் மறுக்க முடியும்? அது மட்டுமா, அவை இன்றளவும் அரசால் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு பெரிய சட்டங்கள் இயற்றினாலும், அவை கோயில்களை என்ன செய்துவிடும்? இனவெறியைப் புனிதப்படுத்தும் கோயில்களுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை தலித்துகள் பரிசீலனை செய்ய வேண்டும். அந்த கேடுகெட்ட இடத்திற்குள் இனி எங்கள் கால் தடத்தைக் கூட பதிக்க மாட்டோம் என்று சொல்லத் துணிவதுதான் புரட்சியின் பாற்பட்டது.
“இதுதாண்டா போலிஸ்''
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு கிராமத்தின் அருகில் இருக்கும் பெருமாள் மலையில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தலித் பெண் பங்கேற்பதை அங்கிருக்கும் சாதி இந்துக்கள் (21.6.09) தடுத்துள்ளனர். அந்த தலித் பெண் தனது தலையில் சுமந்து சென்ற குடத்து நீரை சாதி இந்துக்கள் பிடுங்கி, அவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால், அப்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். சக தலித்துகள் அவரைத் தடுத்துள்ளனர். இப்பிரச்சனையை கையிலெடுத்துப் போராடும் "விழுதுகள்' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகிறார் : “காவல் நிலையத்தில் வழக்கமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்குப் பதில் அவர்கள் சாதி இந்துக்களுக்கு தகவல் கொடுத்து, அதன் மூலம் தலித்துகளின் புகாரை திரும்பப் பெற வைக்கின்றனர். ஏறக்குறைய 45 அருந்ததியர் குடும்பங்கள் சாதி இந்துக்களின் வயல்களில் வேலை செய்வதால், அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற அச்சுறுத்தப்படுகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள விழுப்புரம்மன் கோயிலுக்குள் ஒரு தலித் தம்பதியினர் வழிபட சென்றனர். அவர்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டனர். இவ்வழக்கில் கூட, அந்த தம்பதியினர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, புகாரை கொடுத்த பழனிச்சாமி என்ற தலித்தையே கைது செய்தது''("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 22.6.09).
வாக்களித்தால் தமிழன்; வாக்களிக்காவிட்டால் தலித்!
“நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு எதிராக நாங்கள் வாக்களித்ததால், அவர்கள் எங்களைத் தாக்குகின்றனர்'' என்று குற்றம் சாட்டி, ஊரையே காலி செய்து பக்கத்து கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர், தருமபுரி மாவட்ட மொரப்பூர் ஒன்றியத்தின் நத்தமேடு கிராம தலித் மக்கள். நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாணி, பானுமதி, பாப்பாத்தி ஆகியோர் இது குறித்து விளக்கினர் : “சாமி! உங்களுக்குப் புண்ணியமாப் போவட்டும். எங்களை அவங்கக்கிட்ட இருந்து பிரிச்சு வேற எடத்துல குடியேத்தச் சொல்லுங்க. இத்தனை நாளும் நடந்த கொடுமைகளைப் பொறுத்துக்கிட்டு அங்க இருந்தோம். எங்கள் வீட்டு ஆண்கள் வேலைக்காக வெளியே போயிட்டாங்கன்னு தெரிஞ்சா, சாத்தியிருக்கிற வீட்டுக்குள்ள பூந்து, தப்பா நடக்கிறதுக்காக கூசாம கூப்பிடறாங்க. குறிப்பா, பாட்டாளி மக்கள் கட்சிக்காரங்க பண்ணற அடாவடிக்கு அளவேயில்லை. இனிமே குடியேறணும்னு கட்டாயப்படுத்தினா, பெட்ரோல் ஊத்திக் கொளுத்திட்டு சாவறதைத் தவிர வேற வழி எங்களுக்குத் தெரியல'' ("குமுதம் ரிப்போர்ட்டர்' 2.7.09). தேர்தல் நேரத்தின்போது தமிழர்களாய் ஒன்றிணைய வேண்டும் என்று மேடையில் வாய் கிழியப் பேசும் பாட்டாளி மக்கள் கட்சியினர், தேர்தலில் தோற்றதும் வன்னியத் தமிழர்களை விட்டுவிட்டு, சேரித் தமிழர்களை மட்டும் தாக்குகிறார்கள். தமிழீழ அங்கீகார மாநாட்டை மிகவும் துணிச்சலாக நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக நின்ற விடுதலைச் சிறுத்தைகள், ஈழ ஆதரவு அணியில் இல்லை (அரசியலில் மட்டும்) என்ற ஒரே காரணத்திற்காக-அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்து, பா.ம.க.வின் தலித் விரோத போக்கைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்-மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு கேட்கச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், இந்த அநீதிக்கு எதிராக வாய் திறப்பார்களா?
(உயர்) கல்வி தீண்டாமை
ஒன்றரை நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னை பல்கலைக் கழகத்தில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பல்கலையில் இந்திய வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்று ஆய்வு மய்யம் உள்ளது. இந்த பிஎச்.டி. ஆய்வில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் அவ்வளவு எளிதில் அனுமதிக்கப்படுவதில்லை. தலித் மாணவர்கள் பிஎச்.டி. ஆய்வுக்கு விண்ணப்பித்தால், அவர்களின் சமூக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வின்றி சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளுக்கு மாறாக, நுழைவுத் தேர்வு எழுதுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில் ஒருவரான ப. குமார், “நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்பதற்காக மட்டும் வழக்கு தொடுக்கவில்லை. ஆதிக்க சிந்தனை கொண்டோரின் இத்தகைய செயலால் வருங்காலத்தில் எந்த மாணவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வழக்கு தொடுத்துள்ளோம்'' என்கிறார் ("தீக்கதிர்' 13.6.2009). சென்னை பல்கலைக் கழகத்தின் 150 ஆண்டு கால வரலாறு, சாதி பாகுபாட்டையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த லட்சணத்தில் கல்வி தீண்டாமையை ஒழித்துவிடும் என்ற பிரச்சாரத்தை செய்வதற்கு, படித்த இந்துக்கள் கூச்சப்படுவதே இல்லை!
ஜாதி குற்றவாளிகளுக்கு அரசு அங்கீகாரம்
தலித் மாணவர்களையும் பிற சாதி மாணவர்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கிறது, கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள ஓர் அரசுப்பள்ளி. “வகுப்பு நிலவரங்களை கண்காணித்தபோது, ஒரு வகுப்பில் ஆசிரியர் யாரும் இல்லை. மற்றொரு வகுப்பிலோ, ஒவ்வொரு பாட வேளைக்கும் ஆசிரியர்கள் வந்து போகின்றனர். இதையடுத்து, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 9 ஆம் வகுப்பு "சி' பிரிவுக்குள் சென்றோம். அப்போது ஒரு மாணவன், "காலையில இருந்து ஒரு வாத்தியார்கூட வரல. எங்களை எல்லாம் பார்த்தா, ஹெட் மாஸ்டருக்கு எப்படி இருக்குமோ தெரியாது. வகுப்பை விட்டு வெளியே போனா கன்னாபின்னான்னு அடிப்பாரு.' அருகிலிருந்த மற்றொரு ஆசிரியரோ, "இங்க தலித் மாணவர்களுக்கு மட்டும் இல்லேங்க. தலித் ஆசிரியர்களுக்கும் இதே நிலைதான்' ("நக்கீரன், 1.7.09). ஏற்கனவே இப்பள்ளி தலைமையாசிரியர் மீது வன்கொடுமை வழக்கு இருக்கிறது. இருப்பினும், அவரை அதே பள்ளியில் விட்டு வைத்திருக்கிறது அரசு நிர்வாகம். இல்லை, இல்லை, ஜாதி நிர்வாகம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மீண்டெழுவோம்
- விவரங்கள்
- தலித் முரசு
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2009